search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கவிஞர் இரவிபாரதி
    X
    கவிஞர் இரவிபாரதி

    தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கமும்... அதன் தாக்கமும் “புதிய பதங்கள்” என்ற தலைப்பில் கண்ணதாசனின் புதிய வார்ப்புகள்... 26

    கண்ணதாசனுக்கு எதிலும் ஒரு புதுமை செய்து விட வேண்டும் என்ற முனைப்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பாகத்தான் “புதிய பதங்கள்” என்ற தலைப்பிலே ஒரு புதிய சந்தத்தில் ஒரு அற்புதமான கவிதையை வடித்திருக்கிறார்.


    நாட்டியத்தில் தான் “பதம்” என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அகப்பொருள் உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் பொழுது... இந்தப் “பதம்” என்ற சொல்லாடல் பொருள் பொதிந்த வகையில் நாட்டியங்களில் கையாளப்படுகிறது. பதம் என்றாலே சொல்லாகவும் கொள்ளலாம் சொல் என்பதை உணர்த்த வந்த மொழியாகவும் கொள்ளலாம்.

    “புது வடிவம்” என்ற பொருளிலும் கவிதை “பதம்” எனும் சொல்லினை கவிஞர்கள் கையாண்டுள்ளார்கள். கண்ணதாசனுக்கு எதிலும் ஒரு புதுமை செய்து விட வேண்டும் என்ற முனைப்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பாகத்தான் “புதிய பதங்கள்” என்ற தலைப்பிலே ஒரு புதிய சந்தத்தில் ஒரு அற்புதமான கவிதையை வடித்திருக்கிறார்.

    சங்க காலத்து இலக்கியங்கள் அனைத்திலும் தலைவன், தலைவி, தோழி பாத்திரங்கள் கட்டாயமுண்டு. ஆனால் ஏனோ தெரியவில்லை தோழன் பாத்திரங்கள் அதிகமாகச் சித்தரிக்கப்படுவதே இல்லை. அதற்குக் காரணம் ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை அதிகமாக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. ஆண்களின் இயல்பு அப்படி.

    ஆனால் பெண்கள் உலகம் அப்படி அல்ல... அவர்கள் உணர்ச்சி நிறைந்த உலகில் நீந்துபவர்கள். தனது உள்ளத்திற்கு நெருக்கமான தோழியிடம் எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்து விடுவார்கள். இந்த தோழி மனோபாவம் சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால் இப்பொழுதெல்லாம் தகவல் பரிமாற்றக் கருவிகள் நிறையவே வந்து விட்டன. தோழிமார்களிடம் சொல்லி கால தாமதம் ஏற்பட்டு தீர்வு காணப்படுவதை இப்பொழுதெல்லாம் எந்தத் தலைவியும் விரும்புவதில்லை. அலைபேசி இருக்கவே இருக்கிறது. வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர் நேரடியாகவே பார்த்துப்பேசுகிற வீடியோ கால்கள் என்று பல்வேறு வசதிகள் பெருகி விட்டன.

    மனித தூது இல்லாமலே காதல் உலகம் கை கொடி கட்டிப் பறக்கிறது. நமது கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் தொலைேபசி மட்டுமே இருந்தது... அலைபேசி எல்லாம் அப்போது கிடையாது. எனவே கண்ணதாசன் பழைய மரபினைப் பின்பற்றி... தலைவி ஒருத்தி தனது ஏக்கத்தை.. விரகதாபத்தை தோழியிடம் சொல்லி புலம்புவதாக ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

    தலைவன் என்னோடு இருந்திருந்தால், நான் என்னென்ன இன்பங்களைப் பெற்றிருப்பேன். என்னென்ன சுகங்களை எல்லாம் அனுபவித்திருப்பேன்... இப்படி என்னைத் தனிமையில் தவிக்க விட்டு விட்டுச்சென்று விட்டானே என்ற தவிப்பினை கவிதையாய் வடித்திருக்கிறார் கண்ணதாசன்.

    பெண்கள் எப்பொழுதும் தங்களின் உள்ளக்கிடக்கையினை மறைமுகமாகவே வெளிப்படுத்துபவர்கள்.. இந்தக் கவிதை தலைவியும் தன் உணர்வுகளை தோழி மூலமாகவே வெளிப்படுத்துகிறாள்... தன்னைப்பிரிந்து சென்ற தலைவன் எப்போது திரும்பி வந்து தன்னைத் தழுவுவான் என்ற ஏக்கம் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவதாகவே இக்கவிதையினை வடித்திருக்கிறார் கண்ணதாசன்.

