search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பி. சுவாமிநாதன்
    X
    பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்- 43

    மகாகாவ் என்கிற கிராமத்துக்கு மகா பெரியவா வந்திருக்கிறார் என்பதை அறிந்து மகா பண்டிதரும் இங்கு வந்தார்.


    ‘இந்த உலகம் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது... செயல்பாடுகள் திருப்தி தரவில்லை. அதர்மம் பெருகுகிறது. அநீதி தலை தூக்குகிறது. நடக்கின்ற காரியங்கள் அனைத்துமே நல்லனவாக இல்லை... இப்படிப்பட்ட வேதனைகளை எல்லாம் என் இரண்டு கண்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே...’ என்கிற வேதனை அந்த மகா பண்டிதருக்கு மேலோங்கியது.

    இந்த மகா பண்டிதர் யார் என்றும் பார்த்தோம். அப்போதைய ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் குரு.

    நல்லனவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் மனம் மகிழும். மேலே சொன்னது மாதிரியான துர்காரியங்களைப் பார்க்க நேரிட்டால், நல்லவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமா? வெட்கித் தலைகுனியத் தோன்றும். மகா பண்டிதரின் மனமும் அப்படித்தானே!

    நல்லதையே சிந்தித்து, நல்லனவற்றையே செய்து கொண்டிருக்கிறவர்களுக்கு எப்படி இவற்றை எல்லாம் பார்க்க மனம் வரும்? இந்த அராஜகங்களைப் பார்த்து விட்டு, ‘படைத்தவனே கதி’ என்று தெய்வங்களிடம் முறையிடுவார்கள்.

    அதுபோல்தான் நித்தமும் தெய்வங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அந்த மகா பண்டிதர்.

    இந்த நிலையில் மகாகாவ் என்கிற கிராமத்துக்கு மகா பெரியவா வந்திருக்கிறார் என்பதை அறிந்து மகா பண்டிதரும் இங்கு வந்தார்.

    தன் மனதில் இருக்கிற உள்ளக் குமுறலைப் பெரியவாளிடம் கொட்டினார். பிறகு, ‘இதை எல்லாம் பார்த்துண்டு என்னால உயிரோடு இருக்க முடியல. பிராணத் தியாகம் செய்துடலாம் தோன்றது பெரியவா’ என்று குலுங்கிக் குலுங்கி அழுதார்.

    ஒரு சில விநாடிகளுக்குக் கண்களை மூடிய நிலையில் காணப்பட்ட பெரியவா, பின் பூரண சூரியனாகக் கண்களைத் திறந்தார். மகா பண்டிதரைத் தீர்க்கமாகப் பார்த்தார். ‘‘உன்னோட கனவுல நான் வந்து ‘பிராணத் தியாகம் பண்ண வேண்டாம்’னு சொன்னேனா...?’’ என்று கேட்டாரே, பார்க்கணும்!

    தன் குமுறலையும் அழுகையையும் அப்போதுதான் நிறுத்தியிருந்த மகா பண்டிதர், மீண்டும் கேவ ஆரம்பித்து விட்டார். அவர் விழிகளில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. ஒரு கட்டத்தில் தன்னைத் தேற்றிக் கொண்டு, ‘‘ஆமா பெரியவா... நீங்கதான் என் கனவுல வந்து ‘பிராணத் தியாகம் பண்ண வேண்டாம்’னு சொன்னேள்...’’ என்று எழுந்தார்.

    கைகளைக் குவித்து, ‘‘சர்வேஸ்வரா... ஆபத்பாந்தவா... அநாதரட்சகா...’’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

    பெரியவா திருமுகத்தில் ஒரு புன்முறுவல்.

    இந்த உலகத்தின் மீதும், தான் சார்ந்திருக்கிற குடும்பத்தின் மீதும் பற்றும் பாசமும் எவர் கொண்டிருக்கிறாரோ, அவருக்குத் தெய்வங்களும் மகான்களும் என்றென்றும் துணை இருப்பார்கள்!

    மேலே சொன்ன சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்.

