search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ச.நாகராஜன்
    X
    ச.நாகராஜன்

    உலகை வலம் வருவோம்: குழந்தைகள் விரும்பும் பெல்ஜியம்- 7

    ஒரே வரியில் பெல்ஜியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இனிப்பைத் தந்து ஜொலிக்கும் நாடு என்று கூறலாம்.


    பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த நாடு எது? சந்தேகமே இல்லை. பெல்ஜியம் தான்.

    ஏனெனில் அவர்களின் அழகை ‘எடுத்துக் காட்டும்’ அழகிய கண்ணாடிகளை பெல்ஜியம் தானே தருகிறது. அவர்களின் அழகைக் ‘கூட்டும்’ வைரம் கொண்ட நாடும் அது தான். குழந்தைகளுக்கென இனிப்புள்ள, மணமுள்ள உலகின் தரம் வாய்ந்த சாக்லட்டை விதவிதமாக அந்த நாடு தானே தருகிறது! ஆகவே அழகையும் இனிமையையும் போற்றும் அனைவரும் விரும்பும் நாடாக அது அமைவதில் ஆச்சரியமே இல்லை.

    அதி நவீன் தொழில்நுட்ப பயிற்சிக்காக தொழில்துறை குழுவினருடன் நான் பெல்ஜியத்தின் தலை நகரான பிரஸ்சல்ஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் பிரஸ்சல்ஸ் செல்ல வேண்டும்.

    பயணத்தில் ஏற்பட்ட தாமதத்தால் பிராங்க்பர்ட் விமான நிலையத்தை அடைந்த போது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த விமானம் புறப்படும் நேரம் அமைந்து விட்டது. போர்டிங் பாஸ் தரும் கவுண்டர் மூடப்படும் நேரம் அது! பிராங்க்பர்ட் விமான நிலையமோ மிகப் பெரியது. என்ன செய்வது? எங்கள் போர்டிங் பாஸ் வாங்க எந்த கேட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அறிந்து கொள்ள நேரமில்லாத நிலை. குழுவினருக்கு ஒரே பதற்றம்.

    பிரம்மாண்டமான அளவில் நீளமாக இருந்த விமானநிலையத்தில் முதல் டெஸ்கில் இருந்த ஒரு இளம் பெண்மணியை அணுகினேன்.

    ஒரு நிமிடத்தில் எங்கள் பிரச்சினையைச் சொன்னேன். “நல்ல காரியத்தைச் செய்தீர்கள்” என்று பாராட்டிய அந்த இளம் பெண், போனை எடுத்து ஏதோ பிரெஞ்சு மொழியில் பேசினார். பின்னர், “கவலைப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமல் கேட் மூடப்படமாட்டாது, வாருங்கள் என்னுடன்” என்று எங்களை விரைவாக அழைத்துச் சென்றார். உரிய கேட்டிற்கு கொண்டு விட்டார். அங்கிருந்தோர் உடனடியாக எங்களுக்கு விமானத்தில் அமர போர்டிங் பாஸ் தந்தனர்.

    ஒரு இக்கட்டான சூழ்நிலையை உடனடியாக சமாளிக்க வேண்டியது ஒவ்வொரு பயணத்திலும் மிக அவசியம்.

    பிரஸ்சல்ஸில் இறங்கியவுடன் எங்களை அழைத்துச் செல்ல, எங்களை வரவேற்கும் ஒரு போர்டுடன் இளைஞர் ஒருவர் தயாராக இருந்தார். அவர் காட்டிய வேனில் ஏறி உட்கார்ந்தோம். டிரைவர் இருக்கையில் அமர்ந்த அவர் ஒரு பாட்டைப் போட்டு விட்டார். அதற்கேற்ப உல்லாசமாக உடலை ஆட்டிக் கொண்டே வேனை ஓட்டினார்.

    நாங்கள் செல்ல வேண்டிய ஊர் ரோஸலேர் என்னும் அழகிய நகரம். 87 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அதை சுமார் 45 நிமிடங்களில் அடைந்தோம். வேன் பறந்தது. இயற்கைக் காட்சிகள் இரு புறமும் பறந்தன.

    வேனை ஓட்டிய இளைஞரின் ஆட்டமும் பாட்டமும் ஏன் என பெல்ஜியம் நாட்டில் புகுந்தவுடனேயே தெரிந்து விட்டது. உலகில் அதிக கலை நிகழ்ச்சிகள் நடக்கும் நாடு பெல்ஜியமே.

    வீதிகளில் ஆரம்பித்து அரங்கங்கள் வரை ஆங்காங்கே ஏதேனுமொரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். மக்கள் கலைப் பிரியர்கள். ஆகவே தான் அதை திருவிழாக்களின் நாடு என்று சொல்கின்றனர். குழந்தை இல்லை என்றால் கூடுதல் வரி!

