search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீரடி சாய் பாபா
    X
    சீரடி சாய் பாபா

    ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை

    சீரடி சாய்பாபா காட்டும் பாதை, மலர்கள் நிறைந்த நறுமணமிக்க நந்தவனம் போன்றது. ஆனால் அந்த நந்தவனப்பாதையை நாடிச் சென்றவர்கள் மிக மிக குறைவு.
    சீரடியில் சாய்பாபா சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த 60 ஆண்டுகளில் அவர் தினம், தினம் நினைத்துப் பார்க்க முடியாத எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தினார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் சம்பவங்களை சீரடியில் இருந்து கொண்டே அவர் சொன்னார். ஏராளமான முன் பிறவிகளையும் அவர் தெள்ளத்தெளிவாக தனது பக்தர்களிடம் தெரிவித்தார்.

    இத்தகைய சிறப்பு காரணமாக அவரைத் தேடி நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் அலை, அலையாகச் சென்றனர். அந்த பக்தர்களிடம் அவர் ஒரே மாதிரி நடந்து கொண்டார். ஆனால் அருளாசி வழங்கும் போது ஒவ்வொரு பக்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான வார்த்தைகளை வெளியிட்டு ஆசீர்வதித்தார். சிலரை பார்த்ததும் முகம் மலர வரவேற்பார். சிலரை நாற்பது பிறவி நட்பு என்பார்.

    சிலரை அவர் தான் வீற்றிருந்த துவாரகமயி மசூதியின் வாசல் படியைக்கூட மிதிக்க விட்டதில்லை. திட்டி மிரட்டி, அதட்டி திருப்பி அனுப்பி விடுவார். ஆனால் அவர் எந்த பக்தரிடமும் எத்தகைய பேதத்தையும் காட்டியதே இல்லை. ஜாதி, மத, இன பேதமின்றி அவர் அனைவரிடமும் ஒரே மாதிரி பரமாத்மா போல வாழ்ந்தார்.

    ஒவ்வொரு நாளும் அவர் தெய்வீகம் பூத்து குலுங்கும் பூந்தோட்டமாகக் காணப்பட்டார். ஒவ்வொரு நாளும் தன்னை அணுகும் பக்தர்களுக்கு தனது தெய்வீக பூங்காவில் இருந்து மலர்களை எடுத்து அள்ளிஅள்ளி வீசினார்.

    ஒரு நபர் தன்னை நோக்கி வரும் போதே அவரை பற்றிய முழு விவரங்களும் சீரடி பாபாவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து விடும். அந்த நபர் யார்? எங்கிருந்து வருகிறார்? முன் ஜென்மங்களில் எத்தகைய பாவங்கள், புண்ணியங்கள் செய்திருந்தார். இப்போது அவற்றை எப்படி அனுபவிக்கிறார் என்பவற்றையெல்லாம் புட்டு புட்டு வைத்து விடுவார்.

    எத்தனை மைல் தொலைவில் இருந்தாலும் அவரது பார்வையில் இருந்து யாருமே தப்ப இயலாது. இத்தகைய தெய்வீக நிலையில் இருந்ததால்தான் சீரடி சாய்பாபாவால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி யான ஆன்மீக அணுகு முறையை மேற்கொள்ள முடிந்தது. ஒரு நபருக்கு எந்த அளவுக்கு ஆன்மீக தேடல், ஆர்வம், பக்குவம், வளர்ச்சி உள்ளது என்பதை அவர் நொடியில் புரிந்து கொள்வார்.

    அந்த அடிப்படையில் அந்த நபருக்கு எந்த அளவுக்கு ஆன்மீக வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள் வார். அதற்கு ஏற்ப அந்த நபருக்கு ஆன்மீக வளர்ச்சியை பாபா கொடுப்பது வழக்கம். சாய்பாபா சீரடியில் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் இது நடந்தது.

    முதலில்  பக்தர்கள் தற்போதைய வாழ்க் கைக்கு தேவையான அனைத்து வசதி களையுமே கேட்ப துண்டு. பாபாவும் மறுக்காமல் அதை கொடுத்து விடுவார். அந்த தேவைகளை நிறைவு செய்த பிறகு  பக்தர்களை தனது ஆன்மீக மேம்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வருவார்.

