search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உட்கட்டாசனம்
    X
    உட்கட்டாசனம்

    ஆரோக்கியம் நம் கையில்: மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்ரா- 133

    குழந்தைகளுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு ரிக்கட்ஸ் அல்லது போலியோ என்று பெயர். இது உடலுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் ‘டி’ பற்றாக்குறையாலும், உடலில் சூரிய வெளிச்சம் கிடைக்காததாலும் ஏற்படும்.


    நாம் ஏற்கனவே மூட்டு வலி வராமல் வாழும் யோகாசனங்கள் மட்டும் பார்த்துள்ளோம். இப்பொழுது யோக முத்திரை சிகிச்சையாக பார்க்க போகின்றோம்.

    பொதுவாக மூட்டுவலி என்பது ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனை வருக்கும் வரும் நோய் தான். உடலில், அசையும் மூட்டுக்களில் மிக பெரியது முழங்கால் மூட்டுக்கள். எனவே மூட்டு வலி என்றாலே முழங்கால் மூட்டில் வரும் வலியைத்தான் சொல்கிறோம். முழங்கால் மூட்டை சுற்றி சைனோவியல் என்கிற மூட்டுச் சுரப்பி படலம் உள்ளது. இந்த சுரப்பியின் ஈரப்பதம் குறைந்தாலும் வலி ஏற்படும்.

    குழந்தைகளுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு ரிக்கட்ஸ் அல்லது போலியோ என்று பெயர். இது உடலுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் ‘டி’ பற்றாக்குறையாலும், உடலில் சூரிய வெளிச்சம் கிடைக்காததாலும் ஏற்படும். இந்த பிரச்சினை வரும்முன், பசியின்மை, உடல் சோர்வு, காய்ச்சல் அடிக்கடி வரும்.

    வயதானவர்களுக்கு மூட்டுத் தேய்மானத்தால் வலி, வீக்கம் ஏற்படும். இதனை ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் என்பர். மூட்டுக்களில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து வலி ஏற்படுவது. இது இடுப்பு பகுதியிலும் தேய்மானம் ஏற்படும்.

    ருமடாய்டு ஆர்த்தரைடீஸ்: இது எந்த வயதினருக்கும் வரும். இது சிலருக்கு பரம்பரையாகவும் வருகின்றது. மணிக்கட்டு, கை, கால் மற்றும் விரல்களில் வீக்கம் இருக்கும்.

    உடலில் பல மூட்டுக்கள், மணிக்கட்டு, மற்றும் விரல்களில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் அவை ருமடாய்டு ஆர்த்தரைடீஸ் என்று அழைப்பர்.

    பொதுவாக எலும்புத் தேய்மானம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களை தாக்குகின்றது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.

    மூட்டு வலிக்கு காரணங்கள்: பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும். எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்யாமல் வாழ்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்பவர்களுக்கும் மூட்டுவலி ஏற்படும். கால்சியம் பற்றாக்குறை, ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும். வாயு தொல்லை, அஜீரண தொல்லை ரத்த சோகையினால் ஏற்படும்.

    இப்பொழுது மூட்டு வலி நீக்கும் யோகச் சிகிச்சை பற்றி பார்ப்போம்.

    உட்கட்டாசனம்: விரிப்பில் நேராக நிற்கவும். இரு கால்களும் சேர்த்து நிற்கவும். இரு கைகளையும் ஒரு அடி முன்னாள் நீட்டவும். ஒரு நாற்காலியில் அமர்வது போல் மெதுவாக மூட்டை மடக்கி படத்தில் உள்ளதுபோல் இருக்கவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். மூன்று முறைகள் செய்யவும்.

    பலன்கள்: மூட்டுக்கள் நன்கு பலம் பெரும். மூட்டுச் சவ்வுகள் நன்றாக இயங்கும். மூட்டுத் தேய்மானம் ஏற்படாது. மூட்டு வீக்கம், மூட்டு வலி வராமல் வாழலாம். நாம் சிகிச்சையாக பார்ப்பதால் இந்த ஆசனம் முடித்தவுடன் வாயு முத்திரையும், அபான முத்திரையும் செய்யவும்.

