search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்குமார்
    X
    சரத்குமார்

    இலவச வாஷிங்மிஷின் தருவோம் என்பது வேடிக்கையான வாக்குறுதி - சரத்குமார்

    அடிப்படை வசதிகளை செய்யாமல் இலவசமாக வாஷிங்மிஷின் தருவோம் என்பது வேடிக்கையான வாக்குறுதி என்று மதுரையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
    மதுரை:

    மதுரை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து சரத்குமார் நேற்று பிரசாரம் செய்ய மதுரை வந்தார். அவர் நெல்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் உருவாகி உள்ளோம். பல்வேறு கட்சிகள் தேர்தல் நேரத்தில் தான் வீடுகள் கட்டித்தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், எல்லா வசதிகளும் செய்து தருகிறோம் என்பார்கள். வாக்குறுதிகளையும் அள்ளித்தருகிறார்கள்.

    தமிழகம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. நாம் அனைவரும் கடனாளிகளாக உள்ளோம். ஆனால் ரூ.10 லட்சம் கோடி வரை தமிழகம் கடன் வாங்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் சொல்கிறார். கடன் இல்லாத வாழ்வு தான் சிறந்தது. பலர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.

    மேலும் மேலும் தமிழக அரசு கடன் வாங்குவது ஏற்புடையதல்ல. கடன்களை அடைக்க சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். அந்த திட்டங்கள் அனைத்தும் எங்கள் கூட்டணியிடம் உள்ளது. எங்களை ஆட்சியில் அமர்த்தினீர்கள் என்றால் சிறந்த பல திட்டங்களை செயல்படுத்துவோம். ஆட்சியில் இல்லை என்றாலும் எங்களால் முடிந்ததை செய்வோம். நானும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது வியாபார நோக்கத்திற்காக இல்லை.

    யாராவது ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால், அதை அவர்களிடமே கொடுத்து விடுங்கள். அது நாளைய எதிர்காலத்தை சீரழித்து விடும். அது நமது பணம் கிடையாது. உழைத்து சம்பாதிக்கும் பணம் தான் நமது உடலில் ஒட்டும். தி.மு.க. மட்டும் தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். நாங்கள் முஸ்லிம்களுடன் நெருங்கி பழகி வருகிறோம். முஸ்லிம்களுக்கு எல்லா எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம்.

    அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் இலவச வாஷிங்மெஷின் கொடுப்பதாக கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் இலவச வாஷிங் மிஷின் பயன்படுத்த போதுமான மின்சாரம், தண்ணீர் வசதி இருக்கிறதா என்றால் கிடையாது. அந்த அடிப்படை வசதிகளை செய்யாமல், வாஷிங்மெஷினை மட்டும் வைத்து எந்த பலனும் இல்லை. இது வேடிக்கை வாக்குறுதி என்பது அனைவரும் அறிவார்கள். எனவே திறமை உள்ளவர்களும், அறிஞர்களும் உள்ள கூட்டணி தான் மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணி. இந்த கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள். எளியவர்களுக்கும் வாய்ப்பு, பணம் இல்லா அரசியல் என்பதை கொள்கையாக கொண்டுள்ளோம். மதுரை தெற்கு தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் மிக எளிமையானவர். எனவே மக்களுக்கு நல்லது செய்ய எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×