search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...பாபாவே குரு, கடவுள்

    ஒரு தீபத்தில் இருந்துதான் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியும். அதுபோலதான் குருவிடம் இருந்தே சாதாரண நிலையில் இருப்பவர்கள் குரு அந்தஸ்துக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

    சீரடி சாய்பாபாவை அப்பா என்றும், தாத்தா என்றும் பெரும்பாலானவர்கள் அழைப்பதை நாம் பார்த்து இருக்கலாம். அப்பா என்று அழைக்கும்போது ஆத்மார்த்தமான உரிமை ஏற்படுவதாக பலரும் சொல்வது உண்டு. அதாவது பாபாவை அவர்கள் தங்கள் குடும் பத்தில் ஒரு உறுப்பினராக கருதுவது போல நினைக்கிறார்கள்.

    ஆனால் உண்மையில் சீரடி சாய்பாபாவை அதையும் விட உயரமான இடத்தில் ஒவ்வொரு வரும் வைக்க வேண்டும் என்பது முக்கியம் ஆகும். அந்த வகையில் பாபாவை ஆத்மஞானம் தரும் குருவாக ஏற்பதே சாலச்சிறந்தது. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் குரு தான் முதன்மையான இடத்தில் இருக்கிறார். அதனால்தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம்  என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஒரு தீபத்தில் இருந்துதான் இன்னொரு தீபத்தை ஏற்ற முடியும். அதுபோலதான் குருவிடம் இருந்தே சாதாரண நிலையில் இருப்பவர்கள் குரு அந்தஸ்துக்கு தங்களை உயர்த்திக் கொள்ள முடியும். அதன் பிறகே குரு மூலம் தெய்வீகத்தை எட்ட முடியும்.

    எனவே முதலில் பாபாவை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றே பெரும்பாலான மகான்கள், ஞானிகள் சொல்லி சென்றுள்ளனர். உலகம் முழுக்க வாழும் லட்சக்கணக்கான மக்கள் சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு தங்களது ஆன்மீக பாதையில் மேம் பாட்டை எட்டியுள்ளனர்.

    சரி.... சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அதன் பிறகு அவரை எப்படி நெருங்க வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி அவரது கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று பலரும் யோசிக்கலாம். இதற்கு சரணாகதி தத்துவமே விடையாகும்.

    உடல், பொருள், ஆவி அனைத்தையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அல்லும் பகலும் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். தனது ஒவ்வொரு அணுவையும் குருவுக்கே சமர்ப்பிக்க வேண்டும். குருவிடம் எந்த அளவுக்கு நாம் பக்தியும், நம்பிக்கையும் வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு முக்தியும், யோக சக்திகளும் நமக்கு கிடைக்கும்.

    சீரடி சாய்பாபா இந்த வழியைதான் கையாண்டார். தனது குருவிடம் இப்படிதான் நடந்து கொண்டார். அதன் பிறகு தாமே குருவாக இருந்து தனது ஆத்மஞான அனுபவங்கள் அனைத்தையும் தன் ஒவ்வொரு பக்தருக்கும் கிடைக்கும்படி செய்தார்.

    “குருவிடம் பரிபூரண விசுவாசத்துடன் இரு. குருவே தெய்வம் என்று மனதார நம்பு. பார்க்கும் ஒவ்வொன்றையும் குருவாகவே நினைத்துக் கொள். அப்படி இருந்தால்தான் உண்மையான பக்தன் என்னை தன்னிலும் சகல உயிர்கள் இடத்திலும் காண முடியும். நாளடைவில் அவனே நானாகி விடுவேன்” என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வது உண்டு.

    இதன் அடிப்படையில் பார்த்தால் பாபா சமர்த்த சற்குரு ஆவார். தன்னை நம்பி வரும் பக்தர்களின் லௌகீக தேவைகள், ஆன்மீக தேடல்கள் இரண்டையும் சமர்த்த சற்குரு கவனித்துக் கொள்வார். அதுமட்டுமல்ல நிறைய பேருக்கு தாமாகவே முன்சென்று குருவாக இருந்துள்ளார்.

    காந்தம் இரும்பை ஈர்ப்பதை போல அவர் பக்தர்களை தன் வசம் ஈர்த்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “நானே கவர்ந்து இழுக்காமல் என்னை நாடி ஒருவரும் வந்தது இல்லை. பல காரணங்களை வைத்து அவர்களை என்னிடம் நான் இழுத்து விடுகின்றேன். ஒரு சிறுவன் நூலின் நுனியில் பறவையை கட்டி இழுப்பது போல நான் என் பக்தனை இழுத்துக் கொள்கிறேன். இது பூர்வஜென்ம தொடர்பு” என்று பாபா சொல்வது உண்டு.

