search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  சர்தார் வல்லபாய் பட்டேலை ஒவ்வொரு இந்தியனும் நினைவு கூரவேண்டும் - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
  X

  சர்தார் வல்லபாய் பட்டேலை ஒவ்வொரு இந்தியனும் நினைவு கூரவேண்டும் - வெங்கையா நாயுடு வேண்டுகோள்

  ஒருங்கிணைந்த நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேலை ஒவ்வொரு இந்தியனும் நினைவு கூரவேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  சென்னை:

  ஒருங்கிணைந்த நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி சர்தார் வல்லபாய் பட்டேலை ஒவ்வொரு இந்தியனும் நினைவு கூரவேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இந்தியாவின் ஒற்றுமைக்காக செயல்பட்ட மாமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற தலைப்பில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  இந்தியாவின் ஒற்றுமைக்காக செயல்பட்ட மாமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு அவர் அளித்த மதிப்பு மிக்க பங்களிப்பை ஒவ்வொரு இந்தியனும் நினைவில் கொள்ளவேண்டும். தேசத்தின் விதியை வடிவமைத்த தலைவர்களையும், நாயகர்களையும் எந்த தேசமும் மறக்காது. அந்த வகையில், தேச பக்தியை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு இந்தியாவின் தேசத்தின் விதியை வடிவமைத்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல்.

  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் அரசியல் ஒருங்கிணைப்பை, ஒரு ராணுவ கமாண்டரின் வேகத்திலும், தொலைநோக்கு சிந்தனையுள்ள ஒரு செயல்திறன் மிக்க தலைவரைப் போலவும் செயல்பட்டார் பட்டேல். அவரது தொலைநோக்கு, திறமை, ராஜதந்திரம், நடைமுறைக்கேற்ற அணுகுமுறை ஆகியவற்றுக்கு இந்தியா, அளக்க முடியாத அளவில் நன்றிக் கடன்பட்டுள்ளது.

  அவரது அப்படிப்பட்ட செயல்பாடுகளால்தான் இந்தியா பிளவுபடுவதில் இருந்து தடுக்கப்பட்டது. மேலும், நாடு பிளவுபடும் சூழ்நிலையில் இருந்தபோது, அவரால்தான் ஒருங்கிணைந்த இந்தியாவில் 560-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்கள் இணைந்தன. இந்த ஒருங்கிணைப்பை மிகச்சிறந்ததாக கருதுவதற்கான காரணம் எதுவென்றால், ரத்தம் சிந்தாமல் இது சாதிக்கப்பட்டது என்பதுதான்.

  சூழ்நிலைக்கேற்றபடி பல்வேறு அணுகுமுறைகளை அவர் கையாண்டார்.

  இந்தியாவின் சுதந்திரத்துக்குப்பிறகு, ஐதராபாத் நிஜாம் தனது சமஸ்தானம் சுதந்திரமாக செயல்படுவதற்கான ஆணைகளை பிறப்பித்தார். பாகிஸ்தானுடன் புவியியல் தொடர்பு இல்லாவிட்டால் கூட, அந்த நாட்டுடன் ஐதராபாத்தை இணைக்கவும் அவர் விருப்பம் கொண்டார்.

  அதுபோல திருவாங்கூர் சமஸ்தானமும் சுதந்திரமாக செயல்படப்போவதாக அறிவித்தது. ஜுனாகார் நவாபும், பாகிஸ்தானுக்கு இணக்கம் காட்டப்போவதாக அறிவித்தார். உடனடியாக உறுதியாக செயல்பட்ட பட்டேல், ‘ஆபரேஷன் போலோ’ என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம், 4 நாட்களுக்குள் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணையச் செய்தார். கடந்த 1948-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கிய இந்த செயல்பாடு 17-ந் தேதி முடிவுக்கு வந்தது. பல தரப்பினர் இன்றும் செப்டம்பர் 17-ந் தேதியை ஐதராபாத் விடுதலை தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.

