search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இச்சைகளைத் தீர்க்கும் பச்சைமலை முருகன்
    X
    இச்சைகளைத் தீர்க்கும் பச்சைமலை முருகன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - இச்சைகளைத் தீர்க்கும் பச்சைமலை முருகன்

    கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ பச்சைமலை முருகன் எல்லையற்ற சக்தி படைத்தவனாக இருக்கிறான். பக்தர்கள் விரும்பியதை அளிக்கும் கருணாமூர்த்தியாக விளங்குகிறான். மரகதாசலம் என்றழைக்கப்படும் பச்சை மலை அற்புதங்கள் நிறைந்த ஆலயம்.
    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா 
    மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த 
    பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி 
    வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே 
                                                                                                          - கந்தரலங்காரம் 

    தனித்த வழி நடக்கும் நமக்கு எது துணை? யார் துணை?
    முருகனே துணை என்கிறார் அருணகிரியார். அவனே பிரம்மசொவரூபம். கனிகள் கொடுக்கும் மரமும் அவனே. காயாய் இருப்பவர்களை எல்லாம் பழமாக்குகிறான். அன்பெனும் மரத்திற்கு அவனே விதையாகிறான். தானாகக் கனியாத கனியை உஷ்ணத்தினால் கனிய வைப்பதுபோல் துன்பமெனும் தீயில் இட்டு புனிதமாக்குகிறான் முருகன். தானாகக் கனிந்த பழம் அவன்.
    துன்பம் தாங்காமல் மனம் உருகி பிரார்த்தனை செய்யும் பொழுது ஓடி வருகிறான் கந்தன். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அவன் என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் உண்மைப் பொருளை எல்லோரிடத்திலும் காண்பவர்கள் ஞானிகள்.

    முருகா எனும் நாமத்தில் முப்பொருளும் நிறைந்துள்ளது என்கிறார்கள் சித்தர்கள்.
    “பாரடங்க உள்ளதும் பறந்த வானமுள்ளதும் 
    ஓரிடமும் இன்றியே ஒன்றி நின்ற ஒண்பொருளும் 
    யாரிடமும் இன்றியே அவர் அகத்துள்ளும் புறத்துள்ளும் 
    சீரிடங்கள்  கண்டவர் சிவந்தெரிந்த ஞானியே”-  என்கிறார்கள்.
    பார்க்கும் இடமெல்லாம் முருகனின் வேலே நம் துணையாக நிற்கிறது. 

    தனக்கென ஓரிடம் இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒன்றி நிற்கும் அவனின் நாமமே நமக்குத் துணையாகிறது. நம் விழிகளுக்குத் துணை அவனின் மென்மையான திருவடித் தாமரை, உண்மைப் பொருள் நிறைந்த மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம். நாம் முன்பு செய்த வினைகளைத் தீர்த்து நம் பாவத்தைப் போக்குவது முருகனின் பன்னிரு தோள்கள். நம் பயணத் தனி வழிக்குத் துணையாக இருப்பது செங்கோடனுடைய வேலும் மயிலுமேயாகும்.

    வேலும் மயிலும் துணை என்று எந்நேரமும் தியானித் தால் முருகனின் அருள் கவசமாக நின்று நம்மைக் காக்கும். அழைத் தவுடன் ஓடி வரும் அருள்மனம் படைத்தவன் முருகன். அவன், தான் இருக்கும் இடமெல்லாம் வளமையும், செல்வமும் நிறைந்திருக்கச் செய்பவன். 

    பக்தர்களுக்கு அவன் குழந்தையாக இருக் கிறான். அவ்வாறே கோவி லும் கொள் கிறான். பால தண்டாயுதபானியாக அவன் வீற்றிருக்கும் ஆலயங்கள் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவ்வகையில் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ பச்சைமலை முருகன் எல்லையற்ற சக்தி படைத்தவனாக இருக்கிறான். பக்தர்கள் விரும்பியதை அளிக்கும் கருணாமூர்த்தியாக விளங்குகிறான். மரகதாசலம் என்றழைக்கப்படும் பச்சை மலை அற்புதங்கள் நிறைந்த ஆலயம்.

