search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பித்ரு  வழிபாட்டால்  தோஷம்  விலகும்
    X
    பித்ரு வழிபாட்டால் தோஷம் விலகும்

    பித்ரு வழிபாட்டால் தோஷம் விலகும் - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    வினைகளால் வரும் பிரச்சினைகளில் இருந்தும்,இடையூறுகளில் இருந்தும் ஒருவர் விடுபட பித்ருக்கள் வழிபாடு மிக முக்கியம்.
    பூமியில் உள்ள பிறவிகளிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம்.

    அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். பிறப்பு முதல் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவகம்  என்னும் பாக்கியஸ்தானத்தாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்கிய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடையே பித்ருக்கள் பூஜை.

    நம் கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறு இருக்க  பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம்.

    உடலை இயக்குவது உயிர். உயிரை இயக்குவது ஆன்மா. ஆன்மாவின் பலமே உயிரை இயக்கும். உயிரின் பலமே உடலை இயக்கும். ஆக ஒரு ஆன்மா இயங்க உடலும், உயிரும் தேவை. உயிர் பிரிந்தவுடன் உடல் அழிக்கப்படுகிறது. ஆனால்  ஆன்மா தன் அடுத்தகட்ட பயணத்திற்குத் தயாராகிறது.

    ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாகம் என்பது ஆன்மா.ஜென்ம லக்னம் என்பது உயிர். ஜென்ம ராசி என்பது உடல். சுருக்கமாக ஐந்தாமிடம் இல்லை எனில் லக்னம், ராசிக்கு வேலை இல்லை. ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுக்க தந்தையே மூல காரணம்.

    லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்கும் இடமாகும். ஒரு ஆன்மாவிற்கு உயிர் கொடுத்த தந்தையும் உடல் கொடுத்த தாயும் கடவுளுக்கு சமமானவர்கள்.

    ஒன்பதுக்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடம் என்பது தந்தைக்கு தந்தையான பாட்டனாரைக் குறிக்கும். ஐந்தாமிடம் என்பது ஒருவரின் தெய்வ அனுக்கிரகத்தைப் பற்றிக் கூறும் இடம் என்பதாலும், பாட்டனாரைக் குறிக்கும் இடமாக ஐந்தாமிடம் வருவதாலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள்  தெய்வத்திற்கு சமமானவர்கள்.

    இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது. ஐந்தாமிடம் என்பது ஒருவரின் ஆன்மாவைக் குறிக்கும். ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவே மனிதப் பிறவி. மனிதன் தன் வாழ்நாளில் அனைத்து சுபப் பலன்களையும் அனுபவிக்க ஜாதகத்தில் ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் (பிராப்தம்), ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் (கொடுப்பினை), லக்னம் (விதி) நன்றாக இருக்க வேண்டும்.

    ஆக  வினைகளால்  வரும் பிரச்சினைகளில் இருந்தும், இடையூறுகளில் இருந்தும் ஒருவர் விடுபட பித்ருக்கள் வழிபாடு மிக முக்கியம். அதாவது தன் குலத்தில் தோன்றிய வாரிசுகளைக் காப்பாற்றும் சக்தி படைத்தவர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

    தந்தை வழி மரபணுவைப் பெற்று இயங்கும் ஒரு மனிதன் தனது முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடைந்து முக்தி அடையவோ அல்லது மறு பிறப்பெடுக்கவோ உரிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு ஆன்மசாந்திக்கு உதவும் தனது வாரிசுகளை இறந்த முன்னோர்கள் வாழ்த்தும் போது ஜனன கால ஜாதகத்தில் உள்ள ஐந்து மற்றும் ஒன்பதாமிடக் குற்றம் நீங்கி ஜாதகருக்கு பாக்கிய ஸ்தானம் வலிமை பெறும் என்பதால் பித்ருக்கள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்யும் மனிதர்கள் தாம் செய்ய வேண்டிய பித்ரு கடமையை தவறவிடுகிறார்கள் அல்லது அதில் ஈடுபாடு காட்டுவதில்லை.

    முறையாக பித்ருக்கள் வழிபாட்டு பூஜை செய்தால், ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் அகன்று விடும். அவசரகதியான உலகில் பொருள்பற்று மிகுதியானதாலும் பொருளாதாரமே  வாழ்வாதாரம் என்ற  நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் பலர் ஆன்மாவை வலிமைப்படுத்தும்   பித்ருக்கள் பூஜையை மறந்து வாழ்கிறார்கள்.

    ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?
    ஒருவரின்  ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 9 ஆகிய இடங்களில் ராகு/கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகமாகும்.

    ஜனன ஜாதகத்தில் சூரியன்,  சந்திரன் கிரகண தோஷத்தை தரும் ராகு&கேதுவுடன் இணைந்து நிற்பது, சூரியனும், சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது,  ராகு&கேதுக்கள் சூரியன், சந்திரன் சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

    லக்னத்திற்கு ஒன்பதாமிடத்து அதிபதியும் ஐந்தாமிடத்து அதிபதியும் சேர்ந்து 1,5,9ல் ஒன்றாக நின்றாலும் பித்ரு தோஷத் தாக்கம் இருக்கும்.

     ஒருவருக்கு பித்ருக்கள் சாபம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதன்படி திதி மற்றும் முன்னோர் வழிபாட்டை மனதால் ஒன்றாமல் கடமைக்காகச் செய்வது.  அல்லது முன்னோர் வழிபாடே செய்யாமல் இருப்பது.
    தந்தை, பாட்டன் எதுவும் சேர்த்து வைக்கவில்லை என இறந்தவர்களை பழித்துப் பேசுவது...
    வாழும் காலத்தில் வயதான பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் அவர்களை உதாசீனம் செய்வது...
    ஒருவர் தன் உயிரைத்  தானே முடித்துக் கொள்ளும் வகையில் அவரது ஆன்மாவைத் துன்புறுத்துவது...
    இறந்தவர்களின் உடலை முறையாக அடக்கம் செய்யாத குற்றம்...
    இறந்தவரின் உடலுக்குரிய மரியாதையைச் செய்யத்தவறுவது...
    இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு அவரின் தீய குணங்களை விமர்சிப்பது ...
    இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்  முன்பு பங்காளிகள் சண்டையிடுவது...
    இறந்த ரத்த பந்த உறவுகளின்  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இருப்பது அல்லது  இறுதிச் சடங்கிற்கு உதவாமல் இருப்பது அல்லது உரிய காரியங்களை செய்யத் தவறுவது... (மொட்டை யடித்தல் போன்றவை) பித்ருக்களின் சாபத்தைப் பெற்றுத்தரும்.
    இந்த ஜென்மத்தில் ஒருவர் செய்யக்கூடிய பாவ, புண்ணியங்களுக்கு தகுந்த வகையில் தான் மறுபிறவி அமையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கர்ம பலன்களை குறைத்து சுப பலன்களை மிகைப்படுத்தும் சக்தி திதிகளுக்கு உண்டு. அதனால் தான் நமது ஜோதிட முன்னோடிகள் திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்று கூறியுள்ளார்கள்.பிறவிப் பிணியில் இருந்து விடுபட்டு நற்கதியடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபாயங்களில் ஒன்றே அமாவாசை திதி நாட்களில் கடைபிடிக்கப்படும் பித்ருக்கள் பூஜையாகும். பிரதமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது.

    சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். அமாவாசை திதியன்று சூரியனும்,சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் என்பதால் அமாவாசை வழிபாடு  சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    துன்பங்களில் இருந்து விடுபட இறந்த முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுப்பதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கால சூழல் காரணமாக திதி கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

    எந்திரத்தனமான வாழ்க்கையில்  பிரபஞ்ச சக்தியை உணராமல்  சக  மனிதர்களை மதிக்காமல் சுய நலத்துடன்  இறை நம்பிக்கையைத் துறந்து, பொருள் பற்றுடன் வாழ ஆரம்பித்த காரணத்தால் இயற்கை கொரோனா ரூபத்தில் மக்களைத்  துன்புறுத்தி வருகிறது.  மக்கள் அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய கடுமையான போராட்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகி விட்டது. உலக இயக்கமே ஸ்தம்பித்துள்ளது.

    அதனால் தான் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நெருங்கிய ரத்த பந்த உறவுகளுக்குரிய கர்ம காரியங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. பித்ருக்களின் சாந்தி வழிபாட்டைச் செய்ய முடியவில்லை என்பது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை அனுபவிக்கும் சூழல் உருவாகி விட்டது. உலகின் பல்வேறு இடங்களில் இயற்கையை சாந்தப் படுத்தும் பல்வேறு யாகங்கள் செய்தும் நோய்த் தாக்கம் குறைந்தபாடில்லை. மக்களுக்கு  ஆயுள் பயம் அதிகரித்து விட்டது. இதிலிருந்தே உலகில் பாவ காரியங்கள் மிகையாக உள்ளதை நம்மால் அறிய முடியும்.