    நெஞ்சில் நிறுத்தி ஒரு நினைவைக்

    கொடுத்தவருக்கு

    கொஞ்சமும் மனமில்லையே-தோழி.... என்னைக்

    கொஞ்சவும் வரவில்லையே....

    மஞ்சம் விரித்து எந்தன் மனதைக் கெடுத்து விட்டு

    தஞ்சமும் தரவில்லையே-இனி நான்

    அஞ்சிடில் சுகமில்லையே....!

    தோளில் விழுந்த வரைத் தொட்டுத்தழுவிக்கொண்டு

    வாழவும் வழியில்லையே... அதனை நாள்

    மீளவும் வகையில்லையே...

    பாளம் பிளந்து வைத்த பஞ்சு இதழிரண்டை

    ஆளவும் அவனில்லையே... அதற்கொரு

    நாளில்லை... பொழுதில்லையே... என்று

    நெஞ்சம்... கொஞ்சம்... மஞ்சம்... தஞ்சம் அடடா எப்பேர்பட்ட சொல்லாடல் பாருங்கள். ஆளவும் அவனில்லையே அவனில்லாமல் நான் வாழவும் வழியில்லையே இந்தக்காதல் நோயில் இருந்து நான் மீளவும் முடியவில்லையே என்று சொற்களை வைத்து எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார் கண்ணதாசன்.

    தலைவனது பிரிவுத்துயரம் தலைவியை எப்படியெல்லாம் வாட்டுகிறது என்பதை கவிஞர் வாலி எம்.ஜி.ஆர். நடித்த “படகோட்டி” படத்தில் சரோஜாதேவி பாடுவது போல் ஒரு பாட்டை எழுதியிருப்பார்.

    “என்னை எடுத்து தன்னைக்கொடுத்து

    போனவன் போனாண்டி....

    தன்னைக் கொடுத்து என்னை அடைய

    வந்தாலும் வருவாண்டி....

    என் மீது எனது நாயகன் வைத்திருக்கும் அன்பு அளப்பரியது என்னை அடைவதற்கு அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். எனவே அவன் வருவது நிச்சயம் என்ற நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார்.

    உற்று நோக்கினால் கண்ணதாசன் கவிதையும் வாலியின் பாட்டும் ஒரே திசையில் பயணிப்பதை நாம் உணரலாம்.

    இப்படி தலைவியை விட்டு விட்டு தலைவன் பிரிந்து செல்லுகிற துயரத்தை வள்ளுவரும் திருக்குறளில் “பிரிவு ஆற்றாமை” என்னும் அதிகாரத்தில்

    “செல்லாமை உண்டேல் எனக்கு உரை-மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை”-என்ற குறளில் தலைவன் வருகின்ற செய்தி என்றால் எனக்கும் சொல். அவன் வரவில்லை என்ற செய்தியை எனக்குச் சொல்லாதே. அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை என்கிறார். தோழியிடம் தலைவி. இப்படி வள்ளுவரும் பிரிவுத் துயரம் என்பது பெருந்துயரம் என்கிறார்.

    “வரச்சொல்லடி அவனை வரச் சொல்லடி

    வாயார, ஒரு முத்தம்” என்ற அற்புதமான பாட்டு பாதுகாப்பு படத்திற்காக நமது கவியரசர் கண்ணதாசன் எழுதியதுதான். தலைவனது வரவுக்கும் அவன் தரும் வரவுக்கும் ஏங்குகிற தலைவியின் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் உருக்கமான பாடல்.

    ஆரஞ்சுப் பழத்தை பிளந்து வைத்தது போல் தேன் சுமந்திருக்கும் எனது அதரங்களை ஆளுவதற்கு அவனில்லாததால் வெறும் வெண்மை மட்டுமே படர்ந்திருக்கும் ஊமத்தம் பூப்போல் ஆகி விட்டதே எனது இதழ்கள் என்று தோழியிடம் தலைவி வருந்துவதை விரகதாபத்தோடு வெளிபடுத்துகிறார் கண்ணதாசன்.

    அடுத்து வருகிற தலைவியின் கவிைத இன்னும் அவளுடைய விரகதாபத்தை கூடுதலாகவே வெளிப்படுத்துகிறது.

