search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நேரு,  காந்தி
    X
    நேரு, காந்தி

    நாளை ஜவகர்லால் நேரு நினைவு நாள்: நேரு என்னும் மேரு

    அன்றைய தினம் இந்திய தேசியக் கொடியை புதுடெல்லி செங்கோட்டையில் ஏற்றி வைத்து விட்டு அந்த நள்ளிரவில் நேரு ஆற்றிய உரை... வரலாற்றில் சிறப்பு மிக்க உரையாகவே அமைந்து விட்டது.


    பாரதத் தாயின் தவப்புதல்வர்களில் முதல்வரிசையில் இருப்பவர் பண்டித ஜவகர்லால் நேரு.

    ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கொடித்து இந்தியத் திருநாடு விடுதலை பெறவும், உலக அரங்கில் பாரத நாடு பட்டொளி வீசிப்பறக்கவும் ஓய்விலாது உழைத்த பெருமகன்தான் பண்டித ஜவகர்லால் நேரு. இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி அவ்வளவாகத் தெரியாது. அதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். அண்ணல் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக நமது கண்களுக்குத் தெரிபவர் நேரு மகான்தான்.

    வழக்கறிஞர் தொழிலில் கொடி கட்டிப்பறந்த பண்டித மோதிலால் நேருவின் ஒரே மகன். செல்வத்திலும், செல்வாக்கிலும் நேரு குடும்பத்திற்கு நிகராக வேறு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு, திசை எட்டும் ஒளி வீசித் திகழ்ந்திட்ட குடும்பம் அது.

    செல்வந்தர்கள் பெரும்பாலும் செல்வம் சேர்ப்பதில் தான் குறியாக இருப்பார்கள். ஆனால் தேசப் பற்றிலும், நாட்டு விடுதலையிலுமே, தீரராகவும், வீரராகவும் திகழ்ந்தார் மோதிலால் நேரு. அண்ணல் காந்தியடிகளின் நெருக்கமான நண்பராகவும் திகழ்ந்தார். எனவே ஜவகர்லால் நேருவும், தந்தை வழியிலேயே பயணித்து காந்தியடிகளின் நன் மதிப்பினைப் பெற்றார்.

    “ஜவகர்” என்றால் “ரத்தினம்” என்று பொருள். பொருளுக்கேற்றவாறு எல்லாவற்றிலும் ரத்தினமாகவே ஜொலித்தார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த “சர்ச்சில்” படித்த லண்டன் டிரினிட்டி கல்லூரியில்தான் நேருவும் கல்வி பயின்றார். நேருவின் திறமை அறிந்த கல்லூரி நிர்வாகம் நேருவுக்கு பல புத்தகங்களைப் பரிசாக வழங்கியது. அதிலே ஒரு புத்தகம்தான் அடிமைத்தனத்தை ஒழிக்க அல்லும் பகலும் உழைத்த மாவீரன் கரிபால்டியின் வரலாறாகும். அந்தப் புத்தகம்தான் நேருவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    நேருவின் நெஞ்சத்தில் விடுதலை தாகத்தை விதைத்தது. எனவே இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் தீவிரமாக குதித்தார் நேரு. அதற்கு உறுதுணையாக இருந்தது கரிபால்டியின் வரலாறு.

    “மஸ்லிஜ்” என்ற இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்த நேரு, பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் தன்னை ஓர் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். இதனால் விபின் சந்திரபால், லாலா லஜபதிராய், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோரைச் சந்திக்கின்ற வாய்ப்பும், அவர்களின் எழுச்சிமிகு வீர உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் நேருவுக்கு அமைந்தது.

    1947-ல் நடைபெற்ற முதலாம் உலகப் போரில் எங்களுக்கு ஆதரவளித்தால் இந்தியாவுக்கு விரைவிலே சுதந்திரம் தருவோம் என்று நப்பாசை காட்டினர் ஆங்கிலேயர். இதனை அப்படியே நம்பி, மோதிலால் நேரு ஒரு கூட்டத்திலே பேசியபோது “வெட்கம்... வெட்கம்” வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுக்காதீர் என்ற குரல் இடிமுழக்கமாய் ஒலித்தது. மேடையில் இருந்த மிதவாதத் தலைவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல பண்டித ஜவகர்லால் நேருதான். தந்தையாக இருந்தாலும் மனதில் பட்டதை தைரியமாக உரைக்கும் ஆற்றல் மிக்கவராகக் திகழ்ந்தார் நேரு.

