search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிவுச் செல்வம் தரும் அன்னை கலைவாணி
    X
    அறிவுச் செல்வம் தரும் அன்னை கலைவாணி

    ஆன்மிக அமுதம் - அறிவுச் செல்வம் தரும் அன்னை கலைவாணி

    சரஸ்வதியின் வடிவம் எல்லாக் காலத்திலும் உள்ள எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்துகிற வகையில் அமைந்திருப்பதுதான் அந்த வடிவத்தின் தனிச் சிறப்பு.
    *தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று நாம் சொல்வதில்லை. அவையெல்லாம் பண்டிகைகள். சரஸ்வதி பூஜையை மட்டும்தான் பூஜை என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறோம்.
    காரணம் சரஸ்வதி பூஜை வெறும் பண்டிகை மட்டுமல்ல. அது ஆத்மார்த்தமாக கலைவாணியை நாம் மனத்தில் பூஜிக்க வேண்டிய நன்னாள்.

    ஆயுத பூஜையையும் அவ்விதமே பூஜை என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறோம். சரஸ்வதி பூஜைக்கும் ஆயுத பூஜைக்கும் உள்ள முக்கியத்துவம் மற்ற பண்டிகைகளை விட அதிகமானது.  

    சரஸ்வதியின் வடிவம் எல்லாக் காலத்திலும் உள்ள எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்துகிற வகையில் அமைந்திருப்பதுதான் அந்த வடிவத்தின் தனிச் சிறப்பு.

    அவள் அமர்ந்திருக்கிற வெண்தாமரை தாவர இயலைக் குறிக்கிறது. வாகனமான அன்னம் விலங்கியலைக் குறிக்கிறது. அவள் கையில் உள்ள ஏட்டுச் சுவடி மொழிகளின் அடையாளம். அவள் மீட்டும் வீணை கலைகளை உணர்த்துகிறது. அவளது ஒரு கையில் உள்ள ஜபமாலை கணிதத்தின் குறியீடு. இப்படி அனைத்து அறிவுத் துறைகளின் விளக்கமாக உள்ளது அவளின் அழகிய வடிவம்.

    அன்னப் பறவையை சரஸ்வதிக்கு வாகனமாக்கியதில் வேறொரு பொருளும் உண்டு. அன்னம் எப்படிப் பாலிலிருந்து நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துமோ அதுபோல் நாமும் கல்வி கற்கும்போது வேண்டாதவற்றை நீக்கி நல்லவற்றை மட்டுமே கற்க வேண்டும்.  

    *நம் நாட்டில் வழங்கும் பல்வேறு ராமாயணங்களில் சரஸ்வதியைப் பற்றிய பல குறிப்புகள் வருகின்றன. கும்பகர்ணன் தவம் செய்து பிரம்ம தேவனிடம் நித்யத்வம் என என்றென்றும் மரணமடையாமல் நிலைத்திருக்கும் வரத்தைக் கேட்க நினைத்தான்.

    அரக்கனான அவன் அப்படி வரம் பெற்றுவிட்டால் தேவர்களின் நிலை என்ன ஆகும் என இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பதைபதைத்தனர். சரஸ்வதியைப் பிரார்த்தித்தனர்.

    யாரிடம் கும்பகர்ணன் வரம் கேட்கவிருக்கிறானோ அந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி தேவர்களின் உதவிக்கு வந்தாள். கும்பகர்ணன் வரம்கேட்க நினைத்த தருணத்தில் அவன் நாவைச் சற்றுப் பிறழச் செய்தாள். `நித்யத்வம்` எனக் கேட்க நினைத்தவன் `நித்ரத்வம்` எனக் கேட்டுவிட்டான்!

    எனவே பிரம்மதேவனால் அவனுக்கு அவன் கேட்டுக் கொண்டபடி நித்திரை அருளப்பட்டது. நெடுங்காலம் உறங்குபவனாக மாறினான் அவன்.

    ராமன்மேல் மட்டற்ற பாசம் செலுத்திய கைகேயியின் மனத்தை மாற்றி, ராமனைக் காட்டுக்கு அனுப்புமாறு அவளை வரம் கேட்கச் செய்தவள் மந்தரை என்ற இயற்பெயரை உடைய கூனி. தன் சொற்களால் ஒருத்தியின் மனத்தை முழுமையாக மாற்றுவது என்பது சாதாரணமான செயல் அல்லவே?

