search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முக்தானந்தா சுவாமிகள்
    X
    முக்தானந்தா சுவாமிகள்

    சென்னை சித்தர்கள்: முக்தானந்தா சுவாமிகள்-வியாசர்பாடி- 76

    சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் தவ வாழ்க்கை நடத்திய அவர் யார் உணவு கொடுத்தாலும் அதை தனது கைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடுவார்.


    சென்னை வியாசர்பாடிக்கு பாரம்பரிய சிறப்பு ஒன்று உண்டு. வியாசர் இந்த பகுதியில்தான் தவம் இயற்றினார் என்று சொல்வார்கள். அவரை தொடர்ந்து வியாசர்பாடியில் ஏராளமான மகான்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வசித்து மக்களுக்கு சேவை செய்திருப்பது ஆவண குறிப்புகள் மூலம் தெரிகிறது.

    அந்த வரிசையில் வியாசர்பாடியில் மிகச்சிறப்பான மக்கள் பணி செய்து நிகரற்ற சித்தராக திகழ்ந்தவர் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள். திருப்போரூரில் பிறந்த இவர் சிறு வயதிலேயே சித்தர்களுக்குரிய அனைத்து ஆற்றல்களையும் பெற்று இருந்தார்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் தவ வாழ்க்கை நடத்திய அவர் யார் உணவு கொடுத்தாலும் அதை தனது கைகளில் மட்டுமே வாங்கி சாப்பிடுவார். அதுவும் மூன்று உருண்டை உணவை மட்டுமே எடுத்துக்கொள்வார். இதனால்தான் அவருக்கு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது.

    திருவான்மியூர், வேப்பேரி, சூளை, பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் சாதுகளுக்காக பாடுபட்ட அவர் எதிர்காலத்தில் சாதுக்களின் நலனுக்காக ஒரு மடாலயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.

    இதை அறிந்த ஒரு தொண்டர் வியாசர்பாடியில் ஒரு பெரிய இடத்தை வாங்கி தானமாக கொடுத்தார். அங்குதான் அவரது ஆசிரமம் உருவானது. அந்த ஆசிரமத்துக்கு அவர் ஆனந்தா ஆசிரமம் என்று பெயர் சூட்டினார். ஆனால் பொதுமக்கள் அதை கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் என்றே அழைத்தனர். அங்கு தங்கியிருந்து எண்ணற்ற அற்புதங்களை கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் நிகழ்த்தினார்.

    தன்னை நாடி வந்த அன்பர்களின் துன்பங்களை போக்கிய கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் 1918ம் ஆண்டு பரிபூரணம் அடைந்தார். அவரது உடல் அந்த ஆனந்தா ஆசிரமத்திலேயே ஜீவ சமாதி வைக்கப்பட்டது. அவரது சமாதி மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயம் உருவானது.

    வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள இந்த ஆசிரமத்தின் ஆலய வாயிலில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்த கல்வெட்டில் “ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு இங்கள் வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நட்சத்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக் கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது” என்றும் “ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் கலி யுகாதி 5060-ம் ஆண்டு விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 8ஆம் தேதி (24-10-1958) வெள்ளிக்கிழமை உத்திராட நட்சத்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள். அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இந்த மடாலயத்தில் கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மட்டுமின்றி முக்தானந்தா சுவாமிகளுக்கும் அங்கு ஜீவ சமாதி இருப்பது உறுதியாகிறது. இந்த மடாலயம் அந்த பகுதி மக்களால் சாமியார் மடம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்த மடாலயத்தில் நிறைய பாம்புகளும் இருந்தன. இதனால் அதனை சர்ப்ப தோட்டம் என்றும் சொல்வார்கள்.

    கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பிறகு அங்கு ஆலயத்தை உருவாக்கி அந்த மடத்தை மேம்படுத்தியதில் முக்தானந்தா சுவாமிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்த மடாலயம் 1925-ம் ஆண்டு சீரமைத்து புதிதாக கட்டப்பட்டது. அதற்கு அடித்தளமிட்டவர் முக்தானந்தா சுவாமிகள் ஆவார்.

    கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகளை குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர் முக்தானந்தா சுவாமிகள். இவர் 24 மணி நேரமும் மக்கள் தொண்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் படித்து வளர்ந்த முக்தானந்தா சுவாமிகள் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். ஆன்மீக நூல்களை அதிகளவு படித்து இருந்தார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவும் பணி புரிந்த அனுபவம் அவருக்கு உண்டு.

    ஒரு காலக்கட்டத்தில் சித்த மருத்துவத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. எனவே பேராசிரியர் பணியை உதறி தள்ளிவிட்டு சித்த மருத்துவ ஆய்வில் ஈடுபட்டார். அதன்பிறகுதான் அவருக்கு சித்தர்கள் பற்றிய தேடல் உருவாகி கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகளை குருவாக ஏற்றார்.

