என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடிகிறது.
- விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
- பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலக சொல்வதா என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசரகாலத்திலும் அரசியலா?
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
சுற்றுலாவிற்காக காஷ்மீர் சென்ற நம் மக்கள் மீது நடைபெற்ற கோழைத்தனமான. கொடூர தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழுந்து தங்களது கண்டனங்களையும், வேதனைகளையும் பதிவு செய்து வருகிறது. உலக நாட்டு மக்களும். தலைவர்களும் நமக்கு ஆறுதல் சொல்லி நமது நடவடிக்கைகளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு அரியணை ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை, உள்நாட்டு தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்திற்கும் எதிரான தன் கடுமையான யுத்தத்தை முன் வைத்துள்ளார். தன் உறுதியான நடவடிக்கைகளின் மூலம், தாய்நாட்டைப் பாதுகாத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியானது தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க அஞ்சியதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம், ஆம். இந்த நாட்டைத் துண்டாடத் துடித்தவர்களின் கரங்களைத் தங்களின் வாக்கரசியல் மூலம் பலப்படுத்தியது காங்கிரஸ்.
ஆனால் தேசந்தின் வலிமையை, ஒற்றுமையை, சம உரிமையை நம்பும் பாஜக-வின் ஆட்சியில் காஷ்மீர் மீட்டெடுக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைச்செருகலாக வந்தது தான் 370 வது சட்டப்பிரிவு சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தன் எதிர்ப்பைத் தெரிவித்தும், அப்போதைய ஆட்சியாளர்களால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்த 370 வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் ஆன்மாவிற்கு சவால் விடுவதாக அமைந்திருந்த இந்த சட்டத்தை மாற்றி அமைத்து தேசப் பிரிவினைவாதிகளின் நோக்கங்களை முறியடித்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜ ஆட்சியில்தான்.
ஆனால். 370 வது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது என காங்கிரஸ் திமுக கூட்டணியோடு சேர்ந்து திருமாவளவன் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார்.
காஷ்மீர் பிரிவினைவாத போராட்டத்தைப் புரட்சி என்று வர்ணிப்பவர்களை எல்லாம் விசிக-வில் வைத்துக் கொண்டு, திருமாவளவன் அவர்களும் அதே தொனியில் பேசி வந்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, திரு. திருமாவளவன் அவர்களின் கருத்தில் பாஜக அரசு 370 வது சட்டப்பிரிவை நீக்கியதைக் குறை சொல்வதுதான் இப்போது விஞ்சி நிற்கிறது. இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுநான்.
திரு. திருமாவளவன் அவர்களின் இண்டி கூட்டணிக்கு, காஷ்மீர் பழையபடி நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான பிரிவினைவாதம் பேசும் பகுதியாகவே இருக்க வேண்டும். லால் சவுக்கில் இந்தியக் கொடி பறக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும் போது. இண்டி கூட்டணியும் அதன் பங்காளியான திருமாவளவன் அவர்களும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில் மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களையும் பதவி விலகச் சொல்கிறார் திரு. திருமாவளவன் அவர்கள். அதே போன்று தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய சாவுகள் (கள்ளக்குறிச்சியில் மட்டும் 68 பேர் இறந்தனர்).
லாக்-அப் மரணங்கள். சாதிய படுகொலைகள். பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஆகி ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று. காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள, சட்டமொழுங்கு சீர்கேட்டில் No.1 முதல்வரான திரு. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலகச்சொல்வாரா திருமாவளவன் அவர்கள்?
மேலும். கோவை கார் குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு எனப் பூசி மெழுகப் பார்த்து இன்று வரை வழக்கின் ஆழம் தீவிரவாத செயலாகவே நீண்டு செல்கிறதே அதற்காக ஏன் தமிழக முதல்வரைப் பதவி விலகச் சொல்லவில்லை? கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தது திமுக அரசு.
விசிக கட்சியோ அவருக்கு மரியாதை செலுத்தியது. இதற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டிய திரு. திருமாவளவன் அவர்கள். இந்த தேசத்தின் நவீன இரும்பு மனிதராக வாழும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களைப் பதவி விலகச் சொல்வது நியாயமா?
தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட முடியும் என்று மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் நடவடிக்கை. நம் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் நேசத்தின் ஒற்றுமைக்காக உரத்த குரல் கொடுக்காமல் இந்த நேரத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் திருமாவளவன் அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.
நம் உறவுகளை எல்லாம் உயிரற்ற சடலங்களாக்கி, மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திரு. திருமாவளவன் அவர்கள் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக எந்த உச்சபட்ச நிலைக்கும் செல்லும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களே நிறைய உள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.
ஆனால், அதற்குத் துணை துணை நிற்காமல், தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது, பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.
நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும்.
கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.
ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது.
இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
- அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
- வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.
புத்தகத்தில் உலகை படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.
மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது #DravidianModel அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.
"புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்ரீபெரும்பு தூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு உள்ள தி.மு.க. அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் செயலாளர், மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
- பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை திரும்ப உள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணைதலைவர் சித்தார்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையை சேர்ந்த 30 பேர் சென்றுள்ள நிலையில் 68 பேரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இன்றைய தினம் ஏற்கனவே திட்ட மிட்டபடி அவர்கள் சுற்றுலா தளத்தில் இருப்பதாகவும் வீடியோ கால் மூலமாக தகவல் அளித்துள்ளனர்.
அந்த 68 பேரும் பெஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே மற்றொரு இடத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அந்த 68 பேரில் ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதல் நடந்தது குறித்து சுற்றுலா சென்ற அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் நாங்கள் தான் இங்கிருந்து அவர்களுக்கு தகவல் அளித்தோம்.
68 பேரும் இன்று இரவு மற்றும் நாளை காலை விமானம் மூலமாக தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.
தற்போது அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தாலும் இயல்பான நிலை உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்ப நிலை 97 டிகிரி முதல் 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நேற்று ஈரோடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 102 டிகிரி, சேலம், வேலூரில் 101 டிகிரி, திருத்தணி, தர்மபுரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மொத்தம் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
- சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்த பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதா-ஹரி சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கு கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு சித்ரவதை செய்ததாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், இருட்டு கடை உரிமையாளரின் மருமகனான பல்ராம் சிங் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தபோது 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் வக்கீல் மனு செய்தார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனரிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
வரதட்சணை புகார் மீது சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு வராமல் வெளிநாடு தப்ப முயற்சி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது. என் கணவர் மீது துரிதமாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
- கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
- மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
- மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
- அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்ந்தோருக்கான கட்டணம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
நீட் தேர்வு பிரச்சனையில் மக்களிடம் சாயம் வெளுத்துவிடும் என்பதால் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தீர்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.






