என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்தார்.
- சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும் என எக்ஸ் பக்கத்தில் பதிவு.
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் "இனி, Chennai Central, Metro Rail நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் சென்னை புத்தகப் பூங்கா-வைத் தொடங்கியுள்ளோம்!
சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.
- ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திண்டிவனம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
- சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை:
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாத்திரி என்ற ஒரு மாணவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தனர்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வாதிட்டார்.
480 மாணவர்கள் எழுதியதாகவும், 13 மாணவர்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ. ஆர்.எஸ்.சுந்தரேசன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர்.
அதே வேளையில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உள்ளனர்.
- அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான் என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று கணவன், மனைவியான இருவர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவில் ராஜகோபுரத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெண் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான். தினமும் தான் சாப்பாடு வாங்கி வந்து இங்கு சாப்பிடுவது எல்லாருக்கும் தான் தெரியும். தற்போது கையில் காசு இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்து சாப்பிட்டோம் என்று சாதாரணமாக பதில் அளித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் அசைவ சாப்பாடு இங்கு வந்து சாப்பிடலாமா என்று எச்சரித்தார். பின்னர் அவர்கள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் நிர்வாக அலுவலர்களால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
- ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் எம்எஸ் தோனி இணைந்துள்ளார்.
- எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது.
அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சேர்கப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளநிலையில், எம்.எஸ்.தோனி 11-வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
Hall of Fame-இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், அதிக ஸ்டப்பிங் செய்த கீப்பர், சென்னை அணிக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என ஒரு சரித்திரத்தை உருவாக்கியுள்ளார்.
அமைதியால் தலைமைப் பண்புக்கே புது வடிவம் கொடுத்தவர். விக்கெட் கீப்பிங்கை கலையாக மாற்றியவர். எப்போதும் Thala For A Reason என்றே போற்றப்படுவீர்கள்.
- சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று மாலை இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது.
- ஏற்கனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டுக்கு நேற்று மாலை இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. ஐகோர்ட்டு, சி.பி.ஐ. அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் நடந்தது. இந்த சோதனையில் அது வெறும் புரளி என தெரிய வந்தது.
ஏற்கனவே சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த நிலையில் 3-வது முறையாக தற்போது சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
- கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு.
- கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.
ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.
அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.
கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?!
உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, திமுக அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் 11.06.2025 அன்று சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
- மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
- மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. தனது மற்றொரு எம்.பி. பதவியை கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கியது. எனவே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். மொத்தம் தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
வேட்புமனுக்கள் பரிசீலனையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சைகள் 7 பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாததால் சுயேட்சைகள் 7 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெற்றதாக 12-ந்தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
- ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும்.
- மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும். இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதி வரை வழங்காத நிலையில், அதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தொடர்ந்து வெளியிட்ட அனைத்து அறிக்கைகளிலும் இதையே வலியுறுத்தியிருந்தேன். கடந்த மே 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இந்த யோசனையை வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், தமிழக அரசோ, அதை மதித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வீண் அரசியலைச் செய்து காலத்தைக் கடத்தியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததற்கும் இது தான் காரணம் ஆகும். நேற்றைய வழக்கு விசாரணையின் போது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை என்றும், எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதி தான் வழக்குத் தொடர்ந்ததாகவும் பதிலளித்தார். அதனடிப்படையில் தான் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியவாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும். தமிழகத்திற்கான நிதியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் நலனை விட, அரசியல் லாபம் தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியது. அதனால் தான் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதையும் தமிழக அரசு தடுத்து விட்டது. இப்படியாக தமிழக அரசின் செயல்களால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான் தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது.
தமிழக அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்திற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.
- வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.
உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம்.
* தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது.
* நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது.
* சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி உள்ளது.
* பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.
* மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.
* we safe எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
* நகரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
- அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சிவகாசி:
போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் பல்வேறு வசதிகளையும் சிறப்பு கற்றல் முறைகளையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை சில அதிகாரிகளும் பின்பற்றுவதை அவ்வப்போது காண முடிகிறது. ஆங்காங்கே கலெக்டர்கள் முதல் அரசு கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது சார்பு நீதிபதி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர்.
நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.






