search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சாய் பாபா
    X
    சாய் பாபா

    பாபா காட்டிய பாதை: ஐந்து விதமான கடன்கள்- 22

    மனிதனாக பிறந்து விட்ட அனைவரும் இந்த 5 கடன்களையும் வாழும் காலத்தில் கண்டிப்பாக தீர்க்க வேண்டும். இந்த கடன்களை தீர்ப்பது என்பது மிக மிக அவசியமானது.


    சீரடி சாய்பாபாவை பார்க்க வரும் ஒவ்வொரு பக்தர்களும் அவரிடம் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். பெரும்பாலானவர்கள் தங்களது குறைகளையும், பிரச்சினைகளையும் பாபாவிடம் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்வார்கள்.

    தன்னை நாடி வரும் பக்தர்களை பார்த்ததுமே பாபாவுக்கு எல்லாமே தெரிந்து விடும். அந்த பக்தர் யார்? எதற்காக சீரடிக்கு வந்திருக்கிறார்? அவருக்கு என்ன சொல்ல வேண்டும்? அவர் மூலம் மற்ற பக்தர்களுக்கு ஏதேனும் உபதேசம் சொல்ல முடியுமா? என்பதையெல்லாம் ஓரிரு நிமிடங்களில் பாபா முடிவு செய்து விடுவார். அதற்கேற்ப அவரது உபதேசங்கள் இருக்கும்.

    அந்த உபதேசங்கள்தான் பாபா காட்டிய பாதை. ஒருநாள் பணக்காரர் ஒருவர் மூலம் பாபா ஒவ்வொருவருக்கும் 5 கடன்கள் இருப்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தினார். அந்த பணக்காரர் பாபாவிடம் வந்ததும் அழுது புலம்பினார். பாபாவிடம் அவர் சொன்னதாவது:-

    பாபா நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். இதுவரை நான் செய்து வந்த தொழில்கள் எல்லாமே நஷ்டம் அடைந்து விட்டன. என்னிடம் கையில் போதுமான பணம் இல்லை. இதனால் என்னை யாருமே மதிப்பதில்லை.

    என் மனைவி தேவையில்லாமல் என்னிடம் அடிக்கடி சண்டை போடுகிறாள். மகன்கள் என்னை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை நான் அவர்களுக்கு ஒரு சுமையாக மாறி விட்டேன். வயதான காலத்தில் நான் ஏன் இப்படி கஷ்டப்படுகிறேன்.

    இந்த சூழ்நிலையில் நோயும் என்னை வாட்டி வதைக்கிறது. உறவுகளும் வெறுக்கும் நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் பாபா. எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள்.

    இவ்வாறு அந்த பணக்காரர் சொன்னதும் பாபா சத்தமாக சிரித்தார். சரி குழந்தை. வேறு என்ன பிரச்சினை சொல் என்றார். அதற்கு அந்த பணக்காரர் வேறு என்ன சொல்வது என்று திணறியபடி நின்று கொண்டிருந்தார்.

    உடனே பாபா அவரை பார்த்து, “உனது கடமைகளை நீ சரிவர செய்து வருகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த பணக்காரரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. மெல்லிய குரலில், “ஆமாம் எனது கடமைகளை தினசரி செய்கிறேனே?” என்றார்.

    இதைக் கேட்டதும் மீண்டும் சிரித்தார். “இல்லை.... நீங்கள் சொல்வது வாழ்க்கை கடமையை. நான் சொல்வது வாழும் கடமையை” என்றார். பாபாவை சுற்றி இருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    இதை கவனித்த சாய்பாபா அவர்கள் அனைவரும் தெளிவு பெறும் வகையில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்தார். நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய விளக்கம் அது. இதோ பாபாவின் அந்த விளக்கம்....

    உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் 5 விதமான கடன்கள் உள்ளன. மனிதனாக பிறந்து விட்ட அனைவரும் இந்த 5 கடன்களையும் வாழும் காலத்தில் கண்டிப்பாக தீர்க்க வேண்டும். இந்த கடன்களை தீர்ப்பது என்பது மிக மிக அவசியமானது. கட்டாயமானதும் கூட.

    இந்த கடன்களை தீர்ப்பதை ஒவ்வொருவரும் வாழ்வில் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் எல்லோருமே இந்த உலகில் கடன்காரர்களாகதான் பிறந்து இருக்கிறோம். கடன்காரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த கடன்களை நிவர்த்தி செய்யாமல் நாம் நமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள கூடாது.

    அந்த 5 கடன்கள் என்ன தெரியுமா?

    1. பித்ரு கடன்

    2. ரிஷி கடன்

    3. பூத கடன்

    4. நர கடன்

    5. தேவ கடன்

    பித்ரு கடன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களைதான் பித்ருக்கள் என்று அழைக்கிறோம். அவர்களை நாம் மறக்காமல் வழிபட வேண்டும். அவர்கள் நினைவிலேயே வாழ வேண்டும்.

    பித்ருக்கள் இந்த உலகை விட்டு சென்ற நாளை திதிக்குரிய நாளாக கணித்து ஒவ்வொரு மாதமும் அவர்களை நினைத்து மரியாதை செய்ய வேண்டும். அவர்கள் என்ன விரும்பி சாப்பிடுவார்களோ அதை படைத்து வழிபட வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு தடவை அவர்கள் பரிபூரண தினத்தை மறக்காமல் பூஜித்து வணங்க வேண்டும். அன்றைய தினம் நிறைய தானங்கள் செய்து பித்ருக்களை மேம்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் பித்ருக்களின் ஆசியை நாம் பெற முடியும்.

    பித்ருக்கள் நமது வழிகாட்டிகள். நாம் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அவர்கள் தாமாக முன் வந்து உதவி செய்வார்கள். ஆனால் நீங்கள் அவர்களை மறந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள். நமது ரத்த சொந்தங்கள் நம்மை மறந்து விட்டார்கள் என்று வேதனைப்படுவார்கள்.

    சில பித்ருக்களுக்கு கோபம் கூட வந்து விடும். அவர்கள் சாபம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி சாபம் பெற்று விட்டால் நமக்கு கஷ்டங்கள்தான் மிஞ்சும். அப்படி கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தால் பித்ரு கடன்களை ஒழுங்காக செய்யுங்கள். பித்ருக்களை நினைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

    இரண்டாவது ரிஷி கடன் என்ன என்று பார்ப்போம்.

    ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் குலம், கோத்ரம் என்று ஒன்று உண்டு. அந்த குலம், கோத்ரத்துக்கு என்று சில வி‌ஷயங்களை வரையறுத்துள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு கோத்ரத்துக்கும் ஒரு குல தெய்வம் இருப்பார். அந்த குல தெய்வத்தை போற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    சிலர் தங்களது குல தெய்வம் தெரிந்திருந்தும் கண்டு கொள்ளாமல் வாழ்வார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் மறுமையில் அது ஒரு கடனாக மாறி விடும். எனவே குல தெய்வமான ரிஷி கடனை தீர்க்க வேண்டும். குல தெய்வத்தை ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டும்.

    சிலருக்கு குல தெய்வம் எது என்று தெரியாது. அப்படிபட்டவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு குருவை தேர்வு செய்து அவரையே வழிபட வேண்டும். இதன் மூலம் ரிஷி கடனை மிக எளிதாக தீர்க்கலாம்.

    மூன்றாவதாக பூத கடன். இந்த கடனை தீர்ப்பது மிக மிக எளிது. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். நமது வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை என்று பல வகையான உயிரினங்களை வளர்ப்போம். அந்த உயிரினங்கள் அனைத் திடமும் நாம் அன்பை பிரதானமாக வெளிப் படுத்த வேண்டும்.

