என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10 வருடங்களாக கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை: பாலியல் வன்கொடுமையால் ஊர் ஊராக ஓடி ஒளிந்த சென்னை சிறுமி
    X

    10 வருடங்களாக கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை: பாலியல் வன்கொடுமையால் ஊர் ஊராக ஓடி ஒளிந்த சென்னை சிறுமி

    • பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
    • பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கடந்த 2015-ம் ஆண்டு 12 வயது சிறுமியும், அவரது பெற்றோரும் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி (வயது 41) அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்பாஸ் அலி, அந்த சிறுமியை சென்னையில் இருந்து கடத்தி சென்றார். சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

    மேலும் பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் சென்னை திரும்பினார்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அப்பாஸ் அலி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதனால் சிறுமியும், அவரது பெற்றோரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். அவர்கள் தென் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    அதன்பிறகும் அப்பாஸ் அலி, சிறுமி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதையடுத்து தாயும், மகளும் அங்கிருந்து வேறொரு கிராமத்துக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி அங்கு தங்களின் பெயர், விவரங்களை மாற்றி வாழத் தொடங்கினார்கள். பின்னர் ஒவ்வொரு ஊராக குடிபெயந்தனர்.

    அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு உதவி செய்யவும், ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. மேலும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கும் செல்லவில்லை. தாயும், மகளும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுமார் 10 ஆண்டும் காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அவர்களை தேடிய நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாயும், சிறுமியும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. வழக்கு விசாரணையின் போது அவர், நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார். அப்பாஸ் அலி செய்த கொடுமையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய கல்வியும் பறிபோனது, என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அப்பாஸ் அலி சீரழித்து விட்டார் என்று கூறி அந்த பெண் கதறி அழுதார்.

    அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மாதம் முதல் வாரத்தில் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அப்பாஸ் அலிக்கு தற்போது 51 வயது ஆகிறது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×