search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  உடல் பருமன்
  X
  உடல் பருமன்

  உடல் பருமனை குறைக்க எளிய வழிமுறை- முனைவர் ப.வண்டார்குழலி இராஜசேகர்

  உடற்பருமன் என்பதும் அதிக உடல் எடை என்பதும் ஒரே அர்த்தத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும், இரண்டிற்கும் சிறிய அளவு வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிவதில்லை.


  மனித உயிரியல் கோட்பாடுகளுக்கும் மனிதனின் கலாச்சார செயல்பாடுகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு இணைப்புதான் மனிதனின் உடல்பருமன் நிலையும். இன்று அல்லது நேற்று ஏற்பட்டதல்ல உடற்பருமன். உடற்பருமனின் வரலாறு, ஏறக்குறைய 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துவங்குகிறது.

  கி.மு 800 காலத்தில், பண்டைய இந்தியாவின் அறுவைசிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் சுஸ்ருதரும், மதுமேகம் என்று நீரிழிவைப் பற்றிக் குறிப்பிடும்போது, உடற்பருமன் என்ற அறிகுறியுடன் தொடர்புடையது என்றுதான் கூறுகிறார்.

  மனித உடலின் நான்கு அடிப்படை திரவங்கள் (இரத்தம், மஞ்சள் பித்த நீர், கருப்புப் பித்த நீர், சளி) குறித்து விளக்கும் நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்டஸ், தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் உணவு, இந்த உயிர்த் திரவங்களையும் அதிகமாக்கி விடுகிறது. இவற்றைச் சமன் செய்வதற்கு உடற்பயிற்சி ஏதும் செய்யவில்லையெனில், நோய்கள் ஏற்படும் என்கிறார். ஒரு மனிதன் தனது சராசரி எடையைவிட அதிகமாக இருந்தால், அது அவனது உடல்உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையையேக் காட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

  ஐரோப்பாவில் 17 ஆம் நூற்றாண்டுகளில், உடற்பயிற்சி, தூய்மையான காற்று, காய்கள் சாப்பிடுதல் போன்றவைகளால் உடற்பருமனைக் கட்டுப்படுத்துவதுடன் தவிர்க்கவும் முடியும் என்று மக்கள் நம்பத் துவங்கினார்கள். இந்த உறுதியான நம்பிக்கையைத் தொடர்ந்து, உடற்பருமனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை உணர்ந்து, உடல் எடையைக் குறைக்கும் வழிகளைத் தேடத்துவங்கினார்கள்.

  இந்நிலையில், 18 ஆம் நூற்றாண்டில், ராணுவத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் ஜான் ரோலோ மற்றும் வில்லியம் பாண்டிங் என்பவர்களால் குறைவான கார்போஹைடிரேட், அதிக புரதம், குறைந்த கொழுப்பு உணவுகள் உடல்பருமனைக் குறைக்கும் எனக் கண்டறியப்பட்டது. இவர்களின் இந்த கண்டுபிடிப்பின் சாராம்சம்தான் தற்போது நாம் பயன்படுத்திவரும் ராபர்ட் சாலமன் அட்கின் என்பவர் 1960 ல் கண்டுபிடித்த அட்கின் உணவுமுறை .

  இந்த உணவுமுறையில் புரதம் அதிகமாக இருந்ததால், யூரிக் அமிலம் அதிகரித்து கவுட் என்னும் மூட்டுவீக்கம், சிறுநீரகக் கற்கள் போன்றவை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்ததால், அட்கின் உணவுமுறை மெல்ல மெல்ல மறையத்துவங்கியது. ஆனால், அதற்கு இணையான உணவுமுறைதான் தற்போது பரவலாகி, வணிகமாகி வரும் பேலியோ உணவுமுறை.

  இதில் புரதம் மற்றும் கொழுப்புணவை அதிகமாக்கி, கார்போஹைடிரேட்டை முழுமையாகத் தவிர்க்கும் நிலையில், சரிவிகித உணவுமுறை இல்லை என்று மருத்துவர்களும், சரியான உணவுமுறைதான் என்று பேலியோ சார்ந்தவர்களும் கூறிவரும் முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

  உலகளவில், ஆப்கானிஸ்தான், பிஜி, ஜமைக்கா, குவைத், தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் பழங்குடியின மக்களிடையே சிலருக்கு உடற்பருமன் இருந்திருக்கிறது என்ற சான்றுகள் இருக்கின்றன. இருப்பினும், அப்பெண்களிடையே உடற்பருமன் என்பது விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது.

