search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  எழுத்தாளர் ஞாநி திடீர் மரணம்: உடல் தானமாக வழங்கப்படுகிறது - அரசியல் தலைவர்கள் இரங்கல்
  X

  எழுத்தாளர் ஞாநி திடீர் மரணம்: உடல் தானமாக வழங்கப்படுகிறது - அரசியல் தலைவர்கள் இரங்கல்

  சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த எழுத்தாளர் ஞானியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.#GnaniSankaran
  சென்னை:

  பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. இவரது முழு பெயர் ஞாநி சங்கரன்.

  இவரது விமர்சனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கும். இதனால் எழுத்துலகில் இவர் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார்.

  கடந்த சில மாதங்களாக அவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவருக்கு இந்த நோய் அதிகரித்தது. இதனால் வாரத்துக்கு 3 தடவை அவர் டயாலீசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

  இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63.

  அவரது உடல் கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

  மறைந்த ஞாநியின் தந்தை வேம்புசாமி. பத்திரிகையாளராக திகழ்ந்த அவருக்கு 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் ஞாநி பிறந்தார். தந்தையை போல ஞாநியும் ஊடகத்துறையில் நுழைந்து பணியாற்றினார்.

  1980-களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலியில் புதையல் எனும் பகுதியில் அது தொடர்பான தகவல்களை ஞாநி விரிவாக எழுதினார். பிறகு வேறு பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் இடம் பெற்றன. இதையடுத்து தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்று பேசி வந்தார்.

  கடந்த 2014-ம் ஆண்டு அவர் அரவிந்த் கெஜ்ரிவாலால் ஈர்க்கப்பட்டு ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் 2014-ம் ஆண்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அரசியலை விட்டு அவர் விலகினார்.

  இந்நிலையில்தான் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவரது உயிரை பறித்து விட்டது. ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளார். மனுஷ்நந்தன் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

  மறைந்த ஞாநியின் உடலுக்கு இன்று பிற்பகல் 4 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. அதன்பிறகு அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

  மறைந்த எழுத்தாளர் ஞாநி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஞாநி எனக்கு நல்ல நண்பர். சிறந்த எழுத்தாளர். மக்களுக்காக பேசக் கூடியவர். எழுதக்கூடியவர். அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தனக்கு சரியென பட்டதை பயமின்றி பேசவும், எழுதவும் கூடியவர் ஞாநி. அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிகையாளர் ஞாநி மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. தலைவர் கருணாநிதியிடமும், முரசொலி மாறனிடமும் மிகுந்த நட்பு பாராட்டி வந்தார். முரசொலி நாளேட்டில் ‘புதையல்’ எனும் சிறப்புப் பகுதியை, சக பத்திரிகையாளர்களான சின்னகுத்தூசி, க.திருநாவுக்கரசு ஆகியோருடன் இணைந்து வழங்கியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் மூத்த இதழாளர்களில் ஒருவரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர் அரசியல் களத்திலும் கால் நனைத்துப் பார்த்தவர். பன்முகம் கொண்ட ஞாநி இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்காக உழைத்திருக்க வேண்டும். அவரது மறைவு அவர் சார்ந்த அனைத்துத் துறைகளுக்கும் இழப்பு தான். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  தமாகா தலைவர் வாசன் கூறுகையில், ஞாநியின் மறைவு தமிழகத்திற்கு இழப்பு. அவர் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பவர் என்றார்.

  தினகரன் எம்.எல்.ஏ. கூறுகையில், ஞாநியின் மறைவு பத்திரிகையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு  என்றார்.

  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள செய்தியில், எந்தக் கருத்தையும் எந்த சமயத்திலும் துணிச்சலுடன் கூறக்கூடிய பேராண்மை பெற்றவர் எழுத்தாளர் ஞாநி. முற்போக்கு சிந்தனையும், மனித நேயமும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட ஞாநியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு என குறிப்பிட்டுள்ளார். #GnaniSankaran #TamilNews
  Next Story
  ×