search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வயிற்றை பாதுகாக்க பற்களுக்கு வேலை கொடுங்கள்
    X
    வயிற்றை பாதுகாக்க பற்களுக்கு வேலை கொடுங்கள்

    வயிற்றை பாதுகாக்க பற்களுக்கு வேலை கொடுங்கள்

    பல்லுக்குப் பதிலாக உணவை மாவாக அரைக்க ஆட்டுரலும், கிரைண்டரும், மிக்சியும் வந்து விட்ட பின்னர் நாம் அனைத்துப் பொருட்களையும் மாவாக அரைத்துச் சமைத்து உண்ணத் தொடங்கினோம்.
    நமது வாய்க்கும் பல்லுக்கும் நேரடியான தொடர்பு உண்டு. நாற்பது வயதினைக் கடந்த பின்னர் வயிற்றுப் பிரச்சினை ஒவ்வொன்றும் பற்களில் வெளிப்படும். குறிப்பாக வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தால் பற்களில் கூச்சம் ஏற்படும். வயிற்றில் வாயுத் தேக்கம் அதிகரித்து விட்டால் வாயில் ஏப்பமாக வந்து கொண்டே இருக்கும். அதே போல வயிற்றில் புண் ஏற்பட்டால் வாயில் கெட்ட நாற்றம் வெளிப்படும்.வயிறு எனும் இரைப்பையான உள்ளுறுப்பின் துணை வெளி உறுப்பே வாய் ஆகும். வாயின் முக்கியமான பல பணிகளில் ஒன்று உணவினை அரைத்து வயிற்றின் வேலையை இலகுவாக்கித் தருவது ஆகும்.

    மனிதன் தோன்றிய ஆரம்ப காலத்தில் சமைத்து உண்கிற பழக்கம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் அவன் உண்ணும் பச்சைக் கிழங்கு இறைச்சிகளை பற்களால் நன்றாக அசைபோட்டு மென்று வயிற்றிற்குள் அனுப்புவதே பழக்கமாக இருந்தது. குறிப்பாக மனிதரில் பெரும்பாலானோருக்கு இருக்கிற கோரைப் பல்லானது இறைச்சியைக் கடித்து இழுப்பதற்காக உருவானதே ஆகும்.

    இன்று குக்கரில் ஐந்தாறு விசில் விட்டு கறியை மெத்தென்று வேக வைத்து உண்கிறோம்.ஆனால் வேக வைக்கும் முறை உருவாவதற்கு முன்னர் பச்சை இறைச்சியை செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு பற்களே பெரிதும் உதவியாக இருந்தன. பற்களால் கடித்து உண்ணும்படியாகத் தான் மனித உடல் வடிவமைத்துக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களை மெத்தென்று சமைத்து உண்ணும் முறை வழக்கத்திற்கு வரும்வரை யாருக்கும் தொந்தி தொப்பையே இல்லை.

    பல்லுக்குப் பதிலாக உணவை மாவாக அரைக்க ஆட்டுரலும், கிரைண்டரும், மிக்சியும் வந்து விட்ட பின்னர் நாம் அனைத்துப் பொருட்களையும் மாவாக அரைத்துச் சமைத்து உண்ணத் தொடங்கினோம். மெள்ளுவதற்குப் பதிலாக மெத்தென்ற மாவினை வயிற்றிற்குள் அதிகமாக செலுத்த முடிந்தது. ஆகையால் வயிற்றில் அதிக உணவுப் பொருட்கள் தேங்கத் தொடங்கி விட்டது. இந்த அதிக உணவு வயிற்றில் நீண்ட நேரம் தங்கி இருப்பதால் வயிறு பெருக்கமடைந்து விட்டது.