  அளவுக்கு அதிகமான உணவும், உடலுழைப்பின்மையும் உடல் எடையை அதிகரித்தாலும், அது உடல்நலக் குறைவாகவோ அல்லது அசாதாராண நிலையாகவோ கருதப்படாமல், எவ்வித சிகிச்சையும், கட்டுப்பாட்டு முறைகளையும் பின்பற்றாமல், மகிழ்ச்சியுடன் ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம் என்பதையும் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். அதற்கு அவர்களின் பிற வாழ்க்கை முறையும், உணவும் உதவியிருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

  புகழ் பெற்ற மருத்துவரும், உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை நிபுணருமான ஹென்றி பக்வால்ட் பின்வருமாறு கூறுகிறார்.உடற்பருமன் ஏற்படுவதற்கு மரபியல் ரீதியான ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும் அவை பிரதான காரணிகள் இல்லை. மேலும், உடலுழைப்பு இல்லாத அல்லது மிதமான உடலுழைப்புடன் கூடிய வாழ்க்கை, துரித உணவுகள் அனைத்தும் இரண்டாம் வகைக் காரணிகள்தான் என்கிறார்.

  பிற கொள்ளை நோய்களில் ஏதோ ஒரு காரணி இருப்பதுபோல், பரவலாகிவரும் உடற்பருமனுக்கும் வேறொரு உறுதியான காரணம் இருக்கும். அது, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உயிரிச்சூழலில் ஏற்பட்ட பெரிய மாற்றமாகக் கூட இருக்கலாம். அல்லது, மனிதனால் தூண்டப்பட்ட அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட நோயியல் மற்றும் உயிரியல் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாகவும் இருக்கலாம் என்று கூறுகிறார்.

  இருபதாம் நூற்றாண்டில், உடல் பருமன் இருந்திருந்தாலும், எவ்வித கவலையும் இல்லாத ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள் என்ற ஒரு திடமான எண்ணம் பரவலாக இருந்தது. அப்போதும் ஒரு சில தீவிரமான நோய்நிலை தவிர, அதிக உடல் எடை என்பது மருத்துவத் துறையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படவில்லை.

  உடற்பருமன், உயர் இரத்த அழுத்தம் போன்றவை பணக்காரர்களின் வியாதிகள் என்றே அழைக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தத்திற்கு மட்டுமே சிகிச்சை எடுத்துககொள்ளப்பட்டது.

  உடற்பருமன் என்பதும் அதிக உடல் எடை என்பதும் ஒரே அர்த்தத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும், இரண்டிற்கும் சிறிய அளவு வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிவதில்லை.

  ப.வண்டார்குழலி இராஜசேகர்

  அறிவியலும், அது சார்ந்த கண்டுபிடிப்புகளிலும் அதிகரிக்கத் துவங்கிய 19 ம் நூற்றாண்டில், உடற்பருமன் என்பது கணக்கீடுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. மக்களுக்கு ஏற்படும் சில நோய்களுக்கும், அவர்களின் உடல் எடைக்கு ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்ற நோக்கத்தில், ஜாக்குஸ் க்யூலெட் என்பவர் கண்டறிந்ததுதான் பி.எம்.ஆர். முறை. இந்தக் கணக்கீடுதான் இன்றளவும் மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் என்று அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  ஒருவரின் உடல் எடையை, அவரின் உயரத்தின் இருமடங்கால் வகுத்து விடைகாண வேண்டும்.

  அந்த விடை 18 லிருந்து 25-க்குள் இருந்தால் சரியான உடல் எடை எனவும், 27-க்கு அதிகமானால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பளிக்கும் அதிக உடல் எடை எனவும், 30-க்கும் அதிகமானால், இன்னும் சில நோய்களையும் வரவழைக்கக்கூடிய உடற்பருமன் எனவும் வகைப்படுத்தப்பட்டது. இதன் பிறகுதான், மருத்துவச் சிகிச்சையில் உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது அல்லது உடல் எடை, உடற்பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகள் பரவத் துவங்கின.

  தற்போது, அதிக உடல் எடையும், உடற்பருமனும் மிகச் சர்வசாதாரணமாகிவிட்டது. இந்தியாவில் 2020 ஆண்டின் கணக்கெடுப்புப்படி, 135 மில்லியன் நடுத்தர வயதினரும், 5 வயதிற்குட்பட்ட 39 மில்லியன் குழந்தைகளும் உடற்பருமனுடன் இருக்கிறார்கள்.

