என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
- மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மதுரை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.
மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?
ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.
இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும்.
- கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
குன்னூர்:
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி விவசாயம் களைகட்டி காணப்படுகிறது. இதனை ஒரு முறை நடவு செய்தால், 10 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள விவசாய நிலங்களில் ஓடுகள் பதித்து ஸ்ட்ராபெர்ரி விதைகளை நடுவதற்கு சரியான படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.
பின்னர் அந்த இடம் பிளாஸ்டிக் தாள்களால் மூடப்படுகிறது. தொடர்ந்து தயாரிக்கப்பட்ட படுக்கைகளுக்கு அடியில் சிறிய குழாய்களை வைத்து நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட படுக்கைகளில் நாற்றுகளை நடவு செய்தவுடன், தேவையைப் பொருத்து தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. மற்ற பயிர்களை போலவே, ஸ்ட்ராபெரி செடிகளும் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும். இந்த பழத்துக்கு நுகர்வோர் மத்தியில் அதிக தேவை இருப்பதால் விவசாயிகள் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் இங்கு காய்கறிகளுக்கு மாற்றாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை தொடங்கி உள்ளோம். மற்ற பயிர்களை விட ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் ஏற்படும் செலவுகள் அதிகம். இருந்தாலும் லாபம் மிகவும் அதிகமாக இருப்பதால் நாங்கள் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்திற்கு மாறினோம். மேலும் மழையில் இருந்து பாதுகாக்க, இந்த செடிகளை மறைத்து வளர்த்து வருகிறோம்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பவானி எஸ்டேட், கேத்தி-பாலடா, கொல்லிமலை, சோகத்துறை, காசோலை, கைகாட்டி, காட்டேரி வில்லேஜ், குன்னக்கம்பை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டு உள்ளது.
கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.320 விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். ஆனால் கடைகளில் 200 கிராம் கொண்ட டப்பா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்தப் பழத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து உள்ளது. தோலின் இழந்த நீர்ச்சத்தை ஈடுசெய்யவும், மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.
ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழம் என்பதால் புற்றுநோய் செல்களை தடுக்கவும் பயன்படும். விட்டமின்-கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற சத்துக்கள் இருப்பதால் உணவுப்பாதை மற்றும் ரத்த செல்களை சீராக்கும். தைராய்டு உள்ளிட்ட நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக இயங்கவும், நுண்ணிய ரத்த குழாய்கள் அடைப்பின்றி செல்லவும் பயன்படும். மேலும் இந்த பழங்களில் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. 5 பழங்கள் 250 மில்லி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரி சத்து கிடைக்கும். மேலும் சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றில் நறுமண பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
- மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 3-ந் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும் காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 28-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைவரும் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
- இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவல்லிக்கேணி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியையும், கோபாலபுரத்தில் கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்க மாட்டோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.
ஒரு திட்டத்தை கூட ஒதுக்கவில்லை. ஆனால் வாய்க்கூசாமல் வரி கொடுத்துவிட்டு ஒவ்வொரு மாநிலமும் திருப்பி கேட்பது அநியாயம் என்று சொல்லி இருக்கிறார். இது கண்டிக் கத்தக்கது. முதலமைச்சர் இதை கண்டித்துள்ளார்.
எப்போதுமே தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். பேரறிஞர் அண்ணா சொன்னது. நாங்கள் எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை குறுக்கு வழியில் திணிக்க முயன்றாலும், அதை எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக கூறினாலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா. ஆகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. புரிதல் இருக்கிறது.
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு. இங்கு இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்து தமிழில் பல விஞ்ஞானிகள், டாக்டர்கள் உலக சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே அேதாடு இதை ஒப்பிட்டு கூறக் கூடாது. நிச்சயமாக மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எனவே தமிழகத்திற்கு இருமொழி கொள்கையை பின்பற்றுவதற்கு தேவை யான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.
- முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில்,
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டுமொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.க. அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளார்.
- நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
- முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மெகா திட்ட வளாக பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் தனியார் பங்களிப்பான எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட பணிகளான யாத்திரிகர் நிவாஸ் பயணிகள் தங்கும் விடுதி பணிகள் முடிவுற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து 2-ம் கட்ட பணி நிறைவு பெற்று ரூ.20½ கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவு பெற்ற நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பொது தரிசன வரிசை வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தார் பாலசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம ஜெயம், பில்லா ஜெகன், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
- தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்காக முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
- தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம்.
சென்னை:
`சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.
இதுதொடர்பாக வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.
மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி கொள்கை விசயத்தில் மத்திய மந்திரி திமிராக பேசினால் தமிழர்கள் தனி குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய கல்வி மந்திரி பேசி இருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக் கைகளில் ஈடுபடலாமா? அல்லது அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளலாமா? என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் அடிப்படையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.
பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட-தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.
அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!
அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என் பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
- மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
- செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?
விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:
* பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
* இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.
* சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.
* சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.
* செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.
- அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
சென்னை:
அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதனையொட்டி அ.ம.மு.க. மாவட்டங்கள் வாரியாக வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செய்து வருகிறார்கள்.
- ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும்.
- பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில் தினசரி இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிகாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியில் இருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்பொழுது கடற்கரை பகுதியில் இருந்து கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது.
இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்தும் சென்றனர்.
ஆனால் தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
கடந்த 2 வாரங்களில் இந்த ஆமையோடு சேர்த்து மொத்தம் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடற்கரையில் 100 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் 10 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் நேற்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆமையும் கரை ஒதுங்கியது.
இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே ஜெ. ஜெ. நகர் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சென்னை கடற்கரையில் கடந்த மாதம் இதுபோல் அதிக அளவில் கடல் ஆமைகள் வாழ்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.






