search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்மிக அமுதம்
    X
    ஆன்மிக அமுதம்

    ஆன்மிக அமுதம் - தெய்வீகத் தருணங்கள்

    வள்ளலார் தாம் சொன்னபடியே பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களில் கரைத்துக் கொண்டு உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

    * மகான்கள் உடலை உகுத்து ஸித்தி அடையும் தருணங்களை தெய்வீகத் தருணங்கள் என்றே குறிப்பிட வேண்டும். அவர்கள் உடலை விட்டு நீங்கியதும் அதுவரை அவர்களின் உடலில் குடிகொண்டிருந்த தெய்வீக சக்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த தெய்வீக சக்தி இந்த உலகையும் அந்த மகான்களை வழிபடும் அன்பர்களையும் தொடர்ந்து ரட்சிக்கிறது.

    *ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸித்தி அடைந்தபோது, அவர் உடலைத் துறந்துவிட்ட செய்தியை தூய அன்னை சாரதாதேவியிடம் அடியவர்கள் ஓடிவந்து சொன்னார்கள்.

    ஓடோடி வந்தார் அன்னை சாரதாதேவி. பரமஹம்சரின் பொன்னுடலைப் பார்த்ததும் அவர் என்ன சொல்லிக் கதறினார் தெரியுமா?
    `அம்மா காளி! இனிமேல் நீ எங்கே குடியிருப்பாய்?` என்று சொல்லிக் கதறினார். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலில் குடியிருந்தது காளிதேவியின் சக்திதான் என்று அன்னை சாரதை தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

    காளியின் சக்தியைத் தன் உடலில் இறக்கிக் கொண்டு காளியாகவே வாழ்ந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தம் அடியவரான மதுர்பாபுவுக்குக் ஒருமுறை காளியாகவே காட்சி கொடுத்த சம்பவமும் அவர் வாழ்வில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் சுவாமி சாரதானந்தர் எழுதியுள்ள, ஸ்ரீராமகிருஷ்ண வரலாறுகளின் ஆதார நூலான `குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்` என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

    பரமஹம்சர் ஸித்தி அடைந்த பிறகு, அன்னை சாரதை கை வளையல்களைக் கழற்ற முனைந்திருக்கிறார். அப்போது பரமஹம்சர் மீண்டும் அவர் முன் தோன்றி `நான் எங்கே போய்விட்டேன்? இங்கே தானே இருக்கிறேன்? வளையல்களைக் கழற்றாதே!` என அறிவுறுத்தியிருக்கிறார்.

    பரமஹம்சர் தன்னுடனேயே தான் இருக்கிறார் என்ற தெளிவு அன்னை சாரதைக்குத் ஏற்பட்டது அந்த சம்பவத்தின் மூலம்தான். பரமஹம்சர் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அவர் பிறகு வளையல்களைக் கழற்றவில்லை.

    ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்றோர் தெய்வங்களின் அவதாரங்களாக மண்ணில் தெய்வமாகவே பிறக்கிறார்கள். ஸ்ரீராமர் தெய்வமே. ஆனால் தான் தெய்வம் என்பதை ஒளித்துக்கொண்டு மனிதனாக வாழ்ந்தார் அவர்.

    ஸ்ரீகிருஷ்ணரும் தெய்வமே. ஆனால் அவர் தாம் தெய்வம் என்பதை வெளிப்படுத்தித் தம்மை தெய்வம் என அறிவித்துக் கொண்டு வாழ்ந்தார்.

    பரமஹம்சர் போன்ற மகான்கள் பிறக்கும்போது சராசரி மனிதர்களைப் போலவே பிறக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் தாம் செய்யும் கடும் தவத்தின் மூலம் தெய்வ சக்தியைத் தங்கள் உடலில் இறக்கிக் கொண்டு அவர்கள் தெய்வமாக மாறுகிறார்கள்.

    *தமிழ்க் கவிஞர்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் பட்டினத்தார் ஸித்தி அடைந்த விதம் விந்தையானது.

    சென்னை திருவொற்றியூர்க் கடற்கரையில் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர். தன்னை ஒரு கூடையால் மூடச் சொல்வார். பின் வேறோரிடத்திலிருந்து திடீரெனத் தோன்றி நகைப்பார்.

    இப்படி இந்த விளையாட்டு ஒருமுறை அல்ல, பலமுறை நிகழ்ந்தது. ஒருமுறை தன்னைக் கூடையால் மூடச் சொன்ன அவர் பிறகு எந்த இடத்திலிருந்தும் நெடுநேரம் தோன்றவே இல்லை.

