search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலு வைக்கும் இல்லத்தில் சுபிட்சம் குடியிருக்கும்
    X
    கொலு வைக்கும் இல்லத்தில் சுபிட்சம் குடியிருக்கும்

    ஆன்மிக அமுதம் - கொலு வைக்கும் இல்லத்தில் சுபிட்சம் குடியிருக்கும்

    நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகளை வைப்பது என்பது சம்பிரதாயம். அதற்குக் குறைவாக வைத்தாலும் சரிதான். ஆனால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகள் இருக்க வேண்டும்.
    * நம் இந்திய ஆன்மிகத்தில் பெண்களுக்குத் தனி கௌரவம் அளிக்கும் ஒரு சிறப்பான பண்டிகை நவராத்திரி. எந்த இல்லத்தில் கொலு வைக்கப்படுகிறதோ அந்த இல்லத்தில் சுபிட்சம் கொலுவிருக்கும். `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி, ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி` என்பது கண்ணதாசன் வரிகள்.

    நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகளை வைப்பது என்பது சம்பிரதாயம். அதற்குக் குறைவாக வைத்தாலும் சரிதான். ஆனால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகள் இருக்க வேண்டும். ஒன்பது படிகளுக்கு அதிகமாக வைக்கும் மரபில்லை.

    நவராத்திரி ஒன்பது நாட்களும் மூன்று மூன்று நாட்களாகப் பகுக்கப்படுகின்றன. முதல் மூன்று நாட்கள் பார்வதிக்குரியவை. அதற்கடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியவை. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியவை.

    குணங்களைப் பொறுத்தும் இந்தப் படிநிலைகளை அமைப்பதாகச் சொல்வதுண்டு. கடைசி மூன்று படிகள் தமோ குணம் எனும் மந்த குணத்தைச் சார்ந்தவை. இடைப்பட்ட மூன்று படிகள் ரஜோ குணம் எனும் வீரத்தைச் சார்ந்தவை. மேலே உள்ள மூன்று படிகள் சத்துவ குணம் என்னும் ஞான நிலையைச் சார்ந்தவை.

    தமோ குணத்திலிருந்து வளர்ச்சி பெற்று ரஜோ குணத்தைக் கொண்டு வீர உணர்ச்சியோடு வாழ்ந்து, அதிலும் மேம்பட்டு சத்துவ குண வளர்ச்சி அடைந்து ஒருவன் ஞானியாக மலர வேண்டும் என்பதையே கொலுப் படிகள் குறிக்கின்றன.

    அதற்கேற்ற விதமாகவே கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கமும் தோன்றியிருக்கிறது. கீழே உள்ள மூன்று படிகள் பறவைகள் மற்றும் விலங்குகள். இவை பரிணாம வளர்ச்சியில் கீழ் நிலையில் உள்ளவை.

    இடைப்பட்ட மூன்று படிகளில் மனிதர்கள் மற்றும் வளர்ச்சி பெற்ற ஞானிகள் மகான்களின் பொம்மைகள்.

    மேலே உள்ள மூன்று படிகள் தெய்வங்களுக்கு உரியவை. அங்கே ராமர், கிருஷ்ணர், சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன், திருமால், லட்சுமி, சரஸ்வதி போன்ற கடவுளரின் பொம்மைகள் மேலிருந்து அருள்பாலிக்கின்றன.

    கொலு வைப்பதில் கூட வாழ்வியல் தத்துவத்தை உள்ளடக்கி இருப்பது நம் ஆன்மிகத்தின் தனிச் சிறப்பு.

    * நவராத்திரி நிறைவடைந்து பின்னர் பத்தாம் நாள் கொண்டாடப்படும் விஜய தசமி `வெற்றித் திருநாள்` எனப்படுகிறது. ஒன்பது நாள் தேவி மகிஷாசுரனுடன் போரிட்டு பத்தாம் நாள் அவனை வதம் செய்கிறாள். அதுவே விஜயதசமி நன்னாள் என்கிறது தேவி புராணம்.

    மகாபாரதத்தில் விஜயதசமி நாள் பற்றிய குறிப்பு வருகிறது. துரியோதனன் விதித்த நிபந்தனைப்படி பஞ்ச பாண்டவர்கள் ஓராண்டு யாருக்கும் புலப்படாமல் மறைந்திருந்து அஞ்ஞாத வாசத்தில் வாழ்கிறார்கள். அதற்கு முன்பாக அர்ச்சுனன் தன் வில்லையும் அம்பையும் ஒரு மரப் பொந்தில் பிறர் அறியாமல் மறைத்துக் கட்டி வைக்கிறான்.