    தேவர்களின் வேண்டுகோளை ஏற்று மந்தரையின் நாவில் குடியிருந்து அவளுக்கு அபாரமான சொல்லாற்றலை வழங்கி கைகேயியின் மனம்மாற உதவியவள் சரஸ்வதிதான் என்றும் அந்தச் செயல்தான் ராவண வதத்திற்கு வித்திட்டது என்றும் கூறுகிறது ஒரு ராமாயணக் கதை.

    *கம்பர் கலைவாணியின் பெரிய பக்தர். `சரஸ்வதி அந்தாதி` என்ற செய்யுள் நூல் எழுதியவர். அந்நூலில் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு வெண்பாக்கள் அவற்றின் இலக்கியச் சிறப்புக் காரணமாகப் பெரும் புகழ் பெற்றவை.
    ‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
    இருப்பள் இங்குவாரா திடர்.

    படிக நிறமும் பவழச் செவ்வாயும்
    கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
    அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
    கல்லும் சொல்லாதோ கவி.’
    கம்பரும் ஒட்டக்கூத்தரும் சம காலத்தவர்கள். ஒட்டக்கூத்தருக்கு கம்பரின் புகழைப் பார்த்துப் பொறாமை. கம்ப ராமாயணத்தை ஒவ்வொரு செய்யுளாக வாசித்து விளக்கம் கூறிக் கம்பர் அரங்கேற்றியபோது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒட்டக்கூத்தரின் பொறாமைத் தீ வளர்ந்தது.
    திடீரென சபையிலிருந்து எழுந்து கம்பரை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஒட்டக் கூத்தர்.

    ‘கம்பரே! ராமாயணம் நடந்த கதை என்று ராம பக்தர்களாகிய நானும் நீங்களும் நம்புகிறோம். ராவணன் சீதாதேவியை இருபது கரங்களாலும் தூக்கிச் சென்றதாக எழுதுகிறார் ஆதிகவியான வால்மீகி. நீங்களோ ராவணன் சீதையை அவள் வசித்த குடிசையோடு பெயர்த்து எடுத்துச் சென்றான் என்று எழுதியுள்ளீர்கள். ராமாயணம் நடந்த கதை என்றால் இந்த இரண்டில் ஒன்றுதானே நடந்திருக்க முடியும்? அப்படியானால் எது உண்மை? எது கற்பனை?’

    ஒட்டக்கூத்தரின் கேள்விக்கு கம்பர் என்ன பதில் சொல்லப் போகிறார் என சபை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கம்பர் `நானும் அறியேன். அவளும் பொய் சொல்லாள். நாளை விளக்குகிறேன்!` என்றார்.

    அவளும் பொய் சொல்லாள் என்பதில் `அவள்` எனக் கம்பர் குறிப்பிட்டது சரஸ்வதி தேவியைத் தான். ராமாயணத்தைத் தாம் எழுதவில்லை என்றும், கலைவாணி தன்மூலம் எழுதுகிறாள் என்றும் அடக்கத்தோடு நினைத்தது கம்பர் உள்ளம். சபை கலைந்தது.

    அன்று இரவு கலைவாணியை தியானம் செய்து விடைகேட்டார் கம்பர். சரஸ்வதி அவர் மனத்தில் தோன்றி விடையளித்தாள்.

    மறுநாள் சபையில் கம்பர் அந்த விடையைச் சொன்னபோது சபை ஆர்ப்பரித்தது. ஒட்டக்கூத்தர் தலைகுனிந்தார். கம்பர் சொன்ன பதில் இதுதான்:

    ‘கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. திரேதா யுகத்தில் நிகழ்ந்தது ராமாவதாரம்.ஆனால் இந்த நான்கு யுகங்களும் மறுபடி மறுபடிச் சுழன்று வருகின்றன. அப்படி வரும் ஒவ்வொரு திரேதா யுகத்திலும் ராமாயணம் நடக்கிறது. ஆனால் காலத்திற்கேற்ற சிற்சில மாறுதல்களோடு.

    வால்மீகி தன் மனக்கண்ணால் பார்த்து எழுதிய ராமாயணம் நடந்த திரேதா யுகம் மிகவும் முற்பட்டது. நான் மனத்தில் தரிசித்து எழுதிய ராமாயணம் நடந்த திரேதா யுகம் காலத்தால் பிற்பட்டது. இரண்டு ராமாயணங்களுமே நடந்தவை தான்!’

    *குமரகுருபரர் சரஸ்வதி தேவியைப் போற்றி சகலகலாவல்லி மாலை என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். கம்பரது சரஸ்வதி அந்தாதியைப் போலவே இதுவும் கலைவாணியைப் பற்றிய புகழ்பெற்ற நூல்.

