search icon
என் மலர்tooltip icon

    கென்யா

    • இந்தியர்கள் காணாமல் போனது குறித்த விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை .
    • கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் முயற்சி.

    நைரோபி:

    கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த கார் டிரைவர் நிகோடெமஸ் முவானியாவையும் காணவில்லை என கூறப்படுகிறது.

    இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, காணாமல் போன இரண்டு இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் கென்ய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    தலைநகர் நைரோபியில் உள்ள இந்திய தூதர் நம்க்யா கம்பா, கென்ய அதிபர் வில்லியம் சமோய் ருடோவை சந்தித்து காணாமல் போன இந்தியர்கள் குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    கடத்தலை அடுத்து நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து தகவல் எதுவும் இல்லாமை மிகவும் கவலையளிக்கிறது என்றும், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய தூதரகம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்தது.
    • இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார்.

    நைரோபி:

    ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார்.

    கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார்.

    இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது.

    இந்நிலையில், வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது அதிபரக பதவியேற்றார். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.

    • தனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் இருப்பதாக கலுஹானா கூறுகிறார்.
    • ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனைவிகள் தெரிவிக்கின்றனர்.

    நைரோபி:

    கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த மனைவிகள்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று உள்ளது.

    இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார் கலுஹானா. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் இவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது.

    அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான் உள்ளார். அவருக்கு மொத்தம் 1000 மனைவிகள் இருந்தனர். நானும் அரசர் சாலமோன் போன்றவன். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும்'' என்றார்.

    இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என்றார்.

    இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்'' என்றார்.

    இந்த மெகா குடும்பத்தைப் பற்றிய ஆவணப்படம் வெளியான இரண்டு நாட்களுக்குள் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் கடும் விமர்சனமும் செய்துள்ளனர். 'அனைவரும் நன்றாக இருப்பதாக மனைவிகள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சொல்வதை என்னால் உணர முடியவில்லை.. அவர்கள் கண்களில் சோகத்தை மட்டுமே நான் காண்கிறேன்" என்று ஒரு பயனர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

    எது எப்படியோ... இன்று கென்யாவின் கல்யாண மன்னனாக கலுஹானா வலம் வருகிறார்.

    • ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
    • இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார்.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    ஒடிங்காவின் பிரச்சாரத்தில் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் அறிவிப்பு தாமதமானது.

    இந்நிலையில், கென்யா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட துணை அதிபர் வில்லியம் ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 50.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூடோ தனது உரையில், தேர்தலை மேற்பார்வையிட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. அனைவருக்கும் அதிபராக இருக்க விரும்புகிறேன். எங்களுக்கு எதிராக பல காரியங்களைச் செய்தவர்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்புகிறேன். பழிவாங்கும் எண்ணம் இருக்காது. திரும்பிப் பார்க்க எங்களிடம் ஆடம்பரமில்லை என தெரிவித்தார்.

    55 வயதான ரூடோ அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.
    • பெண் வாக்காளர்களை கவர்வதற்காக காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள்.

    நைரோபி :

    ஆப்பிரிக்க பாரான கென்யாவில் வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடுகிற அந்த நாட்டின் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின்போது தங்களது ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு விட்டனர். அவர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.

    நமது நாட்டில் வேட்பாளர் வாக்காளர்களைக் கவர்வதற்கு டீக்கடையில் டீ தயாரித்தார், புரோட்டா கடையில் புரோட்டா போட்டார் என்றெல்லாம் செய்திகளை அறிந்திருக்கிறோம்.

    ஆனால் கென்யாவில் ஒருபடி மேலே போய்விட்டார்கள். அங்கு தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் துர்நாற்றம் வீசுகிற பொதுக்கழிவறைகளை துடைப்பத்துடனும், வாளியுடனும் சென்று சுத்தமாய்க் கழுவி விடுகிறார்கள். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக வீடுகளுக்கு ஓட்டு வேட்டையாட செல்கிறபோது வேட்பாளர்கள் காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள். நைரோபி கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற இகாதே என்ற வேட்பாளர் (படத்தில் இருப்பவர்) பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்வதுடன், வாக்காளர்களின் கார்களைக் கழுவி விடுகிறாராம். அவர் இரவு விடுதிகளில் மது பரிமாறும் வேலையிலும் ஈடுபடுவது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    ஆனால் அரசியல்வாதிகளின் இந்த விளம்பர நாடகம், வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் இந்த நாடகங்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    நைரோபி வாக்காளர் ஆனி வாம்புய் இதுபற்றி சொல்லும்போது, "தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வரையில் அரசியல்வாதிகளுக்கு சந்தைகள் எங்கே இருக்கின்றன என்பதுகூட தெரியாது. நாங்கள் இந்த நகரத்தில் வாழ்வதற்காக போராடுகிறோம். ஆனால் விலை உயர்ந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறவர்கள், எங்கள் ஓட்டுகளை விரும்புகிறபோது, எங்களைப் புரிந்துகொள்வதுபோல நடிக்க வருகிறார்கள்" என வேதனை தெரிவித்தார்.

    ஆனாலும் அரசியல்வாதிகள் ஓட்டு வேட்டையின்போது புதுப்புது உத்திகளை பின்பற்றுவது கென்யாவில் குறையவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆற்றுபாலம் மீது பேருந்து சென்று போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் மேற்கொண்டது.

    மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுபாலம் மீது அந்த பேருந்து சென்று போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மெரு மாவட்ட ஆணையர் நோர்பர்ட் கொமோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

    ×