    உடலில் வெயிலடிக்க உள்ளம் குளிரடிக்க

    படுந்துயர் என்னாகுமோ என்மேனி

    பழுத்ததும் வீணாகுமோ...?

    கடலில் குளிப்பதற்கும் கனவில் மிதப்பதற்கும்

    கன்னிக்கு நாளாகுமோ எனதொரு

    கற்பனை பாழாகுமோ...?

    காமன் தொடுத்த கணை சாமத்திலே விழுந்து

    பூமெத்தை நீரானதே... என்னிதழ்

    ஊமத்தம் பூவானதே...

    நேமித்த கற்பு நெறி நிறைவு பெறுவதற்கு

    சாமியை வரச்சொல்லடி-இல்லை என்

    சடலத்தைப் பெறச் சொல்லடி...

    ஒரு பெண்ணுக்கு விரகதாபம் வந்து விட்டால் அந்த உணர்ச்சி அவளை என்னபாடு படுத்தும் என்பதை இதைவிட எவராலும் சொல்ல முடியாது என்ற அளவுக்கு எழுதியிருகிறார் கண்ணதாசன்.

    என் தலைவனோடு கூடி மகிழ்வதற்கேற்ற இன்பக்கிளர்ச்சியிலே தான் என் உடலும் உள்ளமும் இருக்கிறது... காய்ச்சிய பால் சூடாக இருக்கும் போதே அருந்தினால்தான் அது சுவையாக இருக்கும். அதேபோல் என்மேனி பழுத்திருக்கும் போது அவன் வந்தால்தான் இருவருக்கும் அது சுகம் என்கிறாள் தோழியிடம் தலைவி. கவிஞரின் சிந்தனை எப்படி எல்லாம் சிறகடித்துப் பறக்கிறது பாருங்கள்.

    “டவுன்பஸ்” என்ற பழைய திரைப்படமொன்றில்

    “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

    சேதி தெரியுமா? என்னை

    விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை

    பட்டு மெத்தை விரிச்சுவச்சேன் சும்மா கிடக்குது-பசும்

    பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது” என்ற கவிதையின் காம வெளிப்பாட்டையும் கண்ணதாசன் கவிதையோடு பொருத்திப் பார்க்கிறேன்.

    நானும் எனது தலைவியும் இன்ப கடலில் குளித்து களிக்கிற அந்த நாள் என்று வருமோ என்று கற்பனையில் மிதக்கிறேனே... அது உனக்கு புரியவில்லையா தோழி... மன்மதன் விடுத்த அம்பு என் உடலுக்குள் புகுந்து என் ஆசை மேகங்களை வருடியதால் இன்பமழை பொழிந்து நான் பள்ளி கொண்டிருக்கிற பூமெத்தை நனைந்து விட்டதும் உனக்கு தெரியவில்லையா தோழி. இனிமே நான் பொறுப்பதற்கில்லை... ஒன்று அவன் வந்து என் உடலை தொட வேண்டும்... இல்லாவிடில் நான் உயிரை விட வேண்டும் என்ற அளவுக்கு தலைவியின் விரகதாபத்தை தனது கவிதையில் வெளிப்படுத்தி எழுதியிருக்கிறார் கண்ணதாசன்...

    அடுத்து வருகிற கவிதை இன்னும் ஒருபடி மேலே போய் வேகம் எடுக்கிறது. தலைவியின் தாகமும், மோகமும் முதலில் தென்றலாகத் தவழ்ந்து பின்னர் புயலாகவே மாறி விடுகிறது...

    பஞ்சணை ஏன் விரித்தாய்-தோழி

    பஞ்சணை ஏன் விரித்தாய்-காய்ச்சிய பாலையும் ஏன் கொடுத்தாய்

    கொஞ்சி கலந்திருக்க.. கூடல் புரிந்திருக்க

    மஞ்சத்திலே அணைக்கும் மாரனில்லா நிலையில்

    பஞ்சணை ஏன் விரித்தாய் தோழி என்று

    கோபித்துக் கொள்கிறாள் தலைவி...

    அணைப்பதற்கு அவனில்லாத போது இந்தத் தலையணையும் தேவையில்லை... மஞ்சத்திலே கொஞ்சிக் குலவிட அவனில்லாத சூழ்நிலையில் பஞ்சணையும் தேவையில்லை என்கிறாள்...

