search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    டாக்டர். பிரபு திலக்
    X
    டாக்டர். பிரபு திலக்

    ஆறுமனமே ஆறு: காக்க… காக்க முதியோா் காக்க… 32

    வசதியானவங்க மட்டுமில்லை... கிராமங்கள்ல வறுமையில வாடுற ஆதரவற்ற முதியவர்கள், பிள்ளைகளால கைவிடப்பட்ட முதியவர்கள் இவங்களோட நிலையையும் நாம நினைச்சுப் பார்க்கவேண்டியிருக்கு.

    அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்-திருவள்ளுவா்

    பெரியோரை விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல் பெறுதற்குரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும் பேறு ஆகும்.

    நண்பா்களே, சமீபத்துல நடந்த மயிலாப்பூா் இரட்டைக் கொலைச் சம்பவம் ராத்திரிபூரா என்னைத் தூங்கவிடாம அடிச்சிருச்சு. உங்களிலே பல பேருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்னு நெனக்கறேன். சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆடிட்டா் ஸ்ரீகாந்த். தன்னுடைய கல்வி, திறமை, நோ்மை, உழைப்புன்னு வாழ்ந்து படிப்படியா முன்னுக்கு வந்தவா். அவருக்கு 58 வயசு. அவரோட மனைவி அனுராதாவுக்கு 55 வயசு. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அமெரிக்காவுல ஒரு கல்வி நிறுவனத்துல பேராசிரியையாக வேலை பார்த்துக்கிட்டு இருக்கார். மகன் அதே அமெரிக்காவுல மருத்துவம் படிச்சுக்கிட்டு இருக்கார். மகளுக்கு பிரசவ நேரம்கிறதால ஸ்ரீகாந்த்தும் அவரோட மனைவியும் உதவிக்கு அமெரிக்காவுக்குப் போனாங்க. மகளோட பிரசவம் முடிஞ்சதும் சென்னைக்குத் திரும்பி வந்தாங்க. இவங்களோட கார் டிரைவர் கிருஷ்ணா நேபாளத்தைச் சேர்ந்தவர். இவரோட அப்பா பதம்லால் சா்மா தன் குடும்பத்தோட ஸ்ரீகாந்த்தோட பண்ணை வீட்லதான் பல வருஷமா தங்கி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு.

    ஸ்ரீகாந்த் வீட்ல இருந்த தங்க நகைகள், பணம், வெள்ளிப் பொருட்கள் இதையெல்லாம் கொள்ளயடிக்கணும்னு திட்டம் போட்டிருக்கான் டிரைவா் கிருஷ்ணா. பல வருஷமா அவங்க வீட்ல வேலை பார்த்திருந்தாலும், ஆசை சும்மா விடலை. ரெண்டு பேரையும் தன்னோட நண்பர் உதவியோட இரும்புக்கம்பியாலயும், கிரிக்கெட் பேட்டாலயும் அடிச்சுக் கொன்னுட்டு, கிலோ கணக்குல இருந்த தங்க நகைகளையும், வெள்ளிப் பொருட்களையும் திருடி இருக்கான். அதுக்கப்புறம் ஸ்ரீகாந்த், அனுராதா ரெண்டு பேருடைய உயிரற்ற உடம்புகளையும், மகாபலிபுரம் போற வழியிலே நெமிலிக்குப் பக்கத்திலே இருந்த அவங்களோட பண்ணைவீட்டுல புதைச்சிருக்காங்க. அந்தக் குழியை ரெண்டு நாளைக்கு முன்னாடியே வெட்டிவெச்சிருந்திருக்காங்க. கிருஷ்ணா, நேபாளத்துக்குத் தப்பிச்சுப் போறப்ப, ஆந்திராவுல வெச்சு போலீஸ் அவங்களை மடக்கி, கைது செஞ்சுடுச்சு.

    யோசிச்சி பாருங்க நண்பா்களே, ஸ்ரீகாந்த் தன் வீட்டுக் காவலாளியான நேபாளத்துப் பதம்லாலை எவ்வளவு கவுரவாக, அன்பாக நடத்தி இருக்கிறாரு. மூணு தலைமுறை தொடா்பா அது இருந்திருக்கு. கிருஷ்ணாவை எவ்வளவு நம்பி இருக்காரு. ஆனா நடந்தது என்ன? எவ்வளவோ அறிவாளியான ஸ்ரீகாந்த் எப்படித் தன்னையும் தன் மனைவியையும் பாதுகாத்துக்காம போயிட்டாருன்னு ஆழமாக சிந்திக்க வேண்டி வருது. இது முதியவர்களுக்கு பாது காப்பில்லைங்கறதுக்கான அப்பட்டமான, அழுத்தமான உதாரணம்.

