search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர். பிரபு திலக்
    X
    டாக்டர். பிரபு திலக்

    ஆறுமனமே ஆறு: விளையாட்டு முக்கியம் பாஸ்- 33

    எல்லோருமே பணத்தைத் தேடி ஓடுற காலமா இன்றைய காலம் இருக்கு. அதுக்காக யாரையும் குத்தமும் சொல்ல முடியாது.


    `விளையாட்டில் தோல்வியடைந்தவர்கள் அதற்கான சாக்குப்போக்குகளைச் சொல்கிறார்கள்; வெற்றிபெற்றவர்கள் புதிய வரலாற்றை உருவாக்குகிறார்கள்.’’

    ஒரு ஜப்பானியப் பழமொழி.

    மதுரை மாவட்டத்துல இருக்குற ஒரு சின்னஞ்சிறு ஊர் சக்கி மங்கலம். அந்த ஊரைச் சேர்ந்தவரு ரேவதி. இவரோட அப்பா வீரமணி உடல்நலக் குறைவால இறந்துபோயிட்டாரு. அப்போ ரேவதிக்கு மூணு வயசு. நாலு வயசுல இவரோட அம்மா ராணியும் இறந்து போயிட்டாங்க. அம்மாவோட அம்மா ஆரம்மாதான் இருந்த ஒரே ஆதரவு. அவங்களோட நிழல்லதான் ரேவதியும், அவரோட தங்கச்சி ரேகாவும் வளர்ந்தாங்க. அம்மா, அப்பா இல்லை. அன்றாடம் சாப்பிடுற உணவுக்கே இழுத்துக்கோ பறிச்சுக்கோங்கிற நிலைமை. சின்ன வயசுலயே ஒரு விடுதியில தங்கிப் படிக்கவேண்டிய கட்டாயம். இதெல்லாம் ஒருபக்கம் படுத்தியெடுத்தாலும் `என்னவாவது செய்யணும், சாதிக்கணும்’கிற ஆசை ரேவதிக்கு இருந்துச்சு.

    அவரு ஸ்கூல்ல ஆறாம் கிளாஸ் படிச்சுட்டு இருந்தப்போ ஓட்டப்பந்தயப் போட்டி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட ரேவதிக்கு முதல் பரிசு கிடைச்சுது. அன்னிக்கு ரேவதி ஓடினதை ஊரே ஆச்சரியத்தோட பார்த்துச்சு. அதுக்குக் காரணம் இருக்கு. ஷூ கூட போடாம வெறுங்காலோட ஓடி ஓட்டப்பந்தயத்துல அந்தச் சின்னப் பொண்ணு ஜெயிச்சிருந்தாங்க.

    அந்த ஸ்கூல்ல ஒரு தடகளப் பயிற்சியாளர் இருந்தார். அவர் பேரு கண்ணன். பார்த்ததுமே அவருக்கு ரேவதியோட வறுமை நிலைமை புரிஞ்சுபோச்சு. முதல் வேலையா அந்தப் பொண்ணுக்கு ஒரு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக் கொடுத்தார். ரேவதிக்கு நல்லா பயிற்சி கொடுத்தாா். படிப்படியா மாநில அளவுல நடந்த போட்டி, தேசிய அளவுல நடந்த போட்டின்னு பல ஓட்டப்பந்தயங்கள்ல கலந்துக்கிட்டு அதிகப்படியான தங்கப் பதக்கங்களை ஜெயிச்சார் ரேவதி. அது மட்டுமில்லை... போன வருஷம் டோக்கியோவுல நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்குற பொன்னான வாய்ப்பும் ரேவதிக்குக் கிடைச்சுது. அந்தப் போட்டியில ரேவதிக்கு பதக்கம் எதுவும் கிடைக்கலை. ஆனா, எதிர்காலத்துல நிறைய சாதிப்பாருங்கிற நம்பிக்கையை விதைச்சுருக்கார். மதுரைக்குப் பக்கத்துல இருக்குற சாதாரண சக்கிமங்கலம்கிற ஊரைச் சேர்ந்த ஒரு பொண்ணு, அத்தனை வறுமையிலயும் ஒலிம்பிக் போட்டிக்குப் போகுற அளவுக்கு முன்னேறுறதுங்கறது எவ்வளவு பெரிய சாதனை!