    பச்சைமலை வெறும் பாறைகளும், கற்களும் நிறைந்த சிறு குன்றே ஆகும். இங்கு பச்சை என்பது நீரூற்றை  குறிக்கிறது. இங்கு மலைக்குக் கீழ், மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது.

    முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் கொங்கு நாட்டிற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய சரியான இடம் என்று கோபி அருகே உள்ள மொடச்சூரைத் தேர்ந்தெடுத்தார். அப் போது அவரது மனம் இச்சைகளைத் தீர்க்கும் முருகனைக் காண ஏங்குகிறது. அவனை எண்ணி தவம் செய்யும் போது அருகில் உள்ள மரகதாசலம் என்றழைக்கப்படும் மரகதகிரி குன்று ஞானதிருஷ்டியில் தெரிகிறது.
    அங்கு முருகன் அவருக்கு பால் தண்டாயுத பாணியாக காட்சி அளிக்க  கந்தன் துர்வாசரின் வேண்டுகோளை ஏற்று இந்த மலையில் குடி கொள் கிறான். முனிவர் முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார்.

    அதன்பின் பல ஆண்டுகள் பூஜை இல்லாமல் இருந்த முருகனைத் தரிசிக்க, குப்புசாமி கவுண்டர் என்ற நிலக்கிழார் வந்த போது அவருக்கு ஜோதி ரூபமாகக் காட்சி அளித்த முருகன் தனக்கு பூஜைகளைத் தொடரச்சொல்ல அவர் திருப்பணிகள் செய்து குடமுழுக்குகள் நடத்தினார். அவருக்குப் பின் அவரது வழித் தோன்றல்கள் மிகச் சிறப்பாக பச்சைமலை முருகனுக்கு உரிய பூஜைகள், விழாக்களை நடத்தி வருகிறார்கள்.

    ஜி.ஏ.பிரபா

    மலைமேல் சுற்றளவு மிகவும் சிறிதானதால் அதை அகலப்படுத்தி, திருமுருகனுக்கு சொர்ண பந்தனம் என்னும் தங்கபீடம் அமைத்துள்ளனர். தங்கத்தேர் அமைத்து அழகாக ஓடுகிறது. விண்ணும் மண்ணும் நிறைந்த அழகனுக்கு ஏராளமான நகைகள், பூஜை பாத்திரங்கள் உள்ளன.

    கோபிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த பச்சைமலை முருகன், வள்ளி தெய்வானையுடன்  மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறான்.  பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம் கார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது.

    தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தர் சஷ்டி திருநாளில் முருகன் தங்க கவசத்தில் காட்சி அளிக்கிறான். பச்சைமலையின் பிரதான தெய்வமாக ஸ்ரீசண்முகர் வள்ளி தேவசேனை சகிதம் உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபமே சண்முகர் என்று அழைக்கப்படுகிறது.

    கந்த சஷ்டியின் போது தொடர்ந்து ஆறு நாட்கள் சண்முகார்ச்சனை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உற்சவம் கல்யாண தினத்தன்று சிவப்பு சாத்தி உற்சவமும், அன்று இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்தரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா, விஷ்ணு என்று திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகிறது.

    வருடத்தில் ஒருமுறை மட்டுமே மலர் பல்லக்கில் பவனி வருகிறார் சண்முகர். இங்கு அர்த்தஜாமப் பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பாலமுருகனுக்கு வெள்ளை ஆடை சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது.  தீபாராதனை முடிந்தவுடன், பன்னிரு திருமுறை, கந்தர் அலங்காரம், திருப்புகழ், அனுமூதியிளிருந்து பாடல்கள் பாடப்படும். இதில் மூன்று வாரங்கள் தொடர்ந்து கலந்து கொண்டால் தீராத துன்பங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பிரசாதமாக தினைமாவு, ஞானப்பால் வழங்கப்படுகிறது. தைப்பூசத்தன்று பக்தர்கள் காவடியும், பால்குடமும் எடுத்து வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். மலைமீது செல்ல பாதையும், நூற்று எண்பது படிகளும் உள்ளன. படிப்பாதை முடிவில் உள்ள நாற்பது அடி உயரமுள்ள திருச்செந்தூர் முருகனின் ஞானத் திருக்கோலம் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் எழிலாக அமைந்துள்ளது.