    மிகுந்த குளிர் பிரதேசம் என்பதால் பிரம்மாண்டமான தொழிலகம் எல்லாப் பக்கங்களும் நன்கு மூடப்பட்டு வெப்பமூட்டும் ஹீட்டர் வசதியுடன் அமைந்திருந்தது.

    பேசினால் வாயிலிருந்து புகை வரும். ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்த காட்சிகளை நேரில் அனுபவிக்க நேரிடும். தங்குவதற்கு அருமையான ஓட்டல்கள் ஏராளம் உண்டு.

    டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகள் அதிகார பூர்வ மொழிகளாகும்.

    இதன் பரப்பளவு 11780 சதுர மைல். ஜனத்தொகை 110 லட்சம். வெப்பநிலை குறைந்த பட்சம் 3 டிகிரி செல்சியஸ் அதிக பட்சம் 18 டிகிரி செல்சியஸ்.

    மக்கள் ஜனத்தொகை மிகவும் குறைவு என்பதால் குழந்தை பெறுவதை அரசு ஊக்குவிக்கிறது. குழந்தை இல்லை என்றால் அதிகம் வரி செலுத்த வேண்டும்! இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊர் மிகுந்த அமைதியுடன் இயங்குகிறது. 800 வகையான பீரை பெல்ஜியம் தயாரிப்பதால் பெல்ஜியம் பீருக்கு ஏக டிமாண்ட். ஓய்வெடுக்க விரும்புவோர் விரும்பும் நாடு இது. ஏனெனில் ஸ்பா என்ற நகரிலிருந்தே இன்று நாம் சென்னையிலும் கூடக் காணும் ஸ்பாக்கள் உருவாயின.

    ஆங்காங்கே சாக்லட் எப்படி தயாரிப்பது என்பதற்கு பயிற்சி மையங்கள் உள்ளன. (தினசரி சாக்லட் வொர்க்‌ஷாப் உண்டு) குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த வடிவத்தில் சாக்லட்களைத் தயாரிப்பது பார்க்க வேண்டிய காட்சியாகும். ஒவ்வொரு சாக்லட்டிற்கும் தனி வடிவமைப்பு, தோற்றம், ருசி, வாசனை உண்டு.

    கோகோ பட்டர் மூலம் தயாரிக்கப்படும் சாக்லட்டுகளில் பல வகைகள் உண்டு. இப்போது காலத்திற்கேற்ப சுகர் பிரீ (சுகர் இல்லாத) சாக்லட்டுகளும் சந்தைக்கு வந்து விட்டன.

    பிரஸ்சில்ஸில் உள்ள சாக்லட் மியூசியமும் பார்க்க வேண்டிய ஒன்று. இந்த சாக்லட் கம்பெனிகளை நிறுவியவர்களைப் பற்றிய உத்வேகமூட்டும் உண்மைச் சம்பவங்களும் வரலாறுகளும் மிக்க சுவையானவை.

    உலகின் தலை சிறந்த சாக்லட்டுகளைத் தயாரிக்கும் பெல்ஜியம் 400 வருடமாக சாக்லட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. வருடத்திற்கு ஆறு லட்சம் டன் சாக்லட்டை இது உற்பத்தி செய்கிறது. 2000 கம்பெனிகள் மற்றும் கடைகள் சாக்லட் விற்பனைக்கென்றே இங்கு உள்ளன. பிரஸ்சல்ஸ் விமான நிலையத்தில் மட்டும் வருடத்திற்கு 800 டன் சாக்லட் விற்பனையாகிறது. பார்க்க வேண்டிய இடங்கள் பெல்ஜியத்தில் ஏராளம் உண்டு.

    எக்ஸ்போ 58 என்ற 1958ம் ஆண்டு நடத்தப்பட்ட உலக விழாவிற்காக பிரஸ்சல்ஸ் நகரில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னக் கட்டிடம் இது. 335 அடிகள் உயரம் கொண்டது. இரும்பு படிகத்தின் அணு அமைப்பை நினைவு படுத்தும் இது அந்த படிக மூல அமைப்பின் அளவைப் போல 165 பில்லியன் மடங்கு பெரிதானது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி).

    இங்கு ஒன்பது கோளங்கள் உள்ளன. ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்குச் செல்ல வழி உண்டு. இங்குள்ள பல்வேறு காட்சிக் கூடங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். உச்சிக்குச் சென்று பிரஸ்சல்ஸ் நகரத்தைப் பார்த்தால் பிரமித்து விடுவோம். அட்டோமியம் என்ற பெயர் ஆடம் (அணு  Atom) மற்றும் (Aluminium) அலுமினியம் ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்.