    கடினமான உடல் உழைப்பும் மென்று உண்ணும் பழக்கமும் இருந்தால் உடலில் மிகுதியான சதைச் சேர்மானத்திற்கும் கொழுப்புச் சேகரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே எலும்பிற்கு மேல் பூசி விட்டது போல மிதமான சதைப் பற்றோடு இருக்க முடியும். காலை நடைப் பயிற்சிக்கும், மாதந்தோறும் ஆயிரம், இரண்டாயிரம் கட்டி ஜிம்மில் கடினமான உடற் பயிற்சி மேற்கொள்ளவும் தேவை இருக்காது. பற்களுக்கான வேலை குறைந்ததால் தான் வயிறு பெருக்கத் தொடங்குகிறது.பெருத்த வயிறு பார்ப்பதற்கு கச்சிதமாக இல்லாததோடு எழுந்திருக்க, நடக்க என அனைத்து இயக்கங்களுக்கும் தடையாக இருக்கும்.

    நாம் உணவை அரைப்பதற்கு மெள்ளுகிற பொழுது முக அமைப்பிற்கு வளம் சேர்க்கக்கூடிய தாடை வலுப்பெறுகிறது.தாடை வலுப்பெறுவதால் ஒருவரது முகத் தோற்றத்திலேயே உடலின் உறுதி தென்படும். கீழ்த்தாடையும் மேல் தாடையும் என இருபக்கமும் நான்கு தாடைகளும் மெல்லும் போது அசைவதால் கன்னக் கதுப்புகள் இறுக்கம் அடையாமல் இளக்கமாக இருக்கும்.எனவே சதைப் பகுதி தடித்துப் போகாமல் உணர்ச்சியை இலகுவில் வெளிப்படுத்த இயலும்.

    நாம் கடித்து மென்று உண்ணும்படியான கெட்டித் தன்மை உள்ள உணவுகளையே தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு ஆப்பிளையோ, கொய்யாவையோ மிக்சியில் அரைத்துச் சாறாகப் பருகினால் அந்தச் சாற்றில் உள்ள இனிப்பு நேரடியாக ரத்தத்தில் உடனே சேர்ந்து சர்க்கரை அதிகரிக்கும். அதே பழத்தை மென்று தின்றால் பழத்தின் இனிப்பு உமிழ் நீரோடு கலந்து இனிப்பின் அடர்த்தி நீர்க்கப்பட்டு குறைவான அளவிலேயே அது ரத்தத்தில் கலக்கும். எனவே சர்க்கரையின் அளவு சட்டென்று உயராது. அது மட்டுமல்ல மென்று உண்பதால் பழத்தின் சதையோடு நார்ச்சத்தும் வயிற்றில் தங்கும். எனவே நாருடன் கூடிய சதைப்பகுதியின் சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே வயிற்றுப் பகுதியாலும், சிறு, பெருங்குடல்களாலும் ஈர்க்கப்பட்டு படிப்படியாகவே ரத்தத்தில் கலக்கும். ஆக சத்து நீடித்து இருக்கும்.

    அதேபோல் கெட்டியான இறைச்சியும் பற்களால் நன்றாக மெள்ளப்படுகிற பொழுது இறைச்சியுடன் உமிழ் நீர் கலப்பதோடு அசைபோடுகிற வேளையில் பித்தப்பையில் இருந்து செரிமானத்திற்கு உரிய சுரப்பு நீர்கள் (என்சைம்ஸ்) சுரந்து இறைச்சிக் கூழினைச் செரிப்பதற்கு வயிற்றில் தயார் நிலையில் இருக்கும். நாம் கொச்சையாகஎச்சில் என்கிறோம்.ஆனால் இந்த உமிழ் நீரானது நமது செரிமானத்தில் அளப்பரிய பங்கு வகிக்கிறது.

    ஒரு உணவை நாம் மெள்ளுகிற பொழுது தான் பற்கள் அசையும்.பற்களானவை ஈறுப் பகுதியில் அதிர்வுகளைத் தாங்கும் வண்ணம் பாதுகாப்பாகப் பொருந்தி உள்ளது.எனவே அவற்றின் கடி திறனுக்கு ஏற்ப எத்தனை ஆயிரம் முறை மென்றாலும் பற்களுக்குப் பாதிப்பு இல்லை.