    மஞ்சள் முகத்தில் முத்த மழை இல்லையே-என்

    மார்பில் நகக்குறியின் படமில்லையே

    வஞ்சி இடை வளைக்க கரமில்லையே-என்

    மயக்கந்தனை உரைக்க தரமில்லையே... என்றும்

    மோக இதழ் வெளுக்க முத்தம் இல்லை-பெரும்

    மூச்சுடனே குளறும் சத்தம் இல்லை.

    தேகத்திலே வியர்வை வெள்ளம் இல்லை-என்

    தேவனுக்கு என்னிடத்தில் உள்ளம் இல்லை...

    தலைவியின் மெத்த வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன். கலவி போரில் பரிமாறப்படும் முத்தம்... ஆனந்த உச்சத்தில் வெளிப்படும் குளறல் சத்தம், வடியும் வியர்வை வெள்ளம் எதையும் விட்டு வைக்கவில்லை கண்ணதாசன்.

    போர் களத்திற்கு ‘அமளி’ என்ற சொல்லாட்சி இலக்கியத்திலே இருக்கிறது. கலவி போர் நடக்கின்ற படுக்கை அறையையும் அமளி என்று அழைக்கிறார் கண்ணதாசன்.

    வாளேந்திய போருக்கு பின்னரும், தோளேந்திய போருக்கு பின்னரும் கிடைப்பது ஆனந்த அமளி என்கிறார் கவியரசர்.

    கலவரம் செய்வதையும் அமளி என்பார்-இன்பக்

    கலவி நடக்குமிடம் அமளி என்பார்

    அடைமழை ஓய்ந்த பின்னர் அமைதி என்பார்-சுக

    ஆனந்தம் ஓய்ந்த பின்னும் அமைதி என்பார்.

    என்பதே அந்த அமளி கவிதை வரிகள்.

    காதலர்கள் விரும்பி நேசிப்பது வானத்து நிலவைத்தான்... காதலர்கள் சேர்ந்திருக்கும் போது அதிகமான மகிழ்ச்சியை வழங்குவதும் இந்த நிலவு தான்... ஆனால் தலைவியை விட்டு விட்டு தலைவர் பிரிந்து விட்டால் அதே நிலவு அந்த தலைவியைச் சுடுகிறதாம்...

    ஒரு படத்தில் மனைவியை பிரிந்திருக்கும் ஜெமினி கணேசன் நிலவே என்னிடம் நெருங்காதே, நீ நினைக்கும் நிலையில் நான் இல்லை என்று பாடுவார். நீ நெருங்கினால் என்னை அதிகமாக காயப்படுத்தி விடுவாய் என்ற பொருளிலே எழுதப்பட்ட வரிகள் தான் அது.

    ஆனால் அந்த நிலவை காதலர்கள் பார்க்காமல் இருக்கும் போது அப்படிப்பட்ட நிலவை பார்த்து என் தூக்கம் போயிற்று... தலைவனை நினைத்து ஏக்கம் கூடிற்று கனவிலே அனைத்து, அனைத்து என் தோள்களும் தளர்ந்து விட்டன. பொங்கிப் பெருகி பாய்ந்தோட வேண்டிய இன்ப வெள்ளம் ‘பிரிவு’ எனும் அணையால் தடுக்கப்பட்டு விட்டதே என்று வேதனை கொள்கிறாள் தலைவி.

    தூக்கம் கெடுப்பதற்கு நிலவை விட்டான்-என்

    தோள்கள் தளர்வதற்கு கனவை விட்டான்

    ஏக்கம் கொடுத்த வள்ளல் தனியே விட்டான்-என்

    இன்பநதி தடுக்க அணையை இட்டான்.

    என்ற வரிகளில் தலைவியின் விரச தாபத்தை இலைமறை காயாக வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்...

    பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது...

    பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம் வராது

    என்ற பாவ மன்னிப்பு படப் பாடலிலேயும், தலைவன் அருகிலே இல்லையென்றால் பசியும் எடுக்காது, தூக்கமும் வராது என்பதை எத்தனைஅழகாக எடுத்து சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்...

    பிரிந்திருக்கும் காதலர்களுக்காகவே எழுதப்பட்ட அற்புதமான பாடல் அல்லவா இது.

    அடுத்த வாரம் சந்திப்போம்

    Next Story
    ×