என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 பள்ளி மாணவர்கள், 12 லட்சத்து 93 ஆயிரத்து 434 பள்ளி மாணவிகள், 48 ஆயிரத்து 987 தனித்தேர்வர்கள், 554 சிறைவாசிகள் என மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர் எழுத இருக்கிறார்கள்.

    இவர்களில் முதலாவதாக பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசுத் தேர்வுத் துறை தயாராக உள்ளது.

    அந்த வகையில் பொதுத் தேர்வுகளின் போது ஆள்மாறாட்டம், 'பிட்' அடிப்பது போன்ற 15 வகையான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என்ற விவரங்களை அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி, துண்டுத்தாள் (பிட்), அச்சடித்த குறிப்புகள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். துண்டுத்தாள், சீட்டு, புத்தகம் வைத்து பார்த்து தேர்வு எழுதி பிடிபட்டால், அந்த தேர்வரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

    மற்ற தேர்வரின் விடைத்தாள்களை பார்த்து எழுதியது, பரிமாற்றம் செய்தது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது குறிப்பிடத்தக்க பருவங்கள் தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்படும்.

    ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, பொதுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையிலோ அல்லது தேர்வறைக்கு வெளியிலோ தேர்வர்கள் தவறாக நடந்து கொண்டாலோ, தகாத வார்த்தைகளால் திட்டினாலோ, தாக்கினாலோ அந்த தேர்வரின் பிற பாடத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை, நிரந்தர தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடை எழுதி பிற தேர்வருக்கு தூக்கி எறிந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த தேர்வரின் அப்பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

    • நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
    • இப்போது உள்ள இளைஞர்கள் தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடியவர்கள் அல்ல.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

    பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வி. தாய்மொழியை ஊக்குவிக்கின்ற கல்வியை எதற்காக எதிர்க்க வேண்டும்.

    தி.மு.வி.னர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்களா? அரசியலுக்காக போலி வேஷம் போட்டுவிட்டு, புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தி.மு.க.வின் அரசியலுக்காக மாணவர்களை பலியாக்கக்கூடாது.

    இது 1965 அல்ல. அவர்கள் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த காலம் அல்ல.

    இப்போது உள்ள இளைஞர்கள் உலகத்தை பார்த்த இளைஞர்கள். தி.மு.க.வை பார்த்து அவர்கள் பின்னால் போகக்கூடிய இளைஞர்கள் அல்ல.

    நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் என்று கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.
    • மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்?

    சென்னையில், தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறுகிறது.

    தமிழ் நாட்டின் மீது மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், "மும்மொழி பின்பற்ற தமிழ் நாடு அரசை மத்திய அரசு மிரட்டடுகிறது. வீழ்த்த முயன்றால் தமிழ்நாடு ஒன்றிணையும், எதிரி எந்த வடிவத்தில் வந்தாலும் வீழ்த்தும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்க குரல் எழுப்புவோம்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி வந்தார்.
    • தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான விஷ்ணு பிரசாத் வடலூரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.

    அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியைப் பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். அது பலனளிக்கவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து லிப்டின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விசாரணையில் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே பழுதுக்கு காரணம் என தெரிய வந்தது.

    • காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.
    • பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.

    இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில், "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.

    கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

    • உலகில் தோன்றிய முதல் யோகி என்பதால், அவர் ‘ஆதியோகி’ என அழைக்கப்படுகிறார்.
    • அகத்தியர் தென்னிந்தியாவிற்கும் மற்ற ரிஷிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இந்த யோக விஞ்ஞானத்தை பரிமாறினர்.

    'ஆதியோகி' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? யார் அவர்? எதற்காக அவரை உலகம் கொண்டாடுகிறது? என பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த கட்டுரை.

    ஐ.டி வேலைக்காக நம்முடைய இந்திய இளைஞர்கள் எப்படி அமெரிக்காவிற்கு செல்கிறார்களோ, அதேபோல், ஆன்மீக தேடலுடன் இருக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் அனைவரும் வந்து செல்ல விரும்பும் தேசமாக நம்முடைய பாரத தேசம் உள்ளது.

    யோகா என்னும் உள்நிலை விஞ்ஞானம் நம் பாரத தேசத்தில் தான் தோன்றியது என்பதையும், பாரதம் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை 'யோகா' என்பதையும் ஐ.நா அமைப்பே அங்கீகரித்துள்ளது.

    'யோகா' என்பது உடலை வளைத்து செய்யும் உடற்பயிற்சி அல்ல; நம் உயிரை அறியும் விஞ்ஞானம் என்ற புரிதல் சமீபகாலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகமே போற்றும் இந்த விஞ்ஞானம் நம்முடைய புனிதமான இமயமலையில் தான் பிறப்பெடுத்தது.

    இந்து கலாச்சாரத்தில் கடவுளாகவும், யோக கலாச்சாரத்தில் யோகியாகவும் வணங்கப்படும் சிவன் தான் இந்த யோகாவை உலகிற்கு வழங்கியவர். அவர் தான் உலகில் தோன்றிய முதல் யோகி என்பதால், அவர் 'ஆதியோகி' என அழைக்கப்படுகிறார்.

    சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன் அவர் உள்நிலை விஞ்ஞானத்தை சப்த ரிஷிகளுக்கு பரிமாறியதால் 'ஆதிகுரு' வாகவும் அறியப்படுகிறார்.