    அப்படி ஆன்மீக வளையத்துக்குள் வந்த பக்தர்கள் ஆத்ம ஞானம் பெற்று பாபாவோடு ஒன்றிணையும் வாய்ப்பை பெற்றார்கள். பாபா காட்டிய பாதையில் சென்ற அவர்களுக்கு ஆத்ம ஞானம் பல மடங்கு மேம்பட்டது. பலர் தங்களை அப்படி மேம்படுத்திக் கொண்டனர்.

    ஆனால் பெரும்பாலான பக்தர்கள் பாபா விடம் தற்போதைய நிகழ்கால வாழ்க்கைக்கு தேவையான சொகுசுகளை மட்டுமே கேட்டுப் பெற்றுக்கொண்டு, அதோடு திருப்தி அடைந்து விட்டனர். அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை. பாபா சொன்ன அறிவுரை களை முழுமையாக ஏற்பதில்லை. அல்லது கண்டு கொள்வதில்லை.

    அதற்கு காரணம் அத்தகைய பக்தர்களிடம் பக்குவம் இல்லாமல் இருந்ததுதான்- இருப்பதுதான். என்றாலும் சீரடி பாபா எந்த பக்தரையுமே விடுவதில்லை. தினம் தினம் தனது அருள் உரைகளை அள்ளி வீசிக்கொண்டே இருந்தார். அந்த உரைகள் அனைத்தும் தத்துவங்களாகவும், மிகப்பெரிய ஆன்மீக பழமொழிகளாகவும் உள்ளன.

    குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சீரடி சாய்பாபா தினமும் அருள் அமுதம் பொழிந்தார். சில சமயம் அருள் மழை பெய்யும். இதற்காக அவர் நிறைய உரையாற்றினார் என்று நினைக்காதீர்கள்.

    பக்தர்களை கூட்டமாக கூட்டி வைத்து உரை நிகழ்த்தும் பழக்கம் அவரிடம் இருந்தது இல்லை. 90 சதவீத நேரம் மவுனமாகவே இருந்தார். 10 சதவீத நேரம்தான் பேசியுள்ளார். அப்போதெல்லாம் அருள் வார்த்தைகள் அவர் வாயில் இருந்து துள்ளி வரும்.

    அப்படி அருள் வார்த்தைகள் சொல்லும் போது நேரடியாக எதையும் சொல்ல மாட்டார்.  பூடகமாக அவர் தனது வார்த்தைகளை வெளியிடுவார். ஞானிகளின் சங்கேத பாஷையாக அவை இருக்கும். அந்த சங்கேத பாஷைகளை புரிந்து கொள்வது மிக மிக கடினமாகும்.

    பெரும்பாலும் பாபா சங்கேத பாஷையில் பேசும் போது சுற்றி இருப்பவர்களில் யாருக்குமே எதுவும் புரியாது. பாபா என்ன சொல்ல வருகிறார் என்று மண்டையை உடைத்து கொள்வார்கள். நீண்ட நேர யோசனைக்கு பிறகுதான் பாபா சொன்னதின் அர்த்தம் அவர்களுக்கு புரிய வரும்.

    பொதுவாக அவதார புருஷராக அவதரிப்பவர்கள் சொல்வதை யாராலும் எடைபோட முடியாது. அந்த சொற்கள் சிந்தாந்தங்களின் அடிப்படையில் இருக்கும். அவதார புருஷர்களின் தியானத்தை, தெய்வீகத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    பாபா அடிக்கடி தன்னை சூழ்ந்து நிற்கும் பக்தர்களிடம், “அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். உங்களுக்கு தேவையானதை நிச்சயம் செய்து தருவேன். நம்பிக்கையோடு இருங்கள்” என்று சொல்வது வழக்கம்.

    பாபா மற்ற மகான்கள் போல மந்திரம், தந்திரங்கள் செய்ததில்லை. பூஜை, பஜனை என்று ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் அனுமதித்ததில்லை. யோகாசனம், பிராணாயாமம் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை.

    இயற்கையான மன இயல்புடன் ஒவ்வொரு பக்தனும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதில் சீரடி பாபா எப்போதுமே கவனமாக இருந்தார். “நான் என் பக்தனின் பிடியில்தான் இருக்கிறேன். அவர்கள் பக்கத்திலேயே நிற்கிறேன். எப்போதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன். துன்பம் ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் அழைக்கும் போது ஓடோடி வருகிறேன்” என்று சொல்வார்.

    சாய்பாபா வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் ஏராளம். அவை விலைமதிக்க முடியாதவை. எந்த காலத்துக்கும் ஏற்றவை.