    அர்ச்சுனன் ஓராண்டு மறைவாகக் கட்டி வைத்திருந்த வில்லையும் அம்பையும் மரத்திலிருந்து மறுபடி எடுத்துக் கொண்ட நாள் வெற்றியைத் தரும் விஜயதசமி நன்னாள் என்கிறது மகாபாரதம்.

    * நம் நாட்டில் வழங்கும் ராமாயணங்களில் ஒரு ராமாயணத்தில் நவராத்திரியைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமன் சீதையைப் பிரிந்து கடும் துயரத்தில் இருந்த காலகட்டம். ராவணனை வென்று சீதையை எப்படி மீட்கப் போகிறோம் என்ற கவலை ராமனை வருத்துகிறது.

    அப்போது ராமன் முன் தோன்றுகிறார் மகரிஷி நாரதர். ராமன் அவரிடம் ராவணனை வெல்ல என்ன வழி எனக் கேட்கிறான்.
    ‘அதற்கு ஒரே வழிதான் உண்டு. அன்னை பார்வதியின் கடாட்சத்தை நீ பெறவேண்டும். இதோ நவராத்திரி வருகிறது. ஒன்பதுநாள் விரதமிருந்து தேவியைப் பூஜை செய். நவராத்திரி காலத்தில் தன்னை வழிபடுபவர்களுக்கு அவள் கட்டாயம் அருள் புரிவாள். தேவி உன் முன் தோன்றுவாள். அப்போது ராவணனை வெல்லும் வலிமை உனக்கு வேண்டும் என தேவியிடம் வரம்கேள். உனக்கு வெற்றி நிச்சயம்!’ என்கிறார் நாரதர்.

    நாரதர் அறிவுரைப்படியே நவராத்திரி ஒன்பது நாளும் விரதமிருந்து தேவியை வழிபடுகிறான் ராமபிரான். ஒன்பதாம் நாள் தேவி ராமன் முன் பிரத்யட்சமாகிறாள். ராமன் `ராவணனை வென்று சீதையை மீட்கத் தனக்குச் சக்தி அருளவேண்டும்` என தேவியிடம் வரம் கேட்கிறான். `நீ நினைத்தது நடக்கும்` என வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்து வரமளித்து மறைகிறாள் தேவி.

    ராமன் நவராத்திரியை அடுத்த விஜயதசமி நாளன்று ராவணனுடன் போரிடுகிறான். அன்னை பராசக்தி தந்த வரத்தால் ராமனின் அம்புகள் விசேஷ வலிமை பெறுகின்றன. யாராலும் வெல்ல இயலாதவன் எனக் கருதப்பட்ட ராவணன், ராமன் எய்த அம்பால் மடிகிறான். அரக்கன் மாய்ந்ததை ஒட்டி உலகம் மகிழ்கிறது.

    நாரதர் மறுபடியும் ராமன் முன் தோன்றுகிறார். அவரை வணங்குகிறான் ராமன். `நவராத்திரி பூஜையின் மகிமையை எடுத்துச் சொல்லி, தன்னை தேவி பூஜை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியதால் அல்லவோ தனக்கு இந்த வெற்றி` என்று நெகிழ்கிறான். நாரதருக்கு குருதட்சிணையாக என்ன கொடுப்பது எனத் தெரியாது திகைக்கிறான். ராவண வதத்தால் விளைந்துள்ள உலக நன்மையே தனக்கான குரு தட்சிணை என்று கூறி நாரதர் மனம் மகிழ்கிறார் என்கிறது ராமாயணம்.

    நம் மனத்தில் உள்ள அரக்க குணங்களே ராவணன். நவராத்திரி பூஜையின் மூலம் தேவியை நாம் வேண்டிக் கொண்டால், கோபம், காமம், வஞ்சனை, பகைமை முதலிய அரக்க குணங்களை வதம் செய்து நம் மனத்தைக் காப்பாற்றி நம் செயல்களில் நாம் வெற்றிபெற அருள்வாள் பராசக்தி என்பதே இந்தக் கதை உணர்த்தும் தத்துவம்.

    ஷிர்டி பாபா ஸித்தி அடைந்த நாளும் நவராத்திரியை அடுத்து வரும் விஜயதசமி நாள் தான். எனவே உலகெங்கும் பரவியிருக்கும் ஷிர்டி பாபா அடியவர்கள், பாபாவை விசேஷ பூஜை செய்து வழிபடும் நாளாகவும் விஜயதசமி திகழ்கிறது.