    பல் மருத்துவர்கள் படம் போட்டுக் காட்டியிருப்பது போல பற்களானவை தாடையில் துளையிட்டு ஸ்குரூ போல முடுக்கப்பட்டிருக்கவில்லை. பற்கள் தாடையில் வேர் கொண்டுள்ளன. எனவே நீங்கள் பற்களை எந்தக் கோணத்தில் அசைத்தாலும் எத்தனைக் கடினமான நல்லி எலும்பைக் கடித்தாலும் அதிர்வுகளை உள் வாங்கி அந்த அதிர்வுச் சக்தியை உடலின் பிற பாகங்களுக்கு கடத்தி விடும் ஆற்றலை உடல் எனும் உயிர் எந்திரம் கொண்டுள்ளது.

    இந்தப் பற்களைத் தான் நாம் எதையுமே கடிக்காமல் வைத்திருந்து அவற்றின் வேர்களையும், மேற்பூச்சான எனாமலையும் பலவீனப்படுத்தி எதற்கும் பயனற்ற ஒன்றாக மாற்றி வருகிறோம். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல பச்சை இறைச்சியை நார் நாராகக் கிழித்து உண்ணும் அளவிற்கு வலு மிக்க பற்களை முதலில் வெந்த இறைச்சி தின்று பலவீனப்படுத்தினோம்.

    பின்னர் வெந்த தானியங்கள், கிழங்குகள், அரிசி வகைகள் தின்று பலவீனப்படுத்தினோம்.அப்புறம் அரிசி, சோளம், கம்பு வகைகளை உரலில் இட்டு குருணையாக இடித்துக் கஞ்சியாகக் காய்ச்சி மெள்ளுகிற வேலையைக் குறைத்தோம்.அடுத்து கிரைண்டர் வந்த பிறகு இடிக்கிற போது இருந்த குருணைத் தன்மையும் குறைந்து மாவானது.அந்த மாவினையும் பலநூறு இயந்திரப் பற்களைக் கொண்டு அரைக்கும் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முகத்திற்குப் பூசுகிற பவுடர் அளவிற்கு மிகவும் மென்மையான மாவாக அரைத்துப் பயன்படுத்துகிற அளவிற்கு வந்து விட்டதால் நம்மிடம் மெள்ளுகிற பழக்கம் இல்லாமல் போய் விட்டது.

    அந்த மாவில் சமைத்த பலகாரத்தையும், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றையும் சாம்பார், குழம்பு, சால்னா, சேர்வா போன்றவற்றில் ஊற வைத்து ஒரே கல்பில் நேரடியாக வயிற்றுக்கு டெலிவரி செய்துவிடுகிறோம். இதனால் விளையும் கெடுவிளைவுகளைப் பற்றிய கவனம் நம்மிடத்தில் இல்லை.

    நாம் உண்ணும் உணவானது வாய் என்ற செக் போஸ்டில் பல் என்ற கேட்டினைக் கடந்து தான் போக வேண்டும்.அந்தப் பல்லானது இது போகத் தகுதியான உணவு தானா என்று ஆராய்ந்து அனுப்ப வேண்டும். ஒரு இட்லியை இரண்டாகப்பிட்டு சட்டினி, சாம்பாரில் பெயிண்டர் பிரஷ்சில் பெயிண்டைத் தோய்ப்பது போலத் தோய்த்து உள் நாக்கில் வைத்து கேட்பாஸ் இல்லாமல் உள் நோக்கித் தள்ளி விடுகிறோம்.

    உணவுக் குழாயைக் கடந்து இட்லித் துண்டானது டமார் என்று இரைப் பையில் விழும்போது என்னாடா இது ஏதோ வந்து விழுகிறதே என்று இரைப்பை திணறும். அதற்குப் பின்னர் அந்த உணவுத் துண்டு எந்த மாவில் உருவாக்கப்பட்டது, என்னென்ன சுவை அதில் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கு வேண்டிய செரிமானக் கலவைத் திரவங்கள் என்னென்ன என்பதைத் தீர்மானித்து சுரந்து உடன் சேர்த்து இரைப்பை அரைத்தாக வேண்டும். அதற்கு வயிறு என்ன பாடுபடும்.