    வாயு முத்திரை

    வாயு முத்திரை: விரிப்பில் நேராக அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் ஆள்காட்டி விரலை மடித்து அதன் நடுவில் கட்டை விரலை வைத்து சிறிய அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

    அபான முத்திரை: நிமிர்ந்து விரிப்பில் அமரவும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரல், மோதிர விரல் அதன் மையத்தில் பெருவிரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    அபான முத்திரை

    அனுசாசன முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரலை உள்ளங்கையில் மடக்கி வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மையத்தில் படத்தில் உள்ளது போல் வைக்கவும். ஆள்காட்டி விரலை நேராக வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரு கைகளையும் தோள்பட்டை பக்கத்தில் படத்தில் உள்ளது போல் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை மூன்று வேளையும் செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட ஆசனத்தையும் மூன்று முத்திரைகளையும் செய்யுங்கள். அனைவரும் செய்யுங்கள் மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலி நீங்கும். மூட்டு வலி இல்லாதவர்களும் அவசியம் பயிற்சி செய்யுங்கள். எவ்வளவு வயதானாலும் மூட்டு வலி வராமல் வாழ முடியும்.

    அனுசாசன முத்திரை

    உணவு: தினமும் மூன்று வெண்டைக்காய் சாப்பிடுங்கள். பச்சையாக சாப்பிடவும். பூண்டு, வெங்காயம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவும். கந்தகச் சத்து உடலுக்கு இதன் மூலம் கிடைக்கும். அன்னாசி பழம் அடிக்கடி உணவில் எடுக்கவும். இதில் புரோமிலியன் எனும் சத்து மூட்டு அழற்சியை குறைக்கவல்லது.

    எலுமிச்சை பழம், காலிபிளவர், பீட்ரூட் அடிக்கடி எடுக்கவும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளது.

    தவிர்க்க வேண்டியவை: புளி, ஊறுகாய், தக்காளி பழம், ஆட்டுக்கறி, கோழிக்கறி, கொழுப்பு பொருட்களை தவிர்க்கவும்.

    உணவில் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடித்து மேற்குறிப்பிட்ட பயிற்சிகளும் செய்தால் மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

    வாசகர் கேள்வி: மன அழுத்தம் நீங்கவும், இதயத்துடிப்பு சீராகவும், எந்தவித யோகச் சிகிச்சை உள்ளது?

    இதற்கு ஆங்கில மருத்துவத்தில் முழுமையான தீர்வு கிடைக்காது. எத்தனை மாத்திரை சாப்பிட்டாலும் நமது பண்புகள் ஆழ் மனதில் உள்ள கவலைகளை அழிக்க முடியாது. அதற்கு முத்திரையும், தியானமும்தான் முழுமையான தீர்வாக அமையும். யோகமுத்திரை மூலம், எளிமையான தியானம் மூலமும் நமது ஆழ்மன பதிவுகளை அகற்றி விடலாம்.

    சின் முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் கட்டை விரல், ஆள்க்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இயல்பாக நடக்கும் மூச்சை கவனித்து இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

    தியான முத்திரை

    தியான முத்திரை: நிமிர்ந்து அமரவும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் இடது கை கீழ் அதன்மேல் வலது கையை வைக்கவும்.இரு பெருவிரல் நுனியும் தொடட்டும். கைகளை மடியில் வைத்துக் கொள்ளவும்.

    மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் மூச்சை இழுக்கும்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை சுவாசிப்பதாக எண்ணவும். மூச்சை வெளிவிடும் பொழுது நமது ஆழ்மனதில் உள்ள டென்ஷன், அழுத்தம், கவலை நீங்குவதாக எண்ணவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் நினைத்து அந்த இடத்தில் உங்களது மூச்சை மட்டும் அமைதியாக கூர்ந்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.

    சூன்ய முத்திரை: நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் படும்படி வைத்து அதன் மையத்தில் கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    இந்த முத்திரை இதய பட படப்பு நீக்கும். இதய வால்வுகள் நன்றாக இயங்கும். மன அழுத்தத்தினால் ஏற்பட்ட இதயத்துடிப்பை சரி செய்கின்றது. மன அமைதியை தரவல்லது.

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தினமும் காலை / மாலை இரண்டு வேளையும் பயிற்சி செய்யுங்கள். நிச்சயம் ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்) மன அழுத்தம் படிப்படியாக குறையும். மன அமைதி கிடைக்கும். பின்பு ஆழ்ந்த நித்திரை கைகூடும்.

    காலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்துவிட வேண்டும். எழுந்து எளிமையான இந்த முத்திரை தியான பயிற்சிகளை செய்ய வேண்டும். இரவு படுப்பது 9.30 மணி முதல் 10 மணிக்குள் படுத்துவிட வேண்டும். இரவு படுக்குமுன் தியான முத்திரையில் அமர்ந்து இரண்டு நிமிடம் நெற்றிப்புருவ மத்தியில் தியானம் செய்துவிட்டு படுக்கவும்.

    நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் கோவிலில் கூட்டமில்லாத இடத்தில் அமர்ந்து இந்த முத்திரையையும், தியானத்தையும் செய்யுங்கள். மிக நல்ல பலன் கிடைக்கும், மன அழுத்தம் நீங்கும்.

    பெ.கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×