search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பங்கள் தரும் திருச்செந்தூர்
    X
    திருப்பங்கள் தரும் திருச்செந்தூர்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - திருப்பங்கள் தரும் திருச்செந்தூர்

    நீலத்திரைகடல் ஓரம் அமைந்த இக்கோவில் வரலாற்றுத் தொடர்புடைய இடம். கலியுகத்திலும்,கைமேல் பலன் அளிக்கும் கருணைத் தெய்வமாக விளங்குகிறான் செந்திலாண்டவன்.
    திருச்செந்தூர் என்றாலே தித்திக்கும் நாவு.
    வாய் மணக்கும், மனம் மலரும், மனமும், நெஞ்சும் பூரிக்கும்.
    செந்தில் ஆண்டவா என்று நெஞ்சுருக அழைத்தால் சேயோன் தன் வேலும் மயிலும் துணை வர ஓடி வருவான்.
    கண்ணுக்கு அழகாக, காதிற்கு இதமாக, நாவுக்கு இனிதாக, நினைக்கும் நெஞ்சுக்கு இதமாக, சுவையின் மணமாக, சொல்லுக்குப் பொருளாக, கருத்திற்குப் பொருளாக, உயிருக்கு உணர்வாக இருப்பவன் முருகன். “முருகமர் பூ முரன் கிடக்கை”, “முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்” என்று இலக்கியங்கள் புகழ்கின்றன.

    இயற்கையே இறைவன் என்கின்றனர்.  ஏனென்றால் அழியாப் பொருள் அவன். அவன் இருக்கும் இடமெல்லாம் அழகு நிறைந்து இருக்கிறது. குன்றில் ஆடும் குமரன், சமவெளியில் இருக்கும் ஒரே ஆறுபடை வீடு திருச்செந்தூர்.

    நீலத்திரைகடல் ஓரம் அமைந்த இக்கோவில் வரலாற்றுத் தொடர்புடைய இடம். கலியுகத்திலும், கைமேல் பலன் அளிக்கும் கருணைத் தெய்வமாக விளங்குகிறான் செந்திலாண்டவன். அலைவாயிலில் கந்தமாதன பர்வதத்தைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் இது. ஓம் என்ற வடிவில் அமைந்த கோவிலில்  பிரகாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று அங்குள்ள துளையில் காதை  வைத்துக் கவனித்தால், ஓம் என்ற சப்தம் கேட்கிறது. சிலிர்க்க வைக்கும் ஒளியாக நம் உடல் எங்கும் மின்சாரம்போல் பாய்கிறது அந்த ஒலி.

    சூரபத்மனை வதம் செய்த இடம் என்பதால் இறைவனுக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய  கோவில் என்று சிலப்பதிகாரக் குறிப்பு சொல்கிறது. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய இடங்களில் திருச்செந்தூரும் ஒன்று. இதன் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டு 150 அடி உயரம் உள்ளது. பாலசுப்ரமணியர், சண்முகர் என்று இரண்டு மூலவர்கள். சுப்ரமணியருக்கு தூய வெள்ளை ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையுமே அணிவிக்கப்படுகிறது.

    செந்தில் ஆண்டவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான். அபயம், வரதம், பூ ஜெபமாலை ஏந்தி நான்கு திருக்கரங்களோடு காட்சி அளிக்கிறான். உட்செல்லும் முன் ஆறுமுகனாகிய உற்சவரை வணங்கி விட்டுச் செல்ல வேண்டும்.மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார். சூரனை வதைத்த முருகன், நான்கு கைகளுடன், ஜடாமுடியுடன், தவக்கோலத்தில் சிவபூஜை செய்யும் நிலையில் இருப்பதால், அவரின் தவத்தைக் கலைக்கக் கூடாது என்று தனிப் பிரகாரம் கிடையாது.

