என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி, மகனுடன்  உயிரிழப்பு
    X

    துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி, மகனுடன் உயிரிழப்பு

    • 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.
    • தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    நெல்லை:

    நெல்லை டவுன் புட்டா ரத்தி அம்மன் கோவில் அருகே உள்ள மினிகுடி தெருவை சேர்ந்தவர் மாதவன். இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது ஒரே மகன் கிருஷ்ண சங்கர் (வயது 22). இவர் சென்னையில் சி.ஏ. படித்து வரும் நிலையில் கல்லூரி இன்டர்ன்ஷிப் பணிக்காக தனது நண்பர்களுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே கல்லூரிக்கான பணிகள் முடிந்த நிலையில் தந்தையுடன் துபாயில் விடுமுறையை ஒரு வாரம் தங்கி இருந்து கழிக்க முடிவு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தனது தந்தையுடன் கடந்த 12-ந்தேதி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் குளித்தபோது நிலை தடுமாறி அதிக ஆழமான பகுதியில் கிருஷ்ண சங்கர் மூழ்கினார். இதைக்கண்ட அவரது தந்தை மாதவன், மகனை காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த போது இருவரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதையடுத்து 2 பேரின் உடல்களும் நெல்லைக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்கு பின் சிந்து பூந்துறை மின் மயானத்தில் 2 பேரின் உடல்களும் எரியூட்டப்பட்டது.

    சுற்றுலா சென்ற இடத்தில் தந்தை-மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    இதனிடையே கணவனும், மகனும் இறந்த துக்கம் தாங்காமல் மாதவனின் மனைவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×