என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
- 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வேண்டும்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தி உள்ளது.
- சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
- இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலா தலமான இப்பகுதியில் திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பஞ்சலிங்கம் அருவி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் லேசான தொடர் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் இன்று காலை அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
- தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.
கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர்களுக்கு உலக மற்றுத்திறனாளிகள் தின வாழ்த்தகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர– சகோதரிகள் அனைவருக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர்.
பாராளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று SIR-க்கு எதிராகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
- நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
- சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
ஈரோடு:
ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகன் இருந்தான்.
நேற்று இரவு சிறுவன் சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் சாய்சரண் மூச்சு விட சிரமப்பட்டு திணறினான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாய்சரணின் பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவி உடன் சிறுவனை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருப்பதாக கூறினார். மேலும் சிறுவனின் நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார். இதை அடுத்து சிறுவனை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். அதன் பின்னர் சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை மருத்துவர்கள் அகற்றினர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர்.
- அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் திருவிழாக்கள் நடத்த 10 வருடங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் இங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு மண்டு கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி இன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது. பொதுவான இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் பின்னர் இந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் வரவே ஏ.டி.எஸ்.பி. தெய்வம், ரூரல் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. மேலும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்றும், யாரும் இப்பகுதியில் அமைதியை குலைக்கும் வகையில் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்து 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுவதாக தாசில்தார் முத்துமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அது வரை அமைதி காக்க வேண்டும் எனவும் தாசில்தார் முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
- புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது.
வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது.
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது.
தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.201-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
29-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
28-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-12-2025- ஒரு கிராம் ரூ.196
01-12-2025- ஒரு கிராம் ரூ.196
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
29-11-2025- ஒரு கிராம் ரூ.192
28-11-2025- ஒரு கிராம் ரூ.183
- காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளது.
- காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மழை தொடர்பாக அவர் கூறியதாவது:
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வட தமிழக மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