  இதைப் பிரதானமான உடல்நலக் கேடாகவும், இதனால்தான் பிற தொற்றா நோய்கள் வருகிறது என்ற கருத்து வலுவாகியதாலும், பெருமளவில் மருத்துவத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்து அது சார்ந்த மருந்துகள், அறுவை சிகிச்சை, உணவுப்பொருட்கள், உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசனைகள், உடல் எடை குறைக்கும் தனியார் நிறுவனங்கள், என்று பெரும் வணிகமயமாகிக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

  கடந்த 2020 ல் 1,690 மில்லியன் டாலராக இருந்த உடல் எடை குறைக்கும் மருந்துகளின் சந்தை நிலவரம் 2026 ல் 4,250 மில்லியன் டாலராக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மேலும் பட்டுக்கம்பளம் விரித்திருக்கிறது தற்போது இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் கொரானாவும் அதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிய உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

  உடற்பருமன் மற்றும் அதிக உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. ஒன்று, பசியைக் குறைப்பது. மற்றொன்று, கொழுப்புணவுகளிலிருந்து கொழுப்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதைக் கடினமாக்குவது. இதில் நான்கு முதல் ஆறு மாத காலத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், நீண்டகாலத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உண்டு.

  மருந்து எடுத்துக்கொள்ளும் அனைவரும் சரியான உடல் எடைக்குத் திரும்பிவிட்டார்களா என்ன? சிலருக்கு உடல் எடை குறைந்தாலும் வேறேதேனும் நோய் வந்திருக்கிறது அல்லது, சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அதிகரிக்கும் உடற்பருமனுக்கு மருந்து நிறுவனங்களே கூறும் மூன்று பிரதான காரணங்கள், ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடலுழைப்பின்மை, உடற்பருமனால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் இருப்பது என்பவைதான்.

  வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்பதுபோல, சோம்பேறித்தனம் அதிகரிப்பதால், ரெடிமேட் உணவுத் தொழிற்சாலைகள் அதிகரிக்கின்றன. அவற்றால் நோய் அதிகரிப்பதால், மருந்து நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

  ஐக்கிய நாடுகளால் 2016-ல் உருவாக்கப்பட்ட, வளர்ச்சிக்கானக் குறிக்கோள்களின் வரையறையில், தொற்றா நோய்களும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளும் மிகப்பெரிய சவாலாக அமையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் மளமளவென்று உயர்ந்துவரும் உடற்பருமன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒவ்வொரு மாநில அரசும் 2030 ஆண்டுக்குள் தேசிய அளவிலான ஆக்கப்பூர்வமான பங்களிப்பைக் கொடுத்து, இவ்வகையான தொற்றா நோய்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கொடுக்க வேண்டும். உலகளவில் மனிதனின் உடலுழப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான கொள்கைகளையும் வகுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் கூறியிருக்கிறது.

  உடற்பருமனை அல்லது அதிக உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவசிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி அதனைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.

  உண்மையில், உடல் எடையைக் குறைப்பதற்கு மருந்துகளோ, அறுவை சிகிச்சையோ தேவையில்லை. கட்டுப்படுத்தமுடியாத பிற நோய் நிலையிலேயே மருந்துகள் அவசியமாகிறது.

  முறையான உணவுப் பழக்கம், இடைவேளை விட்டு உண்பது, சரியான நேரத்தில் உண்பது, ஒரு பங்கு முழு தானிய உணவும், அதற்கு இரண்டு மடங்கு காய்கள், கீரைகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்வது, அளவான தரமான கொழுப்புணவு, புரதச் சத்திற்கு மீன், முட்டை, பால், பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்வது,

  உடலை எப்போதும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பது, நிம்மதியான தூக்கம், மது, புகைப்பழக்கம் தவிர்ப்பது, ஆரோக்கியமான மனநிலை போன்றவற்றுடன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, விழிப்புணர்வுடன் செயலாற்றினால், உடல் எடை அதிகரிப்பு அல்லது உடற்பருமன் ஏற்படாது. அவ்வாறே வந்தாலும், இதே வழிமுறைகளைப் பின்பற்றியும் சரியான உடல் எடையுடன் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனைவரும் வாழலாம்.

  தொடர்புக்கு: kuzhaliarticles2021@gmail.com

  Next Story
  ×