search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்வாழ்வு தரும் யோக முத்திரைகள்
    X
    நல்வாழ்வு தரும் யோக முத்திரைகள்

    ஆரோக்கியம் நம் கையில் - நல்வாழ்வு தரும் யோக முத்திரைகள்

    நல்வாழ்வு தரும் யோக முத்திரைகள் குறித்து யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
    ஒவ்வொருவரும்  ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றுதான் விருப்புகின்றோம்.  அந்த ஆரோக்கியத்தை அடைய மனித உடலில் கழிவுகள் (மலம்) தினமும் காலை, மாலை இரு வேளை வெளியேற வேண்டும்.  அப்பொழுதுதான் ஆரோக்கியம், அதாவது உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்கு இயங்கும்.

    இன்று நிறைய நபர்களுக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பழக்கமுள்ளது.  ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மலம் கழிக்கும் நிலை உள்ளது.  ஒரு நாளில் பத்து முறை சிறிது சிறிதாக மலம் கழிக்கின்றனர்.  எப்பொழுதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது.  இது உடல் ரீதியாக இருக்கும் ஒரு குறைபாடுதான்.  ஜீரண மண்டலம் சரியாக இயங்குவதில்லை.  மலக்குடலில் சக்தி ஓட்டம் சரியாக இல்லை.  உடலில் நிலம் மூலகம் நல்ல சக்தி ஓட்டம் பெறாமல் உள்ளது.  இதனால் ஆசனவாய் தசைகள் வெளியே வரும் நிலை, மூலவியாதி, ஆசன வாய் தசைகளில் புண் ஏற்படுகின்றது.  அடிக்கடி மலம் கழிப்பதால் ஆசன வாய் தசைகளின் உட்புறப் பகுதியில் புண் ஏற்படுகின்றது.  சிலருக்கு உயிர் சக்தியும் வெளியேறும் நிலை ஏற்படுகின்றது.  இந்நிலையில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதற்குரிய யோக முத்திரை சிகிச்சையை காண்போம்.

    முத்திரைகள்:

    மனித உடல் பல மில்லியன் செல்களினால் ஆனது.  ஒவ்வொரு செல்களிலும் பஞ்ச பூதத் தன்மைகள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உள்ளன.  ஒவ்வொரு பஞ்ச பூதமும் உடலுக்குள் ஒரு உறுப்புடன் தொடர்பு கொண்டு சக்தியளிக்கின்றது.  இந்த பஞ்ச பூதத்தின் கட்டுப்பாடு கைவிரல் நுனிகளில் உள்ளது.  நாம் விரல் நுனிகளை இணைத்து இரண்டு நிமிடங்கள் இருந்தாலே போதும்.  பஞ்ச பூதங்களும் சமமாக இயங்கும்.  உடல் உள் உறுப்புக்கள் சக்தி பெற்று இயங்கும்.  நாம் முத்திரை பயிற்சி மூலமும், உணவில் ஒழுக்கத்தின் மூலமும் அடிக்கடி மலம் கழிக்கும் குறையை நீக்கிவிடலாம்.  இப்பொழுது முத்திரை சிகிச்சையாக பார்க்கப் போகின்றோம்.

    அபான முத்திரை:

    அபான முத்திரை

    நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்.  தரையில் அமர முடிபவர்கள் விரிப்பில் நிமிர்ந்து  அமரவும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் நடு விரல், மோதிரவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  படத்தை பார்க்கவும்.  காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    பிருதிவி முத்திரை:

    பிருதிவி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  விரிப்பில் அமர முடியாதவர்கள்  நாற்காலியில் அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள்.  பின் மோதிரவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் செய்யவும்.  காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும்.  சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேர இடைவெளி வேண்டும்.

    சுத்தப்படுத்தும் முத்திரை:

    சுத்தப்படுத்தும் முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை தேடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் மோதிர விரலின் முதல் பகுதியில் பெருவிரல் நுனியால் தொடவும்.  படத்தை பார்க்கவும்.  இரு கைகளிலும் செய்யவும்.  காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    மாதங்கி முத்திரை:

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும்.  எல்லா கை விரல்களையும் கோர்க்கவும்.  நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும்.  கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும்.  இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.  காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    முகுள முத்திரை:

    முகுள முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு  நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும்.  பின் பெருவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் இரு கைகளிலும் செய்யவும்.  இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் செய்யவும்.

    மணிப்பூரக சக்கரா  தியானம்

    மேற்குறிப்பிட்ட முத்திரைப் பயிற்சி செய்தவுடன் ஒரு எளிய மணிப்பூரக சக்கரா தியானம் செய்ய வேண்டும்.  விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள் செய்யவும்.  பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும்.  உங்களது மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும்.  நல்ல பிராண காற்று வயிற்று உள் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும்.  ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.  பின் மெதுவாக  கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

    வஜ்ராசனம்: விரிப்பில் ஒவ்வொரு காலாக மடித்து படத்தில் உள்ளது போல் வஜ்ராசனம் போடவும்.  சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் நீங்கள் இருக் கவும்.  பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    வஜ்ராசனம்

    மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் உங்களுக்கு ஒரு யோகச் சிகிச்சையாக அளிக்கப்பட்டுள் ளது.  இதனை நம்பிக் கையுடன் காலை, மாலை இரு வேளை பயிற்சி செய்யுங்கள்.  அத்துடன் கீழ்கண்ட பண்புகளை நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

     உணவு: காலை உணவு 9 மணிக்குள் மிதமான உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்,  இட்லி உண்பது உத்தமம்.  அதிக காரம், புளிப்பு, உப்பு குறைக்கவும்.  மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. இரவு சாப்பாடு 8 மணிக்குள் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடமிருக்க வேண்டும்.  இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை ஆழ்ந்த நித்திரையில் இருக்க வேண்டும்.  

