search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர் சவுந்தரராஜன்
    X
    டாக்டர் சவுந்தரராஜன்

    அறிவோம் சிறுநீரகம்: ரோபோட்டிக் அறுவை சிகிச்சை - டாக்டர் சவுந்தரராஜன்- 17

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள உடல் தகுதியுடன், மயக்க மருந்தை தாங்கும் சக்தி இருந்தால் போதும். வயது தடையில்லை.


    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்தாச்சு. இந்த நேரத்தில், சிறுநீரக மாற்று ஆபரேசன் ரொம்ப கஷ்டமாக இருக்குமோ? இந்த வயதில் நாம் செய்து கொள்ளலாமா? ஆபத்து இல்லையா? என்று பல கேள்விகள் எழுவது இயல்புதான்.

    கார், டூவீலர்களில் ஏதாவது ஒரு பாகம் சேதமடைந்து போனால் அதை கழட்டி வீசிவிட்டு புதிதாக வாங்கி மாட்டிவிடலாம். அது எந்திரம். எனவே கவலைப்பட வேண்டியதில்லை.

    ஆனால் உயிருள்ள மனித உடலில் ஒரு உறுப்பை அகற்றி விட்டு புதிதாக ஒரு உறுப்பு பொருத்துவது கஷ்டமான ஆபரேசன்தான். ஆனால் மருத்துவ உலகின் சாதனையால் இப்போது எளிமையாகி உள்ளது.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு வயது ஒரு தடை கிடையாது. அந்த காலத்தில் சின்ன குழந்தைகளுக்கு ஆபரேசன் செய்ய மாட்டோம். காரணம் உடல் தகுதி மற்றும் மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ளும் தகுதி இருக்காது என்பதால்.

    எனவே குழந்தையின் எடை 8 முதல் 10 கிலோ வரை அதிகரிக்கும் வரை காத்திருப்போம். அதன் பிறகுதான் அந்த குழந்தைக்கு ஆபரேசன் செய்வதை பற்றி யோசிப்போம்.

    ஆனால் தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில் சின்ன குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பச்சிளம் குழந்தைகளுக்கு கூட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்கிறது. நான் அமெரிக்காவில் இருந்த போது ஒரு வயது குழந்தைக்கு ஆபரேசன் செய்ததை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன்.

    நம் நாட்டில எனது அனுபவத்தில் கூட 5 வயது, 8 வயது, 12 வயதுடைய குழந்தைகளுக்கு நானே ஆபரேசன் செய்து இருக்கிறேன்.

    அதேபோல் முன்பெல்லாம் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறநீரக மாற்று அறுவை சிகிச்சை பண்ண மாட்டோம். ஆனால் இப்போது 75 வயதுடையவருக்கும் நான் ஆபரேசன் செய்துள்ளேன்.

    வெளிநாடுகளில் 80 வயதை கடந்தவர்களுக்கு கூட அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர்களை பொறுத்தவரை அந்த வயதுக்கு பிறகு டயாலிசிஸ் சிரமம். அதற்கு பதில் சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்துவிட்டு சில ஆண்டுகளாவது நன்றாக வாழலாமே என்ற எண்ணம் அவர்களுக்கு.

    எனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள உடல் தகுதியுடன், மயக்க மருந்தை தாங்கும் சக்தி இருந்தால் போதும். வயது தடையில்லை.

    அதேபோல் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 3 தடவைக்கு மேல் கூட செய்யலாம். சிலருக்கு மாற்ற சிறுநீரகம் பொருத்திய சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகளில் கூட செயலிழந்து போகலாம்.

    அவ்வாறு செயலிழந்து போனால் மீண்டும் மாற்று சிறுநீரகம் பொருத்தலாம். இதேபோல் மூன்று, நான்கு முறை கூட செய்யலாம்.

    வாகனங்களில் டயர் தேய தேய புது டயர் வாங்கி மாட்டுவது போல்தான். ஆனால் 3 தடவைக்கு மேல் மாற்றுவது அரிதான ஆபரேசன். நடைமுறை சிக்கல்கள் உருவாகலாம். பொதுவாக 2 அல்லது 3 முறை வரை மாற்றிக் கொள்ளலாம். எந்த சிக்கல்களும் வராது. நான் சில நோயாளிகளுக்கு 3 தடவை மாற்றி இருக்கிறேன்.

    குழந்தைகளுக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையில் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    சாவித்துவாரம் அதாவது நுண்துளையிட்டு சிறுநீரகத்தை எடுத்தது மட்டுமல்ல, பொருத்தும் அளவுக்கு மருத்துவ தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    பிரபலங்கள் இருப்பவர்கள் ஆபரேசன் தழும்பு வயிற்றில் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள். அந்த வகையில் பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பு துவாரம் வழியாகவே லேப்ரோஸ்கோபிக் முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எளிதாக செய்ய முடியும்.

    எப்படி கர்ப்பப்பையை பிறப்புறுப்பு வழியாக ஆபரேசன் செய்து வெளியே எடுக்கிறோமோ அதேபோல்தான் இதுவும். புதிய மாற்று சிறுநீரகத்தை உள்ளே அனுப்பி, பொருத்தி, வைத்துவிட முடியும். அந்த அளவுக்கு வசதியும், தொழில்நுட்பமும் வந்து விட்டது. இதை அரிய வகை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்போம்.