    போன வருஷம் நடந்த ஒலிம்பிக் போட்டியில மொத்தம் ஏழு பதக்கங்களை ஜெயிச்சுருக்கு இந்தியா. ஈட்டி எறிதல் போட்டியில தங்கப் பதக்கம் வாங்கி அசத்தியிருக்கார் வீரர் நீரஜ் சோப்ரா. இதுவரை யாராலயும் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்த இந்திய பெண்கள் ஆக்கி அணி அரை இறுதி வரைக்கும் முன்னேறி எல்லோரையும் ஆச்சர்யப்பட வெச்சிருக்கு. `இதெல்லாம் ஒரு பெருமையா?’ன்னு நாம இதைக் குறைச்சு மதிப்பிட முடியாது.

    கொரோனாங்கிற பெருந்தொற்றுக் காலத்துல நம்ம இளையோர்கள் செஞ்சுருக்குற அரும்பெரும் சாதனை இது. அந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிஞ்சதுக்குப் பிறகு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், `விளையாட்டுகள்ல அதிக அளவிலான பங்களிப்பு கிடைக்கறதுக்கு இளையோர்களை ஊக்குவித்தல், இளமையிலேயே விளையாட்டு வீரர்களை அடையாளம்கண்டு அவங்களை வளர்த்தெடுக்குறது, விளையாட்டு, கல்வியில இழப்பு ஏற்பட வழிவகுக்காதுங்கற உத்தரவாதத்தை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கொடுப்பது, விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பது, விளையாட்டு வீரர்களைத் தயார்ப்படுத்தறதுக்காக ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், மருத்துவ நிபுணர், மனநல மருத்துவர் இவங்களையெல்லாம் ஈடுபடுத்துறது, நாடு முழுக்க 1,000 ‘கேலோ இந்தியா’ (இந்தியாவே விளையாடு) மையங்களை அமைக்கறது, சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவங்களுக்கு ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் மூலமா உதவித்தொகையாக வருஷத்துக்கு 6.28 லட்ச ரூபாய் கொடுக்கறது...’ இப்படிப் பல முக்கியம்மான அம்சங்களை அறிவிச்சிருக்கார்.

    எனக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒருத்தங்க எம்.ஏ ஹிஸ்டரி கோர்ஸ்ல சேர்றதுக்கு ஆன்லைன்ல ஒரு யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணினாங்க. அப்போ என்கிட்ட ஒரு சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டாங்க. நான் அதுக்காக அந்த ஆன்லைன் அப்ளிகேஷனைப் பார்க்கவேண்டி வந்தது. அதுல ஒரு பகுதி கேள்விகள் முழுக்க முழுக்க விளையாட்டு சம்பந்தப்பட்டது. `நீங்க விளையாட்டு வீரரா... என்ன விளையாட்டு விளையாடுவீங்க... மாநில அளவுல தேசிய அளவுல ஏதாவது பதக்கம் வாங்கியிருக்கீங்களா... எத்தனை பதக்கம் வாங்கியிருக்கீங்க...’ன்னு நீண்டுக்கிட்டே போகுது கேள்விகள்.

    ஆக, இன்னிக்கும் கல்வி நிறுவனங்கள்ல சேர்றதுக்கும், தனியாரோ அரசு நிறுவனமோ அங்கே வேலைவாய்ப்பு பெறுவதற்கும் `ஸ்போர்ட்ஸ் கோட்டா’ங்கிறது முக்கியமான ஒண்ணா இருக்கு. ஆனால், கபடியோ, ஆக்கியோ, கால்பந்தோ விளையாட்டுக்கு நாம அத்தனை முக்கியத்துவம் கொடுக்குறோமான்னு யோசிக்கவேண்டியிருக்கு. ஞாயித்துக்கிழமையானா போதும்... பசங்க பேட்டையும் பாலையும் தூக்கிக்கிட்டு கிரிக்கெட் விளையாடக் கெளம்பிடுறாங்களே தவிர, மத்த விளையாட்டுகள்ல அவ்வளவா ஆர்வம் காட்டுறதில்லை.

