search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தன்
    X
    கந்தன்

    கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - திருவருள் தரும் திருப்பரங்குன்றம்

    முருகா என்றிட முவ்வினைகளும் தீரும் எனப் போற்றப்படும் அழகன், குன்றிருக்கும் இடமெல்லாம் கோவில் கொண்டு தன் பக்தர்களைக் காக்கிறான்.
    தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில் வேற்
    கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி இட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
    பேரணி கேட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. -கந்தர் அலங்காரம்.

    தமிழ் என்றால் இனிமை. முருகு என்றால் அழகு.
    அழகும் இனிமையும் அறிவும் கலந்தவன் முருகன். தமிழின் வடிவாக இருப்பவன். கனிவும், கருணையும், அன்பே வடிவாகிய அருள் நெறி அமுதன். தமிழ் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் தமிழ்வேல் இருப்பான். “பாடும் பாட்டு அமர்ந்தோய்” என்கிறது பரிபாடல்.
    “உணர்வோர் படித்த தமிழ்

    செவியார் வைத்தருளும் முருகோனே” என்கிறது திருப்புகழ்.
    சங்ககாலம் முதலே முருகனின் வழிபாடு இருக்கிறது. ஐந்திணைகளில் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக “சேயோன்” எனப் போற்றப்படுகிறான் முருகன். மெல்லினம், இடையினம், வல்லின மெய் எழுத்துக்களோடு உ எனும் உயிர் எழுத்து சேர்ந்து முருகு என்று அழைக்கப் படுகிறான். மெய்யாகிய உடலுக்குள்  உயிராக நிறைந்திருப்பவன் முருகன். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக விளங்குகிறான்.

    முருகா என்றிட முவ்வினைகளும் தீரும் எனப் போற்றப் படும் அழகன், குன்றிருக்கும் இடமெல்லாம் கோவில் கொண்டு தன் பக்தர்களைக் காக்கிறான். முருகா என்றதும் அழகும், அறிவும் நிறைந்த உருவே, கையில் வேலுடன், “யாமிருக்க பயமேன்”- என்று அபயக் கரம் காட்டும் தோற்றமே, நம் கண்முன் வந்து நிற்கும்.

    திருமுருகனின், திருவிளையாடல்களும், தோற்றமும், மனிதர்கள் வாழ்வில் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவங்களைப் போதிப்பதாகவே அமைந் துள்ளது. எளி யோரைக் காக்கும் இறைவனுக்கு காணும் இடமெல்லாம்  கோவில் இருந் தாலும் ஆறுபடை வீடுகள் சிறப் பாகப் போற்றப் படுகிறது.

    ஏழ்மையில் வாடும் ஒரு வருக்கு, பொருள் பெற்றவர், வள் ளல் இருக்கும் திசை யைக் காட்டி ஆறு தல் படுத்துவது ஆற்றுப்படுத்தல் என்று அழைக் கப் படுகிறது. உங்கள் குறைகளை எல்லாம் தீர்க்க முருகன் குடி யிருக்கும் இந்த தலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் துன் பங்கள் எல்லாம் தீரும் என்று ஆற்றுப் படுத் தினார் நக்கீரர். திருமுருகாற்றுப் படையில் அவர் பாடிய திருத்தலங்களே ஆறுபடை வீடு ஆகிற்று.

    ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக நக்கீரர் குறிப்பிடுவது திருப்பரங்குன்றம். சூரபத்மனை வதம் செய்த பின் இந்திரனின் மகள் தேவயானையைத் திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம். கற்று அறிந்த அறிவாளி, என்றாலும், ஈசனும், முருகனும் ஒன்றே என்றாலும் உலக நியதிப்படி நடக்க வேண்டும் என்ற தத்துவத்தை இங்கு உணர்த்துகிறார் பெருமான்.
    ஒருமுறை கைலாயத்தில் ஈசன் பார்வதிக்கு ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருளை விளக்கும்போது தாயின் மடியில் அமர்ந்திருந்த முருகனும் அதைக் கேட்டார். சக்தி வாய்ந்த மந்திரங்களின் பொருளை குரு மூலமாகவே உபதேசம் பெற வேண்டும். மறைமுகமாகக் கேட்பது பாவம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. எனவே தன் தவறுக்கு பரிகாரம் தேடி குமரன் இங்கு வந்து ஈசனை நோக்கித் தவம் இருந்தார்.