    எந்தத் தவறும் செய்யாத மகா பண்டிதர், இதற்காக ஏன் பிராணத் தியாகம் செய்ய வேண்டும்? அதனால்தான் பெரியவாளே அவரது கனவில் எழுந்தருளி, ‘நீ பிராணத் தியாகம் செய்ய வேண்டாம்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    அதன் பின் மகா பண்டிதருடன் சுமார் ஒரு மணி நேரம் வேதாந்த சமாசாரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. மீண்டும் நமஸ்காரம் செய்தார்.

    மகா பண்டிதரை ஆசிர்வதித்து, அவருக்கு பிரசாதங்கள் தந்து வழியனுப்பிய பின்தான், தியாகராஜன் பக்கம் திரும்பினார்.

    தியாகராஜன், அவரது மனைவி ராஜலட்சுமி, இவர்களது மகன் அருண்குமார் ஆகிய மூவரும் மகா பெரியவா தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள் அல்லவா? திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பெரியேரி என்கிற கிராமம்தான் இவர்களது சொந்த ஊர்.

    இன்னும் சில நாட்களில் தியாகராஜனுக்கு சஷ்டியப்த பூர்த்தி-அதாவது அறுபதாம் கல்யாணம் நடக்க உள்ளது. இதை எப்படி எங்கே நடத்தலாம் என்று உறவினர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தைச் சொன்னாலும், தியாகராஜன் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். அதாவது, மகா பெரியவா எப்படி நடத்த வேண்டும் என்று சொல்கிறாரோ, அதன்படிதான் நடத்த வேண்டும் என்று.

    தியாகராஜன் குடும்பம் ஸ்ரீமடத்துக்கு ஏற்கெனவே பரிச்சயம் உள்ள குடும்பம் என்பதால், ஒரு புன்னகையுடன் அவர் பக்கம் திரும்பினார். உடன் வந்தவர்களையும் பார்த்தார்.

    பின், ‘‘என்ன திடீர்னு இவ்ளோ தூரம் புறப்பட்டு வந்துட்டே?’’ என்று தியாகராஜனிடம் உரிமையுடன் கேட்டார் பெரியவா.

    எழுந்து தம்பதி சமேதராக நமஸ்காரம் செய்தார். மகன் அருண்குமாரும் பெரியவாளை நமஸ்கரித்தான்.

    ‘‘பெரியவா... எனக்கு சஷ்டியப்த பூர்த்தி வரப் போறது. அதான் உங்ககிட்ட சொல்லிண்டு ஆசி வாங்கிண்டு போலாம்னு வந்தேன்’’ என்று கைகளைக் கூப்பினார்.

    இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதித்தது அந்தப் பரப்பிரம்மம்.

    அந்த ஆசிக்கு ஈடு இணை ஏது? அதை வேண்டித்தானே பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் படையெடுத்து வருகிறார்கள்! இந்த ஒரு சில விநாடி ஆசிகள்தானே எத்தனையோ குடும்பங்களை இன்றைக்கு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது!

    பெரியவா வழங்கிய ஆசியில் புளகாங்கிதம் அடைந்த தியாகராஜனின் விழிகள் ஓரம் ஈரம் கசிந்தது.

    ‘‘எத்தனை வைதீகாளை வெச்சுப் பண்ணப் போறே?’’-பெரியவா கேட்டார்.

    ‘‘பன்னிரெண்டு பேரை வெச்சுப் பண்ணலாம்னு தோன்றது பெரியவா.’’

    ‘அப்படியே ஆகட்டும்’ என்பது போல் அதற்கு இசைவு தெரிவித்தார் மகான்.

    பின், ‘‘எவ்வளவு சம்பாவணை குடுக்கப் போறதா உத்தேசம்?’’ என்று கேட்டார் பெரியவா.

    ‘‘முந்நூறு ரூவா குடுக்கலாம்னு நினைச்சேன் பெரியவா.’’

    ‘அதுவே போதும்’ என்பது போல் தலையசைத்தும், வலக்கையை அசைத்தும் ஜாடையால் சொன்னார்.

    எல்லாவற்றுக்கும் பெரியவாளிடம் இருந்தே பதில் கிடைக்கிறது என்கிற சந்தோஷம் தியாகராஜனுக்கு.

    இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. எந்த ஒரு காரியம் துவங்க இருந்தாலும், அதற்கு முன் பெரியவாளிடம் சென்று அதைச் சொல்லி அவரது உத்தரவு வாங்குவது வழக்கம். ‘செய்’ என்று பெரியவா சொன்னால், அதை உற்சாகமாகத் துவங்குவார். சரியான பதில் கிடைக்காவிட்டால், அதைச் செய்யவே மாட்டார்.

    இந்த அறுபதாம் கல்யாணம் நன்றாக நடந்தேறுவதற்கு உண்டான எல்லாவற்றையும் பெரியவாளே சொல்ல வேண்டும்... அதன்படிதான் இதை நடத்த வேண்டும் என்கிற திடமான தீர்மானத்துடன் எத்தனையோ தொலைவு தள்ளி இருக்கிற மகாகாவ் வந்திருந்தார் தியாகராஜன்.

    இந்த வைபவத்தை சென்னையில் நடத்திக் கொள்ளலாம் என்று தியாகராஜனின் உறவினர்கள் சொன்னார்கள். ஆனால், அதற்கு உடன்படவில்லை தியாகராஜன். உடன்படாததற்குக் காரணம், இதை எங்கே நடத்த வேண்டும் என்பதைத் தானோ மற்றவர்களோ தீர்மானிக்கக் கூடாது. பெரியவா தன் திருவாயால் சொல்ல வேண்டும் என்பதற்காக பெரியேரியில் இருந்து புறப்பட்டு நேராக இங்கு வந்து விட்டார். இதனால் ஏற்படக் கூடிய பயணக் களைப்பு, பொருள் செலவு, அலைச்சல் இத்யாதிகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல தியாகராஜனுக்கு.

    அப்படி என்றால், எந்த அளவுக்குப் பெரியவா மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய அசாத்ய பக்தி எவருக்கு இருந்தாலும், மகானின் பரிபூரண ஆசிகள் அவருக்கு மட்டுமல்லாமல் அவரது சந்ததியினருக்கும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    அடுத்து, பெரியவாளிடம் இருந்து வரப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார் தியாகராஜன்.

    அதுதானே முக்கியமானது! இந்த வைபவத்தை உறவினர்கள் ஆசைப்படி சென்னையில் நடத்தலாமா? அல்லது வேறு எங்கு நடத்துவது?

    தியாகராஜனின் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விக்குப் பதில் அந்தப் பரப்பிரம்மத்தின் திருவாயில் இருந்து வந்து விழுந்தது.

    ‘‘நீ எந்தக் குடிசையில் இருக்கியோ, அங்கேயே சஷ்டியப்த பூர்த்தி பண்ணிக்கோ.’’

    -திடமான-திருப்தியான பதில் நடமாடும் தெய்வத்திடம் இருந்து வந்தது. தம்பதி சமேதராகக் கைகளைக் குவித்து, கண்களில் பெருகும் நீருடன் மீண்டும் பெரியவாளை நமஸ்கரித்தார்.

    அறுபதாம் கல்யாணத்தை எங்கே நடத்த வேண்டும் என்று பெரியவா தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

    ‘எந்தக் குடிசையில் இருக்கியோ....’-எப்பேர்ப்பட்ட பதில்.

    அந்தக் காலத்தில் வயதானவர்கள் எல்லோருக்கும் என்ன ஆசை இருக்கும் தெரியுமா? எதுவாக இருந்தாலும், அது குடி இருக்கிற வீட்டிலேயே நிகழ வேண்டும்!

    பெரியவர்கள் சிலர் இன்றைக்கும் சொல்வார்கள்-‘கடைசி காலத்துல நான் இருக்கிற இந்த வீட்டிலேயே என் உயிர் பிரியணும். வேறு எங்கும் போகக் கூடாது.’

    இதன் உட்கருத்தை உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்... உறவுகள், பாசம், சந்தோஷம், சென்டிமெண்ட் என்று பல விஷயங்கள் தென்படும்.

    தியாகராஜனின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

    (தொடரும்)

    swami1964@gmail.com

    Next Story
    ×