    எல்லோருமே பணத்தைத் தேடி ஓடுற காலமா இன்றைய காலம் இருக்கு. அதுக்காக யாரையும் குத்தமும் சொல்ல முடியாது. இன்னிக்கி விக்கிற விலைவாசி, வாழ்க்கைச்சூழல் அப்படி. சென்னை, கோவை மாதிரி மெட்ரோ நகரங்களை விடுங்க... தமிழ்நாட்டுல இருக்குற சிறு நகரங்கள்ல எளிய வாழ்க்கை வாழணும்னாக்கூட பெரிய அளவுல காசு தேவைப்படுது. இந்த நிலைமையிலயும் விளையாட்டு மேல கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். நீரஜ் சோப்ரா மாதிரி, ரேவதி மாதிரி எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நாடு முழுக்க இருக்காங்க. அந்த மாதிரி இளையோர்களை, மாணவர்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்தி, வளர்த்தெடுத்தாத்தான் ஸ்போர்ட்ஸ்லயும் இந்தியாவை அசைச்சுக்க முடியாதுங்கற நிலைமையை உலக அளவுல நாம ஏற்படுத்த முடியும்.

    கல்வி ரொம்ப ரொம்ப முக்கியம்தான். இல்லைன்னு சொல்லலை. கொரோனா காலத்துல ஆன்லைன்ல பிள்ளைங்களுக்குப் பாடம் எடுத்தாங்க. கொரோனா அலை ஓய்ஞ்ச பிறகு ஸ்பெஷல் கிளாஸ், ஹோம்வொர்க்னு எக்ஸாம் பீவரைத்தான் பசங்களுக்கு ஏற்படுத்தியிருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு இப்போல்லாம் விளையாட்டு பீரியட்னு ஒண்ணு பெரும்பாலான ஸ்கூல்களில் நடக்கறதே இல்லை. பல ஸ்கூல்களில் விளையாட்டு மைதானமே இல்லைங்கறதுதான் உண்மை.

    ஒரு இளைஞனுக்கு (அ) இளம் பெண்ணுக்கு விளையாட்டுல அதீத ஆர்வம் இருக்கு... விளையாடணும்னு ஆசைப்படுறான்னே வெச்சுக்குவோம். விளையாடுறதுக்கோ, பயிற்சி எடுக்கறதுக்கோ இங்கே போதுமான அளவுக்கு மைதானங்கள் இல்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சார்பா பல ஊர்கள்ல பொது மைதானங்கள் இருக்கு. ஆனா, அதெல்லாம் கவனிப்பாரற்று, சிதிலமடைஞ்சு கிடக்கு. இன்னொரு பக்கம் மைதானங்களை வர்த்தக காரணத்துக்காகவும், வியாபாரத்துக்காகவும் ஆக்கிரமிக்கிறதும் நடக்குது. முதல்ல இந்த மைதானங்களை சீர்ப்படுத்தி, போதுமான உபகரணங்களையும், விளையாட்டுக்குத் தேவையான அத்தனையும் கொடுத்து பிள்ளைகள் விளையாடுறதுக்குத் தோதானதா இந்த மைதானங்களை மாத்த அரசும் தன்னார்வலர்களும் முன் வரணும். எந்த விளையாட்டுல மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கோ அதுல பயிற்சி கொடுக்கணும். அதுக்கு அதிக அளவுல பயிற்சியாளர்களை நியமிக்கணும்.

    இப்போல்லாம் தங்களோட பிள்ளைங்க விளையாட்டுத்துறையில ஈடுபடணும், அதுல சாதிக்கணும்னு நினைக்கிற பெற்றோர்கள் ரொம்பக் குறைவு. குழந்தைங்க பிற்காலத்துல பெரிய விளையாட்டு வீரர்களா ஆகுறாங்களோ, இல்லையோ... அவங்களை நல்லா விளையாட அனுமதிக்கணும். வியர்வை வழிய வழிய ஓடி விளையாடுறதுதான் ஒரு குழந்தைக்கு ஆரோக்கியம். அதனாலதான் பாரதியாரே `ஓடி விளையாடு பாப்பா...’ன்னு சொல்லியிருக்கார். இப்போல்லாம் ஸ்கூலுக்குப் போறதுக்கும், ஸ்பெஷல் கிளாசுக்குப் போறதுக்குமே பிள்ளைங்களுக்கு நேரம் பத்த மாட்டேங்குது. பிள்ளைகள் தொடர்ந்து விளையாடும்போது அவங்க உடல் உறுதியாகும், உடற்பயிற்சி செஞ்சதுக்கு ஈடான பலன் கிடைக்கும், அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்... இதையெல்லாம் பெற்றோர்கள் மனசுல வெச்சுக்கணும்.