    வீட்டு செல்ல பிராணிகளிடம் மட்டுமல்ல பறவைகளிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும். தாவரங்களுக்கும் நமது அன்பு கிடைக்க வேண்டும். ஆனால் தாவரங்களிடமும், உயிரினங்களிடமும் நாம் அன்பு காட்டுவது இல்லை. அவற்றை நாம் ஒரு பொருட்டாகவே நினைப்பது கிடையாது.

    இந்த நிலை மாற வேண்டும். உயிர் இருப்பது, உயிர் இல்லாதது என எல்லோரிடமும் அன்பை விதையுங்கள். இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் மிக மிக முக்கியமானது. ஜீவகாருண்யுத்துடன் நாம் இருக்க வேண்டும். நாம் எந்த அளவுக்கு ஜீவகாருண்யத்தை கடை பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு இந்த உலகில் அன்பு பரவும். இதைதான் பூத கடன் என்று சொல்கிறோம்.

    நான்காவதாக வருவது நர கடன். இது நம்மை சுற்றி இருக்கும் சக மனிதர்களிடம் நாம் காட்ட வேண்டிய அன்பை குறிப்பதாகும். நம்மோடு எத்தனையோ விதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் ஜாதி, மதம், இனம், நிறம், மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் நாம் வாழ வேண்டும்.

    வர்க்க பேதங்கள் பார்க்காமல் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கையாகும். எப்போதுமே மனதுக்குள் பேதங்களை வளர்த்துக் கொள்ள கூடாது. பேதங்களை கடந்து அனைத்து தரப்பினரிடமும் அன்பை காட்டி நேசத்தை வெளிப்படுத்தி வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.

    நம்மை சுற்றி எத்தனையோ பேர் மூன்று நேரமும் உண்பதற்கு உணவு இல்லாமல் இருப்பார்கள். எத்தனையோ ஏழைகள் சரியான ஆடைகள் இல்லாமல் தவிக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு தானம் செய்யுங்கள். பசியோடு இருப்பவர்களுக்கு ஒருநேர உணவாவது கொடுங்கள்.

    கடைகளுக்கு சென்று ஆடை வாங்க முடியாதவர்களுக்கு உங்களால் முடிந்த ஆடைகளை வாங்கி கொடுங்கள். உங்களால் இயன்ற உதவிகளை செய்வதற்கு ஒருபோதுமே தயங்காதீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு நர கடனில் இருந்து விடுபட முடியும்.

    இறுதியில் ஐந்தாவதாக இருப்பது தேவ கடனாகும். பித்ரு கடன், ரிஷி கடன், பூத கடன், நர கடன் ஆகிய நான்கு கடன்களையும் செய்து முடித்த பிறகுதான் ஐந்தாவது கடனான தேவ கடனுக்கு வர வேண்டும். தேவ கடன் என்பது நமது தெய்வ வழிபாட்டை குறிக்கும். முதல் 4 கடன்களை செய்யாமல் தெய்வத்தை வழிபடுவதால் எந்த புண்ணியமும் இல்லை.

    முதல் 4 கடன்களையும் செய்து கொண்டே ஐந்தாவது கடனை பூர்த்தி செய்ய வேண்டும். அதுதான் நேர்மையான வாழ்க்கை. இப்படிப்பட்ட 5 கடன்களையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் இதை கடன்கள் என்று சொல்கிறேன். ஆனால் உண்மையில் இந்த ஐந்தும் கடமைகள் ஆகும். இந்த கடமைகளை உணர்ந்து யார் ஒருவர் செயல்படுகிறாரோ அவர்தான் மேன்மை பெற முடியும்.

    இந்த கடன்களை செய்து முடிக்காதவரை நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அது தீரப்போவதில்லை. ஒவ்வொரு பிறவியாக அது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். எனவே நான் சொன்ன ஐந்து கடன்களையும் எப்போதும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு செயல்படுங்கள்.

    இவ்வாறு பாபா கூறினார்.

    Next Story
    ×