  பிரச்சினைகள் சூழ்ந்திருந்த சமஸ்தானங்களில் கூட, பொது அமைதி கெடாதவாறு பிரமாதமாக சர்தார் வல்லபாய் பட்டேல் செயல்பட்டு, அமைதியான ஒருங்கிணைப்பு உருவாகச் செய்தார். ஒரு வைராக்கியத்துடன் இந்தியாவை கட்டி எழுப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டாலும், ரத்தம் சிந்துதலோ அல்லது எதிர்ப்பு போராட்டங்களோ எழவில்லை.

  இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அவரது செயலை பாராட்டிய பண்டிட் ஜவஹர்லால் நேரு, “புதிய இந்தியாவின் கட்டுமானதாரர் என்றும், ஒருங்கிணைப்பாளர் என்று பட்டேலை வரலாறு புகழும்” என்று குறிப்பிட்டார்.

  இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, மகாத்மா காந்தியின் ஆங்கிலேயரை எதிர்க்கும் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டார். பட்டேலை தனது தளபதியாக்கிக் கொண்ட மகாத்மா காந்தி, அவரை தனது பிரசாரங்களை தலைமை ஏற்கச்செய்தார்.

  இதுபற்றி காந்தி ஒருமுறை பேசியபோது, “என்னை பின்பற்ற பலரும் தயாராக இருந்தனர். எனக்கு அடுத்த இடத்தில் யார் இருப்பார் என்று எண்ணியபோது எனது நினைவுக்கு வந்தவர் பட்டேல்” என்று கூறினார்.

  பட்டேல் மீது காந்தி அடிகள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் ஒரு ஒருங்கிணைப்பாளராக மட்டுமல்ல, மிகப்பெரிய மக்கள் தலைவராகவும் மாறினார். குஜராத் பர்டோலியில் வரி கொடாமை இயக்கத்தை முன்னிலையில் இருந்து வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து அவருக்கு சர்தார் என்ற பட்டம் கிடைத்தது.

  வெள்ளத்தால் குஜராத் பாதிக்கப்பட்ட போதும், அகமதாபாத்தில் பிளேக் நோய் தீவிரமாக பரவியபோதும், அங்கு நிவாரணப் பணிகளையும், மறுவாழ்வுப் பணிகளையும் முன்னிலையில் இருந்து ஆற்றியவர் பட்டேலாகும்.

  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அவர் தெரிவித்த கருத்துகள் இன்றைக்கும் அவசியமானதாகவே காணப்படுகிறது. ஏற்றதாழ்வுகளைக் கைவிட்டுவிட்டு, சமத்துவ எண்ணத்தை வளர்க்க வேண்டும். தீண்டாமையை ஒழித்தே ஆகவேண்டும். ஒரே தந்தையின் குழந்தைகள் என்பதுபோலவே நாம் வாழவேண்டும் என்ற அவரது அறிவுரைகள் இன்றைக்கும் தேவைதானே.

  சுதந்திர போராட்டத்திலும், சுதந்திரத்தை அடையச் செய்யும் நடவடிக்கைகளிலும் பட்டேலின் மிகச்சிறந்த பங்களிப்பைப் பற்றி அவரது மறைவுக்குப் பிறகு குறிப்பிட்ட ஆங்கிலேயர்கள், “சுதந்திர போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமல்ல, போராட்ட முடிவில் அவர் புதிய இந்தியாவின் சிற்பியாகவும் இருக்கிறார். ஒரே நபர், புரட்சியாளனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து வெற்றி பெறுவது மிகமிகக் கடினம். ஆனால் சர்தார் வல்லபாய் பட்டேல் அதற்கு விதிவிலக்கு” என்று பாராட்டினர்.

  மிகவும் மோசமான சூழ்நிலையில் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமைப் பண்பையும், நினைவுகூரத்தக்க அவரது பங்களிப்பையும் சரிவர அங்கீகரிக்காமல் போனது துரதிருஷ்டவசமாகும்.

  உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார தேசமாக இந்தியா பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்களில், நவீன மற்றும் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகக் காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமதிப்பு மிக்க பங்களிப்பை ஒவ்வொரு இந்தியனும் நினைவுகூர்வது அவசியமாகும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×