    இதற்குத் தீர்வு தான் என்ன என்று யோசித்தால், பாவச் சுமைகளைக் குறைத்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும் சக்தி மகாளய அமாவாசை வழிபாட்டிற்கு இருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு மாபெரும் புண்ணியம் பெற்றுத் தரும் மகாளய பட்ச அமாவாசை  ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி 19-ந் தேதி 5.10.2021 (செவ்வாய் கிழமை)   இரவு 7.05 முதல்  புரட்டாசி 20-ந் தேதி 6.10.2021 (புதன் கிழமை) மாலை 4.35 வரை இருக்கிறது.

    கொரோனா தாக்கத்தை குறைக்க அரசின் சட்ட திட்டங்களை மதித்து வீட்டிலேயே முன்னோர் களுக்குரிய பித்ருக்கள் பூஜை செய்வதுடன், பிரபஞ்ச சக்திகளை வணங்கி, உற்றார் உறவினர்களுடன் நட்பு பாராட்டி,  துறவிகள், தவசிகள், ஞானிகளை வழிபட்டு, சக உயிர்களுக்கு இயன்ற தான, தர்மம் செய்து பாக்கிய பலன்களைப் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.   முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும்,  சாந்தியடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் ஒவ்வொரு வரும் தங்கள் ராசிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள எளிய தான தர்மங்களைச் செய்து  பித்ருக்களின் நல்லாசியைப் பெறுவது முக்கிய கடமையாகும்.

    மேஷம்:- தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி  வரும்.

    ரிஷபம்:- முதியவர்களைப் பராமரிக்கும் இல்லங் களுக்கு உணவு, உடை தானம் தர பெரியோர்களின் நல்லாசி கிடைக்கும்.

    மிதுனம் :-  நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை முன் னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வார்கள்.
     
    கடகம்:- விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தினால் உங்களின் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.

    சிம்மம்:- அசைவ உணவை தவிர்த்து  சிவாச் சாரியார்களுக்கு உணவு, உடை, ஆடை தானம் தந்து ஆசி பெற்றால் பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும்.

    கன்னி:-கஷ்டங்களில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது  முன்னோர்களின் நல்லருளை பெற்றுத்தரும்.
     
    துலாம் :-  துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுச் சாப்பாடு தண்ணீருடன்  தானம் தந்தால் மன நிம்மதி நிலைக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறும்.

    விருச்சிகம்:- சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, நாட்டுச் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுகளில் தூவ, வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது  பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.

    தனுசு:- குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புத்தாடையுடன் இட்லி,எள்ளு சட்னியுடன் தண்ணீரும் தானம் தந்தால் முன்னோர்களின் நல் ஆசி கிட்டும்.
     
    மகரம்:- சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணை வாங்கி தந்து பராமரிப்பு இல்லாத கோவில் களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவினால் கர்ம வினை நீங்கும்

    கும்பம்:- சாலை ஒரங்களில் ஆதரவின்றி அல்லல் படுபவர்களுக்கு  பெட்சீட், காலணி கொடுத்து உதவினால் முன்னோர்கள் ஆசி தேடி வரும்.

    மீனம்:-அந்தணர்களுக்கு வஸ்திரத்துடன் பச்சை காய்கறிகள், அரிசி, பருப்பு  தானம் தர வினைப்பயன் தீரும்.

    இவை எதுவுமே செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை  விமர்சனம் செய்யாமல்  அவர்களின் ஆன்ம சாந்திக்கு மானசீக வழிபாடு செய்தாலே பெரும் புண்ணியம் கிட்டும். நன்மை தரக்கூடிய தான, தர்மம், பித்ரு காரியங்களை யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர்கள் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். ஏன் மனித ரூபத்தில் நமக்குப் பக்கத்திலேயே கூட இருக்கலாம். அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ, உயர்ந்ததாகவோ இருக்கலாம். நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் வழிபாடு அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும்.தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.

    மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இந்த உலகத் துன்பம் தீர உதவும். அன்று ஒட்டு மொத்த முன்னோர்களையும்  நினைவு கூர வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு வழிபாட்டை செய்வது நல்லது.
    Next Story
    ×