search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைவிலா வாழ்வருளும் குமரமலை
    X
    குறைவிலா வாழ்வருளும் குமரமலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - குறைவிலா வாழ்வருளும் குமரமலை

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் என்ற தலைப்பில் குறைவிலா வாழ்வருளும் குமரமலை குறித்து ஜி.ஏ. பிரபா ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
    மாலுக் கணிகலம் தண்ணந் துழாயமயி லேறுமையன்
    காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
    வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.
    -கந்தரலங்காரம்

    இறைவனின் அணிகலன்களாக இருப்பவை என்ன?
    சிவபெருமானுக்கு அணிகலனாக இருப்பது, வெண்மையான கபால மாலையாகும். திருமாலுக்கு அணிகலனாக விளங்குவது குளிர்ந்த அழகிய துளசி மாலையாகும். மயில் வாகனத்தின் மீது ஏறி வருகின்ற முருகனின் திருவடிகளுக்கு அணிகலனாக விளங்குவது தேவர்களின் மணி முடிகளும், அவர்கள் சூட்டும் கடம்ப மலர் மாலைகளும் ஆகும். கந்தனின் கைவேலுக்கு அணிகலனாக விளங்குவது சூரனும், மகாமேரு மலையும் ஆகும் என்கிறார் அருணகிரியார்.

    அவனைக் காணும் கண்களே ஒளி பொருந்தியவை. என்றும் இளையவனும், இணையில்லாத அழகனுமான கார்த்திகேயனைக் காணும் கண்களே கண்கள். அவனின் முழு மேனி அழகைக் காணும் திறன் நம் உடல் முழுவதும் கண்ணாக இருந்தாலும் இல்லை.

    கந்தனின் காலடி தரிசனமே கவலைகளை எல்லாம் பறந்தோடச் செய்து விடும். அவனின் ரூபத்தைத் தியானித்தாலே மனக்கவலைகள் எல்லாம் பறந்து விடும். மனதில் முருகனின் பாத தாமரையைப் பதித்து விட்டால், நமக்குக் கவலை என்று எதுவும் இல்லை.

    நெஞ்சகத்தை நீர்பொய் கையாக மாற்றி விட்டால், அங்கு அழகான முருகனின் பாத தாமரை மலர்ந்து விடும். ஆனால் மனம் கல்லாக இருக்கிறதே?
    திணியான மனோ சிலை மீதுனதாள்

    அணியாரர விந்தம் அரும்புமதோ? என்று உருகுகிறார் அருண கிரியார். கல்லைப் போல் இறுகியுள்ள மனம் பனிக்கட்டி போல் உருக வேண்டும் என்றால் அங்கு இடையறாது முருகனின் நாமம் ஒலிக்க வேண்டும். “நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருக” என்று அருணகிரியார் வழி காட்டுகிறார்.

    வழிகாட்டும் திசையெல் லாம் வழித்துணையாக முருகன் வருகிறான். தன்னை வந்து தரிசிக்க இயலாதவர்களைத் தேடி அவனே வருகிறான். அப்படி வந்து அவன் குடி கொண்ட இடமே குமரமலை. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது குமரமலை.

    இந்த மலைக்கு அருகில் உள்ள குன்னக்குடிபட்டி என்ற கிராமத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சேதுபதி என்று ஒருவர் வசித்து வந்தார். இவர் தீவிரமான முருக பக்தர்.வருடந்தோறும் கார்த்திகை முப்பது நாளும் விரதமிருந்து காவடி எடுத்து கால்நடையாக பழனி சென்று முருகனைத் தரிசித்து விரதத்தை முடிப்பார்.

    ஆனால் எண்பது வயது நெருங்கிய நிலையில் அவரால் முன்போல் பழனிக்கு செல்ல முடியவில்லை. இனி நான் வாழ்வதில் பயன் இல்லை என்று வருந்தினார். அன்றிரவு அவர் கனவில் முருகன் தோன்றி “சேதுபதி வருந்தாதே. உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகில் உள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன். அங்கு வந்து என்னை வழிபடு”என்கிறான் முருகன்.

    அதுதான் முருகன் என்று எப்படி அறிவது  என சேதுபதி கேட்க, “நான் குடி கொண்டதற்கு அடையாளமாக அங்கு ஒரு விபூதிப் பை, ருத்ராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும். அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து வழிபடுங்கள்.”- என்று கூறுகிறான்.

    அதேபோல அந்த இடத்தைக் கண்டறிந்து மக்கள் குமரமலை என்று முருகனின் பெயர் வைத்து வழிபடுகிறார்கள். அதன்பின் சேதுபதி பழனி செல்லாமல் இங்கேயே விரதமிருந்து வழிபாடுகளை முடித்தார். மக்களும் அவரைப் பின் பற்றினார்கள்.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன் அப்பாவு அய்யர் என்பவர் இந்த வேலை எடுத்து விட்டு தண்டாயுதபாணியின் சிலையை வைக்கலாம் என்று திட்டமிட்டபோது, முருகன் அவர் கனவில் தோன்றி, ராமநாதபுரம் அருகில் ஒரு சிற்றூரில் உள்ள சிற்பியின் பெயரைச் சொல்லி, “அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்திருக்கிறார். நான் சொன்னதாகக் கேள். கொண்டு வந்து நான் வந்து நின்ற சங்குச் செடிகளின் நடுவில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்.” என்று சொல்லி மறைந்து விட்டான்.

    முருகனே வழி காட்டிய திருத்தலம் குமரமலை. முதலில் வேல் வடிவிலும், பின் திரு உருவிலும் முருகன் அருள் புரிந்த சக்தி மிக்க தலம் இது. அய்யாசாமி வழி வந்தவர்கள், முருகனைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டு கீற்றுக் கொட்டகையாக இருந்த கர்ப்பக் கிரகத்தை கல் மண்டபமாக்கி பல திருப்பணிகள் செய்துள்ளனர்.

    அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு வேட்டையாட வந்த புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத பல்லவராயர், முருகனின் ஆற்றலை உணர்ந்து, கோவிலை விரிவுபடுத்தி, விநாயகர், இடும்பன் சன்னதிகளை அமைத்து, திருப்பணிகளைச் செய்தார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இக்கோவில் பிறகு வந்தது.

    இங்கு முருகன் பால தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகிறான். தீர்த்தம் சங்கு சுனை தீர்த்தம். வாதநோயால் பாதிக்கப் பட்டவர்கள் இச்சுனை தீர்த்தத்தை மருந்தாக எடுத்துக் கொள்கிறார்கள். திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு அருளவும் பெண்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

    பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்த மண்டபத்திலுள்ள, வேலில் வளையல்களைக் கட்டி வழிபாடு செய்கிறார்கள். முருகன் எந்தச் சிரமமும் இல்லாமல் பிரசவம்  நடக்க உதவுவான் என்பது நம்பிக்கை. பக்தர்கள் பால் குடமும், காவடியும் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற நெய், மூலிகைச் சாறு, பால், விபூதி அபிஷேகம் செய்கிறார்கள்.

    சங்குசுனை தீர்த்தத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கிறது. முருகனின் அபிஷேகத்திற்கு இங்கிருந்தே நீர் எடுத்துச் செல்லப் படுகிறது. வாத நோய் உள்ளவர்கள் இச்சுனை நீரில் நீராடி கந்தனை வழிபடுகிறார்கள். நோய் தீர்ந்ததும், தங்கள் பாதங்களை மலையின் முதல் படியில் பதித்து நன்றி செலுத்தி அபிஷேகம் செய்கிறார்கள்.

    வேலாக நின்றவன் வேலவன்.முருகனின் அருள் முழுவதும் வெளிப்படும் இடம் வேல். முருகனின் ஆணையை ஏற்று உடனே செயல்படுகிறது வேல். எனவேதான் அவன் வேலவன் என அழைக்கப்படுகிறான்.

    ஒரு மயிலின் மேல் ஏறி, தன்னை நோக்கி வரும் சூரனை, அவனுடன் நின்ற மலையையும் ஒரே வேலினால் உடையும்படி செய்த இளையோனின் புகழைப் பாடுவோம் என்கிறார் தக்கயாகப் பரணியில் ஒட்டக்கூத்தர்.  இதையே அருணகிரியார்
    கிளைபட் டேழுசூர் உரமும் கிரியும்
    தொளைபட் டுருவத் தொடுவே லவனே
    என்கிறார்.
    வேல் எடுத்து வரும் வீராதி வீரன்,
    அவன் வேலின் மகிமையைக் கூறுவதரிது.
    மயில் மீதேறி வருவான் மாலவனின் மருகன்
    மனக் குறைகளை எல்லாம் தீர்ப்பான்”- என்கிறது ஒரு கிராமியப் பாடல்.
    அனைத்தையும் ஆட்டுவிப்பவன் முருகன். அவன் இச்சையின் படிதான் உலகே இயங்கு கிறது. உண்பதும், உறங்குவது. சிந்திப்பதும், சிந்தையில் எண்ணங்கள் உருவாவதும், கோபமும், நல்ல குணங்களும், அன்பும், அறிவும் அனைத்தும் அவனாலேயே உருவாகிறது. பேரின்பப் பொக்கிஷமாக இருப்பவன் அவன். இதேயே கந்தர் அனுபூதியில்
    “வானோ புனல்பார் கனல்மா ருதமோ
    ஞானோ தயமோ நவில்நான் மறையோ
    யானோ மனமோ எனை ஆண்ட இடத்
    தானோ பொருளா வதுசண்முகனே” என்கிறார்.

    உலகில் இணையற்ற மந்திரம் திருமுருகா, ஆறுமுகா, குருமுருகா, சிவ முருகா என்கிறார் அருணகிரியார். இம்மந்திரங்களை தினமும் கருத்துடன் சொல்ல,அழகு இளமை பொருந்திய முருகன் உடனே வருவான். இந்த யுகம் முழுவதும், பிரபஞ்சம் முழுவதும் ஒலிக்கின்ற தனிப்பெரும் மந்திரம் முருகா வென்னும் நாமம்.

    ஜிஏ பிரபா

    திருமுருகா என்றால் உடனே அவனின் வேல் தோன்றி அன்பர்களின் பயத்தை எல்லாம் போக்கும். நெஞ்சில் நினைத்தால் போதும் நிலையான சுகவாழ்வு அருளும். முருகா என்று இந்த நாமங்களைச் சொல்லச் சொல்ல சகல விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒப்பரிய மந்திரம்.

    அனாதி காலம் தொட்டு முனிவர்கள், ரிஷிகள் இந்த மந்திரத்தையே ஜெபித்து வந்துள்ளார்கள். முருகன் எளிமையானவன். பக்தர்களின் அன்புக்குக் கட்டுப் பட்டவன். அவன் தன் அடியார்களுக்குச் சோதனைகள் தர மாட்டான். முருகா எனும் நாமம் தெவிட்டாத தேன் போன்றது.

    குமரமலை முருகனை திருமுருகா, குருமுருகா, சிவமுருகா என்று போற்றித் துதித்தால் அவன் தீராத வியாதிகளைத் தீர்ப்பான். திக்கற்றவர்களுக்கு துணை நிற்பான்.மனக்குறைகளை எல்லாம் தீர்ப்பான். அவன் அடியார்களின் சகல துயங்களையும் நீக்குவான்.

    Next Story
    ×