    தமிழகத்திலிருந்து காசிக்குச் சென்ற குமரகுருபரர் அங்கே நம் தமிழையும் ஆன்மிகத்தையும் வளர்க்க ஒரு மடம் நிறுவினார். இந்தி பேசும் மக்கள் வசிக்கும் ஊரில் தமக்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் புலமை வரவேண்டும் என்று கருதினார் அவர்.

    அவ்விதம் பன்மொழிப் புலமையைப் பெறும்பொருட்டே அவர் சகலகலாவல்லி மாலை என்ற பத்துப் பாடல்கள் கொண்ட நூலை எழுதிக் கலைவாணியைத் துதித்தார் என்றும் பன்மொழியாற்றல் அவருக்கு அன்னை கலைவாணியால் அருளப்பட்டது என்றும் சொல்கிறது குமரகுருபரரின் திருச்சரிதம்.
    ‘விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்
    விளம்பில் உன்போல்
    கண்கண்ட தெய்வம் உளதோ சகல
    கலாவல்லியே!’
    என்ற அடிகளுடன் நிறைவடையும் இந்தச் செய்யுள் நூலின் பத்துப் பாடல்களும் `சகலகலா வல்லியே!` என்ற தொடருடன் முடிவடைபவை.
    *காளமேகப் புலவர் சரஸ்வதி தேவியை வழிபட்டவர்.
    ‘வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
    வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெள்ளை
    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்  
    சரியா சனம் வைத்த தாய்.’
    என்ற அழகிய வெண்பா சரஸ்வதியைப் பற்றிக் காளமேகப் புலவரால் எழுதப்பட்டது.
    சரஸ்வதி கல்விக் கடவுள். கல்விக்கான கடவுளையே பெண் வடிவில் சரஸ்வதியாக வழிபட்ட நாம், கடந்த நாட்களில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெண்களுக்குக் கல்வி உரிமையை மறுத்தோம் என்பது எத்தனை பெரிய வெட்கக் கேடு!
    ‘கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
    காட்சி கெடுத்திடலாமோ?
    பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
    பேதைமை அற்றிடும் காணீர்’
    என்றெல்லாம் பாரதியார் போன்றவர்கள் எழுதி எழுதி அல்லவா பெண்கல்வியின் முக்கியத்துவத்தை மக்களிடம் தோற்றுவிக்க வேண்டியிருந்தது?

    *பாரதியார் பற்பல இடங்களில் சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடியுள்ளார். `வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் வீணைசெய்யும் ஒலியிலிருப்பாள்` என்றும் `வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்` என்றும் `தாமரைப் பூவினிலே சுருதியைத் தனியிருந்துரைப்பாள்` என்றும் இன்னும் பலவிதமாக அவர் கலைவாணியைப் புகழ்கிறார்.

    பொதுவாக பாரதியார் பாடல்களில் சிலேடை மிக மிகக் குறைவு. ஆனால் பாஞ்சாலி சபதத்தில் அவர் பாடியுள்ள சரஸ்வதி வணக்கப் பாடலில் சிலேடை வருகிறது.

    ‘வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
    வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன்!
    பேணிய பெருந் தவத்தாள் - நிலம்
    பெயரளவும் பெயர் பெயராதாள்!’
    இந்த பூமி பெயர்கின்ற வரையிலும் சரஸ்வதி தேவியின் பெயர் பெயராமல் நிலைத்திருக்கும் என்கிறார் பாரதியார்.

    *ரிக் வேதத்தில் சரஸ்வதி என்ற பெயருடைய ஒரு நதியைப் பற்றிய குறிப்பு வருகிறது. வட இந்தியாவில் அலகாபாத் அருகேயுள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை யமுனை என்ற இரு புண்ணிய நதிகளோடு அந்த சரஸ்வதி நதியும் கலப்பதாய்ச் சொல்கிறார்கள்.

    ஆனால் சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. மூன்று நதிகள் கலக்கும் இந்தத் திரிவேணி சங்கமத்தில்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு ஒரு தனிக்கோயில் உண்டு. தமிழகத்தில் சரஸ்வதிக்குத் தனிக்கோயில் உள்ள ஒரே இடம் இதுதான்.

    இங்கு கன்னியாக வீற்றிருக்கும் கலைவாணி, தன்னை வழிபடுபவர்க்கெல்லாம் கல்விச் செல்வத்தை வாரி வழங்குகிறாள். ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று இந்தக் கோவிலுக்கு வந்து குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் சடங்கை நிகழ்த்தும் பெற்றோர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

    சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதியை வழிபட்டு அன்னையின் அருளால் அறிவுச் செல்வம் பெறுவோம்.   
    Next Story
    ×