search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனிமையான வாழ்வருளும் ரத்தினகிரி  முருகன்
    X
    இனிமையான வாழ்வருளும் ரத்தினகிரி முருகன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - இனிமையான வாழ்வருளும் ரத்தினகிரி முருகன்

    ரத்தினகிரி என்னும் பாலமுருகன் கோவில். கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன் அவ்வளவு பிரபலம் இல்லாத கோவிலாக இருந்த இந்த இடத்தை முருகன் தன் அருள் ஆடல் நிகழ்த்தும் இடமாகத் தேர்ந்தெடுத்தான்.
    முருகனுக்கு மிஞ்சியது வேறொன்றில்லை.
    இந்த உலகமே குகன் மயம். அவனே பிரம்ம சொரூபமாய் இருக்கிறான். அவன் மீதே எந்நேரமும் மனதில் காதல் கொள்ள வேண்டும். உலகில் அழியும் பொருள்கள் மேல் கொள்ளும் காதல் துன்பம் தருகிறது. ஆனால் அழியாப் பொருளான கந்தன் மேல் வைக்கும் காதலானது எண்ண, எண்ண இன்பம் அளித்து பேரின்ப வாழ்வு அருளும்.

    குமரன் தன் பக்தர்கள் மனதில் மட்டு மல்லாமல் தன்னை வெறுக்கும் சூரபத்மன் மனதிலும் இருக்கிறான். அவர்கள் உள்ளத்தில் உள்ள அகங்காரத்தைக் களைந்து தன்னுடன் ஈர்த்துக் கொள்கிறான்.

    கந்தன் ஐம்பூதங்களிலும் இருப்பது மட்டு மல்ல, அவற்றினால் உருவான உலகமாகவும் இருக்கிறான்.

    ஆறாறையும் நீத்ததன் மேல்நிலையைப்  பேறாவடி யேன் பெருமாறுளதோ  என்று அனுபூதியில் பாடுகிறார் அருணகிரி நாதர்.
    இந்த உடலாகிய கோவிலில் ஆன்மா வசிக்கிறது. இது முப்பத்தாறு தத்துவங்களால் கட்டப்பட்டது. இவை அனைத்திற்கும் மேலானவனாக கார்த்திகேயன் இருக்கிறான்.

    “சீறாவுலகம் சிதை வித்திமை யோர்
    கூறா உலகம் குளிர் வித்தவனே.” என்று முருகனின் தத்துவத்தைக் கூறுகிறார். தத்துவத்தின் தத்துவமாக உள்ளிருந்து நம்மை இயக்கும் அய்யன், ஒவ்வொரு தலத்திலும் அடியார்களின் குறை தீர்க்கும் அருமருந் தாகவும் காட்சி அளிக்கிறான். இனிமையான வாழ்வருளும் ரத்தினகிரியில் பால முருகனாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் காத்திருக்கிறான் முருகன்.

    வேலூருக்கு பதினைந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள கீழ்மின்னல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ரத்தினகிரி என்னும் பாலமுருகன் கோவில். கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன் அவ்வளவு பிரபலம் இல்லாத கோவிலாக இருந்த இந்த இடத்தை முருகன் தன் அருள் ஆடல் நிகழ்த்தும் இடமாகத் தேர்ந்தெடுத்தான்.

    1960-ல் ஒரு அரசு ஊழியர் முருகனைத் தரிசிக்க வந்தார். அர்ச்சகரிடம் கற்பூரம் காட்டச் சொல்ல அவர் இல்லை என்றார். ஊதுபத்தியாவது காட்டுங்கள் என்றதும் அதுவும் இல்லை என்றதும், “முருகா உனக்கே இந்தக் கதியா” என்று மயங்கி விழுந்தார்.