    அவசியம் பார்க்க வேண்டிய இந்தப் பூங்கா ஐரோப்பாவின் சிறிய அளவிலான அமைப்பாகும். நுழைவுக் கட்டணம் உண்டு. பிக் பென் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரின் சிறப்பு அம்சங்களைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு வரலாம். ஐரோப்பாவின் 80 நகரங்களையும் 350 சிறப்புக் கட்டிடங்களையும் இங்கு சிறிய வடிவில் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் பேர் இங்கு வருகை தருகின்றனர்.

    உலகில் மோட்டார் தொழில் எப்படி தொடங்கியது என்பதில் இருந்து இன்றைய நவீன வாகனங்கள் வரை அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சியகம். சுமார் 250 வாகனங்களை இங்கு கண்டு மகிழலாம். வாகன சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவ்வப்பொழுது இங்கு நடைபெறுவதால் நாம் செல்லும் நேரத்தில் உள்ள நிகழ்ச்சியையும் கண்டு மகிழலாம்.

    பிரஸ்சல்ஸ்சில் அனைத்து இடங்களையும் வரிசையாகப் பார்க்க வழி வகை செய்வது இந்த பஸ் பயணம். வரிசையாக ஒவ்வொரு இடமாகச் சென்று அதைப் பற்றிய விவரங்களையும் ஏற்கனவே ரெகார்ட் செய்யப்பட்ட பதிவு வழியே தரும் பயணம் இது. பொடானிகல் கார்டன், பெல்ஜியம் காமிக் ஸ்ட்ரிப் செண்டர் என ஏராளமான இடங்களைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.

    பிரஸ்சல்சிற்கு மேற்கே 55 கிலோமீட்டரில் அமைந்துள்ள கெண்ட் நகரில் அனைத்து இடங்களையும் படகில் 50 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு பார்க்கலாம். இங்குள்ள செயின்ட் பாவோ கதீட்ரல் பழமையானது. பழம் பெரும் கோட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடம் இது என்பதால் அனைவரும் வருகை புரியும் இடங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. பெல்ஜியம் கோட்டைகள் அதிகம் உள்ள நாடு தான்!

    இன்னும் அதிக பட்ஜெட்டையும் விடுமுறை நாட்களையும் கொண்டோர் அண்ட்வெர்ப், மெச்லீன், டீ ஹான் பீச் என சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று மகிழலாம். அண்ட்வெர்ப் வைர வியாபாரிகள் விரும்பும் நகர். இதுவே உலகின் வைரங்களின் தலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு ஜொலிக்கும் தரம் வாய்ந்த வைரங்களைக் கொண்டுள்ளது அண்ட்வெர்ப்.

    பெல்ஜியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. ஆம், மகாகவி பாரதியார் அறத்திற்காகப் போராடி இந்த நாடு தோல்வியுற்ற போது அதைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

    1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று திடீரென்று ஜெர்மனி இந்த நாட்டின் வழியே தன் படை செல்ல அனுமதி வேண்டும் என்று கோரியது. என்றுமே சமாதானத்தை விரும்பிய பெல்ஜியம் 3ஆம் தேதி தனது உறுதியான மறுப்பைத் தெரிவித்து விட்டது. உடனே 4ஆம் தேதியன்று இந்த நாட்டின் மீது ஜெர்மனி படை எடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் துவங்கியது.

    ‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என்று மனம் நெகிழ்ந்து பாடி பெல்ஜியத்தைப் பாராட்டிய பாரதியார் ‘திறத்தினால் எளிமையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்’ என்று மனமாரப் பாராட்டிப் பாடினார். தர்ம வழியில் நின்று அந்தப் போரில் அடிபட்டு தற்காலிகத் தோல்வியைத் தழுவினாலும் பின்னர் செழிப்புற உயர்ந்து எழுந்து நின்றது பெல்ஜியம். இன்று உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அது திகழ்கிறது.

    பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரே ஒரு கொடுமை என்னவெனில் அங்கு சாக்லட் கடையில் நுழைந்து விதவிதமாக இருக்கும் வகைகளில் எதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்று தெரியாமல் குழம்பித் தவிப்பது தான் என்று வேடிக்கையாகப் பயணிகள் சொல்வது வழக்கம். இங்கு நுழைந்தவுடன் கலோரி எண்ணிக்கையில் சாக்லட்டினால் உடலில் ஏறும் கலோரியைச் சேர்ப்பதை மறந்து விடுங்கள் என்பது சாக்லட் பிரியர்களின் வேண்டுகோள். ஒரே வரியில் பெல்ஜியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இனிப்பைத் தந்து ஜொலிக்கும் நாடு என்று கூறலாம்.

    தொடர்புக்கு: snagarajans@yahoo.com

    Next Story
    ×