    1916-ல் லட்சுமண புரியிலே நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலேதான் முதன் முதலாக காந்தியடிகளைச் சந்தித்தார் நேரு. தென்ஆப்பிரிக்காவில் இனவெறியை அறவழியில் போராடி காந்தியடிகள் வெற்றி பெற்றுத் திரும்பிய நேரம் அது. அதற்குப் பிறகு காந்தியடிகளுடன் நேருவுக்கு ஏற்பட்ட நேரடித் தொடர்பால் தீவிர அரசியலிலே இறங்கினார் நேரு. ஜாலியன் வாலாபாத்திலே ஏற்பட்ட படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களிலும் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு அவை வெற்றி பெற கடுமையாக உழைத்தார் நேரு.

    தனது மகனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவான் என்று மோதிலால் நேரு ஒரு கணக்கு போட்டார். அதன்படி நேரு-கமலா நேருவின் திருமணத்தை ஊரே கண்டு வியக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக நடத்தினார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு இன்னும் கூடுதலாகவே நாட்டு விடுதலையில் ஈடுபாடு கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் தைரியத்தோடு திகழ்ந்தார் நேரு.

    வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்புக் கூடாது என்று போராடி தந்தை மோதிலாலுடன் தானும் சிறை சென்றார் நேரு. தந்தையும், மகனும் ஒரே சிறையில் அடைக்கப்பட்ட அதிசயம் அப்போது நிகழ்ந்தது.

    இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பது முறை சிறை சென்று 3262 நாட்களை சிறையிலே கழித்த மாபெரும் தியாக வரலாறு நேருவுடையது. சொகுசாக, சுகமாக வாழ வேண்டிய நேருவின் இளமைப் பருவம் முழுவதையும் சிறைச்சாலையே விழுங்கிக் கொண்டது. அப்போது சிறைச்சாலையில் இருந்தபடியே பல்வேறு புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு நேருவுக்கு கிடைத்தது. அது மட்டுமல்ல இந்திராவுக்கு கடிதங்கள், சுய சரிதை, டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற நூல்களை எல்லாம் சிறைச்சாலையில் இருந்துதான் எழுதினார். கடினமான உழைப்பு, தன்னலமற்ற தேச சேவை, நாட்டு விடுதலையில் நாட்டம் போன்ற நேருவின் குணநலன்கள் அவரை ஒரு மாபெரும் தலைவராக உயர்த்தியது.

    1923-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று பொதுச்செயலாளர்களில், நேருவின் பெயர் முதலாவதாக இருந்தது. பொதுச்செயலாளர் பொறுப்பேற்று நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலை வேட்கையை மக்களிடம் ஊட்டினார்.

    இந்த நேரத்தில்தான் நேருவின் துணைவியார் கமலா நேருவின் உடல் நலம் நாளுக்கு நாள் குன்றியது. ஒரு நாளில் கமலா நேரு இவ்வுலகை விட்டு மறைந்து போனார். தாயார் சொருப ராணியின் மரணம், தந்தை மோதிலால் நேருவின் மரணம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நேருவைத் தாக்கியது. அனைத்தையும் தாங்கி நின்று, எதிர் கொண்டு நாட்டு விடுதலைக்காக, நாளும் பொழுதும் ஓய்வின்றி உழைத்தார் பண்டித ஜவகர்லால் நேரு.

    இந்தியாவில் என்னென்ன அரசியல் சீர்த்திருத்தங்களைச் செய்யலாம் என்பதை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பதற்காக வெள்ளை அரசாங்கம் “சைமன் கமிஷனை” நியமித்தது. வேடிக்கை என்ன வென்றால் இந்தக் குழுவில் ஒருவர் கூடஇந்தியர் இல்லை. இதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. லக்னோவில் நடைபெற்ற சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்திற்கு பண்டித ஜவகர்லால் நேருவே தலைமை ஏற்றார்.