    அதோடு பாபா விட்டு விடுவது இல்லை. தன்னிடம் இழுக்கப்பட்ட ஒவ்வொரு பக்தனுக்கும் பிரம்மஞானத்தை ஏற்படுத்த பலவகைகளிலும் அவர் முயல்வார். இதுபற்றி அவர் கூறுகையில், “என்னிடம் வந்த ஒவ்வொரு பக்தனிடமும் நான் 5 விஷயங்களை எதிர்பார்க்கிறேன். மனம், புத்தி, அகங்காரம், சிந்தனை, தன்னம்பிக்கை ஆகிய ஐந்தையும் தந்து என்னிடம் முழுமையாக சரண் அடைய வேண்டும். இல்லாவிட்டால் பணம், பொருள் என்ற உலகியலில் இருந்து அவனால் மீள முடியாது. அவனால் பிரம்மஞானத்தை அடையவே முடியாது” என்கிறார்.

    மேலும், “நமது வாழ்க்கையில் சூத்திர கயிற்றை சற்குரு விடம் நம்பிக்கையோடு ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தால்தான் எப்போதும் ஆனந்த நிலைக்கு செல்ல முடியும்” என்றும் சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வது உண்டு.

     இதன் மூலம் குருவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார். ஒரு தடவை அவர் குருவின் முக்கியத்துவம் குறித்து மிக அழகான விளக்கம் ஒன்றை தனது வாழ்வியல் நிகழ்வில் இருந்தே வெளியிட்டார். பாபா சொன்ன அந்த விளக்கம் வருமாறு:-

    என் குரு எதனுடனும் ஒப்பிட முடியாதவர். நிகரற்றவர். அன்பின் வடிவமானவர். அன்பின் வற்றாத ஊற்றாக அவர் இருந்தார். அவரிடம் நான் 12 ஆண்டுகள் இருந்து சேவை செய்தேன். என் மீது அவர் அளவு கடந்த அன்பை பொழிந்தார். அந்த அன்பின் ஆழத்தை நான் எதைக் கொண்டு அளந்து சொல்ல முடியும்?

    எப்போதும் நான் அவர் அருகிலேயே அமர்ந்து இருப்பேன். அவரை பார்த்துக் கொண்டே இருப்பேன். அவரை உற்றுப் பார்ப்பதையே நான் விரும்பினேன். சிறிது நேரம் என் கண் பார்வையில் அவர் இல்லாவிட்டாலும் எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் வந்து விடும். எனவே என் கண்கள் அவரை பார்த்துக் கொண்டு இருப்பதையே நான் விரும்பினேன்.

    என் குருவை தவிர எல்லாவற்றையும் நான் மறந்தேன். என் உயிர் என் பார்வையிலும், என் பார்வை என் குரு மீதும் நிலைத்து நின்றது. ஒவ்வொரு வினாடியும் என் உயிர் பார்வை அப்படிதான் இருக்கும். என் லட்சியமே அதுதான். மவுனமாக நான் இதை ஒவ்வொரு நாளும் செய்தேன்.

    அதே போன்றுதான் என் குருவும் என்னை நோக்குவார். நாங்கள் இருவருமே அந்த சமயத்தில் பேரானந்தத்தை உணர்வோம். அளவிட முடியாத ஆனந்தம் எங்களை நிரப்பி இருக்கும். அத்தகைய சமயங்களில் நான் என் குருவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன். எதன் மீதும் என் கண்களை நான் திருப்ப மாட்டேன். திருப்பவும் முடியாது.

    எனது குருவின் அன்பால் இரவு-பகலாக என்னையே மறந்து கிடந்து இருக்கிறேன். குருவின் பார்வை அன்பால் நிறைந்தது. என் பசியையும், தாகத்தையும் மறக்க வைத்தது. எனவேதான் என் குருவை மட்டுமே நான் தியானம் செய்தேன். குரு தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்குள் ஏற்பட்டது இல்லை. வேறு எந்த குறிக்கோளும் எனக்கும், என் குருவுக்கும் இடையில் வந்ததே இல்லை.

    என் ஒரே இலக்கு என் குருநாதர் மட்டுமே. அப்படி என்னை கட்டிப்போட்டு வைத்திருந்த குருவின் கலை இப்போதும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவரது அன்பை என்னால் விவரிக்கவே இயலாது. அந்த அன்பை தவிர எனக்கு வேறு எதுவும் தேவைப்படவில்லை. அதுபோலவே அவருக்கும் வேறு எதுவும் தேவைப்படவில்லை. அன்பை மட்டுமே என்னிடம் இருந்து என் குரு எதிர்பார்த்தார்.