    கிராமங்களின் அழிவு, கூட்டுக் குடும்பங்களின் சிதறல், மணமான இளம் பெண்கள் புகுந்த வீட்டு குடும்பப் பெரியவா்களை ரசிக்காத, மதிக்காத போக்கு, ‘ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பா்’ என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு தனித்து இயங்கும் முதியோா் என்பதெல்லாம் தவிா்க்க முடியாதவை என்று எண்ணினாலும் இந்தச் சூழலில் இதற்கெல்லாம் என்ன மாற்று என்று யோசிக்க வேண்டியது மூத்தவா்கள், அவா்களுடைய குடும்பத்தாா், சமூகம், அரசு என்று அனைவருடைய கடமை ஆகுது.

    முதல்ல பாா்த்தது போல முதியவா்கள் அந்நியா்களால் மட்டும் பாதிப்புக்கு ஆளாவது ஒரு பக்கம். சொந்தக்குடும்பத்தாலே புறக்கணிக்கப்பட்டு அநாதைகளாவது இன்னொரு பக்கம்.

    இன்னொரு பயங்கரமான சம்பவம்... தஞ்சாவூர்ல கணவனை இழந்த ஒரு மூதாட்டி. அவங்களுக்கு ரெண்டு பசங்க. ஒருத்தர் சென்னையில தொழில் நுட்பப்பிரிவுல போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்கார். இளைய மகன் தூர்தர்ஷன்ல வேலை பார்க்கறார். நல்ல வசதி இருந்தும் ரெண்டு பேருமே அம்மாவை கவனிக்கறதில்லை. வீட்டுக்குள்ள அவங்களைவெச்சு பூட்டிவெச்சிருக்காங்க. ரெண்டு பிள்ளைகளுக்கும் அம்மாவோட சொத்துலயும், அவங்களுக்கு வர்ற பென்ஷன் பணத்துலயும்தான் கண்ணே தவிர அவங்களை கவனிக்கணுங்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. அந்த அம்மா கொஞ்சம் கொஞ்சமா மனநலம் பாதிக்கப்பட்டு, சாப்பிடுறதுக்கு ஒண்ணும் இல்லாம, மண்ணைத் திங்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க. இதை யாரோ ஒருத்தர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்துல பதிவுசெய்ய விஷயம் வெளியே வந்திருக்கு. உடனே தஞ்சாவூா் கலெக்டா் போய் அந்த அம்மாவை மருத்துவமனையிலே சோ்த்திருக்காரு. இப்ப மகன்கள் கம்பி எண்றாங்க.

    இப்படி வயசானவங்க பணத்துக்காகக் கொல்லப்படுறதும், அநாதைகளாக்கப்படுறதும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. இதுக்கு பல சம்பவங்களை உதாரணமாச் சொல்லலாம்.

    பிள்ளைகள் படிச்சு வெளிநாட்டுக்கு வேலை பார்க்கப் போயிடுறாங்க. சிலர் குடும்பச் சூழ்நிலை காரணமா வெளி மாநிலங்களுக்கு வேலைக்குப் போயிடுறாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல பெத்தவங்க தனித்துவிடப்படுறாங்க. முதுமைக் காலத்துல அவங்க தனியா இருக்கறப்போ பல பிரச்சினைகள் அவங்களுக்கு ஏற்படுது. அதுல ஒண்ணுதான் அவங்களோட பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை.

    ஒரு காலத்துல மும்பையிலேயும் டெல்லிலேயும் தனியாக இருக்கக்கூடிய முதியவர்களைக் குறிவெச்சு, முக்கியமா பெண்களைக் குறிவெச்சுத் தாக்கி கொள்ளையடிக்கிறது நடந்துக்கிட்டு இருந்துச்சு. சென்னையிலயும் இது மாதிரி முதியவங்க பாதிக்கப்படக் கூடாதுங்கறதுக்காக, தமிழகக் காவல்துறையில ஏற்கெனவே கெடப்பிலே போடப்பட்டிருந்த ஒரு சிஸ்டத்தை தீவிரமா நடைமுறைப்படுத்தினாங்க. அதுக்குப் பேரு `லாக்டு ஹவுஸ் ரிஜிஸ்டர்.’ இப்போ ஒருத்தர் குடும்பத்தோட நாலு நாள் வெளியூருக்குப் போறார்னா, அந்தத் தகவலை, `இன்ன காரணத்துக்காக நாங்க வெளியூருக்குப் போறோம். நாங்க திரும்பி வர்ற வரைக்கும் எங்க வீட்டைப் பார்த்துக்குங்க’னு ஒரு பெட்டிஷனா எழுதி போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்துடணும். போலீஸ்காரங்க கையிலே `பீட் புக்’னு ஒண்ணு வெச்சிருப்பாங்க. `பட்டா புக்’னும் ஒண்ணு இருக்கு சொல்வாங்க. அந்த புக்கை அந்த வீட்டுல ஒரு இடத்துல ரகசியமா வெச்சுடுவாங்க. காவலர்கள் பேட்ரோல், அதாவது இரவு நேரத்துல பாதுகாப்புக்காக நகர்வலம் போறப்போ ஸ்டேஷன்ல இருந்து தகவல் கொடுப்பாங்க. `இந்தத் தெருவுல, இந்த வீட்ல வெளியூருக்குப் போயிருக்காங்க. அங்கே `பட்டா புக்’ இருக்கு. நீங்க வீடு பாதுகாப்பா இருக்கானு பார்த்துட்டு, அதுல கையெழுத்துப் போட்டுட்டு வாங்க’னு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பாங்க. காவலர்களும் அந்த வீட்டுக்குப் போய் செக் பண்ணிட்டு, கையெழுத்துப் போட்டுட்டு வருவாங்க.