    சூரபத்மனை வதம் செய்தபின் முருகன் தன் கோபத்தைத் தணிக்க தனது வேலால் வேகமாகத் தரையைக் குத்த, பீரிட்டு வந்த நீரே நாழிக்கிணறு. அத்துடன் தன் வீரர்களின் தாகத்தைத் தணிக்க முருகன் உண்டாக்கிய கிணறு இது என்றும் நம்பப்படுகிறது. கடல் மட்டத்துக்குக் கீழ் இருக்கும் இக் கிணற்று நீர் இனிப்புச் சுவையுடன் இருக் கிறது. நோய் தீர்க்கும் நீர் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

    மூலவருக்குப் பின்னால் ஒரு இருட்டறை உள்ளது. அங்கு முருகன் வழிபட்ட பஞ்சலிங்கமூர்த்திகள் எழுந்தருளி உள்ளார்கள். இங்கு இருபத்து நாலு தீர்த்தங்கள் இருந்தாலும், கடலுக்கு முன் உள்ள தீர்த்தம் வதனாரம்ப தீர்த்தம், நாழிகிணறு முக்கியமானது.நாழி கிணற்றில் நீராடிய பின்னரே கடலில் நீராட வேண்டும்.

     கலிங்க தேசத்து மன்னன் மகள் பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் இங்கு வந்து முருகனை வணங்கி, வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி நல்ல முகத்தைப் பெற்றாள். கோவிலின் இடது புறம் வள்ளிக் குகை உள்ளது. இங்கு முருகனை நினைத்து தியானம் செய்தால் நினைத்ததை நடத்தி கொடுப்பான் முருகன் இங்குள்ள சண்முக விலாசம் என்ற மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. நூற்று இருபத்து நான்கு தூண்கள் இதைத் தாங்கி நிற் கின்றன. மகா மண்படத் தில் உள்ள ஆத்ம லிங் கம் சிறப் பானது. சூரனை வென்று வெற்றிக்கொடியான சேவல் கொடியுடனும், அன்னை அளித்த வேலுடன் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார் இறைவன். வீரபாகு இங்கு காவல் தெய்வமாக இருக்கிறார். பன்னிரண்டு சித்தர்களில் எட்டு சித்தர்கள் இத்திருக் கோவிலில் சமாதி ஆகியுள்ளார்கள்.

    மன்னார் வளை குடாக்கடலின் கரை யோரத்தில் அலைகள் தவழ அமைந்திருப்ப தால் திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றது. கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள துண்டுகை விநாயகரை வணங்கிய பின்னரே கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    கோவிலில் கந்த புராணக் காட்சிகளையும், சூரனை வதம் செய்வதையும் அழகான சிற்பங்களாக வடிவமைத் துள்ளனர். இங்கிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள மணப்பாடு என்ற இடத்தில் முருகனின்  வேல் மாமரமாக மாறி நின்று சூரனை வதைத்தது. வீர பாண்டிய கட்டபொம்மன் ஏராளமான நகைகளை முருகனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளான். இத் தலத்து இறைவனுக்கு நைவேத்தியம் வழங்கி மணி அடித்த ஒலி கேட்ட  பின்னரே அரசன் உணவு எடுத்துக் கொள்வான் என்று ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.

