என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கேள்வியில் கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.
    • ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறினர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவறுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்தது.

    ஜோதிபா பூலே குறித்த கேள்வியின் கூற்று, காரணம் முரணாக உள்ளதாக ஆசிரியர்கள் கூறிய நிலையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.
    • போப் பிரான்சிஸ் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களது இரங்கலகளை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கத்தோலிக்க திருச்சபையை பச்சாதாபம் மற்றும் முற்போக்கான மதிப்புகளுடன் வழிநடத்திய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.

    அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தார். அவர் போப் பாண்டவருக்கு பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்தார்.

    ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.

    அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர்

    எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது.

    அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஒரு ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.

    அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2014ல் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.
    • நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு அளித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு உறுப்பினரும் கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2014ல் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.

    தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு அளித்துள்ளார்.

    • புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
    • போப் பிரான்சிசைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார்.

    இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.

    அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.

    ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம் என்று மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுதக் கூடாது.

    ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளேன்.

    அதன்படி, 2026 தேர்தலில் குறைந்சபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளேன்" என்றார்.

    • பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
    • பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கடந்த 2015-ம் ஆண்டு 12 வயது சிறுமியும், அவரது பெற்றோரும் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி (வயது 41) அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்பாஸ் அலி, அந்த சிறுமியை சென்னையில் இருந்து கடத்தி சென்றார். சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

    மேலும் பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் சென்னை திரும்பினார்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அப்பாஸ் அலி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதனால் சிறுமியும், அவரது பெற்றோரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். அவர்கள் தென் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    அதன்பிறகும் அப்பாஸ் அலி, சிறுமி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதையடுத்து தாயும், மகளும் அங்கிருந்து வேறொரு கிராமத்துக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி அங்கு தங்களின் பெயர், விவரங்களை மாற்றி வாழத் தொடங்கினார்கள். பின்னர் ஒவ்வொரு ஊராக குடிபெயந்தனர்.

    அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு உதவி செய்யவும், ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. மேலும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கும் செல்லவில்லை. தாயும், மகளும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுமார் 10 ஆண்டும் காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அவர்களை தேடிய நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாயும், சிறுமியும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. வழக்கு விசாரணையின் போது அவர், நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார். அப்பாஸ் அலி செய்த கொடுமையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய கல்வியும் பறிபோனது, என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அப்பாஸ் அலி சீரழித்து விட்டார் என்று கூறி அந்த பெண் கதறி அழுதார்.

    அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மாதம் முதல் வாரத்தில் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அப்பாஸ் அலிக்கு தற்போது 51 வயது ஆகிறது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தீர்ப்பு வந்தால் தான் எதையும் செய்ய முடியும்.
    • 2 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் கூறும் போது 2031 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினீர்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்திற்கு யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் வந்தது என்ற விவாதம் நடைபெற்றது.

    அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது என்றும், கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல நீட் தேர்வை நீங்க வெச்சிக்கோங்க, நாங்க 11 மருத்துவக் கல்லூரி வெச்சிக்குறோம் என்றும் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான். அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அ.தி.மு.க. ஆட்சி என்று பேசினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது உங்களின் ஆட்சி தான். கலைஞர் இருக்கும் போது நீட் வரவில்லை. அம்மையார் இருக்கும் போது நீட் தேர்வு வரவில்லை என்று பதில் அளித்தார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, நீங்கள் 11 மருத்துவக் கல்லூரிகள் அறிவித்தீர்கள். ஆனால் அதனுடைய பணி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தான் நடந்து இருந்தது என்றார்.

    தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. அம்மையார் இருக்கும் போது கூட வரவில்லை. யார் இருக்கும் போது கொண்டு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று பதில் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு சிக்கலை சரி செய்ய உங்களுக்கு (அ.தி.மு.க.)நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்போம் இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிபந்தனை விதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது நீங்கள் என்று தெரிவித்தார்.

    அது மட்டுமல்ல நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டதே தி.மு.க. தான் என்று குற்றம் சாட்டினார். கடந்த தேர்தலின் போது நீட்டுக்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நீங்கள் என்றும் சாடினார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான், மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம்.

    ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு வரை நீங்கள் கூறும் போது 2031 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறினீர்கள். தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளீர்கள், யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்று கேள்வி எழுப்பினார்.

    அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்தால் தான் எதையும் செய்ய முடியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக எப்படி செயல்பட முடியும் என்றார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு கேட்டு நீங்கள் மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவீர்களா? நிபந்தனை விதிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

    இவ்வாறு சட்டசபையில் விவாதம் பரபரப்பாக நடந்தது.

    • பெண்களை இழிவுபடுத்துவது என்பது தி.மு.க.விற்கு கைவந்த கலையாக உள்ளது.
    • தி.மு.க.வினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள்.

    மதுரை:

    பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரியும் மதுரையில், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டிக்கும் வகையில் மகளிரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியதாவது:-

    பெண்களை இழிவுபடுத்துவது என்பது தி.மு.க.விற்கு கைவந்த கலையாக உள்ளது. தி.மு.க.வினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர்.

    அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசித்து ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை சரி செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேசியதாவது:-

    திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதி மண்டலம் 5ன் கீழ் வரும் 10வது வார்டில் மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு, நெசவாளர் தெரு, காமாட்சியம்மன் தெரு, காளையன் தெரு, லிங்கநகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்துள்ளது.

    கழிவு நீர் கலந்த குடிநீரை உபயோகித்த மின்னப்பன் தெருவில் வசித்து வரும் முரளியின் 4 வயது குழந்தை பிரியங்கா மற்றும் அதே தெருவில் வசித்து வரும் அங்குசாமி மனைவி மருதாம்பாள்(75) மற்றும் மேல மின்னப்பன் தெருவில் வசித்து வரும் கோவிந்தராஜன் மனைவி லதா (52), சுப்பிரமணியன் (54) ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில், கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 5 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.

    குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கலப்பதை சரி செய்யாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்கள் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் கொடுத்தும், இதை சரி செய்யாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இப்பகுதி மக்கள் இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்தவுடன், அப்பகுதிக்குச் சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இது கோடை காலம். மக்கள் குடிநீரை அதிகமாக பயன்படுத்தும் சூழ்நிலை இருப்பதால், அரசு தமிழ்நாடு முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வழங்க அறிவுறுத்த வேண்டும்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ கட்டணத்தை அரசே வழங்கவும், இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம் அரசு உரிய கவனம் செலுத்த வலியுறுத்தி அமைகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் இதன் மீது பேசினார்கள்.

    இறுதியாக இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-

    திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் கிடைத்தவுடன் உடனடியாக அப்பகுதியில் 287 பேர் கொண்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கியது.

    10 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

    அப்பகுதியில் வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு விநியோகிக்கப்படும் நீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் மூலமாகவே குழந்தை உட்பட 4 பேருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையிலும் அவை தெளிவாகியிருக்கிறது.

    தமிழகத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு 5½ கோடி மக்களுக்கு 4 ஆயிரம் எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

    எனவே திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது அல்ல. அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானங்களால் நிகழ்ந்தது.

    இவ்வாறு அமைச்சர் கே.என் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    மதுரை:

    மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியது.

    இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதேபோல் அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமா வடியில் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.
    • பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி தமிழக அரசு சார்பிலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின் போது, சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். சில அதிகாரிகளை அமலாக்கத்துறை இரவில் தூங்க விடாதது மனித உரிமை மீறல் என்று டாஸ்மாக் மற்றும் அரசு சார்பில் வாதிட்டனர்.

    அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. சட்டத்துக்கு உட்பட்டே சோதனை நடத்தப்பட்டது. பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்ட நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.
    • திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.

    சென்னை:

    தமிழக சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை, அதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை என அமைச்சர் கூறுகிறார்.

    * குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    * புகார் வந்த உடன் குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

    * திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சனை என அமைச்சர் கூறுகிறார்.

    * கோவில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில் உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏன்? குளிர்பானம் தான் பிரச்சனை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.

    * அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் பதறுவது ஏன்? பயப்படுவது ஏன்?

    * யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம்.

    * திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.

    * மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வுக்கு அறிவிக்கை வெளியானது.

    * நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது தான்.

    * நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க.

    * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் கூறுகிறார்.

    * மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை.

    * பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா? என்றார். 



    ×