search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...படம் வேறு, பாபா வேறு அல்ல

    அந்த காலத்தில் மட்டுமின்றி தற்போதும் கூட பாபா தனது உருவப்படங்களில் வாழ்வதை ஆங்காங்கே வெளிப்படுத்தி வருகிறார்.
    பாபாவை நேரில் சந்திக்காமல் படங்களில் மட்டுமே வழிபட்டு அருள் பெற்றவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

    சில பக்தர்களுக்கு படத்தில் இருப்பதை அவர் நிரூபித்தும் காட்டி இருக்கிறார். இதன்மூலம் பாபா வேறு, அவர் உருவப்படம் வேறு அல்ல. இரண்டு அம்சமும் ஒன்றே என்பது உறுதியாகிறது. சாய்பாபா படத்தை தரிசனம் செய்வது அவரை நேரில் தரிசனம் செய்வதற்கு சமமாகும்.

    அந்த காலத்தில் மட்டுமின்றி தற்போதும் கூட பாபா தனது உருவப்படங்களில் வாழ்வதை ஆங்காங்கே வெளிப்படுத்தி வருகிறார். சாய்பாபா படத்தில் இருந்து பூ விழுதல், சந்தன மழை பெய்தல், விபூதி வருதல், நெய் வழிந்தோடுதல் போன்ற அற்புதங்களை செய்து வருகிறார்.

    சமீபத்தில் சேலத்தில் ஒரு சாய் பக்தையின் வீட்டில் இருக்கும் பாபா படத்தில் இருந்து எடுக்க எடுக்க விபூதி வந்து கொண்டே இருந்தது. சமூக வலைதளங்களில் அந்த காட்சி வைரலாக பரவியது.

    சேலத்தில் மட்டுமின்றி மதுரை, தருமபுரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களிலும் பக்தர்களின் வீடுகளில் உள்ள பாபா படங்களில் திடீர் திடீர் என்று மாற்றங்கள் ஏற்பட்டன. இவற்றையெல்லாம் பாபா தனது படங்களில் இன்றும் வாழ்வதற்கு உதாரணமாக கொள்ளலாம்.

    சென்னையிலும் கூட விபூதி சாய்பாபா ஆலயம் உள்ளது. அங்குள்ள பாபா படத்தில் இருந்தும் அவர் அற்புதங்கள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் வாழ்ந்த காலத் திலும் அவர் தன் புகைப்படத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத் ததற்கு எத்தனையோ உதார ணங்கள் உள்ளன. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

    மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரி ஆப்பா சாகேப் குல்கர்னி. இவர் ஒரு தடவை கடை ஒன்றில் பாபா படத்தை பார்த்ததும், அதில் மன அமைதி ஏற்பட்டதால், அந்த படத்தை வீட்டுக்கு வாங்கி வந்து பூஜித்து வந்தார். தினமும் அந்த படத்துக்கு சந்தனம் பூசி, மலர்களால் அட்சதை தூவி வழிபடுவார். மறக்காமல் அந்த படம் முன்பு அவர் நைவேத்தியமும் சமர்ப்பிப்பது உண்டு.

    அந்த படத்தின் மூலமாக மட்டுமே அவர் சாய்பாபாவை மனதார கண்டு வந்தார். ஒரு தடவை அவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது, பாபா உருவத்தில் இருந்த ஒரு வயதானவர் அவர் வீட்டுக்கு வந்தார். குல்கர்னியின் மனைவி மற்றும் மகன்கள், “நீங்கள் சீரடியில் வாழும் சாய் பாபாவா? எங்கள் வீட்டில் இருக்கும் படத்தில் இருப்பதை போன்றே இருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.

    அதற்கு பாபா சிரித்துக்கொண்டே, “நான் அவர் சார்பில் வந்திருக்கிறேன். நான் தரும் இந்த விபூதியை அந்த படத்துக்கு அருகே வைத்து வழிபடுங்கள். நல்லது நடக்கும்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

    இதற்கிடையே வீடு திரும்பிய குல்கர்னி நடந்ததை அறிந்து சாய்பாபாவே தன் வீட்டுக்கு வந்து சென்றிருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.

    இதேபோன்று தன்னை புகைப்படத்தில் வழிபடும் பக்தர்களை அவர் விரும்பி அழைத்து அரவணைத்து கொண்டார். அவர்களுக்கு வழிகாட்டும் குருவாக இருக்க சம்மதித்தார். தொடர்ந்து அந்த படத்தில் கவனம் செலுத்தி தன்னை தியானம் செய்யும்படி கூறி உள்ளார்.

