search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தனம், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் அரசுக்கு சொந்தம் என்ற சட்டத்தை நீக்க வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்
    X

    சந்தனம், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் அரசுக்கு சொந்தம் என்ற சட்டத்தை நீக்க வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

    தேக்கு, சந்தனம், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் அரசுக்கு சொந்தம் என்ற சட்டத்தை நீக்க வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் கூறியுள்ளார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக காடுகளை அழித்தல், தொழிற்சாலைகள் உள்பட பல இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பருவநிலை மாற்றங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் நதிகள் அழிந்து வருகின்றன. அந்த நதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நதிகளை மீட்போம் பேரணி நடத்தப்பட்டது. அதற்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    நமது நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு விலை கிடைப்பது இல்லை. பெரிய விவசாயிகளுக்கு, ஒரு விலையும், சிறிய விவசாயிகளுக்கு ஒரு விலையும் கிடைக்கிறது. எனவே போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறிவிடுகின்றனர். இதனால், மெல்ல மெல்ல விவசாயம் அழிந்து வரு கிறது.

    இதைத்தடுக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு அவர்களே விலைநிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும். அதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபாடு இருக்கலாம். விவசாயிகள் நிர்ணயம் செய்யும் விலை, சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கலாம்.

    இதற்காக நமது மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர வேண்டும். இதற்காகதான் நான் விவசாய சங்க தலைவர்களை சந்தித்து பேசினேன். அனைத்து விவசாயிகளும் சேர்ந்து கோரிக்கை விடுக்கும்போது அதை அரசு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும். விவசாயிகள் விடுக்கும் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரிவிக்க தமிழக அரசு உதவியாக இருக்க வேண்டும்.

    விவசாய நிலம் மற்றும் பொதுமக்களின் நிலத்தை தோண்டும்போது கிடைக்கும் பொருள் நமக்கு சொந்தம் இல்லை என்று சட்டம் கூறுகிறது. அதுபோன்று தேக்கு, சந்தனம், மூங்கில் உள்பட பல்வேறு மரங்கள் வளர்த்தாலும் அதை நாம் வெட்ட உரிமை இல்லை என்றும் சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை அரசு நீக்க வேண்டும். இல்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.

    மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்க அளவில் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு என்பது விவசாயிகளை காப்பாற்றும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று சத்குரு ஜக்கிவாசுதேவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘நான் மக்கள் பிரச்சினை தொடர்பாக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுவேன். ஆனால் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். ஆன்மிக அரசியலில் ஈடுபட உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார். அது அவருடைய விருப்பம்‘ என்றார்.

    Next Story
    ×