    அவரின் கடுமையான தவத்தில் மகிழ்ந்து அம்மையும், அப்பனும் அவருக்குக் காட்சி அளித்து, வரங்கள் தந்தனர்.
    குமரனின் அவதாரமே சூரபத்மனை அழித்து, தேவர்களைக் காப்பதற்காகவே. அன்னையிடம் வேல்  வாங்கி அசுர சேனையை அழித்து அமராவதியைக் காப்பாற்றி தேவர்களிடம் ஒப்படைத்தார் பெருமான். அதில் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் முருகனைப் போற்றித் துதிக்க, இந்திரன் தன் மகள் தேவயானையை திருமுருகனுக்கு மனம் செய்து கொடுத்தார் இந்தத் தலத்தில்.
    இங்கு மலையே லிங்க வடிவில் காட்சி அளிக்கிறது. 190 மீட்டர் உயரமுள்ள மலை ஈசனின் வடிவம் என்பதால் முருகனுக்காக ஈசனே மலையாக அமர்ந்தார் என்பது நம்பிக்கை. மலையைக் குடைந்து அர்த்த மண்டபம், கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை செல்ல ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இது சடாட்சர படிகள் என்று அழைக்கப் படுகிறது.

    உள்ளே மிகப் பெரிய பாறை அதன் மேற்புறத்தில், மகிஷாசுரமர்த்தனி உருவம், கீழே முருகன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவர் காலடியில் ஆடும், யானையும் காட்சி அளிக்கிறது தேவயானையைப் பிரிய மனமில்லாத ஐராவதம் யானை, இங்கேயே தங்கி விட்டது என்று புராணங்கள் கூறுகிறது. முருகனின் ஆறுபடை வீடு  கோவில்களில் மிகப் பெரியது திருப்பரங்குன்றம்.

    கோவிலின் அடிவாரத்தில் முருகன் தன் வேலினால் உண்டாக்கப் பட்ட சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராடி கார்த்திகேயனை வழிபட்டால், தீராத வினை களெல்லாம் தீரும். பரம்பொருளான ஈசன் குன்றாக நின்றதால் திருப்பரங்குன்றம் என்று பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.

    கோபுர வாயிலுக்கு முன் உள்ள ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்ப கலைக் கூடமாக விளங்குகிறது. இங்குள்ள சன்யாசிக் கிணற்றில் மூழ்கி முருகனை வழிபட்டால் நீரிழிவு, வெண் குஷ்டம் போன்ற நோய்கள் நீங்குகின்றன. முருகனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு தைப்பூசத் திருவிழா மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப் படுகிறது.
    “உனைத்தி னந்தொழு திலனுந் தியல்பினை
    உரைத்திலன் பலமலர் கொடுன் அடியினை
    உறப்பனிந்திலன் ஒரு தவமிலனுன...தருள்மாறா....
    . . . . . . . . . . . . . . . . . . . .
    தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
    திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமானே”-
    என்று உருகி போற்றுகிறார்அருணகிரியார்.   

    உன்னை தினந்தோறும் தொழுதவனும் இல்லை உன் தன்மைகளை உரைத்தவனும் இல்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளைப் பூஜை செய்ததும் இல்லை. உன்னையே நினைந்து உருகும் என்னைக் காக்க, உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே வருவாயாக என்று அழைக்கிறார் அருணகிரியார். கந்தன் எந்தப் பூஜைகளையும் எதிர்பார்ப்பவன் இல்லை. பக்தர்களின் உள்ளத்தில் பொங்கிப் பெருகும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் அருளாளன்.