    அத்தகைய பக்தர்களிடம், “நானும், என் உருவ படமும் வேறு, வேறு அல்ல. அனைத்து இடங்களிலும் நான் நிரம்பி இருக்கிறேன்” என்று சாய்பாபா சொல்லியதுண்டு.

    ஒருதடவை பாபாவை சந்திக்க சிலர் குழுவாக வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பாபாவை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டார். அப்போது சாய்பாபா, “ எனது இரண்டு கால்களை மட்டும் படம் எடு போதும்” என்று கூறினார். ஆனால் அந்த நபரோ பாபாவை ஏமாற்றி அவரை முழுமையாக படம் பிடித்து விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

    சரி என்று சொல்லிவிட்டு அவர் பாபாவை படம் பிடித்தார். முழுமையாக படம் பிடித்து விட்டோம் என்று மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்குச் சென்ற அவருக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. பிலிம் ரோலை கழுவி பிரிண்ட் போட்ட போது அவர் எடுத்த படங்களில் பாபாவின் பாதங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. பாபாவின் உருவம் தெரியவில்லை. அவர் அனுமதி இல்லாமல் அவர் தொடர்பான எதையும், யாராலும் செய்யவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்தது.

    மற்றொரு தடவை மும்பையில் உள்ள ஒரு பக்தர் சாய்பாபாவை தரிசனம் செய்ய வந்திருந்தார். அந்த பக்தரிடம், “ இன்று முழுவதும் உன் வீட்டில் உள்ள எனது படத்துக்கு யாருமே நைவேத்தியம் படைக்கவில்லை. உனது வீட்டுக்குள் நான் பட்டினியாகவே இருக்கிறேன்”என்று கூறினார்.

    இதை அறிந்த அந்த பக்தர் அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மும்பையில் உள்ள தனது மகனிடம் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவரது மகன் ஆச்சரியத்துடன், “ஆமா பாபா படத்துக்கு நைவேத்தியம் படைக்க மறந்து விட்டேன்” என்று கூறினான். அந்த அளவுக்கு சாய்பாபாவுக்கும், அவரது உருவ படத்துக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது. இன்னமும் இருக்கிறது.
    எனவேதான் சாய்பாபாவின் புகழை உலகம் எல்லாம் பரப்பிய நரசிம்ம சுவாமிஜி போன்ற அருளாளர்கள் பலரும் சாய்பாபாவின் படத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். சாய்பாபாவின் உருவ படத்தை நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தினமும் மனதார பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.

    சாய்பாபா தனது உருவ படத்தின் மூலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிசயங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவரது புகழ் அதிகம் பரவாத காலக்கட்டத்தில்கூட அவரது புகைப்படங்கள் வட மாநிலங்களில் பல இடங்களிலும் பரவி இருந்தது.

    ஒரு தடவை சாய்பாபாவை சந்தித்த காகா சாகேப் தீட்சிதர் என்பவர் தன் மகன் பூணூல் அணிவிப்பு விழாவுக்கு வர வேண்டும் என்று பாபாவிடம் அழைப்பு விடுத்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த நானா சாகேப் என்பவர் குவாலியரில் நடக்கப்போகும் தனது மகள் திருமணத்துக்கு நேரில் வரவேண்டும் என்று சாய்பாபாவுக்கு அழைப்பு விடுத்தார்.

    அவர்கள் இருவரிடமும் வருவதாக பாபா கூறினார். அவர்கள் இருவரது வீட்டிலும் நிகழ்ச்சி நடந்த போது பாபாவின் படம் அங்கு யாரோ ஒரு பக்தரால் இடம் பெற்றது. இதில் இருந்து பாபாவும், அவரது படமும் ஒன்று என்ற உண்மை மீண்டும் உறுதிபடுத்தப்பட்டது.

    தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு மட்டுமின்றி தன்னை நினைத்துக்கூட பார்க்காத பக்தர்களுக்கும் சாய்பாபா படங்கள் மூலம் அருள் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே பாபாவை படங் களில் வழிபடுவதை ஆத்மார்த்தமாக செய் யுங்கள். அப்படி செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் பாபா உணர்த்தி உள்ளார்.

