search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மங்கலங்கள் தருகின்ற மங்கையரின் நோன்பு
    X
    மங்கலங்கள் தருகின்ற மங்கையரின் நோன்பு

    ஆன்மிக அமுதம் - மங்கலங்கள் தருகின்ற மங்கையரின் நோன்பு

    ஆன்மிக அமுதம் எனும் தலைப்பில் மங்கலங்கள் தருகின்ற மங்கையரின் நோன்பு குறித்து திருப்பூர் கிருஷ்ணன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    ஆண்டுதோறும் மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் பெண்களால் அனுசரிக்கப் படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி மாத முதல் நாள் காலையில் பெண்கள் அந்த நோன்பை முடிப்பார்கள்.

    நவராத்திரி போலவே காரடையான் நோன்பும் பெண்களுக்கே உரித்தான பண்டிகை.

    இந்த நோன்பு காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றெல்லாம் இந்தியாவின் பல இடங்களில் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    திருமணமான பெண்கள், கணவர் நெடுங்காலம் வாழவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அனுசரிக்கும் விரதம் இது,கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் உப்பு கலந்தும் இனிப்பு கலந்தும் தயாரிக்கப்படுவதே காரடை என்னும் பலகாரம். பெண்கள் அந்தப் பலகாரத்தை இறைவனுக்குப் படைத்து கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றை அணிந்துகொள்வது இந்த நோன்பின் முக்கியமான பகுதி.

    எமனுடன் வாதாடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்ட சாவித்திரி கதையே இந்த நோன்பின் ஆதாரம்,

    *மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி. ஆண் குழந்தை இல்லாத அஸ்வபதி தன் மகளை வீராங்கனையாக வளர்த்தான். சாவித்திரி வீரத்தில் மட்டுமல்லாமல் அழகிலும் குணத்திலும் சிறந்து விளங்கினாள்.

    இவள் ஒரு நாள் வேட்டைக்குச் செல்லும் போது சாளுவ தேசத்து இளவரசன் சத்தியவானைக் கானகத்தில் பார்த்தாள். அவன் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.

    அவன் தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால் காட்டில் மகனுடன் வசித்து வந்தார். சத்தியவானின் பெற்றோர் இருவருக்குமே பார்வை போய்விட்டது. சத்தியவான் தன் வாழ்வைப் பெற்றோர் சேவைக்கே அர்ப்பணித்திருந்தான். இந்த விவரங்களையெல்லாம் சாவித்திரி அறிந்துகொண்டாள்.

    சத்தியவானின் பண்புகள் அவளைக் கவர்ந்தன. அவனையே மணப்பதென்று முடிவு செய்தாள். தன் பெற்றோரிடமும் தனது எண்ணத்தைத் தெரிவித்தாள்.

    இப்படியான தருணத்தில் மந்திர தேசத்திற்கு வந்தார் மகரிஷி நாரதர். சாவித்திரியின் விருப்பத்தை அவர் அறிந்துகொண்டார். அவள் தந்தையிடம் இன்னும் ஓராண்டு மட்டுமே சத்தியவான் உயிரோடிருப்பான் என்ற தகவலைத் தெரிவித்தார்.

    அற்ப ஆயுள் உடையவனுக்கா மகளை மணம் செய்துவைப்பது என சாவித்திரியின் தந்தை மனம் பதறியது. அதோடு சத்தியவான் ராஜ குமாரன் அல்ல. நாடிழந்த தந்தையின் மகன். அரண்மனையில் வசிப்பவன் அல்ல. கானகத்தில் வாழ்பவன்.

    ஆனால் விவரம் சொல்லப்பட்ட பின்னரும் சாவித்திரி தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தன் பெற்றோரை வற்புறுத்தி சத்தியவானையே மணம் செய்து கொண்டாள்.

    அரண்மனையில் வாழ்ந்த அவள் கானகத்தில் வாழ்ந்தாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் மிகு ந்த பாசத்துடன் கவனித்துக் கொண்டாள்.

    சத்தியவானின் ஆயுள் முடியும் அந்த நாளும் வந்தது. அந்த நாளை முன்கூட்டியே அறிந்துவைத்திருந்த சாவித்திரி, அன்று கணவனை நிழல்போல் தொடர்ந்து சென்றாள். அவர்கள் இருவரும் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தியவான், கீழே மயங்கி விழுந்தான். அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. எமன் அவன் உயிரை எடுத்துச் சென்றார்.

    சாவித்திரியின் உயர்ந்த தவ ஆற்றல், கணவன் மேல் கொண்ட பேரன்பு, மாமனார் மாமியாருக்கு அவள் செய்த சேவை இவற்றால் விளைந்த புண்ணிய பலத்தால் எமனை அவளால் பார்க்க முடிந்தது.

