search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பாஜக ஆட்சி அமைந்த பிறகு தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது- கேஎஸ் அழகிரி

    தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்து எதுவும் பேசாமல் மேடை பேச்சாளர் போல் பேசி சென்றுள்ளார்.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

    ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தவறான பொருளாதார கொள்கையில் இருந்து இந்தியாவையும், தமிழகத்தையும் மீட்க வேண்டும். அதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

    வேறு மாநிலத்தை சேர்ந்த ஒரு முதல்-மந்திரி பரப்புரைக்காக கோவைக்கு வரும் போது இங்குள்ள கடைகளை ஏன் அடைக்க வேண்டும். எதற்காக அடைக்காத கடைகள் மீது கற்களை வீச வேண்டும். வன்முறையின் மூலம் வெறுப்பை விதைக்கவே பா.ஜனதாவினர் விரும்புகின்றனர்.

    தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்து எதுவும் பேசாமல் மேடை பேச்சாளர் போல் பேசி சென்றுள்ளார்.

    காங்கிரஸ்

    தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் ஏதோ பெண்களுக்கு எதிரி என்பது போல் மோடி பேசியிருக்கிறார். உலகத்திலேயே இரண்டாவது பெரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியில் தான் சரோஜினி நாயுடு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். இந்திரா காந்தி, சோனியா காந்தி, பிரதிபா பாட்டீல் இப்படி பல பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்திருக்கின்றனர்.

    ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபா என பல பெயர்களில் அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் தலைமை பொறுப்புகளில் பெண்கள் யாரையாவது தேர்வு செய்திருக்கிறார்களா? தி.மு.க பெண்களை மதிப்பதில்லை என மோடி பேசுகிறார். திராவிட இயக்கங்கள் பெண்கள் உரிமைக்காக ஏராளமான இயக்கங்கள் நடத்தி வருகின்றனர்.

    பெண்களுக்கு சொத்துரிமையை கொடுத்தது தி.மு.க தான். ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு இருந்ததாக பிரதமர் பேசி இருக்கிறார். பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. எதிரணியில் உள்ளவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பதால் கற்களை எறிகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×