search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  234 தொகுதிகளுக்கும் ரஜினி கட்சி வேட்பாளர்கள் புதிய முறையில் தேர்வு
  X

  234 தொகுதிகளுக்கும் ரஜினி கட்சி வேட்பாளர்கள் புதிய முறையில் தேர்வு

  234 தொகுதிகளுக்கும் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் ரஜினி விதித்துள்ள புதுமையான நிபந்தனை தமிழக தேர்தல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். #Rajinikanth #RajiniMandram
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தனி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

  இதையடுத்து ரஜினி தொடங்கப் போகும் புதிய அரசியல் கட்சியின் பெயர் என்ன? கொடி எந்தெந்த வண்ணங்களில் இருக்கும்? கட்சியின் சின்னம் எப்படி அமையும்? என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

  தர்மப்படியும், நியாயப்படியும் ஆன்மிக அரசியலை நடத்தப்போவதாக அறிவித்து இருக்கும் ரஜினி, புதிய கட்சி தொடங்குவதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முடிவு செய்து விட்டதாக தெரிய வந்துள்ளது. “தமிழ்நாட்டில் சிஸ்டம் சரி இல்லை” என்று கூறும் ரஜினி, அதை நிவர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்து முடித்துள்ளார்.

  குறிப்பாக தமிழக விவசாயம், தொழில், அரசியல் மூன்றையும் அவர் அலசி ஆராய்ந்து புள்ளி விபரங்களை கைவிரல் நுனியில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

  அதன் அடிப்படையில் தான் அவர் அரசியலில் ஒவவொரு நடவடிக்கையிலும் மெல்ல, மெல்ல ஈடுபடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

  முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் ஆலோசனை பெற்று வரும் ரஜினி வரும் பொங்கல் தினத்தன்று புதிய கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மாநில, மாவட்ட நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்வார்.

  தனது புதிய கட்சியில் நிர்வாக பொறுப்புக்கு வருபவர்கள் ஊழல் செய்யாதவர்களாக, சமூக சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களாக, மக்களுக்கு பணியாற்றுவதில் தன்னலம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இந்த முடிவில் அவர் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளார். இதை கருத்தில் கொண்டுதான், தனது அரசியல் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க இணைய தளம் தொடங்கியுள்ளார்.

  தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று விரும்புபவர்கள், அந்த இணைய தளத்தை பயன்படுத்தி உறுப்பினராக சேரும்படி ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ரஜினி மன்றம் எனும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து வருகிறார்கள்.

  புதிதாக ரஜினி கட்சியில் சேருபவர்களிடம் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை வைத்து உறுப்பினர்களில் நல்லவர்களை அடையாளம் காண ரஜினி திட்டமிட்டுள்ளார். அதாவது தனது தாரக மந்திரமான “உண்மை, உழைப்பு, உயர்வு” என்ற கொள்கைக்கு ஏற்ப பொருத்தமானவர்களை இதன் மூலம் தேர்வு செய்ய முடியும் என்று ரஜினி முழுமையாக நம்புகிறார்.

  இந்த புதுமையான தேர்வு முறைக்காக ரஜினிக்கு பின்னணியில் வலுவான தொழில் நுட்பக் குழு ஒன்று ஓசையின்றி இயங்குகிறது. இந்த தொழில் நுட்பகுழுவில் இருப்பவர்கள் ரஜினியின் கட்சி விவகாரங்களில் செயல்பட மாட்டார்கள். இவர்களது பணியே ரஜினிக்கு ஒவ்வொரு வி‌ஷயத்திலும் அறிவியல் ரீதியாக மிகத் துல்லியமான தகவல்களை கொடுப்பதாகும்.

  ரஜினியின் தீவிர ரசிகர்களில் பலர் அமெரிக்காவில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கும் அவர்கள் துணையுடன்தான் தமிழக அரசியல் சிஸ்டத்தை ரஜினி மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

  அ.தி.மு.க., தி.மு.க.வை வலிமையாக எதிர்த்து, வெற்றி பெற இந்த தொழில் நுட்ப குழு முக்கிய பங்கு வகிக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத ரஜினி ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  தனது ரசிகர்களை மட்டுமே வைத்து அரசியலில் வெற்றியை பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள ரஜினி, புதிய கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை வழங்குவதில், தனது ரசிகர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற எந்த செயலையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

  பதிவு செய்யப்பட்ட தனது மன்றங்களில் உள்ள ரசிகர்களில் சுமார் 60 சதவீதம் பேர் ஊழல் சர்ச்சைகளில் உள்ளவர்கள் என்பதை அவர் ஆய்வு மூலம் தெரிந்து வைத்துள்ளார்.

  அந்த 60 சதவீதம் பேருக்கு நிச்சயம் ரஜினி எந்த பொறுப்பும் கொடுக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அந்த 60 சதவீதம் பேரில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதனால் ரஜினியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட எல்லாருக்கும் பதவி கிடைத்து விடாது என்பது உறுதியாகியுள்ளது. புதிய கட்சியில் தேவையற்ற சட்ட விரோத நபர்கள் நுழைந்து சிஸ்டத்தை கெடுத்து விட கூடாது என்பதற்காகவே ரஜினி இந்த முடிவில் உறுதியாக உள்ளார்.

  தொழில்நுட்ப உதவி மற்றும் பணம் மட்டுமே தனது கட்சியை வழி நடத்தாது என்பதால் சரியான வேட்பாளர்கள் தேர்வு பெற வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் யார்- யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று ரஜினியின் தொழில்நுட்ப குழு தகவல்களை திரட்டி வருகிறது.

  ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 பேரை தேர்வு செய்து அந்த தொழில் நுட்ப குழு ரஜினி பார்வைக்கு அனுப்பும். அவர்களில் ஒருவரை ரஜினி வேட்பாளராக தேர்ந்து எடுப்பார் என்று தெரிகிறது.

  வேட்பாளரை தேர்வு செய்யும் புதிய முறைகளில் பல்வேறு அதிரடி அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தொகுதிக்கு அறிமுகமானவர், நல்லவர், பண ஆசை இல்லாதவர் என்ற தகுதிகளையே ரஜினி எதிர்பார்க்கிறார்.

  குறிப்பாக வேட்பாளர் தேர்வில் ரஜினி புதுமையான ஒரு நிபந்தனையை  விதித்துள்ளார். வேட்பாளராக தேர்வு பெறுபவர் ரூ.1 கோடி வரை செலவு செய்யும் பொருளாதார வசதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

  அதே சமயத்தில் 1 கோடி ரூபாயை தொகுதியில் செலவு செய்து விட்டு, அதை திரும்ப எடுக்கும் எத்தகைய செயல்பாடுடனும் மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று ரஜினி கூறியுள்ளார். எனவே நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி 234 தொகுதிகளுக்கும் இத்தகைய வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது.

  இது தவிர வேட்பாளர்கள் அனைவரும் படித்தவர்களாக, இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் ரஜினி தீர்மானித்துள்ளார். எனவே ரஜினி கட்சி வேட்பாளர்கள் தமிழக தேர்தல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். #Rajinikanth #RajiniMandram #tamilnews
  Next Story
  ×