    *நவராத்திரி பற்றி தேவி புராணம் சொல்லும் கதை ஒன்று உண்டு. சும்பன் நிசும்பன் ஆகிய இரண்டு அரக்கர்கள் உலகை நாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழித்தாலன்றி உலகம் உய்யாது என்ற முடிவுக்கு வந்தார்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்.

    எனவே சும்பனையும் நிசும்பனையும் வதம் செய்ய அவர்கள் மகாசக்தியைத் தோற்றுவித்தார்கள். அந்த மகாசக்தியிடம் மும்மூர்த்திகளும் ஆயுதங்களைக் கொடுத்தார்கள். தேவி சும்பன் நிசும்பனை வதம் செய்ய ஆவேசத்தோடு புறப்பட்டாள். ஆனால் தேவியைத் தடுத்தார்கள் சும்பன் நிசும்பனின் வேலையாட்களான  சண்டன் முண்டன் ஆகிய இருவரும். அவர்கள் தங்கள் அரசர்களான சும்பன் நிசும்பன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தேவி மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.

    தேவி கலகலவென நகைத்தாள். ‘என்னைப் போரில் வெல்பவரையே மணப்பேன்’ என்றாள். சண்டன் முண்டன் ஆகிய வேலையாட்களை வதம் செய்தாள். அதோடு நில்லாமல் சும்பன் நிசும்பன் ஆகிய இரு அரக்கர்களையும்  வதம் செய்தாள்.

    அந்தப் போர் மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அந்த ஒன்பது நாட்களே நவராத்திரிப் பண்டிகையாகக் கொண்டாடப் படுகின்றன. தீய குணங்களை தேவி வதம் செய்தாள் என்பதன் உருவகமே நவராத்திரியின் பின்னணியில் உள்ள தத்துவம்.

    எப்போதும் தந்தையை விடத் தாய்க்குக் குழந்தைமேல் பாசம் அதிகம். அதுபோல் உலகத் தந்தையான சிவனை விட, உலகத் தாயான பார்வதிக்கு அடியவர்கள் மேல் கருணை அதிகம். மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடமிருந்து காப்பாற்றுவதற்காக எமனை சிவபெருமான் இடது காலால் உதைத்தார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

    அதுவும் பார்வதி தேவியின் கருணையைப் பற்றிய செய்தியே. சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் சிவனின் இடப் பாகத்தில்தான் பார்வதி தேவி உறைகிறாள். எனவே சிவபெருமானின் இடதுகால் பார்வதி தேவிக்கு உரியது. அந்தக் காலே எமனை உதைத்துக் காலனை விரட்டி மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பாற்றுகிறது.

    காளிதாசர் காளி வடிவத்தில் இருக்கும் அன்னையைச் சரணடைந்து வாழ்ந்த சம்ஸ்க்ருதக் கவிஞர். அவர் இயற்றிய குமார சம்பவம், மேக சந்தேசம், சாகுந்தலம், ரகுவம்சம் முதலிய எல்லா நூல்களும் காளியின் கடாட்சத்தால் அவர் எழுதியவையே.

    *மகாகவி பாரதியார் சக்தி வழிபாட்டில் விருப்பமுள்ளவர். `ஓம் சக்தி சக்தி சக்தியென்று சொல்லு! சிவ சன்னிதியிலே தொழுது நில்லு`, ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்! பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்` என்பது போன்ற பல சக்தி வணக்கப் பாடல்களை எழுதியவர் அவர்.

    சென்னை பிராட்வேயில் இருந்த சுதேசமித்திரன் அலுவலகத்தில் அவர் பணிபுரிந்த போது அருகே உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி அவர் சென்று காளியை வழிபட்டு வந்தார். `யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்!` என்ற மகாகவியின் பாடலில் வரும் காளிதேவி சென்னை பிராட்வே காளிகாம்பாள் கோயிலில் உறையும் காளிதேவிதான். மராட்டிய மன்னனான சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து தேவியை வழிபட்டதாகவும் ஒரு குறிப்பு உண்டு.

    பாரதியின் சீடரான பாரதிதாசனும் ஒரு சக்தி வணக்கப் பாடலை எழுதியுள்ளார். `எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா` என்று தொடங்கும் பாரதிதாசனின் தொடக்க காலப் பாடல் பக்தி இலக்கிய வகையைச் சார்ந்தது. பாரதியாரால் பெரிதும் பாராட்டப்பட்ட பாடல் இது.

    தீய சக்திகளை தேவி வதம் செய்ததை நினைவுறுத்தியே ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கோரோனாவையும் தேவி வதம் செய்ய வேண்டும் என இந்த நவராத்திரி நன்னாட்களில் பிரார்த்திப்போம். 
    Next Story
    ×