    பொதுவாக சிறுநீரக தானத்தை உறவினர்கள்தான் தர வேண்டும் என்பதுதான் சட்டம். சில நேரங்களில் விதி விலக்காக அபரிதமான அன்பு, பாசம், நெருக்கம் ஆகியவற்றால் ஆசானுக்கு சீடர், தலைவருக்கு தொண்டர் கூட சிறுநீரகம் தானம் செய்ய முன் வருவார்கள். அப்போது விதி விலக்களித்து அரசு அனுமதி அளிப்பதுண்டு.

    பொதுவாக ரத்த வகை பொருத்தம் பார்த்துதான் இந்த ஆபரேசன் செய்வது வழக்கம். இப்போது அந்த எல்லையையும் தாண்டி பொருத்தம் இல்லாதவர்களுக்கும் வெற்றிகரமாக ஆபரேசன் செய்யப்படுகிறது.

    சில நேரங்களில் ஒருவர் தானம் செய்யும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவருக்கு பொருத்தமான சிறுநீரகம் உறவு முறைக்கு அப்பாற்பட்ட வேறொருவரிடம் இருக்கலாம்.

    அந்த மாதிரி நேரங்களில் பண்டமாற்று முறையைப்போல உறுப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள முன் வந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு ஒரே நேரத்தில் ஒரே ஆஸ்பத்திரியில் 4 ஆபரேசன்கள் நடத்துவதற்கான வசதிஇருக்க வேண்டும்.

    அதாவது தானம் வழங்கும் இருவருக்கும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள். அதேபோல் தானம் பெறும் இருவருக்கும் சிறுநீரகங்களை பொருத்த இரண்டு ஆபரேசன் அரங்குகள் தேவைப்படும். அதற்கான உபகரணங்கள், மருத்துவர்கள் என்று எல்லா வசதிகளும் தேவைப்படும்.

    நவீன தொழில் நுட்பத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறை கையாளப்படுகிறது. அதாவது ரோபோ என்னும் மனித எந்திரத்தின் கைகள் மூலம் இந்த ஆபரேசன் நடத்தப்படும். ஆனால் அந்த எந்திரத்தின் கைகள் மூலம் இந்த ஆபரேசன் நடத்தப்படும். ஆனால் அந்த எந்திர கைகளை இயக்குவது டாக்டர்தான்.

    ஆனால் அந்த கைகளை அவர் நேரடியாக இயக்க மாட்டார். கம்ப்யூட்டர் மூலம் இயக்குவார்.

    அறுவை உபகரணங்களுடன் கைகளால் செய்யப்படும் இந்த மாதிரி பெரிய ஆபரேசனுக்கு அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருத்துவர், உதவி மருத்துவர்கள், செவிலியர், உதவி செவிலியர், உதவியாளர்கள் என சுமார் 10 பேர் கொண்ட மருத்துவ குழு தேவைப்படும்.

    இவ்வளவு பெரிய மருத்துவகுழு இயங்கினாலும் நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடக்கும் போது, களைப்பு, கண் பார்வை பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் ரோபோவின் கைகளுக்கு களைப்பு ஏற்படாது. நடுங்காது. நீண்ட நேரம் நடத்தும் ஆபரேசனையும் துல்லியமாக சோர்வின்றி நடத்தலாம்.

    நோயாளியை படுக்க வைத்திருக்கும் மேஜைக்கு அருகில் ரோபோடிக் எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். மயக்க மருந்து கொடுத்து மயங்கியதும் சிகிச்சைக்குரிய உடல் பகுதியில் சிறிய துளை போடப்படும். அந்த துளை வழியே 3 டி கேமரா, மின் விளக்கு, கத்தி, கத்திரிக்கோல், சூட்டுக்கோல் உள்ளிட்ட நுண் கருவிகள் அனுப்பப்படும்.

    ரோபோவின் கைகள் அந்த கருவிகளுடன் வெளிப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.

    கம்ப்யூட்டர் திரையில் நோயாளி உடலின் உள் பகுதியில் உள்ள பகுதிகள் முப்பரிமான தோற்றத்தில் துல்லியமாக தெரியும். அதை பார்த்தபடியே ரோபோவை மருத்துவர் இயக்கு உறுப்பை பிரித்து வெட்டுவது, குறிப்பிட்ட இடங்களில் உறுப்பை பொருத்துவது, கழிவுகளை அகற்றுவது போன்ற எல்லா வேலைகளையும் மருத்துவரின் கட்டளைக்கு ஏற்றவாறு ரோபோவின் கைகள் செய்து முடிக்கும். ஆபரேசன் முடியும் போது மனித கண்களுக்கு தென்படாத சிறு கழிவுகள் தங்கி விடலாம். ஆனால் கேமிரா கண்களில் துல்லியமாக தெரிந்து விடுவதால் மிகச்சிறப்பாக செய்ய முடியும்.

    வயது பொருத்தம் நல்லது

    இரு மனங்கள் இணையும் திருமணத்திற்காக வயது வித்தியாசத்தை பார்ப்பது உண்டு. பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையேயான வயது வித்தியாசம் அதிகப்படியாக போனால் 5 வயது வித்தியாசம் இருக்கலாம்.

    அதைவிட அதிகமாக இருந்தால் நல்லா இருக்காது. ஜோடி பொருத்தம் சிறப்பாக அமையாது. பார்ப்பதற்கு அண்ணன்-தங்கை அல்லது தந்தை-மகள் போல் இருக்கும் என்று சொல்வதுண்டு.

    அதேபோல்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையிலும் வயது வித்தியாசத்தை பார்ப்பது நல்லது.

    அதாவது சிறுநீரகம் தானம் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 10 முதல் 15 வயதுக்குள் இருந்தால் பொருத்தமும், செயல்பாடும் கச்சிதமாக இருக்கும்.

    Next Story
    ×