    மலைமீது நூறு அடியில் சுவையான நீரூற்று உள்ளது. இங்கு வீசும் காற்று பல மூலிகைகள் கலந்து வீசுவதால் நோய் தீர்க்கும் மலையாகவும் விளங்குகிறது. பளபளவென்று கருங்கற்களால் கருவறையும், மயில் வாகனம், சலவைக் கற்களால் கொடிமரமும்,அருணகிரிநாதர், தம்தம் தேவியருடன் இருக்கும்  நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. 

    முன் மண்டபத்தில் அருட்பெருஞ் ஜோதி மண்டபம் அமைத்து அங்கு அணையா விளக்கு ஒன்று பிரகாசிக்கிறது. இங்கு திருப்பணியில் தடங்கல்  ஏற்பட, காஞ்சி மகான் கருணையால், அவர் சொற்படி, மலை அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கு திருப்பணிகள் செய்தபின் மற்ற பணிகள் தடங்கலின்றி நிறைவேறின.

    திருமணம், குழந்தைப்பேறு, கல்வி, வேலைவாய்ப்பு என்று பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் தரும் வள்ளலாகத் திகழ்கிறான் முருகன். அக்னி நட்சத்திரத்தின்போது தாரா அபிஷேகமும்,நூற்று எட்டு லிட்டர் பால் அபிஷேகமும், ருத்ராபிஷேகம் பதினோரூ முறை ஜெபிக்கப்படுகிறது.

    பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை 
    பச்சைமலை எங்கும் உறைவோனே - - - - - - - 
    பக்தியுடனின்று பத்தி செயுமன்பர் 
    பத்திரமணிந்த  கழலோனே” என்கிறார் அருணகிரிநாதர் தன் திருப்புகழில்.

    பக்தியுடன் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் மயில் வாகனன் என்கிறார்கள் பக்தர்கள்.
    தன் மனைவி, குழந்தைகள், செல்வம் என்று சுயநலமாய் வாழும் மக்களை மாற்றி, அன்பும், கனிவும், இறைவனுக்குச் செய்யும் சேவை எளியோர்களுக்குச் செய்யும் உதவி என்று தன் அடியார்களுக்குப் புரிய வைப்பவன் முருகன். 

    உடல் அழகாயிருந்து பலன் இல்லை. உள்ளிருக்கும் ஆன்மா பொன்போல் மின்ன வேண்டும். அதை முருகாவெனும் நாமம் மட்டுமே செய்ய இயலும். பாறைபோல் இறுகி கெட்டி தட்டிப் போயிருக்கும் மனதை பொன்னாய் உருக்கி, இளகி மின்ன வைப்பது அவனின் கருணையே. உலகம் அனைத்தும் ஒன்றாக மாற்றி தன்னிடம் ஒன்ற வைக்கும் பரம்பொருள் அவனே.

    ஒன்றும், ஒன்றும் ஒன்றுமே,உலகமனைத்தும் ஒன்றுமே 
    அன்றும் இன்றும் ஒன்றுமே அநாதியானது ஒன்றுமே 
    கன்னல் நின்ற செம்பொனைக் களிம் பறுத்துக் காட்டினால் 
    அன்று தெய்வம் உம்முனே அறிந்ததுவே சிவாயவே 
    என்கிறது ஒரு சித்தர் பாடல் ஒன்று.

    முருகனாகிய செம்பொன்னுக்குள் அவனின் கருணையாகிய கரும்புச் சாறு இருக்கிறது. முருகா என்று இருகரம் நீட்டினால் அவன் ஓடி வருகிறான். கரும்புச் சாறு போல் இனிமையான வாழ்வை அளிக்கிறான்.
    நாம் பச்சைமலை முருகனை நோக்கி ஒருகரம் நீட்டினால் அவன் பன்னிரு கரம் நீட்டி நம்மை அரவணைத்துக் கொள்வான்.
    Next Story
    ×