    வியாசர்பாடியில் உள்ள மடாலயத்தின் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் அங்கு மிகப்பெரிய மாற்றங்களை செய்தார். அந்த மடாலயத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த புத்தகங்கள் அனைத்தையும் அனைவரும் படிக்க செய்யும் வகையில் ஏற்பாடு செய்தார். இதனால் அங்கிருந்த பல்வேறு சித்த நூல்கள் மக்களின் ஆன்மீக பசியை தீர்த்தன.

    குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிவனடியார்களுக்கும், சாமியார்களுக்கும் முக்தானந்தா சுவாமிகள் புகலிடமாக திகழ்ந்தார். அவரை நாடி நூற்றுக்கணக்கான சாமியார்கள் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் தந்து முக்தானந்தா சுவாமிகள் அரவணைத்தார்.

    பொதுமக்களுக்கும் ஏராளமான சேவைகளை செய்தார். இதனால் அவரை தேடி வரும் சாதுக்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. நாளடைவில் கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் மிகச்சிறந்த வழிபாட்டுத்தலமாகவே மாறியது.

    என்றாலும் அந்த மடத்தை சாமியார்களுக்கு உரியதாக மட்டுமே முக்தானந்தா சுவாமிகள் நடத்த வில்லை. அந்த மடத்தை மக்கள் நல சேவையாற்றும் பொதுநலச்சங்கமாகவே உருவாக்கினார்.

    முக்தானந்தா சுவாமிகளும் பல அற்புதங்களை செய்யும் ஆற்றலை பெற்றிருந்தார். ஆனால் அதை பயன்படுத்தி அவர் ஒருபோதும் விளம்பரம் தேடிக்கொண்டதில்லை. ஓசையின்றி அவர் நற்பணிகளை செய்து வந்தார்.

    தனது சேவைகளுக்காக அவர் ஒருபோதும் யாரிடமும் கையேந்தி காசு வாங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் தனது சொந்த பணத்தை மடாலய மேம்பாட்டுக்காக பயன்படுத்தினார். தனது சொத்தில் ஒரு பகுதியை விற்றுதான் அவர் அந்த மடாலயத்தில் மிகப்பெரிய குளம் ஒன்றை உருவாக்கினார்.

    கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு பின்புறம் தற்போதும் அந்த குளம் உள்ளது. இன்றும் வற்றாத குளமாக அந்த குளம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த பகுதி மக்கள் அதன் சிறப்பை உணர்ந்து அதை மாசுபடுத்தாமல் இருந்தால் அதுதான் அவர்கள் முக்தானந்தா சுவாமிகளுக்கு காட்டும் சிறப்பான மரியாதையாக இருக்கும்.

    இந்த குளம் போன்றே முக்தானந்தா சுவாமிகள் மடாலயத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை உருவாக்கினார். இதன் பயனாக வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள், சாமியார்கள் அடிக்கடி அதிக அளவில் இங்கு வந்தனர். நூற்றுக்கணக்கான சாமியார்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கினார்கள். அவர்களில் 10 சுவாமிகளின் ஜீவ சமாதி அந்த மடாலயத்துக்குள் காணப்படுகிறது.

    மடாலய மேம்பாட்டுக்கு மட்டுமின்றி மக்களின் ஆத்ம ஞான பலம் அதிகரிக்க வேண்டும் என்பதிலும் முக்தானந்தா சுவாமிகள் தீவிர கவனம் செலுத்தினார். தன்னை நாடி வந்து சேவை செய்த பக்தர்களை அவர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுத்தினார். இதனால் வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நல்ல பலன்களை பெற்றனர்.

    சித்த புருஷர்களின் அவதாரங்களில் ஒருவராக திகழ்ந்த முக்தானந்த சுவாமிகளை பெருஞ்சித்த மகான்களில் ஒருவர் என்று பாராட்டி புகழ்வதுண்டு. ஆனால் முக்தானந்தா சுவாமிகள் எந்த ஒரு பாராட்டையும் ஏற்றுக்கொண்டதில்லை.

    தனது அற்புதங்கள் மூலம் பலன்பெற்றவர்கள் பற்றிய தகவலையும் அவர் பதிவு செய்யவில்லை. இதனால் முக்தானந்தா சுவாமிகள் நடத்திய ஈடு இணையற்ற சித்தாடல்கள் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

    இத்தகைய சிறப்புடைய முக்தானந்தா சுவாமிகள் 1953ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ந் தேதி முக்தியடைந்தார். உத்திராட்ட நட்சத்திரத்தில் அவர் விதேகமுக்தி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது முதன்மையான சீடர்கள் அவரை கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் எதிரிலேயே ஜீவ சமாதி வைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த ஆலயத்தில் முக்தானந்தா சுவாமிகள் சமாதி செய்யப்பட்டார். அவரது சமாதி மீது பலிபீடம் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் உத்திராட்ட நட்சத்திர தினத்தன்று அந்த பலிபீடத்தில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மகா குரு பூஜை நடத்தப்படுகிறது.

    Next Story
    ×