    அகத்தியர் தென்னிந்தியாவிற்கும் மற்ற ரிஷிகள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இந்த யோக விஞ்ஞானத்தை பரிமாறினர். நம் உடலில் நாடிகளின் வழியாகவே சக்திகள் பயணிக்கிறது.

    இந்த நாடிகள் ஒன்று சேரும் இடங்களை யோக கலாச்சாரத்தில் இருப்பவர்கள் சக்கரங்கள் என பெயரிட்டு அழைக்கின்றனர். அந்த வகையில் நம் உடம்பில் மொத்தம் 112 சக்கரங்கள் உள்ளன.

    அதை அடிப்படையாக கொண்டு ஆதியோகி 112 விதமான யோக வழிமுறைகளை சப்த ரிஷிகளுக்கு பரிமாறினார். இதை குறிக்கும் விதமாகவே, கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆதியோகியான சிவன் இமயமலை மட்டுமின்றி பாரத தேசத்தின் பல இடங்களுக்கும் சென்றதை அந்தந்த இடங்களின் புராணங்கள் மற்றும் வரலாற்று கதைகள் மூலமும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

    அந்த வகையில், கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் அவர் வந்து சில மாதங்கள் தங்கி சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதனால் தான் அந்த மலை 'தென் கயிலாலயம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    மிகவும் சக்திவாய்ந்த வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் தியான நிலையில் இருக்கும் ஆதியோகியின் அழகிய திருவுருவம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    ஆதியோகியை தரிசிப்பதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வருகின்றனர்.

    நீங்கள் அவரை கடவுளாக பார்த்தால், நாம் சாதாரண மனிதர்கள் அவர் அடைந்த உச்ச நிலையை நம்மால் அடைவது சாத்தியம் இல்லை என தேங்கி போய்விடுவோம்.

    ஆனால், அவர் இம்மண்ணில் நம்மை போல் வாழ்ந்த ஒரு யோகி என்று பார்த்தால் அவர் அடைந்த பேரானந்த பரவச நிலையை நாமும் அடைய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

    உடல், மனம், உணர்ச்சி என அனைத்து கட்டுப்பாடுகளையும் கடந்து 'முக்தி' (விடுதலை) நிலையை நோக்கி பயணிக்க விரும்பும் மனிதர்களுக்கு மாபெரும் உந்து சக்தியாக வீற்று இருக்கிறார் 'ஆதியோகி'!

    இந்த ஆதியோகி முன்பே ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா இம்மாதம் 26-ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தமிழகத்தில் 50 இடங்களில் நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளது.

    • மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.
    • திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

    வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக வாகைசூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என் சாக்கு போக்கு சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.

    திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 15 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.

    குழந்தைகள் அப்பா என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாலியல் துன்புறுத்தலின்போது குழந்தைகள், பெண்கள் அப்பா அப்பா என்று கதறுவது கேட்கவில்லையா ?

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் 5 லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எப்போது நிரப்ப போகிறது திமுக.

    திமுக ஆட்சியில் தமிழ்நாடு போராட்டம் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • PM SHRI திட்டத்தில் கையெழுத்து போட்டால் 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" என அமைச்சர் தெரிவித்தார்.
    • நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்” என அமைச்சர் சொன்னார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்வரை தமிழக கல்வித் துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களிடம் சமர்ப்பித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "கல்வி நிதி விடுவிப்பு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்தபோது, "மும்மொழிக் கொள்கையை ஏற்பதில் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள்? கல்வியில் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள். நாடு முழுவதும் தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்றே சொல்லுவேன்" எனச் சொன்னார்.

    இவ்வளவு உத்வேகமாக பேசிவிட்டு, "PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்.. 30 நிமிடங்களில் நிதியை விடுவிக்கச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத்தான் நமது முதலமைச்சர் 'BLACK MAIL' எனக் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.

    • சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம்.
    • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

    வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமுள்ள இயக்கம் அதிமுகதான். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் இது.

    சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தர் கூறினார்.

    எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி காலத்திலும் சரி அதிமுக யாரையும் நம்பி இருந்ததில்லை. அதிமுக இயக்கம் மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது.

    பெண்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது Go back என்ற ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார்.

    அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கையே இல்லாத கட்சி திமுக. அதிமுகவைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.

    2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம்.

    நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரின் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்தியாக தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் புகார்களை 9445257000 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம் என மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.

    புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொலியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து அறிக்கை.
    • தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதவரை அதற்கான நிதியை வழங்க முடியாது என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தை பொறுத்த வரைக்கும் இரு மொழிக் கொள்கை தான் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது முன் மொழி கல்வியை கட்டாயப்படுத்துவது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

    பள்ளிகளுக்கு பெற வேண்டிய நிதியை பெற முடியாமல் இருப்பது, நமது மாணவர்களுக்கு தான் பெரிய இழப்பாகும். மாணவர்களின் கல்வியும் மிக முக்கியம். மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தேவையான நிதி உதவியும் மிக முக்கியம்.

    எனவே மத்திய அரசும், தமிழக அரசும் கலந்தாலோசித்து இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும். "மாற்றான் போக்கு எண்ணத்தோடு" மத்திய அரசு செயல்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.
    • சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியில் 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலைக்குள் மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமார் ஆகிய 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர், அவர்களிடம் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது சாராய விற்பனையை தடுத்ததால் அரங்கேற்றப்பட்ட கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில், ஒரே குடும்பதப்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.

    இந்நிலையில், சாராய வியாபாரியான முனுசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×