    முருகனின் அவதாரமே அசுரர்களை அழிப்பது. அந்த நோக்கம் நிறைவேறிய இடம் திருச்செந்தூர் என்பதால் இத்தலமே தெய்வீகச் சிறப்பு பெற்றது. அறுபடை வீடுகளில் மிகப் பெரிய கோவில் கொண்ட தலம் இதுவே. முருகனின் தங்கத் தேர் சிறப்பானது. இங்கு பன்னீர் இலையில் வைத்து வழங்கப் படும் விபூதிப் பிரசாதம் மிக விசேஷமானது. முருகன் பன்னிரு கரங்களால் நம்மைக் காக்கிறான் என்பதைக்குறிக்கும் வகையில் இலையில் பன்னிரு நரம்புகள் இருக்கின்றன. தினமும் காலை பூஜையின்போது இந்த இலைகளில் விபூதி வைத்து முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது.
    ஸ்ரீ சங்கரர் தன் சுப்ரமணிய புஜங்கத்தில்
    துன்பச் சுமையால் தவிக்கிறேன்
    சொல்ல முடியா தழுகிறேன்
    அன்பைச் சொரியும் தீனரூக் கிங்
    கருளும் கருணைப் பேரு வாழ்வே
    உன்னை நாடித் தொழுவதால்
    ஊமை நானோர் மற்றறியேன்
    உன்னைத் தொழவுடு தடை செய்யும்
    நெஞ்சின் நோவைப் போக்கிடுவாய்” என்று பாடுகிறார். அவருடைய சுப்ரமணிய புஜங்கத்தில் இருபத்தி ஐந்தாவது பாடலான “அபஸ்மாரா குஷ்ட்ட க்ஷயார்ச ப்ரமேஹ” என்னும் பாடலை முருகனை வேண்டிப் பாடினால் தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது உண்மையான சத்திய வாக்கு.

    அருணகிரி நாதர் நிறையப் பாடல்கள் இத் தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார். “மகா புனிதம் தங்கும் செந்தில்” என்று குறிப்பிடுகிறார்.

    திருவண்ணாமலையில் பிறந்த இவர் முருகனால் ஆட்கொள்ளப்பட்டு, மயில் வழி காட்ட, திருச்செந்தூர் வந்தார். எண்பத்தி ஐந்து திருப்புகழ் பாடியுள்ளார். இதைப் பாடி முடித்ததும், இவரின் நோய் முற்றிலுமாக குணமாகியது.

    உரைக்கும் வீரிகள் கொளர வாமென
    வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
    உரைக்குந் தூரிகள் மீதினி லாசைகள்...- - - - - - - -புரிவேனோ
    என்று கூறுகிறார்.

    நம் பாவங்களைப் போக்கி நலமான வாழ்வு தரும் திருப்புகழ். இது நோய்களைத் தீர்ப்பதுடன் மட்டுமல்லாமல், நாம் விரும்பிய நல்லவை எல்லாம் தரும்.

    இதேபோல் திருமணம் தடைபடாமல் நடை பெற, குடும்பத்தில் தம்பதியர் ஒற்றுமை நீடிக்க திருமுருக கிருபானந்த வாரியார், திருச்செந்தூர் திருப்புகழ் ஒன்றை  எடுத்துக் கொடுத்துள்ளார்.
    “விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானிலிருந்து வெயில் காய,
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் வசை கூற....”

    என்ற பாடலை தினமும் ஆறு  முறை நாற்பத்தி எட்டு நாட்கள் பாராயணம் செய்து வந்தால் எப்படிப்பட்ட தடையாக இருந்தாலும் விலகி திருமணம் நடக்கும், அத்துடன் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற உறவுகள் வந்து சேரும் என்பது நிதர்சனமான நம்பிக்கை. சூரனை வென்ற பின் தெய்வானையை மணம் புரிந்த தலம் என்பதால் இங்கு  வந்து முருகனை வேண்டினால் திருமணம், குழந்தைப் பேறும் அருள்வான் குமரன்.

    இங்கு முருகன் வருவதற்கு முன்பே கந்தனைத் தரிசிக்க வியாழ பகவான் இங்கு வந்து தவம் செய்து முருகன் அருளைப் பெற்றார். அவரே விஸ்வகர்மாவைக் கொண்டு இக் கோவிலை எழுப்பினார். எனவே இங்கு வந்து முருகனைத் தரிசித்தால் வாழ்வில் மகிழ்ச்சியான திருப்பங்கள் அமையும் என்பது உண்மை.

    பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழாக்கள் இங்கு வெகு விமர்சிகையாக நடைபெறும்.

    Next Story
    ×