    எமனை விடாமல் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. தான் ஒரு மானிடப் பெண்ணின் கண்ணுக்குப் புலனாகும் விந்தையை வியந்த எமதர்மர், தன்னைத் தொடராதே என்று சொல்லி அவளைத் திரும்பிப் போகச் சொன்னார்.

    அவரிடம் `நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால் அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்!` என விண்ணப்பம் செய்தாள் சாவித்திரி.

    இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர் அதற்குப் பதிலாக அவளுக்குத் தேவைப்படும் ஏதேனும் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளச் சொன்னார்.

    சாவித்திரி தன் மாமனார், மாமியாருக்கு மீண்டும் கண்பார்வை வேண்டும் என முதல் வரம் கேட்டாள். அவள் கேட்ட முதல் வரம் புகுந்த வீட்டுக்கானது,

    பின் ஆண் வாரிசு இல்லாத தன் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வரம் கேட்டாள். அந்த இரண்டாம் வரம் அவள் பிறந்த வீட்டுக்கானது.

    அதன்பின் தனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்ற மூன்றாம் வரத்தைத் தனக்காகக் கேட்டாள். எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார்.

    `எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றால் என் கணவர் உயிருடன் இருந்தாக வேண்டுமே!` எனக் கூறி தன் கணவர் உயிரைத் தருமாறு வேண்டினாள் சாவித்திரி.

    அவளது பதிபக்தியையும் அறிவாற்றலையும் மெச்சிய எமதர்மன் சத்தியவான் உயிரை மீண்டும் தந்து சென்றார்.சத்தியவானின் போன உயிர் திரும்பி வந்தது. பின்னர் அவன் தந்தை இழந்த ராஜ்ஜியமும் அவருக்கே திரும்பக் கிடைத்தது என்கிறது சாவித்திரி கதை.

    சத்தியவான் மறுபடி உயிர் பெற்ற நன்னாளே காரடையான் நோன்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது,

    *இந்தக் கதை தத்துவக் கண்ணோட்டத்தில் பகவான் அரவிந்தரால் ஆங்கிலக் காப்பியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஸ்ரீ அரவிந்தர் பிறவியிலேயே ஒரு கவிஞர். ஆங்கிலம் தவிர வேறு மொழியை அவர் அதிகம் பயின்றதில்லை. ஆங்கிலத்திலேயே தம் கவிதைகளை எழுதினார். அவர் எழுதியவற்றில் புகழ்பெற்றது சாவித்திரி காப்பியம்.

    அந்தக் காப்பியத்தின் நாயகி காரடையான் நோன்பின் நாயகியான சாவித்திரிதான். அவள் பெயரிலேயே அந்தக் காப்பியம் படைக்கப் பட்டிருக்கிறது. சாவித்திரி கதையில் தம் ஞான ஒளியைப் பாய்ச்சி அதை வேறுவகையாக எழுதியுள்ளார் அரவிந்தர்.

    சாவித்திரியின் மூலக் கதை மகாபாரதத்தில் ஒரு கிளைக் கதையாக எழுநூறு வரிகளில் இடம்பெற்றுள்ளது. இக்கதையைத் தம் ஆழ்ந்த அறிவுத் திறனால் புதிய பரிமாணத்தில் இருபத்து நான்காயிரம் வரிகளில் ஒளிவீசச் செய்துள்ளார் அரவிந்தர்.

    அவரது இளமைக் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கவிதைப் பணி, புதுச்சேரியில் அவர் மகாசமாதி அடைவதற்குச் சிறிதுகாலம் முன்புதான் நிறைவடைந்தது. சுமார் ஐம்பதாண்டு காலம் அவர் நிகழ்த்திய எழுத்துத் தவத்தின் பயன் சாவித்திரி காப்பியம்.

    அரவிந்தரின் காப்பியத்தில் சாவித்திரி மனித குலம் முழுமைக்கும் பிரதிநிதியாக வருகிறாள். மனித சமுதாயம் முழுவதும் அமரத்துவம் அடைவதற்காகவே அவள் எமனுடன் போராடுகிறாள். மானிட ஆன்மாவாகிய சத்தியவானை மரணத்தில் இருந்து மீட்கிறாள்.

    அரவிந்தரின் சாவித்திரி காப்பியத்தில் வரும் எமன் தர்மராஜனல்ல. எமன் என்ற பெயரையே அவர் பயன்படுத்தவில்லை. ஆணவம், அறியாமை போன்ற எதிர்மறைக் குணங்களின் உருவகமாக அவன் உணர்த்தப்படுகிறான்.