    சிறுவர்கள் அதிர்ச்சியோடு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள். உள்ளே யாரும் இல்லை. ஆனால் பளபளவென்று ஒளிவீசிக் கொண்டிருந்தது ஓர் அழகிய  சிவலிங்கம்.

    சிறுவர்கள் ஓடிப்போய்த் தங்கள் பெற்றோரிடம் இந்த அதிசய விவரத்தைச் சொன்னார்கள். பெற்றோர் சிவலிங்கத்தை விழுந்து வணங்கி, லிங்கமாக மாறிய பட்டினத்தாருக்கு  அங்கே ஓர் ஆலயம் அமைத்தார்கள். திருவொற்றியூரில் பட்டினத்தார் திருக்கோயில் தோன்றிய வரலாறு இது.

    *  ராமலிங்க வள்ளலார் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் இவ்வுலகில் தன் உருக்காட்டி எல்லா மானிடர் போலவும் வாழ்ந்தார். எண்ணற்ற அற்புதச் செயல்களைச் செய்தார்.

    மிகச் சிறந்த சொற்பொழிவாளரான அவர், தமது சொற்பொழிவுகள் மூலம் ஆன்மிகத்தைப் பிரசாரம் செய்துவந்தார். தேனினும் இனிய தமிழ்க் கவிதைகள் பலவற்றை இயற்றினார். அருட்பா என்றே அவரது கவிதைகள் அழைக்கப்படலாயின.

    அவர் தம் இறுதிக் கட்டச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி முடித்த பின்னர், தம் வாழ்வின் கடைசி மூன்று மாதங்கள் மோனத்தில் ஆழ்ந்தார்.

    பிறகு மூன்று மாதம் தாம் அனுசரித்துவந்த மோனத்தை விடுத்து, மீண்டும் பேசத் தொடங்கிய அவர், பல அரிய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு பல முக்கியமான அறிவுரைகளையும் தம் அன்பர்களுக்கு வழங்கினார்.

    இறுதியாய்ப் படுக்கையில் சாய்ந்துகொண்டார். தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருக்குமென்றும் சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக மாறி குருநிலை பெற்று சித்துகள் புரியும் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னரே அவர் உத்தரவிட்டபடி, கதவுகள் இழுத்து மூடப்பட்டன. அறையில் காற்றுப் போவதற்கும் இடம் கிடையாது.

    சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறந்து பார்த்த அன்பர்கள் பெரும் வியப்படைந்தார்கள். அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலாரின் உருவத்தின் எந்தச் சுவடும் அங்கே தென்படவில்லை.

    வள்ளலார் தாம் சொன்னபடியே பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களில் கரைத்துக் கொண்டு உலகெங்கும் நிறைந்துவிட்டார்.  

    *`ஒரு யோகியின் சுயசரிதை` என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய பரமஹம்ச யோகானந்தர் உடலை நீத்தபோது அவர்முன் எழுநூறு பேர் இருந்தார்கள். அமெரிக்காவில் போஸ்டன் நகரில் எழுநூறு பேர் முன்னிலையில் அவர் மகாசமாதி அடைந்தார்.

    `நான் உடலை விட்டுவிடப் போகிறேன்` என்று அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனால் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் பிரமுகர்கள் என்று பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தார்கள்.

    `இப்போது என் உடலை நான் விட்டுவிடப் போகிறேன்` என்று சொல்லி பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து தம் உடலை உகுத்தார் அவர்.

    இருபது நாட்களுக்கு மேல் அந்த உடல் எந்தச் சிதைவுமின்றி அப்படியே இருந்தது. இது மாபெரும் விந்தை என்று மருத்துவர்கள் சான்றுரைத்திருக்கிறார்கள்.  

    பரமஹம்ஸ யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வரகிரியும் தான் உயிர் நீக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்து விட்டுத்தான் காலமானார். தான் இறந்த மறுநாளே தன் உடலோடு பரமஹம்ச யோகானந்தருக்குக் காட்சி தந்தார் அவர்.

    *புதுச்சேரியில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர் உடலை உகுப்பதென முடிவு செய்தபோது ஸ்ரீஅன்னையும் ஸ்ரீஅரவிந்தரும் நீண்ட நேரம் ஒருவரையொருவர் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அரவிந்தர் வாழ்நாள் முழுதும் தாம் சேமித்திருந்த தெய்வ சக்தியைத் தன் நயனங்கள் வழியே அன்னைக்குக் கொடுத்திருக்கக் கூடும்.

