search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்தினகிரி முருகன்
    X
    ரத்தினகிரி முருகன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - இனிமையான வாழ்வருளும் ரத்தினகிரி முருகன்

    ஞான மூர்த்தி, தண்டாயுதபாணி, ஞான பண்டிதன் என்று போற்றப்படும் பழனி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வழிபடும் கோவில், அதிக காணிக்கை வரும் கோவிலும் ஆகும்.

    “சத்தியம் என்பது என்ன?”
    முருகனே சத்தியம். அவனே அன்பு. அவனே உலகின் உணர்வுகளும்.
    நான் என்ற அகங்காரம் நீங்கி, நீயே சகலமும் என்று அடி பணிந்தால் அவனைக் காண முடியும். இடைவிடாத அவனின் நாமத்தி னால் முருகா என்று மனம் உருகி அழைக்க ஓடி வருகிறான் கந்தன்.

    சத்தியம் உணர்த்தும் தத்துவங்கள் அவனையே குறிக்கின்றன.
    ஆசாபாசங்களை அடக்கி, ஆணவத்தை அடக்க வேண்டும் என்றால் முருகனை நினைத்தால் போதும். அவைகள் தானே அடங்கி விடும்.

    “ஐந்துக்கு மேலொன்று ஆறு
    ஐந்தும் அடங்கியவாறு”- என்கிறார் அருணகிரியார்.
    ஐந்து பூதங்களும் அடங்குகின்ற பொழுது ஆறுமுகன் ஏனென்று கேட்பான்.
    அந்த ஐம்பூதங்களை அடக்கி வெற்றி கொள்ள அவனின் அருளே வேண்டும்.
    இதனையே கந்தரலங் காரத்தில் ஆறுமுகனோடு அழகிய பன்னிரண்டு தோள்களையும் கண்டு ஆனந்தித்தேன் என்கிறார். அவனின்  அழகிய ஆறு திருமுகங் களோடு பன்னிரண்டு தோள்களின் அமுதத் தைக் கண்டேன் என் கிறார். ஜீவனுடைய செயல்கள் கெட்டு, உயிர் ஒடுங்கும்போது, அறிவாகிய தாமரை மலரினைத் தாண்டி  கரை மீது புரளுகின்ற மேலான இன்பக் கடலில் முருகப் பெருமானின் அழகிய திருமுகங்கள் ஆறும், பன்னிரண்டு தோள் களும், தோன்றி இன் பம் அளித்தன என்கிறார்.
    முருகா என்று அவ னையே நினைத்து உருகி னால், ஜீவன் ஒடுங்கும் போது அவன் தோன்றி நம்மை ஆட்கொள்வான்.

    முருகனால் கிடைக் கும் பலன் என்ன? அவன் மிகவும் எளிமையானவன். கருணை உள்ளவன். அவனை அடைய தவமோ, புலன்களை அடக்க வேண்டியதோ இல்லை. முருகா என்று அவனைச் சரணடைந்தால் போதும். குறைவே இல்லாமல் நிறை வாய் இருப்பவன் அவன்.
    ஆண்டிக் கோலத்தில் நின்றாலும் அருள்வதில் வள்ளல் ஆகிறான் பழனியில். ஆறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு பழனி.

    ஆறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர்.
    நாரதர் கொடுத்த கனியைப் பெற இந்த உலகை மயில் மீது ஏறி சுற்றி வந்தார். அதற்குள் அம்மையப்பனைச் சுற்றி விநாயகர் அக்கனியைப் பெற்றுக் கொண்டார். அதில் கோபம் அடைந்த முருகன் இத்தலத்துக்கு வந்தார். அவரைச் சமாதானப் படுத்த அம்பிகையும், பின்னோடு ஈசனும் வந்தார்கள். ஆனால் முருகன் இங்கேயே இருக்க விரும்புவதாகக் கூறி விட்டார்.

    அப்போது பழத்தின் காரணமாக முருகன் இங்கு வந்ததால் பழம் நீ, நீயே ஞான வடிவானவன் என்று குறிப்பிட்டார் அவ்வையார். எனவேதான் இத்தலம் பழனி என்று அழைக்கப் பட்டது. மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சி அளிக்கிறான்.

    இங்கு முருகன் குழந்தை ரூபம் என்பதால் வள்ளி, தெய்வானை இல்லை. முருகன் சிவன் ரூபம் என்பதால், கருவறை சுற்றுச் சுவரில் தட்சிணாமூர்த்தியும், பைரவரும், சண்டிகேஸ்வரரும் இருக்கிறார்கள். திருஆவின ன்குடி குழந்தை வேலாயுதரைத் தரிசித்த பின்னரே மலை மீதுள்ள முருகனைத் தரிசிக்க வேண்டும்.

    தல விருட்சம் நெல்லி மரம். தீர்த்தம் சண்முக நதி. மலைகளில் கிடைக்கும் மூலிகைகள் நோயைத் தீர்க்கும். ஆனால் இங்கு ஒரு மலையே மருந்தாக இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ கவினுறும் காட்சிகளுடன் அமைந்துள்ளது பழனி.

    இக்கோவிலில் பழத்துக்காக முருகன் சினம் கொண்டு வந்ததையும், ஈசனும் அம்பிகையும் அவனைச் சாந்தப் படுத்தும் சிற்பங்களும் அழகாக வடிக்கப் பட்டுள்ளன. ஒருமுறை அகத்தியர் தன் சீடனான இடும்பனிடம் கைலாயம் சென்று சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்ற இரு சிகரங்களைக் கொண்டு வரப் பணித்தார்.

