என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    புழல் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் புழல், சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை ஓரத்தில் அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    குப்பைக் கழிவுகளில் காய்ந்த ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனக் கலவையால் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை கழிவில் இரவில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்

    நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரெயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது சோகான் தபஸ், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

    பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சூரஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தில் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
    • பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 39). இவர் பாப்பாபிடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி சுகுமார் (52) என்பவர் தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு அவர் பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

    அலுவலகத்திற்கு சென்ற குமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தினார்கள். அப்பொழுது பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி னர்.

    கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    என்எல்சியில் நடக்கும் வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எண் 6க்கு வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்க உள்ள ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை எண் 6ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தொழிலாளர் வாரிசுகள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்றவை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும்" அவர் கூறினார்.

    • ஊட்டியில் நடக்க உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ஊட்டி வருகிறார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது.

    மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.இந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார்.

    இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.35 மணிக்கு கோவைக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார்.

    பின்னர் அவர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    ஊட்டியில் நடக்க உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ஊட்டி வருகிறார்.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், சட்டத்தை மீறியும் துணை வேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகம் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரை கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளது.

    இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி ராஜ்பவன், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்துக்காக வருபவர்களை அந்தந்த இடங்களிலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து 3-வது நாளாக 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த விவசாய தம்பதிகளான சந்திரசேகர்-ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் மோகன தீபிகா (வயது 23). இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மோகன தீபிகா செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விலும் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா வெறு வேடம்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன்.

    மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தயாரானேன். அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.

    மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னை போன்று கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்

    • யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல.
    • பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

    உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
    • தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.

    ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள்.
    • பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவர்களோடு தங்கி இருக்கும் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சிகிச்சைக்காக வருபவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் வரையில் சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

    இது தவிர ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள். இதுபோன்று டெல்லிக்கும் அதிக அளவில் பாகிஸ்தானியர்கள் வருகை புரிவது தெரிய வந்துள்ளது. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானில் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற திருமண பந்தங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்று பாகிஸ்தானில் திருமண உறவு உள்ளிட்டவைகள் வைத்திருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய விவரங்களையும் அந்த மாநில அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் 24 மணி நேரத்துக்குள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

    இப்படி தான் 500 பேர் வரையில் தமிழகத்துக்கு வந்து செல்வதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படி தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் தற்போது எத்தனை பேர் உள்ளனர்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாகவும் அதுபோன்ற நபர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை தவிர்த்து அனைவரையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, சிகிச்சையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வருபவர்களும் தாங்கள் வேலை செய்யும் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தருவார்கள். பாகிஸ்தானியர்கள் பலர் துபாயில் தங்கி இருந்து அங்குள்ள அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்வார்கள்.

    அவர்கள் நிறுவனத்தின் சார்பில் சென்னைக்கு வேலை விஷயமாக அனுப்பி வைக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பது பற்றிய பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
    • எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது.

    இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சீமானை சேர்ப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சீமான் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பு பற்றி சீமானிடம் கேட்டபோது, எங்கள் இருவருக்குமிடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே தற்போதும் சந்தித்துள்ளேன். அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

    ×