    அப்போது போலீசார் தாக்கியதில் நேரு பலத்த காயம் அடைந்தார். இருந்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே தைரியமாக நின்றார். குதிரை மீது வந்து தாக்கிய அந்த போலீஸ்காரனைக் கீழே தள்ளி விட்டு, அந்தக் குதிரையின் மீது ஏறிச் செல்வது என்பது எனக்கு எளிதான ஒன்றுதான். இருந்தாலும் அதை நான் செய்யவில்லை என்று இந்தச் சம்பவம் குறித்து தான் எழுதிய நூலிலே குறிப்பிடுகிறார் நேரு.

    இந்தச் சம்பவம்தான் நேருவைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டினை, நம்பிக்கையை காந்திஜியின் மனதிலே விதைத்தது. இந்தச் சம்பவத்தை நெகிழ்வோடு குறிப்பிட்டு காந்திஜி நேருவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதிலே, “இன்னும் இதை விட பல வியக்கத்தக்க பல நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்க உள்ளன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு சமாளித்து இந்தியத் திருநாட்டை அந்நியரிடமிருந்து பாதுகாப்பாக மீட்டெடுத்திட உன்னைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்துள்ளார் என்று காந்திஜி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல...

    வருங்காலத்தில் எனக்குப் பின்னாலே என்னுடைய குரலை எதிரொலிப்பவர் பண்டித ஜவகர்லால் நேருதான் என்றும் குறிப்பிட்டு நேருவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் காந்திஜி. காந்தியடிகளோடு பழகிய தலைவர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டு விட்டு நேருவின் பெயரே காந்திஜியின் மனதிலே இருந்திருக்கிறது.

    அது வேறொன்றும் இல்லை... தன்னலமற்ற வேலை, கடின உழைப்பு, செல்வம், செல்வம் அனைத்தையும் துறந்த தியாகம், கைக் கொண்டு வாழ்ந்த நேர்மை... இவை தான் காந்தியின் தேர்வுக்கு காரணமாக இருந்திருக்க கூடும்.

    1945ல் உலகப் போர் முடிவடையும் தருவாயில் இருந்த நேரம். இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதை இனிமேலும் தாமதிக்க முடியாது என்று வெள்ளையர்களே சிந்தித்து, தீர்மானித்து முடிவுக்கு வந்துவிட்ட நேரம் அது...

    1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி செங்கோட்டையில் இந்திய தேசிய சுதந்திர கொடியை நேரு ஏற்றுவது என்று முடிவினை மவுண்ட் பேட்டன் அறிவித்தார்.

    இந்திய திருநாட்டின் பெருமையே அதன் கலாச்சாரமும், பண்பாடும் தான்... சடங்குகளிலும், சம்பரதாயங்களிலும் அதிகமான நம்பிக்கை இல்லாத நேரு பல்வேறு தலைவர்களையும் அழைத்து இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதந்திரத் திருநாளை எப்படிக் கொண்டாடுவது என்று ஆலோசனை நடத்தினார். அது தான்நேருவின் பெருந்தன்மை என்பது.

    இந்திய நாட்டுச் சரித்திரத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் போது செங்கோல் ஏற்றி சிறப்பிப்பது தான் சாலச் சிறந்தது என்ற கருத்து முன் வைக்கப்பட்டு அது ஏற்கப்பட்டது. மூதறிஞர் ராஜாஜியின் வழிகாட்டுதல்படி... திருவாடுதுறை ஆதீனத்தின் மேற்பார்வையில் செங்கோல் செய்யப்பட்டு தேவாரம், திருவாசகம் ஓதப்பட்டு, மந்திரங்கள் ஒலித்திட செங்கோலை மவுண்ட் பேட்டன் வழங்கிட அதை நேரு பெருமகான் பெற்றுக் கொண்டார். ஆக இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த திருநாளில் தமிழுக்கும், தமிழருக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்துக் கொடுத்தது தான் பண்டித ஜவகர்லால் நேரு...