    சாய்பாபா சொன்ன தத்துவங்களை தாஸ்கணு, நானாசந்தோர்கர், கபர்டே ஆகியோர் குறிப்புகளாக எழுதி வைத்தனர். வக்கீல் தொழில் செய்து வந்த கபர்டே சில ஆண்டுகள் சீரடியில் பாபாவுடன் தங்கி இருந்தார். அப்போது பாபா சொன்ன தத்துவ முத்துக்கள் அனைத்தையும் அவர் தனது டைரியில் எழுதினார். இன்றும் அவை பொக்கிஷங்களாக உள்ளன.

    கபர்டே எழுதிய ஒரு குறிப்பில், “பாபா ஒரு யோக நிலை பார்வை பார்ப்பார். அந்த பார்வை பட்ட நாட்களில் எல்லாம் நான் ஏகாந்த ஆனந்தத்தில் மூழ்கி இருப்பேன்” என்று எழுதி உள்ளார். இத்தகைய அனுபவத்தை பாபாவை நேரில் சந்தித்த பலரும் உணர்ந்துள்ளனர்.

    பாபா ஒவ்வொரு நாளும் 3 தடவை பக்தர்களுக்காக துவாரகமயி மசூதியில் வந்து அமர்வார். அதை தர்பார் என்று சொல்வார்கள். காலை உணவு முடிந்ததும் ஒரு தடவை. லெண்டி தோட்டத்துக்கு சென்று விட்டு வந்ததும் 2-வது தடவை, மாலை 5 மணிக்கு 3-வது தடவை என்று மூன்று தடவை அவர் பக்தர்களுக்கு கருத்துக்களை வாரி வழங்குவார்.

    குருவையே கடவுளாக கொண்டு, குருவிலே இறைவனை அடையாளம் காண்பது தான் பாபா காட்டிய பக்தி வழிகளில் முக்கியமானதாகும். அவர் அடிக்கடி சொல் லும் ஒரு வார்த்தை.... “என்னையே எண்ணி கொண்டு, எனக்கு படைக்காத உண வினை சாப்பிட மாட் டேன் என்று சொல்லும் பக்தனுக்கு நான் அடிமை. என்னையே எப்போதும் நினைத்து வாழும் பக்தனுக்கு நான் சேவகன். இத்தகைய பக்தர்கள் மனதில் நான் என்றும் குடியிருப்பேன்” என்று சொல்வதுண்டு.

    இந்தவகையில் சீரடி சாய்பாபா ஒவ்வொரு நாளும் தனது பக்தர்களின் துன்பங்கள், துயரங்களை களைந்து அவர்களை முக்தி பாதைக்கு கரையேற்றுவதையே தினசரி தொழிலாக கொண்டிருந்தார். எனது பக்தன் முக்தி பெறுவதற்காக எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுப்பேன் என்று சீரடி சாய்பாபா அடிக்கடி சொல்வதுண்டு.

    சுருக்கமாக கூறுவதென்றால் ஞானம், கர்மம், பக்தி, தியானம் ஆகிய நான்கை நினைத்து ஆத்மஞானத்தை பெறுவதற்கான வளர்ச்சியை ஒவ்வொரு பக்தனுக்குள்ளும் ஏற்படுத்தும் அபரிமிதமான பணிகளை பாபா தினம் தினம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்கள்தான் இப்போதும் பாபா பக்தர்களின் மத்தியில் சிறு சிறு பழமொழிகளாகவும், பொன் மொழிகளாகவும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் நாம் மிகப்பெரிய கட்டுரைகளை படிப்பதில்லை. சிறிய சிறிய குறிப்புகளைதான் படிக்க விரும்புகிறோம். சில வரிகளில் இருக்கும் தகவல்களையே பெரும்பாலானவர்கள் விரும்பி படிக்கிறார்கள். பாபாவும் அப்படித்தான் ஒவ்வொரு தடவையும் சிறிய சிறிய குறிப்புகளை மட்டுமே வெளியிட்டார்.

    அவர் தனக்காக எந்த சித்தாந்தத்தையும் தொடங்கவில்லை. சீடர் வைத்துக் கொள்ள வில்லை. மடம் அமைக்கவில்லை. கொள்கை எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் ஆத்ம ஞானத்தை ஒவ்வொருவர் மனதிலும் விதைத் தார். அவர் எல்லா உயிர்களிலும் தன்னை கண்டார். மற்றவர் களையும் அதேபோல வாழும்படி அறிவுறுத்தினார்.
    இப்படி பாபா காட்டிய வழிகள் ஏராளம்.

    Next Story
    ×