    (ராமகிருஷ்ண பரமஹம்சர் உடலைத் துறப்பதற்கு முன் விவேகானந்தரை அழைத்து அவரையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த செய்தி அவர் வரலாற்றில் வருகிறது. கண்களின் வழியே தன் சக்தியை முழுவதுமாக அவர் விவேகானந்தருக்கு வழங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.)

    அரவிந்தர் ஸித்தி அடைந்தபோது அவர் காலமானதற்கான புற அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. இதயத் துடிப்பு நின்றிருந்தது. ஆனால் உடல் எந்தச் சேதமும் அடையாமல் வாடாமல் அப்படியே இருந்தது. இது ஒரு மருத்துவ அதிசயம் எனப் புதுச்சேரி மருத்துவர்கள் வியந்து சான்றுரைத்திருக்கிறார்கள்.

    ஸ்ரீஅரவிந்தரின் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. அதை ஏராளமான அடியவர்கள் வரிசை வரிசையாக வந்து தரிசித்தார்கள். அப்படி நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்த உடல் அப்படியே பூப்போல் இருந்தது.

    ஸ்ரீஅன்னை தனக்கு அரவிந்தரிடமிருந்து உத்தரவு கிடைத்த பின்னரே அவர் பொன்னுடலை அடக்கம் செய்ய முடியும் என்று கூறிக் காத்திருந்தார். அரவிந்தரிடமிருந்து அன்னைக்கு மானசீக உத்தரவு பின்னர் கிடைத்தது.

    அதன்பின் ஸ்ரீஅரவிந்தர் உடலைச் சுற்றியிருந்த அந்தப் பொன்னொளி மெல்ல மெல்ல உடலை விட்டு விலகி காற்றில் கலந்தது. அதன் பின்னர் நூக்க மரத்தால் ஆன பெட்டியில் அவர் உடல் வைக்கப்பட்டு சமாதி செய்விக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் ஓர் அன்பர் `தெய்வ சக்தியை மண்ணில் கொண்டுவர வேண்டும் என்றல்லவா நீங்கள் வாழ்நாள் முழுதும் தவம் செய்தீர்கள் சுவாமி? அந்தப் பணி இனி என்ன ஆகும்? அது தொடர்ந்து நடக்குமா?` என்று பெரும் துயரத்தோடு வினவினார்.

    அப்போது `ஹொபே ஹொபே ஹொபே` என மூன்று முறை ஸ்ரீஅரவிந்தரின் குரல் தெளிவாக ஒலித்தது.

    அரவிந்தரின் தாய்மொழி வங்காளி. வங்காள மொழியில் ஹொபே என்றால் நடக்கும் என்று பொருள். தெய்வ சக்தியை மண்ணில் கொண்டுவரும் தவம் தொடர்ந்து நடக்கும் என அவ்விதம் மூன்று முறை வாக்குறுதி அளித்துள்ளார் ஸ்ரீஅரவிந்தர்.

    *நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி வாழ்ந்தார். அவர் உடலைத் துறக்க முடிவு செய்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்ததும் புற்றுநோயால் தானே?

    மகரிஷி ரமணர் உடலை உகுத்த அதே நேரம் ஆகாயத்தில் ஓர் ஒளி தோன்றி விண்ணில் கலந்து மறைந்தது. அந்த ஒளியை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அந்த ஆச்சரியகரமான நிகழ்வை எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.

    *மகான்கள் என்றும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் உடலைத் துறந்த பின்னரும் ஆன்ம வாழ்வைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். மகான்கள் மறைந்தாலும் மறைவதில்லை என்பதே உண்மை. அவர்கள் நிரந்தரமாக என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    மகான்கள் இப்போதும் தம்மை நாடும் அடியவர்களின் உள்ளங்களில் தோன்றி அடியவர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.

    மகான்களில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களிடையே நாம் உயர்வு தாழ்வு கற்பிப்போமானால் அது பெரும் பாவமாகும்.

    யார் யாருக்கு எந்தெந்த மகான்மேல் ஈடுபாடு தோன்றுகிறதோ அந்தந்த மகானைத் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் மனச் சாந்தியையும் மனத்தில் தெளிவையும் பெற முடியும். மகான்களைப் பிரார்த்தித்து மனச்சாந்தி பெறுவோம்.

    Next Story
    ×