search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணை தெய்வம் காஞ்சி மகான்
    X
    கருணை தெய்வம் காஞ்சி மகான்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

    கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குள் மகா பெரியவா தங்கி இருந்தார்.பெரியவா வெளியே வரும்வரை காத்திருந்து அவரைத் தரிசிக்கப் பொறுமை இல்லாத கிராமத்து மக்கள், பக்திப் பரவசத்துடன் கோயிலுக்குள் நுழைந்தனர்.

    கோயிலுக்குள் இருந்த பெரியவாளைத் தரிசித்துத் தங்கள் காணிக்கை மூட்டைகளை வழங்கினார்கள்.அத்தனையும் அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள் இத்யாதிகள்.எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தார். பிறகு, ஆலயத்தில் இருந்து புறப்படும் விதமாக எழுந்தார்
    பெரியவா.

    அனைத்து மூட்டைகளையும் வண்டியில் ஏற்றலாம் என்று சிப்பந்திகள் மூட்டைகளின் அருகே சென்றனர்.
    பெரும் குரல் கொடுத்து ‘‘என்ன பண்ணப் போறேள்?’’ என்று சிப்பந்திகளைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.
    ‘‘இந்த மூட்டைகளை எல்லாம் வண்டில ஏத்தப் போறோம் பெரியவா...’’ - ஒரு தொண்டர் பவ்யமாகச் சொன்னதைக் கேட்ட பெரியவா முகம் சுளித்தார்.
    பெரியவாளின் இந்த முக மாற்றம் கண்டு பயந்து போனார்கள் தொண்டர்கள். காரணம், அவர்களுக்கு இது புதிய அனுபவம்.
    ஏன் பெரியவா முகம் சுளித்தார்?
    ‘‘கூடாது... இதுல ஒரு மூட்டையக்கூட நாம வண்டில - நம்ம தேவைக்கு எடுத்துண்டு போகக் கூடாது. ஒரு கைப்பிடி அரிசியைக்கூட எடுத்துக்கக் கூடாது.’’
    பெரியவா சொன் னதைக் கேட்டு சிப்பந்திகள் குழம்பினார்கள்.
    ‘என்னது... இது வரைக்கும் இல்லாத வழக்கமா ஏதோ புதுசா சொல்றாளே பெரியவா... சாதாரணமா பெரிய வாளுக்குக் காணிக்கையா வர்ற பொருட் களை ஸ்ரீமடத்து தேவைகளுக்குப் பயன்படுத்தறதுதானே வழக்கம்... ‘இதுல எதையும் தொடக் கூடாது’னு சொல்றாரே?’ - பெரியவா சொன்னதன் உட்பொருள் புரியாத சிப்பந்திகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் விநோதமாகப் பார்த்துக் கொண்டனர்.
    ஒரே ஒரு சிப்பந்தி மட்டும் பெரியவாளிடம் தைரியமாகக் கேட்டார்: ‘‘ஏன் பெரியவா இதை நாம எடுத்துண்டு போகக் கூடாது. நமக்கு இல்லேன்னா இதெல்லாம் யாருக்கு?’’
    ‘‘ஏண்டா... நாம இப்ப எங்கே இருக்கோம்?’’ - பெரியவா கேட்டார்.
    ‘‘சிவன் கோயில்ல இருக்கோம்.’’ - கேள்வி கேட்ட சிப்பந்தி சொன்னார்.
    ‘‘சிவன் கோயில்லேர்ந்து ஏதாவது பொருளை நாம எடுத்துண்டு போகலாமோ?’’ என்று கேட்டார் பெரியவா.
    கேள்வி கேட்ட தொண்டர், ‘‘கூடாது பெரியவா... மன்னிச்சிடுங்கோ’’ என்றார், நமஸ்கரித்து.

    காரணத்தை அனைவருக்கும் புரியும் விதமாகப் பெரியவா சற்றே விளக்கமாகச் சொன்னார்: ‘‘ஒருவேளை நாம கோயிலுக்கு வெளியே இருக்கும்போது கிராமத்துக்காராள்லாம் இந்த மூட்டைகளை நம்மகிட்ட சேர்த்திருந்தானு வெச்சுக்கோ... நாம எடுத்துண்டு போறதுல எந்த கேள்வியும் இல்லே. நாம கோயிலுக்குள்ளே இருக்கறப்ப இவா கொண்டு வந்து மூட்டை மூட்டையா சேர்த்துட்டா. இவை அத்தனையும் சிவன் கோயிலுக்குள்ளே வந்துட் டதால, சிவன் சொத்தாயிடுத்து. சிவன் சொன்ன நாமளே அபகரிக்கலாமா? ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்ல நாமளே எடுத்துண்டு போகலாமோ? அந்த அபசாரம் நமக்குத் தேவையா?’’
    இப்போதுதான் சிப்பந்தி களுக்குக் காரணம் புரிந்தது -சிவன் கோயிலுக்குள் இருந்து இந்த மூட்டைகளை ஸ்ரீமடத்தின் தேவைக ளுக்கு எடுத்துச் செல்வது நியாயமல்ல என்று.

