search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் சொத்து வரி செலுத்த 2 நாள் சிறப்பு முகாம்
    X

    சென்னையில் சொத்து வரி செலுத்த 2 நாள் சிறப்பு முகாம்

    • நடப்பு அரை நிதி ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்.15-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த அரை நிதியாண்டில் (அக்.1 முதல் அக்.15) வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன்படி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால், அரையாண்டுக்கு ஒரு முறை முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இதில் தவறாமல் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, நடப்பு அரை நிதி ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்.15-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த அரை நிதியாண்டில் (அக்.1 முதல் அக்.15) வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று உள்ளனர். நிகழ் அரை நிதியாண்டில் ஏப்.6-ந் தேதி வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 662 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

    இதை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பான்மையான சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியினை எளிதாக செலுத்த மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம்கள் வார இறுதி நாள்களில் நடத்தப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.8, 9) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 15 மண்டலங்களில் 200 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் சொத்து உரிமையாளர்கள் காசோலை மூலமும் கடன் மற்றும் பற்று அட்டை மூலமும் சொத்து வரி செலுத்தலாம்.

    மேலும், வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து உள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடி எம் செயலி, மாநகராட்சி இணைய தளம் மூலமாக எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி ஏப்.15-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×