    முருகன் அவர் உள்ளத்தில் பிரசன்னமாகி அவரை தன்னிடம் ஈர்த்துக் கொண்டார். மயக்கம் தெளிந்து எழுந்த அவர் பின்னால் பால முருகனடிமை என்று அழைக்கப்பட்டார். கோவில் திருப் பணியே இனி என் முதல் பணி என்று மணலில் எழுதிக் காட்டியவர் தன் அரசுப்பணியைத் துறந்தார். அன்று முதல் பேசுவதை நிறுத்தி விட்டார். அவர் மூலம் குமரன் தனக்கென ஒரு கோவிலை ரத்தின கிரியில் அமைத்துக் கொண்டான். விழாக்கள், பூஜைகள் என்று அமைத்து பக்தர்களை தன்பால் ஈர்த்துக் கொண்டான் பால முருகன்.
    இங்கு மூலவர் பாலமுருகன் என்பதால் சூரசம்ஹாரம் இங்கு நடை பெறுவதில்லை. அர்த்தஜாமப் பூஜையின் போது பால்தான் நிவேதனம் செய்யப்படுகிறது.

    உற்சவர் சண்முகர். இவரது சன்னதி கல்லில் தேர் வடிவில் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். மலை அடிவாரத்தில் துர்க்கைக்கு தனிச் சன்னதி உள்ளது. நவராத்திரி, ஆடி வெள்ளி, ராகு காலத்தில், விசேஷ  நாட்களில் இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இங்கு வாராகிக்கு தனிச் சன்னதியும் உள்ளது.

    திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். காவடி எடுத்தல், பாலாபிஷேகம் செய்தல் என்று தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்கள்.

    பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலின் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.  சோழர் கள் ஆட்சிக் காலத்தில் உருவான கோவில் என்று கல்வெட்டுகள் கூறுகிறது.  ஆரம்பத்தில் நூறு சதுர அடி பரப்பளவில் கற்கோவிலாக செங்கல்லும், சுண்ணாம்பும் கலந்து கட்டப்பட்டிருந்தது கோவில்.  அதன் பிறகு பால முருகனடிமை சுவாமிகளால் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது. ரத்தினகிரி வாழ் முருகனே, இளைய வாராமரர் பெருமாளே” என்று அருணகிரியார் பாடியுள்ளார். தீர்த்தமாக ஆறுமுக தெப்பம் விளங்குகிறது.

    இத்தலத்து முருகனைப் பற்றி பல செய்திகள்   சொல்லப்படுகிறது. முருகனின் தீவிர பக்தையான ஒரு பெண்மணி தினசரி கோவிலுக்கு வந்து முருகனிடம் தனக்கு குழந்தை இல்லாத குறையை கண்ணீர் விட்டுக்  கூறி அழுவார்.

    ஒருநாள் அங்கு வந்த ஆடு மேய்க்கும் சிறு வன் ஒருவன் அவளின் அழுகைக்கு காரணம் கேட்க பக்தையும் கூறுகிறார். அச்சிறுவன் கோவிலில் இருந்த விபூதியை எடுத்து அவளிடம் கொடுத்து சுவாமியை வலம் வரும்படிக் கூறினான்.

    சுவாமியை வலம் வந்த அவர் அச் சிறுவனைக் காணாமல் வியப்படைந்தார். சில தினங்களிலேயே அவள் கருவுற்று, குழந்தை பிறந்தது. தன்னையே நம்பி வந்து குறைகளைக் கூறி முறையிட்ட பக்தைக்கு முருகனே நேரில் வந்து அருள் புரிந்த தலம் ரத்தினகிரி.

    இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடது புறம் நோக்கிய மயிலுடன் காட்சி அளிக்கிறார். இங்கு மகா சண்டியாக பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு அனைத்து பூஜைகளும் ஆறுமுகனைக் குறிக்கும் விதத்தில் ஆறாக அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு.

    ரத்தினகிரி முருகனை வேண்டினால் தீராத பிணிகளைத் தீர்ப்பான். கல்யாண வரம் தருவான். குழந்தைப் பேறு அளிப்பான். வேண்டுவன அனைத்தும் தந்து வாழ்வை இனிமை ஆக்குவான் கந்தன். அவனை பக்தியால் பலகாலமும் துதிக்கத் துதிக்க கந்தன் நம்மை கருணையுடன் நோக்குவான்.
    பக்தியால் யானுனைப் பலகாலும்
    பற்றியே மாதிருப்புகழ் பாடி,
    முத்தனா மாறெனைப் பெரு வாழ்வின்
    முத்தியே சேர்வதற்கருள்வாயே என்று
    முருகனைத் துதிக்கிறார்.
    உத்தமா தானசற் குணநேயா
    ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
    வித்தகா ஞானசத் திநிபாதா
    வெற்றி வேலாயுதப் பெருமாளே என்று பாடுகிறார் அருணகிரியார்.

