search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி குழந்தைகளுக்கு வரவேற்பு
    X
    பள்ளி குழந்தைகளுக்கு வரவேற்பு

    தமிழகம் முழுவதும் விழாக்கோலம் கண்ட பள்ளிகள்- மகிழ்ச்சி பொங்க துள்ளிகுதித்து சென்ற மாணவ செல்வங்கள்

    முதல் முதலாக பள்ளிக்கு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இது புதுமையான அனுபவமாக தெரிந்தது. பள்ளிக் கூடம் என்றால் இப்படித்தான் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். தினமும் இப்படித்தான் வாசல்களில் நின்று வர வேற்பார்கள். ‘சாக்லேட்’ தருவார்கள் என்று நினைத்து கொண்டனர்.


    எம்மா... எங்க பள்ளியாம்மா... இது.

    தோரணம் கட்டி அலங்காரம் பண்ணி இருக்காங்க... மேளதாளங்கள், பேன்ட்வாத்தியங்கள் வச்சிருக்காங்க.

    கோலமெல்லாம் போட்டு, வாசலில் நின்று பன்னீர் தெளித்து, பூவெல்லாம் தர்றாங்க....

    -இப்படித்தான் இன்று தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்கு பிறகு பள்ளிகளை திரும்பி பார்த்து மாணவ குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் ஆர்வத்துடன் கேட்டார்கள்.

    ஆமாண்டா செல்லம்... ரொம்ப நாளாக பள்ளிக்கு லீவு கொடுத்து இருந்தாங்கல்ல... ... அதனால் தான் இப்படி என்று குழந்தைகளிடம் பதில் சொல்லி பள்ளிக்கு அனுப்பினார்கள் பெற்றோர்கள்.

    அழைத்து வந்த தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உறவினர்கள் என்று உடன் வந்தவர்களுக்கு முத்த மழை பொழிந்து உற்சாகமாக பள்ளிகளுக்குள் சென்றார்கள் மாணவர்கள்.

    வாங்க... வாங்க.. என்று அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினார்கள்.

    இப்படி அரசு பள்ளிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

     

    அன்னைக்கு அன்பு முத்தம் கொடுத்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி

    நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் கடந்த சில நாட்களாகவே வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.

    வகுப்பறைகள் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டும், வாசனை திரவியங்கள் தெளித்தும் கமகமத்தது.

    இருக்கைகள் சமூக இடைவெளியுடன் போடப்பட்டு இருந்தன. பெரும்பாலான பள்ளிகளில் வண்ண, வண்ண படங்கள் தொங்கவிடப்பட்டு இருந்தன. சுருக்கமாக சொல்வதென்றால் பள்ளிக்கு செல்கிறோம் என்ற உணர்வை மறந்து சுற்றுலா இடங்களுக்கு செல்வதை போல் மாணவ-மாணவிகள் உற்சாகமாக சென்றார்கள். வழக்கமாக மாணவ-மாணவிகள் அழுது அடம் பிடிப்பார்கள். வகுப்பறைகளுக்குள் சென்றதும் அவர்கள் வெளியே எழுந்து ஓடுவதை தடுப்பதற்காக ஆசிரியர்கள் கையில் பிரம்புடன் வகுப்பறைகள் முன்பு தயாராக நிற்பார்கள்.

    ஆனால் இன்று குழந்தைகள் அழுகையை மறந்து சிரித்து கொண்டு சென்றன. இது 2-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகள் நிலை.

     

    கடவுளே இனி மேல் கொரோனா வரக்கூடாது.

    முதல் முதலாக பள்ளிக்கு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இது புதுமையான அனுபவமாக தெரிந்தது. பள்ளிக் கூடம் என்றால் இப்படித்தான் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். தினமும் இப்படித்தான் வாசல்களில் நின்று வர வேற்பார்கள். ‘சாக்லேட்’ தருவார்கள் என்று நினைத்து கொண்டனர்.

    ஆன்லைன் என்று அவர்களின் சந்தோசத்தை ‘ஆப்’ பண்ணி வீடுகளுக்குள் முடக்கி போட்டிருந்தார்கள்.

    காலையில் எழுந்ததும் கொடுப்பதை சாப்பிட்டுவிட்டு செல்போன், கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தும், அம்மா, அப்பா நகர்ந்ததும் அதிலேயே கேம் விளையாடியும் ஜெயில்கள் போலவே வீடுகளில் முடங்கி கிடந்தார்கள்.

    கொரோனாவை விட கடுமையான நெருக்கடிக்குள் சிக்கி கிடந்த மாணவர்களுக்கு இன்று தான் விடுதலை. பெற்றோர்களுக்கும் இன்று தான் நிம்மதி. தமிழகம் முழுவதும் இந்த உற்சாகம் கரை புரண்டது.

    திருவள்ளூர் அரசு மேல் நிலைபள்ளியில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு திலகம் வைத்து பூக்கள் கொடுத்து வரவேற்றார்கள்.

    பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பள்ளியை சுத்தப்படுத்தி வாழை தோரணம் கட்டி வண்ண காகிதத்தால் அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளத்துடன் பூங்கொத்து இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தார். தலைமை ஆசிரியர் செல்வராஜ், சேர்மன் ராசாத்தி, செல்வசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோரும் வரவேற்றனர்.

    அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் வாழை மரம் கட்டி, நாதசுவரம் கெட்டி மேளம், முழங்க மாணவர்களை வரவேற்றனர். 4-ம் வகுப்பு மாணவன் கூறுகையில், ஒரு வரு‌ஷமா வீட்ல ஜாலியா இருந்தோம். இன்று முதல் பள்ளிகள் திறந்து உள்ளது. இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றான்.

    கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவர்களை எம்.பி. நடராஜன் பள்ளி வாசலில் நின்று கொண்டு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    மசக்காளி பாளையத்தில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பேண்ட் வாத்தியங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பொள்ளாச்சி அடுத்த பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கே சென்று மாணவர்களை மேளதாளத்துடன் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதற்குப் பிறகு பள்ளியில் மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு பாரம்பரிய இனிப்பு வகைகளான தேன் மிட்டாய், நிலக்கடலை பருப்பு போன்றவைகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

    வழக்கமாக பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது, கேள்வி கேட்பது என்று கடுமை காட்டி வந்த நிலையில் இன்று இனிப்பு தந்து, உபசரித்து வரவேற்பதை பார்த்த மாணவர்கள் பேரானந்தம் அடைந்தனர். பள்ளியில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பார்த்து பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×