    சாவித்திரி மனித மனத்தில் மறைந்துள்ள தீய சக்திகளுடன் போராடி அவற்றை அழிக்கிறாள். காலன் இருளில் கலந்து மறைகிறான்.

    மகான் அரவிந்தரின் சொற்சேர்க்கை காரணமாக சாவித்திரி காப்பியம் முழுவதும் மந்திர அந்தஸ்து பெற்றுள்ளது. அதைப் படித்தாலும் அந்த நூலை இல்லத்தில் வைத்திருந்தாலும் மங்கலங்கள் நிகழும் என்பது அரவிந்த அன்பர்களின் நம்பிக்கை.

    1900-ல் முதல் வடிவம் பெற்ற இக்காவியம் பல முறை பல்வேறு வகைகளில் மாற்றி மாற்றி கூர்மையாக்கப் பட்டு 1950இல் முடிவு பெற்றது. தொடர்ந்து, இடையறாது அரவிந்தர் எழுதிய நூல் சாவித்திரி மட்டுமே. மற்ற நூல்களை எழுதும்போது இத்தனை கடுமையாக அவர் உழைத்ததில்லை.

    தம்முடைய பூரண யோகத்தில் அடுத்த அடுத்த கட்டங்களுக்குப் போக காவிய உருவத்தில் உள்ள சாவித்திரியை ஒரு கருவியாகக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

    மகாபாரதத்தில் சிறிய செடியாக இருந்த ஒரு கதையை சாவித்திரியில் மாபெரும் ஆலமரமாக அரவிந்தர் படைத்துள்ளார்.

    “ஒவ்வொரு முறை சாவித்திரியைப் படிக்கும்பொழுதும் புதியதாக ஒன்றைக் காணலாம்” என்கிறார் பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை. “மனத்தைத் தெளிவாக வைத்துக்கொண்டு படித்தால் சாவித்திரியின் முழுப் பலனை அடையலாம். எண்ணங்கள் அற்ற மனமே தெளிவான மனமாகும். யோகம் செய்பவர்கள் மனத்தைச் சாவித்திரியில் பதித்துப் படித்தால், யோகத்தின் அடுத்த கட்டத்திற்குச் சாவித்திரி சாதகனை அழைத்துப் போவது தெரியும்” என்கிறார் அன்னை.

    மூலக்கதையான பாரதத்தில் சாவித்திரி மனித உருவம். காலன் தெய்வம். தெய்வத்திடம் வரம் கேட்கும் வகையில் சாதுரியமாகச் சாவித்திரி பேசுகிறாள். காலன் கருணைகொண்டு வரமளிக்கின்றான்.

    ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரியை ஒளியின் தெய்வமாகவும், காலனை இருளின் தெய்வமாகவும் உருவகப்படுத்தியுள்ளார். காலனும், சாவித்திரியும் நடத்தும் உரையாடல் 100 பக்கங்களுக்கு மேல் உள்ளது.

    சத்தியவான் மரணத்தை வென்று பூவுலகம் திரும்பி வந்து, பூவுலகத்தைத் தெய்வத்தின் சாம்ராஜ்யமாக்கும் திருப்பணியை முடிப்பது சாவித்திரியின் அவதார நோக்கம். அதைத் தடை செய்வது காலனின் கடமை. இதுவரை உலகத்தில் மரணத்தை தவிர்க்க முடியாது என்று நம்பியவர்களின் கொள்கைகள் அனைத்தும் விவாதத்திற்கு வருகின்றன.

    காலன் இடிஇடிப்பது போல் கர்ஜனை செய்கிறான். சாவித்திரி கலங்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் வாதத்தில் உண்மையில்லை என்று நிதானமாக விளக்குகிறாள். காலன் கலங்குகின்றான் என வளர்கிறது அரவிந்தரின் சாவித்திரி காவியம்.

    *இந்தியாவில் பத்தினியான சாவித்திரிக்கென்று எங்கும் தனிக் கோயில் இல்லை, ஆனால் கொல்கத்தாவில் காளிகாட் ஆலயத்தில் சத்தியவான் சாவித்திரிக்கென்று தனி சன்னிதி உள்ளது. பெண்கள் வளையல் சார்த்தியும் குங்குமம் சமர்ப்பித்தும் அங்கு வழிபாடு நிகழ்த்துகிறார்கள்.

    இந்தக் கொடும் நோய்த்தொற்றுக் காலத்தில் நம்பிக்கையோடு காரடையான் நோன்பை அனுசரிப்பதும் சாவித்திரி தேவியை தியானம் செய்வதும் பல நற்பலன்களைத் தரும்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×