என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
    • விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    மணலி பல்ஜிபாளையம் சின்ன சேக்காடு அருகே மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இங்கு சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகள் மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்குநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரான சரவணகுமார் (வயது 25) பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் கண்காணிப்பு அறையில் சரவணகுமாரும், பொன்னேரியைச் சேர்ந்த லாரி டிரைவரான பாஸ்கரும் (35) பணியில் இருந்தனர்.

    அவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பயோ கியாஸ் எந்திரத்தை நிறுத்தினர். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்த பயோ கியாஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் அறையின் சுவர் முழுவதும் இடிந்து தரை மட்டமானது.

    இதில் என்ஜினீயர் சரவணகுமாரும், டிரைவர் பாஸ்கரும் சிக்கிக்கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த லாரி டிரைவர் பாஸ்கரை படுகாயத்துடன் மீட்டனர். ஆனால் என்ஜினீயர் சரவணகுமார் மீது கட்டிட இடிபாடுகள் பெரிய அளவில் இருந்ததால் உடனே அவரை மீட்க முடியவில்லை.

    தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி என்ஜினீயர் சரவணகுமாரை பிணமாக மீட்டனர்.

    பாய்லர் கியாஸ் வெடித்த சத்தம் கேட்டதும் அருகே குடியிருந்தவர்கள் ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டது என நினைத்து வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே வந்தனர். அவர்களுக்கு சற்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பயோ கியாஸ் வெடித்த போது குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் அதிர்ந்து குலுங்கின. இந்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    விபத்து ஏற்பட்ட பகுதியை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விபத்து காரணமாக நள்ளிரவு 2 மணி வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. குடியிருப்புக்கு அருகே உள்ள பயோ கியாஸ் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அதிகாரிகளி டம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கியாஸ் வெடித்த போது தீ அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவி இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். மேலும் இரவு நேரம் என்பதால் அதிக அளவிலான தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலையில் இல்லை. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
    • 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.

    7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.

    • நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் மேம்பாலப் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
    • புதிய மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் சென்னை - அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் அமைந்து உள்ளது.

    இந்த ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருவதால் ரெயில்வே அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

    இதன் காரணமாக அவ்வழியே செல்லும் செவ்வாப்பேட்டை, திருவூர், தொழுவூர், அரண்வாயில், தண்ணீர் குளம், வெள்ளக்குளம், சிறுகடல், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து தெற்கு ரெயில்வேயும், மாநில நெடுஞ்சாலைதுறையும் இணைந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரெயில்வே கேட் அகற்றப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. செவ்வாய்பேட்டை ரெயில்வே கேட்டின் ஒருபுறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்து உள்ளது. அதே நேரத்தில் ரெயில்வே கேட்டின் மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் அந்த நிலங்களின் உரிமையாளர்கள், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. பின்னர் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் மேம்பாலப் பணிகளை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

    இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பால பணி முடிந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்வி வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் புதிய மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.
    • தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    நெல்லை:

    நெல்லை டவுன் புட்டா ரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மினிகுடி தெருவை சேர்ந்தவர் மாதவன். இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது ஒரே மகன் கிருஷ்ண சங்கர் (வயது 22). இவர் சென்னையில் சி.ஏ. படித்து வரும் நிலையில் கல்லூரி இன்டர்ன்ஷிப் பணிக்காக தனது நண்பர்களுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே கல்லூரிக்கான பணிகள் முடிந்த நிலையில் தந்தையுடன் துபாயில் விடுமுறையை ஒரு வாரம் தங்கி இருந்து கழிக்க முடிவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தனது தந்தையுடன் கடந்த 12-ந்தேதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் குளித்தபோது நிலை தடுமாறி அதிக ஆழமான பகுதியில் கிருஷ்ண சங்கர் மூழ்கினார். இதைக்கண்ட அவரது தந்தை மாதவன், மகனை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த போது இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதையடுத்து 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்கு பின் சிந்து பூந்துறை மின் மயானத்தில் 2 பேரின் உடல்களும் எரியூட்டப்பட்டது.

    சுற்றுலா சென்ற இடத்தில் தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனிடையே கணவனும், மகனும் இறந்த துக்கம் தாங்காமல் மாதவனின் மனைவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது.
    • பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா?

    அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.

    இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
    • மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

    புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.

    இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

    தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே..

    உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.

    அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!

    கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

    அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

    மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.

    மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.

    இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.

    1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?

    தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.

    ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.

    ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.

    எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

    கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.

    ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.

    மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.

    இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது!
    • இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 28.08.2024 அன்றே எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.

    அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் "அஞ்சு கட்சி அமாவாசை" பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். (சிறையில் செய்தித்தாள்கள் படிக்கவில்லை போலும்!)

    தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே, "அண்ணா- புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கையே தொடரும்" என ஆகஸ்ட் 2020ல் அறிவித்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடியார்.

    இந்தித் திணிப்பு எந்த வடிவில் வந்தாலும், அது மத்திய அரசின் கல்வி கொள்கையே ஆனாலும், அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்; அதற்கான மிக வலுவான குரல் எங்கள் எடப்பாடியார் அவர்களின் குரலாகத் தான் இருக்கும்!