    இடும்பனும் தன் மனைவி இடும்பியுடன் சென்று அந்தக் குன்றுகளை ஒரு பெரிய பிரம்மதண்டத்தின் இருபுறங்களிலும், காவடியாகக் கட்டி தொங்க விட்டுக் கொண்டு வருகிறான். அப்போது முருகன் ஒரு அரசனாக வந்து திருஆவினன் குடியில் வந்து தங்கி இளைப்பாறிச் செல்லுமாறு கேட்க, இடும்பனும் அவ்விதமே செய்கிறான்.

    ஆனால் இறக்கி வைத்த காவடியை மீண்டும் தூக்க முடியவில்லை. அபோது முருகன் ஒரு சிறுவனாக ஆண்டிக் கோலத்தில் சிவகிரி குன்றின் மீது நிற்பதைக் கண்டான். இக்குன்று தனக்கே உரியது எனச் சிறுவன் வாதாட, இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.

    அதில் இடும்பன் வீழ்ந்து விட, அகத்தியரும், இடும்பியும் ஓடி வந்து சிறுவனைப் பணிந்து வணங்க, இடும்பன் உயிர் பிழைக்கிறான். அன்று முதல் இடும்பன் முருகனின் காவல் தெய்வமாக விளங்குகிறான். இடும்பனைப் போன்றே சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்றவற்றை வைத்து காவடி சுமந்து தன் சன்னதிக்கு வருவோர்க்கு எல்லாம் அருள் பாலிப்பதாக முருகன் அருள்கிறான்.
    முருகனை வணங்குவதற்கு முன் மலைப் பாதையில் உள்ள இடும்பனை வணங்கிச் சென்றால்  நம் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கும். பழனியில் கிரிவலம் மிகச் சிறப்பானதாகக் கருதப் படுகிறது. சேர மன்னர்களால் இக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஞான மூர்த்தியாக விளங்கும் முருகன் சித்தர்களுக்கெல்லாம் பெரிய சித்தன். எனவே சித்தனாதன் என்ற பெயரும் உண்டு. ஆறுமுகமும், ஆனந்தம் தர வல்லது என்கிறார் குமரகுருபரர்.

    ஆறுமுகத்தில் ஒரு முகம் அசுர சம்பத்துகளை அழிக்கிறது. ஒன்று ஊழ்வினைகளை அழித்து பேரின்பம் நல்வாழ்வு தருகிறது. அறியாமையை நீக்குவது ஒரு முகம்,வேதங்களில் தெளிவு பெறச் செய்கிறது மற்றொரு முகம். வள்ளி தெய்வானைக்கு ஆனந்தத்தையும், வேண்டும் வரங்களையும் மற்ற முகங்கள் அருள்கிறது.

    இதையே திருமுருகாற்றுப் படை “வெற்றி மிடுக்கோடு களவேள்வி  செய்து உலகத்தின் இருளை நீக்கி ஞானம் அழிப்பது சண்முகனின் ஆறுமுகம். ஏற்றது ஒருமுகம்.....ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே”என்கிறார் நக்கீரர். இந்த உலகத்தின் இருளை நீக்கி ஞானத்தை அருள்பவன் சண்முகன். ஞானமா மட்டுமல்லாமல் செல்வம், அறிவு, வீரம் என்று அனைத்தையும் அருள்பவன் கந்தன்.

    ஞான மூர்த்தி, தண்டாயுதபாணி, ஞான பண்டிதன் என்று போற்றப்படும் பழனி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வழிபடும் கோவில், அதிக காணிக்கை வரும் கோவிலும் ஆகும்.

    இக்கோவிலுக்கு பாத யாத்திரை செல்வது சிறப்பான வழிபாடாக கருதப் படுகிறது. இதன் சிறப்பை “விழுமிய பெறலரும் பாரிசில் பெறலாம்” என்கிறது திருமுருகாற்றுப்படை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், பாத யாத்திரையாக காவடி சுமந்து வந்து, தைப்பூச தினத்தன்று ஆண்டவனைத் தரிசிக்கும் வழக்கம், சங்க காலம் முதலே இருந்திருக்கிறது.
    ஆறுமுகம் என்றால் அனைத்து வினைகளும் ஓடி விடும் என்கிறது திருப்புகழ்.
    “ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம், ஆறுமுகம்
    ஆறுமுகம், ஆறுமுகம்- - - - - -என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய - தென்று நாளும்
    -சேருமழ கார்பழனி வாழ் குமரனே பிரம
    தேவரவர தாமுருகா -- - - - - - -தம்பிரானே.” என்கிறார்.
    முருகா, முருகா என்றும் ஆறுமுகா, ஆறு முகா என்றும் அழைத்தால் ஓடோடி வருவான் முருகன்.
    மற்றொரு பாடலில்.,
    அவனிதனிலே பிறந்து மதலை யெனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து- - - - - - -இளைஞனே என்று போற்றுகிறார்.
    பரம பதமே செறிந்த முருக னெனவே யுகந்து
    பழனிமலை மேலமர்ந்த - - - - - பெருமாளே என்று பாடுகிறார்.
    தன் பக்தர்களைக் காத்து ரட்சிக்கவே முருகன் தண்டாயுத பாணி யாக பழனியில் காட்சி அளிக் கிறான்.  முருகா என்றால் முப்பொழுதும் நம்மைக் காத்து நிற்கும் ஆறுமுகம் அவன். நம் மகிழ்ச்சியின் வாசலைத் திறக்கும் திறவுகோல் ஆறுமுகம் என்னும் நாமம்.  

    ஆனந்த மயமான ஆண்டவனை அடைய முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். மனதை இறைவனிடம் லயிக்கச் செய்ய வேண்டும் என்பதையே பழனியாண்டவன் உணர்த்துகிறான்.


    Next Story
    ×