    ஆலய குருக்களை அருகே அழைத்தார் பெரியவா.
    குருக்கள் ஓடி வந்து பெரியவா முன் பவ்யமாக நின்றார்.
    அங்கே குவிக்கப்பட்டிருந்த மூட்டைகளைக் காண்பித்து, ‘‘இந்தக் காணிக்கை எல்லாம் சிவனுக்கு சேர்ந்தது. கோயில்ல பிரதோஷம், விசேஷம்னா பயன்படுத்திக்குங்கோ. காய்கறில்லாம் வீணா போறதுக்குள்ள சமைச்சு கிராமத்துல இருக்கிறவாளுக்கு அன்னதானம் பண்ணுங்கோ’’ என்று சொன்ன பெரியவா, குருக்களுக்கு மரியாதையையும் ஸ்ரீமடத்தின் சார்பாக செய்தார்.
    ஒருவேளை அந்த சிவபெருமானே, தனக்கு இவையெல்லாம் தேவை என்று இந்த நடமாடும் தெய்வத்தை ஆலயத்தினுள் வரவழைத்திருக்கிறான் போலிருக்கிறது.சிவபெருமானை மீண்டும் ஒரு முறை வணங்கி விட்டு, ஆலயத்தை விட்டு வெளியே வந்தார் பெரியவா. ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் நடக்க ஆரம்பித்தனர் தொண்டர்கள். யாத்திரை தொடர்ந்தது.

    மகா பெரியவா 100 வயது வரை வாழ்ந்தார். அவருடைய இறுதி நாட்களில் முதுமை காரணமாக சிற்சில உபாதைகள் அவ்வப்போது தலைதூக்கின. மற்றபடி கடைசிவரை நடமாட்டத்துடனும், தரிசிக்க வருகின்றவர்களுக்கு ஆசிகளை வழங்கியபடியும்தான் இருந்தார்.

    அது 1992-ம் வருடம். மகா பெரியவாளுக்கு வயது 98.

    பெரியவா காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார்.காமாட்சி அம்மன், வரதராஜர், ஏகாம்ப ரேஸ்வரர் போன்ற ஆலயங்களில் ஏதேனும் விசேஷத் திருவிழா என்றால், சம்பந்தப்பட்ட ஆலயத்தில் இருந்து உத்ஸவர் விக்கிரகம் புறப்பட்டு குறிப்பிட்ட வீதிகளை வலம் வரும். இந்த வலத்தின் ஒரு பகுதியாக காஞ்சி ஸ்ரீமடத்தின் வாசலுக்கும் உத்ஸவர் விக்கிரகம் வந்து அங்குள்ள பீடாதிபதிகளுக்கும், பக்தகோடிகளுக்கும் தரிசனம் தருவது தொன்றுதொட்ட வழக்கம்.

    அப்போது சின்ன காஞ்சிபுரத்தில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது (வரதராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிற பகுதி - சின்ன காஞ்சி என்றும், ஸ்ரீமடம் இருக்கிற பகுதி - பெரிய காஞ்சி என்றும் அழைப்பர்). விழாவின் ஓர் அங்கமாக வரதராஜப் பெருமாள் உத்ஸவர், சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீமடம் அமைந்துள்ள பெரிய காஞ்சிபுரத்துக்கு வந்தார்.

    பெருமாள் வருகிற வழியெங்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காஞ்சியில் இருக்கிற பக்தர்கள் இந்த வலத்தில் கலந்து கொண்டு ‘வரதா... வரதா...’ என்று பெருமாளைத் துதித்தபடி வந்தனர். காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை உத்ஸவத் தின்போது புகழ்பெற்ற மூன்று மடங்களுக்கு ஆலயத்தின் சார்பில் மரியாதை தரப்படும்.

    வானமாமலை மடம், அகோபில மடம், காஞ்சி மடம். இவையே அந்த மூன்று மடங்கள். அந்த வகையில் வரதராஜப் பெருமாள் உத்ஸவர் விக்கிரகம் காஞ்சி ஸ்ரீமடத்தை வந்த டைந்தது. ஸ்ரீமடத்தின் எதிரே அமைந்துள்ள கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகே அருள்மிகு வரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ‘வரதா... வரதா...’ என்று பக்தர்கள் உணர்ச் சிவசப்பட்டு பெருமாளைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்த வண்ணம் காணப்பட்டனர்.