    ஜீரண மண்டலமும் மன அழுத்தமும்:

    பொதுவாக மன அழுத்தம், கவலை, டென்ஷன், பதட்டம் உள்ளவர்கள் உடலில் தான் அடிக்கடி சாப்பிட்ட உடன்  மலம் கழிப்பதாக இருக்கும்.  காரணம் மன அழுத்தம், பய உணர்வால் உடலில் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் பாதிப்படைகின்றது.  சுவாச மண்டலம் பாதிப்படைந்தால் சிறுகுடல், நுரையீரலுக்கு நல்ல சக்தி ஓட்டம் கிடைக்காமல் தடைபடும்.  அதனால் மலம் கழிப்பதில் முறைகேடுகள் ஏற்படுகின்றது.  எனவே மன அழுத்தம் வராமல் வாழ மூச்சை மையமாக  வைத்து தியானம், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் செய்ய வேண்டும்.

    மூச்சில் தியானம்:

    நிமிர்ந்து அமருங்கள்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுங்கள்.  உடன், மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.  பத்து முறைகள் இவ்வாறு செய்யவும்.  பின் மூச்சை மட்டும்  ஐந்து நிமிடங்கள் கவனிக்கவும்.  மூச்சு உள்ளே செல்வதையும், மூச்சு வெளிவருவதையும் மட்டும் கவனிக்கவும்.  பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.  இதுபோல் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பயிற்சி செய்யவும்.  ஒரு நாளில் 5  முறைகள் பயிற்சி செய்யலாம்.  மன பதட்டம், அழுத்தம் வரும் பொழுது பயிற்சி செய்யலாம்.  இவ்வாறு செய்யும் பொழுது தேவையற்ற பயம், பதட்டம், மன அழுத்தம் நீங்கும்  மனம்  அமைதி பெறும்.  அதனால் சுவாச மண்டலமும், ஜீரண மண்டலமும் நல்ல சக்தி பெற்று இயங்கும்.

    உணவு வகைகள் - பழ வகைகள்:

    அரைக்கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா, பசலைக்கீரை, தண்டங்கீரை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள்.

    கொய்யா பழம், கருப்பு திராட்சை, மாதுளம் பழம், ஆரஞ்சு பழம், உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    எண்ணைய் குளியல்:

    வாரம் ஒரு முறையாவது எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்.  ஆண்கள் புதன்கிழமை, சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணைய் தேய்த்து குளிக்கவும்.  எண்ணைய் தேய்த்து குளித்த அன்று பகலில் தூங்கக்கூடாது.  ரசம் சாதம் உண்ணவும். தயிர் தவிர்க்கவும்.
     
    பலர் காலை எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பொழுது பிஸ்கட், மிச்சர், முறுக்கு என்று சாப்பிடுவார்கள்.  சிலர் காலை குளிக்காமலேயே காலை டிபன் சாப்பிடுவார்கள்.  பின் 10 மணிக்குமேல் குளிப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களுக்கு அடிக்கடி மலம் கழிக்கும் குறைபாடு ஏற்படும்.  இரவு தூங்கி காலை முழித்தவுடன் செல்களில்  உஷ்ணத்தின் தன்மை அதிகமாக இருக்கும்.  செல்களில் உள்ள உஷ்ணத்தை சமப்படுத்தி குளிர்வித்தல் அதுவே குளித்தல் ஆகும்.  எனவே காலை குளித்துவிட வேண்டும்.  நமது உடலில் உஷ்ணம் சமமாகிவிடும்.  அதன்பின்தான் சாப்பிடவேண்டும்.  இதை சரியாக கடைபிடியுங்கள்.
    அதேபோல் சாப்பிட்டவுடன் சிலர் குளிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள்.  அதுவும் தவறு.  அந்த மாதிரி பழக்கம் உள்ளவர்களுக்கும் செரிமானம் பாதிக்கப்படும்.  அடிக்கடி மலம் கழிக்கும் நிலை ஏற்படும்.

    சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை:

    சாப்பிட்டவுடன் பழம் சாப்பிடாதீர்கள்.  அதில் உள்ள நார்சத்து உணவுடன் கலக்கும் பொழுது செரிமானம் பாதிக்கப்படும்.சாப்பிட்டவுடன் குளித்தாலும் தோலுக்கு ரத்த ஓட்டம் அதிகம் செல்லும்.  இரைப்பைக்கு செரிமானத்திற்கு ரத்த ஓட்டம் குறையும்.

    சாப்பிட்டவுடன் நடப்பது, உடற்பயிற்சி செய்வதுகூடாது.  இரைப்பை செரிமானத்திற்கு ரத்த ஓட்டம் குறையும். சாப்பிட்டவுடன் டீ , காபி, குளிர்ந்த நீர் குடிக்க கூடாது.  இதுவும் செரிமானத்தை பாதிக்கும்.  சாப்பிட்டு பதினைந்து நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் அல்லது சுடுதண்ணீர் குடிக்கவும்.  சாப்பிட்டவுடன் தூங்கவும் கூடாது. நமது உடலில் செரிமானம் நன்கு செயல்பட உடல் நேராக இருக்க வேண்டும். படுத்தால் உடலில் உள்ள இரைப்பை நேராக இருக்காது.

    மேற்குறிப்பிட்ட விஷயங்களிலும் சரியாக கவனம் செலுத்துங்கள் இதில் குறிப்பிட்ட முத்திரை சிகிச்சைகளையும் பயிற்சி செய்யுங்கள்.  நிச்சயம் அடிக்கடி மலம் கழிக்கும் நிலை மாறி ஆரோக்கியமாக வாழலாம்.
    Next Story
    ×