    இருமொழிக் கொள்கையை எப்போதும் வலுவாக நிலைநிறுத்திய அ.தி.மு.க. தான் ஒரிஜினல் "திராவிட இயக்கம்"!

    தங்கள் பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, மேடையில் மட்டும் நாடாகமாடும் திமுக, எப்போதும் பொய்வேட "ஸ்டாலின் மாடல்" மட்டுமே!

    தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது!

    இவர்களின் அரசியல் விளையாட்டால் உண்மையில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் தான் என்பதை உணர வேண்டும்!

    கல்விக்கொள்கை உட்பட எந்த ஒரு காரணத்தைக் காட்டியும், நம் மாணவர்களுக்கு சேர வேண்டிய நிதி ஒருபோதும் தடைபடக் கூடாது! எனவே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 



    • விவரங்களை நீதிமன்றத்தில் பின்னர் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

    பெங்களூரு:

    வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் நகைகள் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள், 1,526 ஏக்கர் நிலங்களின் பத்திரங்கள் பெங்களூரு, விதான சவுதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்படடிருந்தன.

    அந்த ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்களை தமிழக அரசு பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மறு உத்தரவிட்டது.

    ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் மற்றும் நிலப் பத்திரங்கள், பழைய ரொக்கப்பணம் அனைத்தையும் தமிழக அரசு அதிகாரிகள் 6 பெட்டிகளில் வைத்து வேனில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை 4 மணிக்கு சென்னைக்கு எடுத்து வந்தனர்.

    ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் நில பத்திரங்கள் பெங்களூரில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் வைத்துள்ளனர்.


    அந்த முதல் தளத்தில் லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த லாக்கர்களில் ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த கட்டிடத்துக்கு 20 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசு இந்த நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் விஷயத்தில் அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கும் வரை அவை அனைத்தும் சைதாப்பேட்டை அரசு கட்டிடத்தில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் நகைகள் தொடர்பாக கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவாலி, நிருபர்களிடம் சில விளக்கங்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், குளிரூட்டும் பெட்டி உள்ளிட்ட எந்தப் பொருட்களும் கர்நாடக அரசின் வசம் தற்போது இல்லை. அவை அனைத்தும் தமிழக அரசிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன.

    27 கிலோ எடைகொண்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அவற்றை 6 இரும்புப் பெட்டிகளில் வைத்து தமிழகத்துக்கு எடுத்துச் சென்றனர்.


    இதுதவிர பழைய ரொக்க பணம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 384 ரூபாய் அளிக்கப்பட்டுவிட்டது. இதை ரிசர்வ் வங்கியிடம் அளித்து புதிய செலாவணியாக - மாற்றிக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பல்வேறு வங்கிகளில் 2023-ம் ஆண்டு கணக்கின் படி உள்ள ரூ. 101 கோடியை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்துப் பொருள்களும், நிதியும் சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் சொத்துகள், பஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தமிழக அரசுக்கு சொந்தமானவை.

    இந்த ஆபரணங்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை தமிழக அரசு எடுத்துக்கொள்ளலாம் அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து அதன் மதிப்புத் தொகையைப் பெறலாம்.

    இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பஸ் ஒன்றும் தமிழக அரசிடம் உள்ளது. அதையும் ஏலம் விடலாம் என சிறப்பு நீதிமன்றம் உத்தாவிட்டுள்ளது.

    சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1526.16 ஏக்கர் நிலப் பத்திரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. இந்த நிலங்களை மனைகளாக மாற்றி வீடில்லா ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது நிலத்தை விற்று பணமாக்கி அரசு கருவூலத்தில் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆபரணங்கள் சொத்துகளில் இருந்து கிடைக்கும் பணத்தை ஆரம்பப் பள்ளிக் கல்விக்கும், ஊரக உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் பயன்படுத் துமாறு சிறப்பு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் பின்னர் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சசிகலாவிடம் இருந்து அபராதமாகப் பெறப்பட்ட ரூ.20 கோடியே 20 ஆயிரம் கர்நாடக அரசிடம் உள்ளது. இந்தத் தொகையில், ஏற்கெனவே வழக்குச் செலவு தொகையாக ரூ. 5 கோடி, மேல்முறையீடு உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ.8 கோடி என மொத்தம் ரூ.13 கோடியை கர்நாடக அரசு எடுத்துக்கொண்டு, மீதம் ரூ. 7 கோடியை தமிழக அரசுக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஆபரணங்களை ஒப்படைக்கும் பணி முழுமையாக புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் நகல்களை ஒருவாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
    • மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படைவீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

    இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பால், பன்னீர், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டம், பாட்டத்துடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாளில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.

    இதில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 776 மற்றும் 587 கிராம் தங்கம், 21,235 கிராம் வெள்ளி, 1153 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். 

    • நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாக, சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    • 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முடிவடையவில்லை.


    இந்த கொலை சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து முன்னதாகவே புகார் அளித்தும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    21-ந்தேதி மற்றும் 22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    ×