    ஸ்ரீமடத்தின் வாசலில் வரதன் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. யார் உதவியையும் நாடாமல் தன் ஆசனத்தில் இருந்து எழுந்தார் பெரியவா. தண்டத்தை சுமந்து கொண்டு தட்டுத் தடுமாறி வெளியே வந்தார்.

    ஸ்ரீமடத்தின் வாசலில் ஓரிடத்தில் தட்டி போட்டு மறைக்கப்பட்டு ஒரு சிறு கொட்டகை காணப்பட்டது. அதற்குள் நுழைந்தார் பெரியவா.

    மறைப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளைத் தன் கையால் மெள்ள விலக்கினார். கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடியின் வழியே வரதராஜப் பெருமாளை ஆனந்தமாகத் தரிசித்தார்.

    ‘என்னது... இத்தனை பெரிய ஸ்ரீமடத்தின் ஒரு பீடாதிபதி ஏன் இடுக்கு வழியே தரிசிக்க வேண்டும்? துணைக்கு எவரையும் அழைத்துக் கொள்ளாமல் கூட்டத்தினரிடையே இப்படி மறைந்திருந்து ஏன் தரிசிக்க வேண்டும்?’ என்கிற சந்தேகக் கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றன அல்லவா?
    பெரியவா எதைச் செய்தாலும், ஒரு காரண காரியத்தோடுதான் செய்வார்.
    துறவிகளுக்கு எது முக்கியம்?
    அவர்களது மடி - ஆசாரம்!

    வயதான காரணத்தாலும், ஆசாரம் மடி கெட்டு விடக் கூடாது என்பதாலும், இந்தக் கூட்டத்தில் உள்ளே நுழைந்து போய் தரிசிப்பது சிரமம் என்பதாலும்தான் இப்படி மறைந்திருந்து வரதராஜப் பெருமாளைத் தரிசித்தார்! ஒருவேளை தொண்டர் களோடு வெளியே போய்... எவரேனும் தப்பித் தவறி பெரியவா மீது பட்டு விட்டால், அவரது ஆசாரத்துக்கு பங்கம் ஏற்பட்டு விடும்.

    பெரியவா வெளியே வந்து இப்படிக் கஷ்டப்பட்டு நின்று கொண்டு வரதரைத் தரிசிப்பது பலருக்கும் தெரியாது.

    அந்த வேளையில் ஒரு அன்பர், வரதராஜப் பெரு மாளைத் தரிசித்து விட்டு, பெரியவாளைத் தரிசிப்பதற்காக ஸ்ரீமடத்தினுள் நுழைந்தார்.

    உள்ளே நுழைகிற வேளையில் கொட்டகைக்குள் தன்னந்தனியே நின்று கொண்டிருக்கிற பெரியவாளைப் பார்த்து விட்டார். பிரமிப்புடன் அருகே சென்று - உரிய தொலைவில் நின்று வணங்கினார். தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார்.

    அவர் பெயர் - டி.சி.ஏ. ராமானுஜம். சின்ன காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர். வருமான வரித்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர்,

    உள்ளூர்க்காரர் என்பதால், ராமானுஜத்தை பெரியவாளுக்கு நன்றாகவே தெரியும். தட்டி வைத்து மறைக்கப்பட்ட ஓரிடத்தில் கஷ்டப்பட்டு வரதராஜப் பெருமாளை பெரியவா தரிசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்துப் போனார் ராமானுஜம்.

    ‘‘பெரியவா... ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு தரிசனம் பண்ணிண்டு இருக்கேள்... ஸ்ரீமடத்து வாசலுக்கே வந்த பெருமாளை, அவர் கிட்டக்கப் போய் தரிசனம் பண்ணலாமே?’’ என்று பவ்யமாகக் கேட்டார் ராமானுஜம். பெரியவா குரலில் ஒரு தழுதழுப்புடன் சொன்னார்: ‘‘கிட்டக்கப் போய் தரிசனம் பண்ணணும்னுதான்டா எனக்கும் ஆசை. ஆனா, யார் என்னை அங்கே கூட்டிண்டு போவா? என்னால ஒண்டியா போக முடியாது.’’ வரதராஜப் பெருமாளை அருகே சென்று தரிசிக்க பெரியவா மனதில் ஆசை இருந்தும், அது கைகூடாமல் இருக்கிறதே என்று கவலைப்பட்ட ராமானுஜம் அடுத்து ஒரு காரியம் செய்தார்.
    Next Story
    ×