    இப்ப டெக்னாலஜி வளர்ந்திருக்குற இந்தக் காலத்துல, தனியா இருக்குற முதியவர்களோட பாதுகாப்புக்காக அந்த சிஸ்டத்தை கொஞ்சம் ஹைடெக்காக்கூட பண்ணலாம். சி.சி.டி.வி. கேமரா இப்ப பரவலாகிடுச்சு. அவங்க வீட்ல இருக்குற கேமராவை போலீஸ் ஸ்டேஷன் கேமராவோட லிங்க் பண்ணி கண்காணிக்கலாம்.

    காவல்துறையை நவீனப்படுத்துதல்னே ஒரு பிரிவு இருக்கு. அதுக்கு தனியா ஒரு அதிகாரி இருக்காரு. அவங்க முதியோர் பாதுகாப்புக்காக என்னென்ன செய்யலாம்னு திட்டமிட்டு, அதுக்கான வழிகளைக் கண்டுபிடிச்சு, நடைமுறைப்படுத்தலாம். வயசானவங்களோட பாதுகாப்புக்கும், பிரச்சினைக்கும் இது ஒண்ணே தீர்வுன்னு சொல்லிட முடியாது. தற்கால வாழ்க்கை முறையையும் கொஞ்சம் பார்க்கவேண்டியிருக்கு. இப்போல்லாம் சிட்டியில `எங்களுக்கு பக்கத்து வீட்ல யாரு இருக்காங்கன்னே தெரியாது’ங்கறது ஒரு பேஷனாவே மாறிடுச்சு. அப்படி இருக்கறது எவ்வளவு அபாயமானதுங்கறதைத்தான் மயிலாப்பூர் கொலைச் சம்பவம் நமக்கு சுட்டிக்காட்டுதுன்னு நான் நினைக்கிறேன்.

    அதேபோல வீட்டு வேலைக்கு ஆட்களை சேர்க்கறப்பவும் கவனமா இருக்க வேண்டியிருக்கு. என்னதான் நல்லவங்களா இருந்தாலும், பல வருஷமா வேலை பார்த்திருந்தாலும் ஒரு கணத்துல அவங்க மாறுறதுக்கு வாய்ப்பு இருக்குங்கறதைப் புரிஞ்சுக்கணும். அதுக்காக மனிதர்களை நம்பக் கூடாதுன்னு நான் சொல்ல வரலை. ஜாக்கிரதையா இருக்கவேண்டியது நாமதான்னு சொல்றேன். மயிலாப்பூர்ல இருந்த ஸ்ரீகாந்த் ஒரு ஐ.டி. நிறுவனத்தை குஜராத்ல நிறுவினவா். அவரோட மனைவியும் படிச்சவங்க. அப்படி இருக்கும்போது ஆயிரம் சவரன் தங்கத்தையும், 50 கிலோ வெள்ளிப் பொருட்களையும் ஏன் வீட்டுல வெச்சிருக்கணும்? பேங்க் லாக்கர்ல வெச்சிருந்திருக்கலாமே.

    வெளிநாட்டில இருக்குற பிள்ளைங்க, பெற்றோரை பராமரிக்க முடியலியேங்கற தங்களுடைய மனக்குறைக்கு ஈடுகட்ட அவங்களோட அப்பா அம்மாவை ரொம்ப வசதியா வெச்சுருக்கறதா நினைச்சு ஊருக்கு வெளியில ஒரு பண்ணை வீடு மாதிரி அவங்களுக்குக் கட்டிக் குடுத்துடுறாங்க. இப்படிப்பட்ட பண்ணை வீடுகள்லயும், புறநகர்ப் பகுதிகள்லயும் தனியா வசிக்குற வயசானவங்களைத் தாக்கி, கொள்ளையடிக்கிற சம்பவங்களும் நடக்குது. கடந்த ஐந்து வருடங்கள்ல இது மாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கு.