    அன்றைய தினம் இந்திய தேசியக் கொடியை புதுடெல்லி செங்கோட்டையில் ஏற்றி வைத்து விட்டு அந்த நள்ளிரவில் நேரு ஆற்றிய உரை... வரலாற்றில் சிறப்பு மிக்க உரையாகவே அமைந்து விட்டது.

    உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த நள்ளிரவு பொழுதில் இந்திய தேசம் விழித்துக் கொண்டிருக்கிறது. பெருமை மிக்க இந்த தருணத்தில் இந்திய மக்களுக்காகவும், உலக மனித குலத்திற்கு சேவை செய்வதற்காகவும் நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோமாக...

    நம்மை சூழ்ந்திருந்த இருளில் இருந்து நம்மை மீட்டெடுக்க, தனி மனிதனாக நின்று போராடி வெற்றி பெற்ற தேசப்பிதா காந்தியடிகளை எண்ணிப்பார்த்து அவர் ஏந்திச் சென்ற அந்த சுதந்திர தீபத்தை காற்றிலும், மழையிலும் அணையாமல் காப்பதே நமது லட்சியமாக இருக்கட்டும் என்று நேரு பேசிய அந்த உருக்கமான உரையை உலகமே உற்று நோக்கி வரவேற்றது. பாரத பிரதமராக பொறுப்பெற்று அவர் தீட்டிய ஐந்தாண்டுத் திட்டங்களும், அமைத்த உருக்காலைகளும், எழுப்பிய எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களும், கட்டிய அணைக் கட்டுகளும், மின்சாரக் கட்டுமானங்களும் தான் மாபெரும் செல்வங்களாக இன்றும் விளங்கி நமக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

    பக்ரா நங்கல் அணையை திறந்து வைத்த போது நான் இதை அணையாக மட்டும் பார்க்கவில்லை. இதற்காக அல்லும் பகலும் உழைத்த மக்களின் வியர்வையைப் பார்க்கிறேன். ஒரு கோயிலாகவும், மசூதியாகவும், தேவாலயமாகவும், குருத்துவாராகவும் பார்க்கிறேன் என்று பேசி முத்திரை பதித்தவர்தான் நேரு.

    அவரது ஆட்சி காலத்தில் தான் ஜமீன்கள் ஒழிக்கப்பட்டன. உபரி நிலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. அமைதி, சமாதானம், ஒற்றுமையை நிலைநாட்டும் பஞ்சசீல கொள்கைகள் உருவாக்கப்பட்டன. கூட்டுச் சேராக் கொள்கையை மேற்கொண்டு எல்லா நாடுகளோடும் நடுநிலையோடும், நட்போடும் இருப்பதை நமக்கு வகுத்து கொடுத்தவர் நேருதான். அணிசேரா நாடுகளை ஒன்றிணைத்து அதற்குத் தலைமை ஏற்ற பெருமையும் நேருவுக்கே உரியது. நேருவின் தோற்ற பொலிவும், கம்பீரமும் எவருக்கும் வாய்க்காத பேறுகள்... அமெரிக்க அதிபர் கென்னடியும், ரஷ்ய அதிபர் குருஷேவும், எகிப்தின் நாசரும், நேருவின் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர். உலக தலைவர்கள் பலரும் நேருவின் நட்புக்காக ஏங்கினர்.

    1962-ல் சீனா நடத்திய அத்துமீறல் படையெடுப்பில் தான் நேருவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு நாட்பொழுதில் 4 மணிநேரமே உறங்கினார். மீதி நேரம் அனைத்தையும் இந்திய நாட்டின் நலனுக்காகவே சிந்தித்தார். செலவழித்தார். 1964 மே 27-ல் மரணத்தை தழுவிய போது உலகமே அவருக்காக கண்ணீர் வடித்தது. அவரது ஆசைப் படியே அவரது பூத உடல் சாம்பல் அனைத்து புண்ணிய நதிகளிலும் கரைக்கப்பட்டு, இந்திய வயல்கள் அனைத்திலும் தூவப்பட்டது. மண்ணோடு, மண்ணாக கலந்து விட்ட அந்த மகத்தான தலைவரை நினைவு கூர்ந்து அவர் காட்டிய திசையில் தேசப்பற்றோடு வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

    Next Story
    ×