    விளையாட்டுல ஈடுபடும் மாணவர்கள் எப்பவும் சுறுசுறுப்பா இருப்பாங்க. படிப்புலயும் கெட்டிக்காரங்களா இருப்பாங்க. எந்த விளையாட்டா இருந்தாலும் சில கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் பின்ப ற்றப்படும். அதெல்லாம் இயல்பாவே பிள்ளைகளுக்குள்ள படிஞ்சுபோய் வாழ்க்கையிலயும் அவங்க சில கட்டுப்பாடுகளையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. வெற்றி, தோல்வி இரண்டையும் சமமா எதிர்கொள்கிற பக்குவம் அவங்களுக்கு வந்துடும். குழுவா விளையாடும்போது விட்டுக்கொடுக்கிற சமூகத்தோட சேர்ந்து வாழுகிற மனநிலை வந்துடும்.

    நாடு முழுக்க ஒன்றாம் வகுப்புல இருந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் விளையாட்டுப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டிருக்கு. பள்ளிகள்ல விளையாட்டுப் படிப்புல யூ.ஜி., பி.ஜி படிச்சு தேர்ந்த ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டிருக்காங்க. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்ல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களை ஊக்கு விக்கறதுக்காக எத்தனையோ பல நல்ல திட்டங்களை வெச்சுருக்கு. நாம அதையெல்லாம் பயன்படுத்திக்கறதில்லை. வருஷம் பூரா சும்மா இருந்துட்டு கடைசி நேரத்துல பரீட்சைக்குப் படிக்கிற மாணவன் மாதிரிதான் நம்ம நிலைமையும்.

    ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் வரும்போதுதான் நமக்கு ஞானம் வரும். இதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமேன்னு தோணும். வருஷத்துல இருக்குற 365 நாட்கள்ல ஒவ்வொரு நாள்லயும், குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது நம்ம பிள்ளைங்களை, அவங்க ஆர்வமா இருக்குற விளையாட்டு விளையாட அனுமதிச்சோம்னா, அவங்க பல உச்சங்களை நிச்சயமா தொடுவாங்க.

    விளையாட்டு உடல் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருவது. மன ஆரோக்கியத்தையும் விளையாட்டு மேம்படுத்தும். ஐடி, அறிவியல், மருத்துவம், நிதி மாதிரி எத்தனையோ துறைகள்ல நாம நம்ம பிள்ளைகளைப் பெரிய ஆளாக்க கவனம் செலுத்துறோம். ஆனா, விளையாட்டுங்கற துறையை கண்டுக்கறதே இல்லை. புட்பால், பேஸ்கட் பால், நீச்சல், வாலி பால், கபடி, கிரிக்கெட், பேட்மிண்டன், ஆக்கி, அத்லெட்ஸ், டென்னிஸ்னு எத்தனை எத்தனை விளையாட்டுகள்..! இவை தவிர சதுரங்கம், டேபிள் டென்னிஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகள். விளையாட்டுத்துறையிலே பெண்களும் பெருவாாியாக கலந்துக்கணும். கிராமங்கள் தோறும் வயதுக்கேற்ற விளையாட்டுகளை ஆா்வமுள்ளவங்க விளையாடும் வசதியையும் மற்றவா்களுக்கு ஆா்வத்தை ஏற்படுத்தவும் அரசும் சமூக செயற்பாட்டாளா்களும் முன் வரணும். அத்தனையிலயும் சாதனை படைக்க நம்ம இளையோர்களால முடியும். அதுக்குத் தேவையெல்லாம் அவங்களுக்கு முறையான பயிற்சி கொடுக்குறது, சுதந்திரமா விளையாட அனுமதிக்கறது மட்டும்தான்.

    விளையாட்டுல நம்ம இளையோர்கள் புரியும் சாதனைகளுக்கு உரிய, நல்ல அங்கீகாரமும் காத்துக்கிட்டிருக்கு. அதனால நண்பர்களே... விளையாட்டையும் கொஞ்சம் கவனிப்போமே! அது நம்ம இளையோா்களின் எதிர்காலத்துக்கு மட்டுமில்லை... இந்தியாவின் எதிர்காலத்துக்கே நல்லது!

    தொடர்புக்கு: drpt.feedback@gmail.com

    Next Story
    ×