    கந்தனின் பெருமைகளை அருணகிரி நாதர், திருப்புகழில் வாய் மணக்கப் பாடினாலும், பக்திச் சுவையும், தமிழ்ச்சுவையும் நிரம்பிய அமுதமாகத் திகழ்வது கந்தர் அலங்காரம். தம் குறைகளைக் கூறி அதை நீக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கும் பாடல்கள் இவைகள்.

    “முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் கந்தன்” என்று பாடிப் பரவசமாகிறார் அருணகிரியார்.
    “தேரணி இட்டுப் புரமெரித்தான் மகன்” என்ற பாடலில் முருகன் கிரவுஞ்ச மலையைத் தூள் தூளாக்கியது போல் நம் துன்பங்களைத் தீர்ப்பான் என்கிறார்.

    தன் நெற்றிக் கண்ணால் திரிபுரங்களை எரித்த சிவபெருமானின் திருக்குமரராகிய முருகப் பெருமான் தன் கையில் உள்ள கூர்மையான வேலால் கிரவுஞ்ச மலையை அணு, அணுவாக அழித்தார் முதலில் நேராக அணிவகுத்து வந்து பின் வட்ட வடிவில் அவரை வளைத்துக் கொண்ட அசுரர்களின் சேனை சிதறி ஓடியது. பெரிய சூரபத்மன் சேனையும் அழிந்தது. அமராவதி பிழைத்தது என்கிறார்.

    முப்புரம் என்பது நம் ஆணவம், மாயை, கன்மம் என்னும் குணங்கள்.  ஈசனின் மகனான குமரனின் கைவேல் படுதலால், அரக்கர் உலகம் அழிந்தது போல், அவனின் கைவேல்  நம் அசுர குணங் களையும் அழித்து, இந்திராபுரிக்கு ஒப்பான ஆனந்த மான வாழ்வை அளிக்கும்.

    தாரகாசுர னையும், சூரபத்மனையும் அழித்த வேல், நம் எதிரிகளையும் வெல்லும் சக்தியை அளிக்கும் என்பது இப் பாடலைத் தொடர்ந்து பாராயணம் செய்யச் செய்யப் புலப்படும்.

    அருணகிரிநாதர் முருகன் தரிசனம் பெற்ற பின் ஒவ்வொரு தலமாக யாத்திரை செய்யும்போது பாடிய பாடல்கள் கந்தர் அலங்காரம். அழகான அவனை மேலும் அழகு படுத்தி அலங்காரம் செய்து பாடிய பாடல்கள் கந்தர் அலங்காரம்.

    இங்கு முருகனே குருவாக இருந்து ஞான உபதேசத்தை அளித்தார். குமரனிடம் உபதேசம் பெற்றபின் பாடிய பாடல்களே இவை. சாவின் விளிம்பிலிருந்து தன்னைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம் வந்து தவம் செய்த முருகனை நினைத்து, இப்பாடலைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது என்கிறார்கள்.

    இங்குள்ள சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடி, மலையை வழிபட்டால் மறுமை, இம்மை என்ற பிணிகள் நீங்கும். இம்மையில் வளமான வாழ்வு தருவான் அலையோன். நோய் தீர்ப்பான், திருமண வரம் அருள்வான். குழந்தைப் பேறு கிடைக்கும். விரும்பிய அனைத்தும் கொடுப்பவன் கந்தன்.
    இதையே நக்கீரர்,
    “தாள் அறக்கருணை செய்து காக்கிறது.
    கரம் மறக்கருணையால் காக்கிறது”- என் கிறார்.

    முருகனின் திருப்பாதங்கள் தம்மை வந்து அடைக்கலம் புகும் நிர்கதியான தொண் டர்களைக் காத்து அவர்களின் அறியாமையை உடைத்தெறிகிறது. அருள் கரங்கள், எதிர்த்து வந்தவர்களை அழித்து, ஆணவத்தை அழித்து உய்விக்கிறது.

    கந்தனை நினைத்து கந்தர் அலங்காரம் படித்து முருகனை வணங்கி நின்றால் வள மான வாழ்வு கிடைக்கும் என்பது நிச்சயம்.


    Next Story
    ×