    குருவுக்கும், சிஷ்ய னுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் நீ, நான் என்ற மனோபாவம் மட்டுமே. அதை உடைத்து எறியா விட்டால் இருவரும் ஒருவரே என்னும் நிலையை அடைய முடியாது.

    பூர்வஜென்ம பந்தத்தால் மட்டுமே ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும். படத்தில் நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். நம் இடையில் இருக்கும் சுவரை இடித்து விடுங்கள் என்று கூறி உள்ளார்.

    பாபா சொன்னபடி அவர் படத்தோடு ஒன்றிட வேண்டியது நமது கடமையாகும். இதுவும் பாபா நமக்கு காட்டியிருக்கும் பாதைதான். இந்த பாதை கஷ்டமான பாதை அல்ல. இந்த பாதையில் செல்ல பாபாவின் ஒரே ஒரு படம் இருந்தால் மட்டும் போதும்.  

    துவாரகமாயியில் உட்கார்ந்த நிலையில் பாபாவின் வண்ணப்படம் ஒன்று வைக்கப்பட்டு  இருப்பதை சீரடி தலத்துக்கு சென்று வந்தவர்கள் பார்த்து இருப்பார்கள். பிரபல ஓவியர் ஷாமாராவ் ஜெயகர் வரைந்த அந்தப் படத்தை பாபாவே தன் கைப்பட வாங்கி துவாரகமாயியில் வைத்தார்.

    படத்தில் இருக்கும் பாபாவின் கண்களில் அருள் நிறைந்து  ஒளி வீச்சு காணப்படுகிறது. அங்கு வரும் ஒவ்வொரு பக்தரையும் ஒரு தாய், குழந்தையைப் பாசத்தோடு அழைப்பதைப் போல அன்புடன் அந்தப் பார்வை இருக்கிறது.

    சீரடிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் போது துவாரகமாயியில் உள்ள அந்தப் படத்துக்கு முன் நின்று ஊர் திரும்ப அனுமதி கேட்பது வழக்கம். இன்றும் நிறைய பக்தர்கள் அந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். அவர்களுக்கு பாபா உரிய பதில் வழங்குகிறார்.

    அதாவது பக்தர்கள் பாபா அனுமதி வழங்குவதையோ, அனுமதி மறுப்பதையோ உணர்கிறார்கள். பாபாவின் அனுமதி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பு கிறார்கள். மறுக்கப்பட்டால் சீரடியில் தங்கி இருந்து பாபாவின் அனுமதி கிடைத்த பிறகு ஊர் திரும்புகிறார்கள். பாபா, பக்தர்கள் தன்னை நோக்கி வர வேண்டும் என்று காத்திருக்கிறார்.

    எனவே இந்த ஓவியத்தைப் படமாக பாவிக்காமல் பாபாவே அமர்ந்து நம்மை வரவேற்கிறார் என்றுதான் பக்தர்கள் கருதுகிறார்கள்.

    அதேபோன்று பிரதி எடுக்கப்பட்ட படங்கள் லட்சக்கணக்கான பக்தர்களின் வீடுகளில் உள்ளது. நீங்களும் அதேபோன்று சாய்பாபா உருவப்படத்தை வாங்கி பயன்படுத்தலாம். சாய்பாபா ஆலயங்களில் வியாழக்கிழமை ஊர்வலத்துக்கு அத்தகைய படத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். சந்தனம் பூசி அந்த படம் மங்களகரமாக இருக்கும்.

    அந்த படத்தை வாங்கி தினமும் மலர் மாலைகள் சூடி நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். பாபாவுக்கு விசேஷமாக நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் என்ன சாப்பிட்டாலும் முதலில் கொஞ்சம் எடுத்து அவரது படம் அருகில் வைத்து விடுங்கள் போதும். தினமும் இந்த நைவேத்தியத்தை செய்யுங்கள்.

    இப்படி பாபா படத்துக்கு வழிபாடு செய்து வந்தால் அவர் அருள் கடாட்சம் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கையோடு செய்யுங்கள். பாபா படத்துடன் நீங்கள் எந்த அளவுக்கு மனதை கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு சாய்பாபாவும் உங்கள் வீட்டுக்கு நிச்சயமாக வருவார். ஏனெனில் இது அவர் காட்டிய பாதை.

    இதேபோன்றுதான் சாய்சத்சரிதம் படிக்க வேண்டும் என்றும் சீரடி சாய்பாபா வலியுறுத்தி உள்ளார். அதுபற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
    Next Story
    ×