என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் தோட்டங்களில் ஸ்ட்ராபெர்ரி பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு
- சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும்.
- கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
குன்னூர்:
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி விவசாயம் களைகட்டி காணப்படுகிறது. இதனை ஒரு முறை நடவு செய்தால், 10 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள விவசாய நிலங்களில் ஓடுகள் பதித்து ஸ்ட்ராபெர்ரி விதைகளை நடுவதற்கு சரியான படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.
பின்னர் அந்த இடம் பிளாஸ்டிக் தாள்களால் மூடப்படுகிறது. தொடர்ந்து தயாரிக்கப்பட்ட படுக்கைகளுக்கு அடியில் சிறிய குழாய்களை வைத்து நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.
தயாரிக்கப்பட்ட படுக்கைகளில் நாற்றுகளை நடவு செய்தவுடன், தேவையைப் பொருத்து தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. மற்ற பயிர்களை போலவே, ஸ்ட்ராபெரி செடிகளும் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும். இந்த பழத்துக்கு நுகர்வோர் மத்தியில் அதிக தேவை இருப்பதால் விவசாயிகள் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் இங்கு காய்கறிகளுக்கு மாற்றாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை தொடங்கி உள்ளோம். மற்ற பயிர்களை விட ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் ஏற்படும் செலவுகள் அதிகம். இருந்தாலும் லாபம் மிகவும் அதிகமாக இருப்பதால் நாங்கள் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்திற்கு மாறினோம். மேலும் மழையில் இருந்து பாதுகாக்க, இந்த செடிகளை மறைத்து வளர்த்து வருகிறோம்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பவானி எஸ்டேட், கேத்தி-பாலடா, கொல்லிமலை, சோகத்துறை, காசோலை, கைகாட்டி, காட்டேரி வில்லேஜ், குன்னக்கம்பை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டு உள்ளது.
கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.320 விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். ஆனால் கடைகளில் 200 கிராம் கொண்ட டப்பா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்தப் பழத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து உள்ளது. தோலின் இழந்த நீர்ச்சத்தை ஈடுசெய்யவும், மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.
ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழம் என்பதால் புற்றுநோய் செல்களை தடுக்கவும் பயன்படும். விட்டமின்-கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற சத்துக்கள் இருப்பதால் உணவுப்பாதை மற்றும் ரத்த செல்களை சீராக்கும். தைராய்டு உள்ளிட்ட நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக இயங்கவும், நுண்ணிய ரத்த குழாய்கள் அடைப்பின்றி செல்லவும் பயன்படும். மேலும் இந்த பழங்களில் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. 5 பழங்கள் 250 மில்லி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரி சத்து கிடைக்கும். மேலும் சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றில் நறுமண பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






