என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோவில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கூடுதலாக 100 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை செயல்படுத்திடும் வகையில் 100 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உடற்பயிற்சி அறிவியலின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பளு தூக்குதல் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.
சென்னை:
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் ஒலிம்பிக் அகாடமியில் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் விளையாட்டு செயல்திறன், உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், உடலியல், உளவியல் மற்றும் விளையாட்டு மருத்துவம் போன்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செயல்திறனை மேம்படுத்துவதும், உடற்பயிற்சி அறிவியலின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு இந்த மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 5.95 கோடி மதிப்பில் நிர்வாக கட்டிடம், பயிற்றுநர் அறை, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை, பார்வையாளர்களுக்கான இருக்கைகள், மரத்திலான தரைதளம், கையுந்துபந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உபகரணங்களுக்கான இருப்பு அறை மற்றும் ஒளிரும் மின்விளக்கு வசதிகளுடன் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் பளு தூக்குதல் பயிற்சி மையத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், சரவணகுமார், முருகேசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை தலைவர் அசோக் சிகாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-
சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .
தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
- இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் இளங்கோவன் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், பண பரிவர்த்தனையோ, முறைகேடோ நடைபெறவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
- வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
- அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
- வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு 'வக்பு கவுன்சில்' , 'வக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன.
இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர். தற்போது அந்த நிர்வாக அமைப்புகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன் மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்ப தற்கு பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மதங்களின் சொத்துகளை அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர். இந்துக் கோவில்களின் சொத்துகளை இந்துக்கள்தான் நிர்வகிக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட இந்துக்களை மட்டுமே கொண்ட குழுக்கள் தான் நிர்வகிக்கின்றன.
சீக்கியர்களின் குருத்துவாராக்களை சீக்கியர்களைக் கொண்ட குழு நிர்வாகிக்கிறது. தேவாலயங்களைக் கிறித்தவர்களே நிர்வாகம் செய்கின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம்களின் சொத்துகளை மட்டும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களையும் கொண்டு நிர்வாகம் செய்ய இந்த அரசு முயற்சிப்பது ஏன்? அவர்களிடம் இருக்கும் சொத்துக்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பொருளாதார தற்சார்பு அற்றவர்களாக ஆக்கி அடிமைப்படுத்தி இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும் என்பதே பாஜகவின் உள்நோக்கம் ஆகும். பா.ஜ.க.வின் இந்த பாசிச செயல்திட்டத்திற்கு இந்திய மக்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள்.
இந்நிலையில் வெகு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 8-ந்தேதி அன்று மாவட்டந் தோறும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளோடு அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கிறோம்.
அத்துடன், வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வி.சி.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய பா.ஜ.க. அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்துவா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ந்தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன.
- குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம்.
மதுரை:
தென்காசி ரெயில் நகரை சேர்ந்த நம்பிராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இதற்காக புண்ணிய தலமான காசியில் இருந்து புனித நீர் வரவழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய தொல்லியல்துறை மேற் பார்வையில் இந்த கோவில் உள்ளது.
இந்தநிலையில் கோவிலின் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. ராஜகோபுரத்தில் மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது.
கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதற்கிடையே வருகிற 7-ந்தேதி அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர் நியமிக்க வேண்டும். அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட், புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனர், ஐ.ஐ.டி. குழுவி னரை நியமித்தும், அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. கோவில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளன. எனவே இதில் ஆய்வு செய்ய தேவையில்லை. குடமுழுக்கு முடிந்த பின்னர் ஐ.ஐ.டி. குழுவினரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யலாம். கணபதி ஹோமம் முடிந்த பின்னர் குடமுழுக்கை நிறுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கம் செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
- 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கனமழை பெய்யும் மழை 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மதிய வேளைகளில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வருகிற 10-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
- விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
- நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.
விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?
- தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன்.
எம்புரான் படத்தில் இடம் பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.
* தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?
* எங்கள் கட்சியினர் தற்போது படம் பார்க்க சென்றுள்ளனர்.
* முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்படாவிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன். ஏற்கனவே வெடிகுண்டு வீசியதாக கைதானதை சுட்டிக்காட்டி மலையாள திரையுலகினருக்கு வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.
- சிலை விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- புராதன கால சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி:
திருச்சி திருவானைக்காவலில் பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. சோழர்கால பாரம்பர்யமும், பழம்பெருமையும் மிக்க இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என 9 தீர்த்தங்கள் உள்ளன.
இதில் ராமர் தீர்த்தம் ராமபிரான் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான்.
ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.
இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது.
பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமபிரான் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவ வழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.
உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. .
இந்த ராமர் தீர்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இந்த பணிகள் நடந்தபோது குளத்தின் முட்புதரில் கற்சிலை அம்மனின் தலைப்பகுதி மட்டும் தனி யாக கிடந்தது தெரிந்தது. இந்தச் சிலையின் முழு வடிவம் கிடைக்கவில்லை.
இது காளி சிலையாக இருக்கக் கூடும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். சிலை குறித்த விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராமர் தீர்த்தக் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் இருந்ததால், இந்தக் குளத்துக்குள் அதிக அளவில் கற்சிலைகள் மற்றும் புராதன கால சிற்பங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படு கிறது.
பழைமையான இந்தக் குளத்தை தூர்வார இந்து சமய அற நிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்கப்படுமா? என பக்தர்கள் கோரிக்கை எதிர்பார்க்கின்றனர்.