    குழந்தையாக இருக்கும் குமரன் கூப்பிட்டதும் ஓடி வருவான். வேலூர் மாவட்டத்தில் ஒரு ரத்தினகிரி தவிர குளித்தலை அருகேயும் ஒரு ரத்தினகிரி உள்ளது. இங்குள்ள முருகனைக் குறித்துதான் திருப்புகழ் உள்ளது.

    அருணகிரிநாதர் இங்குள்ள முருகனைக் குறித்து பாடல்கள் பாடியுள்ளார். இத்துடன் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆயிரம் வருடங்கள் பழமையான ரத்தினகிரி முருகனும் சிறப்பு.

    இங்கு பாறையில் தானாகத் தோன்றிய சுயம்பு விநாயகர் காட்சி அளிக்கிறார்.  ஒருமுறை அசுரன் ஒருவன் சிவனை நோக்கி பல யுகங்கள் தவமிருந்து வரங்கள் பல பெற்று, தேவர்களைத் துன்புறுத்தி கொடுமைப் படுத்தினான். அசுரன்  இந்திரனைப் பிடிக்க வந்தபோது, அவனிடமிருந்து தப்பிக்க ஓடி வந்த இந்திரன் இங்குள்ள மலை யில் மறைந்து கொள்ள இடம் தேடினான். அப் போது முருகன் இந்திரனை தன் வாகனம் மயிலாக மாற்றிக் கொண்டார்.

    இந்திரனைத் தேடி வந்த அசுரன் அவரைக் காணாமல் திரும்பிப் போனான். பின் அவன் ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்டான்.

    இங்கு பூப்பறித்தல் என்னும் நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை நோற்பதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணை அமைகிறது.

    ஐப்பசியில் சிவனுக்குத் தான் அன்னா பிஷேகம் நடை பெறுகிறது. ஆனால் முருகன் சிவ அம்சம். அதன் அடிப்படையில் ரத்தின கிரியில் முருகனுக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது. இக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் அருங்கோண வடிவில் அமைந்துள்ளது.

    ரத்தினகிரியில் இருக்கும் முருகன்தான் ஆறுபடை வீடுகளிலும்  இருக்கிறான். எங்கெங்கு காணினும் முருகன் என்பதுபோல் காணும் இடம்தோறும் கந்தனே காட்சி அளிக்கிறான்.

    தெய்வக் குழந்தை வடிவில் வேற்படையுடன் திருச்செந்தூரில் எழுந்தருளி இருக்கும் கந்த பெருமானே! காமத்தில் சிக்கி அல்லல் படும் இந்த மாயையில் துன்பத்தில் உழலும் மனதை நீயே உன்பால் திருப்ப வேண்டும். அய்யனே உன்னுடன் இரண்டறக் கலந்து, பேரானந்த நிலையை அடையும் பாக்கியத்தை நீ அருள வேண்டும் என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார் வேண்டுகிறார்.

    கந்தனே நீயே உன் அருளால் ஆனந்தப் பெரு நிலையை அளிக்க வேண்டும் என்றே அடியார்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. முருகா என்னும் நாமமே நம்மைக் காக்கும் வேலாயுதமாக முன் நிற்கிறது.

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்:
    வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்-நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    முருகா என்று ஓதுவார் முன் என்கிறார் நக்கீரர்.

    அச்சம் தோன்றுமிடத்தில் ஆறுமுகம் தோன்றி ஆறுதல் அளிக்கும். மனப் போராட் டத்தின்போது அஞ்சேல் என்று அவன் வேல் வந்து அமைதி தரும். அவனின் அடியார்கள் ஒருமுறை அழைத்தாலே போதும், ஓடி வந்து அவன் திருவடித்தாமரைகளில் இணைத்துக் கொள்வான்.

    முருகா எனும் நாமத்தை இடைவிடாமல் ஜெபிப்பவர்களுக்கு அனைத்து இடையூறு களையும் நீக்கி அருள் புரிவான் கந்தன் என் கிறது திருமுருகாற்றுப்படை.

    Next Story
    ×