என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர்.

    இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

    • சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
    • 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பார்வையிட்டார்.

    10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    • புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
    • இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

    கிண்டி பகுதியில் இருந்து சக்திவாய்ந்த லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் பரங்கிமலை, கிண்டி போலீசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்

    சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட 3வது சம்பவம் இது ஆகும். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்.
    • எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்.

    எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். எங்கள் பொதுச்செயலாளரும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள்.

    ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல கேள்வி கேட்கிறீர்கள். கேள்வி கேட்பதும், கேட்க சொல்பவர்களும், அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

    2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். இப்போது உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அவர் கூறினார்.

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆர்.பி. உதயகுமார் சென்றார்.

    • தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
    • வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.

    கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-06-2025- ஒரு கிராம் ரூ.119

    08-06-2025- ஒரு கிராம் ரூ.118

    07-06-2025- ஒரு கிராம் ரூ.117

    06-06-2025- ஒரு கிராம் ரூ.118

    05-06-2025- ஒரு கிராம் ரூ.114

    • அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.
    • மேட்டூர் அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.40 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொய் மட்டுமே பேசி வருகிறார். இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்.

    அனைவருக்கும் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் விளங்கி கொண்டிருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அமித்ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார். ஒன்றும் செய்யமுடியவில்லை.

    அமித்ஷா வந்து என்ன செய்யப்போகிறார்? கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வருகிற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது.
    • இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?

    மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    தருமபுரி:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7,500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.

    இவர் தனது உறவினரிடம் கொடுத்த நில பத்திரத்தை மீட்டு தர கோரி கடந்த 4-ந்தேதி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது அந்த வளாகத்தில் அவர் தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை போலீசார் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.
    • கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×