    வெளிநாடுகளுக்கு வேலைக்குப்போற பிள்ளைங்க, வயசான பெற்றோரைத் தனியா பார்ம் ஹவுஸ்லயோ, புறநகர்ப் பகுதியில இருக்குற வீட்லயோ விடுறது சரிதானான்னு யோசிக்கணும். இது தா்மம் பண்றேன் போ்வழின்னு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முதியோா் இல்லத்துக்கு பிரியாணியும் வறுத்த கறியும் அனுப்பி அவங்களை சீக்காளியாக்கற மாதிரி தான். சாப்பிடறவங்களுக்கு எது ஒத்துக்கும் பாா்த்து, விசாரிச்சு உங்க ‘தா்மத்தை’ பண்ண வேண்டாமா?

    வசதியானவங்க மட்டுமில்லை... கிராமங்கள்ல வறுமையில வாடுற ஆதரவற்ற முதியவர்கள், பிள்ளைகளால கைவிடப்பட்ட முதியவர்கள் இவங்களோட நிலையையும் நாம நினைச்சுப் பார்க்கவேண்டியிருக்கு. உலகின் பல நாடுகள்ல முதியவர்களோட பாதுகாப்புக்கும், அவங்களோட சவுகரியமான ஆரோக்கியமான வாழ்க்கைத்தரத்துக்கும் என்னென்னவோ வழிவகைகள் செஞ்சுவெச்சிருக்காங்க. அங்கே முதியவர்களோட சமூகப் பாதுகாப்பு ரொம்ப வலுவா இருக்கு. `முதியோரைக் காப்பது நமது கடமை’ன்னு அங்கே இருக்குற அரசாங்கங்கள் நினைக்குது.

    சில நாடுகள்ல வேலைக்குப் போற காலத்துலயே அவங்களோட எதிர்காலத்துக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை சேமிச்சுவெக்கறதும் ஒரு பழக்கமா இருக்கு. `நம்மளோட இன்றைய பொழுதை உருவாக்கிய கரங்கள் இந்த சமூகப்பாதுகாப்புக்குன்னு முதியோருக்குச் சொந்தமானது. அதனால அவங்ககிட்ட நாம நன்றியோட இருக்கணும்’னு இங்கிலாந்து, ஸ்வீடன், ஸ்காண்டிநேவியா மாதிரியான அரசாங்கங்கள் நினைக்குது. அதனால அவங்களுக்குப் பல வசதிகளை செஞ்சு குடுக்குது.

    போனை சிங்கிள் டிஜிட்ல ஆபரேட் பண்ற மாதிரி சில நாடுகள்ல வயசானவங்களுக்கு வசதி செஞ்சு குடுத்திருக்காங்க. ஒரு நம்பரை அழுத்தினா பேச்சுத்துணைக்கு ஆள் வருவாங்க. இன்னொரு நம்பரை அழுத்தினா நமக்கு புத்தகம் படிச்சுக் காட்ட ஆளனுப்புவாங்க. உடம்பு சரியில்லைன்னா அதுக்கு உதவ ஒரு நம்பர். உணவுக்கு ஒரு நம்பர். இப்படி சில ஏற்பாடுகளை செஞ்சு வெச்சிருக்காங்க. தனித்து விடப்படும் முதியவா்கள் வசிக்க சிறப்பு வசதிகளோட கட்டப்பட்ட காலனிகளை ஏற்படுத்தலாம். இலவசம், கட்டண அமைப்பு என்ற அடுக்கு முறையில் அத்தகைய வாழ்விடங்களை ஏற்படுத்தலாம். இந்த மாதிரி சமூக நலத் துறையில ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம். இந்த மாதிரி புதுசா சிந்திச்சு, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். அரசு, பிள்ளைகள், சமூக ஆர்வலர்கள் எல்லாரும் இணைஞ்சு செய்யவேண்டிய வேலை இது. அதேநேரத்துல, தனியா இருக்குற முதியோர் அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோட எப்படி நடந்துக்கணும், உறவினர்களோட எப்படிப் பழகணும்கறதையும் யோசிக்கணும். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி தங்களை மாத்திக்கணும். முக்கியமா பிடிவாதத்தைக் கைவிடணும். தங்களுடைய உடல் மன நலன்களையும் தங்கள் பாதுகாப்பையும் சிந்தித்து திட்டமிட்டுக்கணும்.

    தொடர்புக்கு: drpt.feedback@gmail.com

    Next Story
    ×