    ஒரு நிமிடம் குரு என்னை விட்டு பிரிந்தாலும் நான் கலக்கம் அடைந்து விடுவேன். அவரை பார்த்த பிறகே எனக்குள் ஆனந்தம் பூத்து குலுங்கும். அவரது கடைக்கண் பார்வையால் அவர் என்னை பாதுகாத்து கொண்டே இருந்தார்.

    என் குரு பெரும்பாலும் எதுவும் செய்யாதது போல காணப்படுவார். ஆனால் அவரது அன்பு பார்வை என் மீது வந்து வந்து சென்று கொண்டே இருக்கும். அதுதான் என்னை மேம்படுத்தியது.

    மற்றபடி என் குரு எனக்கு எந்த மந்திரத்தையும் சொல்லி தரவில்லை. மற்ற குருமார்கள் போல என் காதுக்குள் வந்து அவர் எதையும் ஓதியதே கிடையாது. அவருடைய நிகரற்ற கருணை ஒன்றினால் மட்டுமே நான் இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

    அவருடைய அருள் ஆசிதான் என்னை ஆத்மஞான வளர்ச்சி அடைய செய்து மேம்படுத்தியது. எனவே எவன் ஒருவன் தன் எண்ணங்கள், குறிக்கோள்கள் ஆகிய அனைத்துக்கும் குரு ஒருவரையே ஒரே லட்சியமாக கொள்வதன் மூலம் மிக உன்னதமான இலக்கை  அடைய முடியும். என் குரு எனக்கு போதித்த உண்மை இது ஒன்றுதான்.

    இந்த உண்மையை அறிய முடியாமல் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். குருவிடம் முழுமையாக சரண் அடைந்தால் மட்டுமே உன்னதமான இலக்கை எட்டி பிடிக்க முடியும். மற்றபடி இதற்கு நான்கு விதமான சாதனைகளும், ஆறு விதமான சாஸ்த்திரங்களும் தேவையே இல்லை.

    குருவை பரிபூரணமாக நம்பி இருப்பது ஒன்று மட்டுமே போதுமானது. குருவை முழுமையாக நம்பினால் ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்துக்கு தாமாக சென்று விட முடியும்.

    இவ்வாறு சொல்லிய பாபா சிலரிடம், “உனக்கு குரு வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாம் உனக்கு உள்ளேயே இருக்கிறது. உள்நோக்கி கேட்பதற்கு முயற்சி செய். அது தரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொள். அந்த    உத்தரவுதான் உனக்கு குரு. அப்படி செய்தால் ஆன்மீக மேம்பாடு பெறுவாய்” என்று சொல்லியது உண்டு.

    இது அந்தந்த பக்தனின் முதிர்ச்சியை அளவிட்டு பாபா சொன்ன வார்த்தைகள் ஆகும். மற்றபடி குருவின் முக்கியத்துவத்தை பாபா ஒவ்வொரு நாளும் உணர்த்த தவறியதே இல்லை.

    ஒரு தடவை சீரடி சாய்பாபா தனது பக்தர்களிடம், “நீங்கள் அனைவரும் குருவை அறிய வேண்டும். இல்லாவிட்டால் எதற்காக சீரடிக்கு வருகிறீர்கள். வரட்டிகளை சேகரிக்கவா வருகிறீர்கள்....” என்று கோபத்தோடு கேட்டார். அந்த அளவுக்கு குருவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் பாபா உறுதியாக இருந்தார். எனவே இன்றே சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்று சரண் அடையுங்கள்.

    அதன் பிறகே சீரடி சாய்பாபா நம்மை காக்க வந்த அவதாரப்புருஷர் என்பதை நீங்கள் முழுமையாக உணர முடியும். அப்படி உணரும்போது பாபா நம் இஷ்ட தெய்வம் என்பது ஒளிக்கீற்றாக தோன்றி மனதுக்குள் புரிய வைக்கும். இந்த புரிதலுக்கு பாபாவை குருவாக ஏற்று சரண் அடைவது ஒன்றே வழி.

    அப்படி அடைந்தால் மட்டும் போதுமா? பாபாவிடம் நம்பிக்கை வேண்டும் அல்லவா? பாபாவும் தன்னிடம் வரும் ஒவ்வொரு பக்தருக்கும் நம்பிக்கை, பொறுமை இரண்டும் அவசியம் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
    Next Story
    ×