    வயிற்றில் மாவுத் தன்மை மிகுந்த உணவு தங்குமானால் அந்த உணவானது புளித்து நொதிக்கத் துவங்கி விடும்.புளித்த நொதித்த உணவு தான் இன்று அசிடிட்டி என்று பரவலாக அழைக்கப்படும் அமிலத் தன்மை இரைப்பையில் தங்கக் காரணம் ஆகி விடுகிறது.

    ஒருபுறம் நாம் மென்று உண்பதைத் தவிர்ப்பதால் பற்கள் பலவீனமாவதோடு உள்ளே அமிலமும் அதிகரிக்கிறது.இந்த அமிலமானது உணவுக் குழாய் வழியாக மேல்நோக்கி மீண்டும் வாயை வந்தடைந்து பற்களைப் பாதிக்கிறது.வயிற்றில் தங்கும் அமிலம் பற்களை அரித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் மஞ்சள் நிறத்தில் பாசி படியும் தற்காப்பு ஏற்பாட்டினை உடல் மேற்கொள்கிறது.இதனை சுத்தப்படுத்துவதற்கு முன் வயிற்றில் அமிலம் தேங்காத நார்ச் சத்து மிகுந்த உணவுகளை எடுக்கும் பழக்கத்திற்கு மாறியாக வேண்டும்.அப்போது தான் பற்கள் பாதுகாக்கப்படும்.

    அதுபோக ரசாயனத் தன்மை மிகுந்த பற்பசைகளைத் தவிர்த்து விட்டு கசப்பும், துவர்ப்பும் உடைய இயற்கையான வேப்பங் குச்சியைக் கொண்டும், ஆலங்குச்சிகளைக் கொண்டும், கருவேலங்குச்சிகளைக் கொண்டும் பல் துலக்கினால் பற்கள் பாதுகாக்கப்படுவதோடு வயிற்றில் தங்கும் அமிலமும் முறிக்கப்படும்.

    உண்ணும் உணவிலும் இனிப்பு, பல் துலக்கவும் இனிப்புத் தன்மை உடைய பற்பசை என்றால் அதுவே பற்களின் அரிப்புக்குக் கூடுதல் காரணமாகி அடுத்த கட்டமாக பற்சொத்தை, ஈறு வீக்கம் என்ற நிலைக்குச் சென்று விடும்.

    பல் அல்லது ஈறுகளில் எந்தப் பிரச்சினை என்றாலும் உடனடியாக துவர்ப்பு, கசப்பு சுவையுள்ள உணவை எடுத்துக் கொள்வதோடு இச்சுவையில் உள்ள பற்பொடிகளையும் பயன்படுத்தலாம். சாதாரணமாக வீட்டில் கிராம்பு, மிளகு, கருஞ்சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து அதனோடு உப்பு சேர்த்துப் பல் துலக்கினால் அது பற்களுக்கு நல்ல பாதுகாப்பு அரணாக இருக்கும். வேப்பங் கொழுந்து, கீழாநெல்லி இவற்றை அவ்வப்போது வாயில் அடக்குவதும் நல்லது. இதன் காரணமாக வாயில் சுரக்கும் உமிழ் நீர் பற்களுக்கும் வாய்க்கும் மட்டுமல்ல உடலுக்கே நற்பலனை அளிக்கும்.

    நாயுறுவி என்ற செடி பரவலாக எங்கும் காணப்படுகிறது.அதனை வேரோடு பிடுங்கி அலசி விட்டு ஆணிவேரை மென்று பல் தேய்த்தால் பற்கள் முத்துப் போலப் பிரகாசிப்பதோடு பற்களும் பற்களைத் தாங்கி நிற்கும் ஈறும் பலப்படும்.உணவை அரைப்பதில் பற்களுக்கு உணவைச் சுழற்றித் தரும் நாவினைப் பற்றியும், நாவில் உள்ள சுவை மொட்டுகள் குறித்தும் அடுத்த வாரம் பார்ப்போம்.
    Next Story
    ×